கற்பென்னும் திண்மை - குறள்கதை
ஆசிரியர் குறிப்பு: குறள்மொழியின் முதல் கதையான 'அகர முதல' கதையின் மாந்தர்களைக் கொண்டும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. அந்த கதையைப் படிக்க : bit.ly/2QxWH1M
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
கற்பென்னும் திண்மை
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
'பகவன்' முதற்றே உலகு"
மாணவர்களின் குரல் காற்றில் ஓங்கி ஒலிக்க, மேடையில் இருந்த தலைமை ஆசிரியர் முதலான அனைவரும் கைத்தட்டல் பரிசளிக்க, என் தமிழ்ச்செல்வன் முகம் பெருமிதத்தில் மலர்ந்திருந்தது. அவன் என் தமிழ்ச்செல்வன் என்பதிலேயே என் மனமும் துள்ளிக் குதித்தது.
பள்ளியில் இருந்து நானும் தமிழும் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, என் மனமோ காலத்தில் பின்னோக்கி நடைபோட்டது...
அப்போது தான் எனக்கும் தமிழுக்கும் மணமாகி இரு ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வுக்குப் படித்து கொண்டிருந்த நேரம். தமிழும் ஒரு பாடமாக இருந்ததால், அதில் ஐயம் நீக்க எனக்கு உதவியாய் இருந்தது தமிழ் தான்.
என்னுடைய தேர்விற்குப் படிப்பதற்காக, திருக்குறளைத் திருப்பிக் கொண்டிருந்த நேரம், ஒரு குறளில் என் கவனம் குத்திட்டு நின்றது.
"தமிழ்..."
"ம்ம்... "
"தமிழ்... இங்க பாரு... இந்த குறள்...?"
"என்ன குறள்...?"
"நீ தான் சொல்லுவியே... தமிழ் எப்போதும் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகத் தான் பாக்குதுன்னு... ஆனா, வள்ளுவரே இப்படி எழுதியிருக்காரே...
'பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்'..." என்று சொல்லி நான் சிரிக்க, தமிழும் சிரித்தான்.
தமிழ் கேட்டான்... "கற்புன்னா என்ன?"
இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை... "கற்புன்னா பெண்களின் தூய்மைத்தன்மை...? அப்படித்தானே எல்லாரும் சொல்லி வச்சிருக்கீங்க...?"
மேலும் சிரித்தான் தமிழ்... "இல்ல..."
"...!!!" வியப்பில் என் புருவங்கள் சுருங்கியதை அவன் சிரிப்பு எனக்கு உணர்த்தியது. "அப்படித்தானே எல்லாரும் சொல்றாங்க...?"
"அதுக்குத்தான் தமிழ் படிக்கணும்... திருக்குறளிலேயே காமத்துப்பாலில் இரண்டு இயல்கள் தான்... ஒன்னு களவியல், இன்னொன்னு கற்பியல்..."
"ஓ... அதிலும் கற்பு தானா...?"
"இரு இரு, முழுதும் சொல்லிடுறேன். அப்புறமா சொல்லு உன்னோட கருத்தை..."
"சரி, சொல்லுங்கள் தமிழாசிரியரே..."
"கற்பு பத்தி தெரியுறதுக்கு முன்னாடி களவு பத்தி தெரிஞ்சுக்கணும். களவுன்னா, ஒரு காதலனும் காதலியும் ஊருல இருக்கிறவங்களுக்குத் தெரியாம சந்தித்துக் கொள்ளுதல். பெரும்பாலும் நண்பர்கள் இவர்களுக்குத் துணையாக இருக்கலாம்... ஆனால், மற்றோர்க்கு இவர்கள் காதலர்கள்னோ, இணையர்கள்னோ தெரியாது. அதனால், காதலின் இந்த நிலைக்குக் களவுன்னு பேரு..."
"செம்மல்ல..."
"ஆமா... மத்தவங்களுக்குத் தெரியாம பாக்குறோம்னு ஒரு உவகை, மகிழ்ச்சி, ஆர்வம் மனசு முழுசும் நிறைஞ்சு இருக்கும்... இந்த உலகமே ரெண்டு பேரு மட்டும் தான் என்றெல்லாம் தோனும்... இது ஒருவித துடிப்பு, curiosity... ஆனா, இதெல்லாம் ஒரு நாள் எல்லாருக்கும் தெரியத்தானே போகுது..."
"ஆமா..."
"மத்தவங்களுக்குத் தெரிஞ்சு, எல்லாருக்கும் இவர்கள் இணையர்கள் என்று தெரிய வந்ததும் களவு நிலை முடியுது... அடுத்த நிலை கற்பு நிலை..."
"ம்ம்ம்...!!!"
"தமிழ் மொழி, கற்பு என்பதைக் காதலின் ஒரு படிநிலையாகத் தான் நிறுவியிருக்கு... களவு நிலை... கற்பு நிலை..."
"களவுன்னா மத்தவங்களுக்குத் தெரியாம சந்தித்து காதலிக்குறது... கற்புன்னா...?"
"கல்+பு... கல்லுன்னா என்ன?"
"கல்லு, பாறை..."
"கற்றல்னு கூட ஒரு பொருள் இருக்கே...? ஆமா, என்ன தான் இது வரை அவர்கள் ஏற்கனவே சந்தித்திருந்தாலும், பழகியிருந்தாலும், தங்களுடைய நல்லதை மட்டும் தான் அடுத்தவர்கிட்ட சொல்லி இருப்பாங்க... ஆனா, கற்பு நிலையில அவர்களைப் பத்தி நல்லதும் கெட்டதும் ரெண்டும் தெரியும்... இருவரும் தங்கள் இணையைப் பத்தி நன்கு கற்கும் நிலை கற்பு நிலை... ஒருவரைப் பற்றி முழுதாக தெரிந்தும் காதல் தொடரும் நிலை... இருவரும் ஒருவரே என மனம் கற்கும் நிலை... கற்பு நிலை...
இப்ப சொல்லு... அந்த குறளை..."
"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்."
"இந்த குறளில் கற்பு என்று குறிக்கப்படுவது, காதலின் கற்புநிலை... அதாவது, உறவினர் ஊர்க்குத் தெரிந்து இருவர் இணையராக இருக்கும் நிலை..."
"அதாவது, மேரேஜ்...?"
"ஆமா... மணவாழ்வு... அதனால தான் இதை வாழ்க்கைத்துணைநலம் அதிகாரத்துல வச்சிருக்காரு... கற்பு நிலையில் உறுதியாய் இருக்குற உறவு கிடைச்சுட்டா, ஒரு ஆணுக்குத் தன் மனைவியை விட பெருமை தரக்கூடியது என்ன தேவை இருக்கப் போகுதுன்னு கேட்குறாரு வள்ளுவர்..."
"செம்மல்ல... ஆனா..."
"நீ எங்க வர்றன்னு புரியுது...? பெண்ணை ஒரு உடைமைப் பொருளாகச் சொல்லியிருப்பது போல இருக்கு... அதானே சொல்ல வர்ற?"
"அதே தான்..."
"இங்க திருமணங்குற பேருல தங்க நகை, வீட்டுப்பொருள், பாத்திரம், பண்டம், கட்டில், மெத்தை, பீரோன்னு எல்லாத்தையும் வாங்கிட்டுத் தானே திருமணமே நடக்குது... ஆனா, இவ்ளோ இருந்தாலும் மணவாழ்வு மகிழ்வா நிலைச்சுடுமா... அதனால கற்பு நிலைக் காதல் மனத்தில் உறுதியாய் கொண்ட பெண்ணைப் போல வேறென்ன உனக்கு கிடைச்சுடும்னு ஆண்கிட்ட கேட்குறாரு வள்ளுவர்... உலகத்தில் பெண்ணின் நிலைத்த காதலை விட எவ்வளவு பொருள் என்ன இன்பத்தைக் கொடுத்துட போகுதுன்னு கேட்குறாரு... நீ சொல்லு... உன்னைவிட இந்த உலகத்துல வேற என்ன வேணும்...?" என்று சொல்லிய என் தமிழை இழுத்து, நான் அணைத்து கழுத்திற்கும் காதிற்கும் கீழே முத்தமிட்டிருந்தேன்...
"வளர்... வளர்மதி..." என் தமிழின் குரல் மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.
"என்னம்மா... என்ன நினைச்சிக்கிட்டு இருக்க...?" என்ற என் தமிழைப் பார்த்து, 'ஒன்றுமில்லை' எனக் கண்களால் சொல்லியபடி அவன் கைகோர்த்து நடந்து கொண்டிருக்கிறேன்...
- முடிவிலி
😀👍🏽👌🏾👏🏽
ReplyDeleteSuper ✌️
ReplyDelete