நோன்பு - திருக்குறள் கதை

நோன்பு

தீபாவலி என்றாலே பட்டாசு, புத்தாடை என்றிருந்த அந்த சிறுவயது நினைவு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

காலையிலேயே புதுத்துணியிலிருந்து பட்டாசு வரை படையலில் வைத்து கும்பிட்டு விட்டு, தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு, புத்தாடை போட்டு, புது முறுக்கு, சுழியத்தை எடுத்துக் கொண்டு, பட்டாசு வெடித்து யார் வீட்டு முன்னால் அதிக குப்பை சேருமென்று போட்டி போட்டு வெடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவயதில் எனக்குத் தெரியாது... ஒவ்வொரு தீபாவலியிலும், அம்மா சாப்பிடுவதே இல்லை என்று... லட்சுமி வெடி, குருவி வெடி, அணு குண்டு என எல்லாம் வெடித்து முடித்த பிறகு, கடைசியில் ஊசிப்பட்டாசுக்கு மாறி இருப்போம். அப்பா புதுவேட்டி வெள்ளைச் சட்டையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பார். தீபாவலி அன்றும் எங்களுக்குச் சமையல், புது பலகாரம், இதெல்லாம் போக நோன்புக்கு அதிரசம் என நாள் முழுதும் அம்மாவுக்குச் சமையலறையிலேயே நேரம் போகும். அம்மா கையில் ஒரு கயிறு கட்டியிருப்பாள். மஞ்சள் நூலில் சிகப்பு முடிச்சு போட்டது போன்ற கயிறு... 

"என்னம்மா கயிறு இது...?" எனக் கேட்டால், "சாமிக்கயிறுடா... நோன்புக்கயிறு" என்று பதில் வரும். ஆண்டுதோறும் இது தான் நடைமுறை என்பதால், எனக்கு இது பெரிதாய்த் தெரிந்ததில்லை. நான், அக்கா, தம்பி, அப்பா எல்லோரும் பலகாரம், இனிப்பு என உண்டாலும், அம்மா சாப்பிட்டாங்களா என்று யோசித்ததே இல்லை. 

பட்டாசு எல்லாம் முடிந்ததும், இருக்கிற மீத வெடிகளை எல்லாம் குப்பைத்தாள்களில் வைத்து கொளுத்தி விட்டு, வீடு வந்து இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என அறிவித்த படத்தைப் பார்க்கத் துவங்கும் போது, அப்பா சொன்னார்...

"தம்பி, டிவிய ஆஃப் செய்ப்பா..." 

"அப்பா... இப்பத்தான் டிவி முன்னாடியே உட்காருறேன்..." நான். அக்காவும், தம்பியும் வாயே திறக்கவில்லை.

"சுந்தர், சொல்றதக் கேளுடா... நோன்பு செய்யணும்..." 

எழுந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, வீட்டு முன்னறையில் ஒரு மூலையில் இருந்த சாமிப்படங்கள் முன்னால், அம்மி குழவிக்கு மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து, சந்தனம், குங்குமம், திருநீறு என மூன்று நிறங்களில் சாமி பிடித்து வைத்திருக்க, ஒரு தட்டில் பூக்கள், ஒரு தட்டில் அதிரசம் வைத்துக் கொண்டு, அம்மா அமர்ந்திருக்க, சுற்றி நாங்களும் குழுமியிருந்தோம். அப்பா, கேதார கௌரி விரதம் என எழுதப்பட்டிருந்த கையடக்க புத்தகத்தை எடுத்து படிக்கத் துவங்கினார்.

முதலில் இருந்த துதி பாடலுக்கு, அம்மா பிடித்து வைத்திருந்த சந்தனப் பிள்ளையாருக்குப் பூப்போட்டுக் கொண்டிருந்தாள். அக்காவும், தம்பியும் கண்ணை மூடிய படி கும்பிட்டபடி அமர்ந்திருக்க, நானோ இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் பார்வை என் புறம் வரும்போது மட்டும் பிள்ளையாரைப் பார்ப்பது போல் நடிப்பு வேறு. துதிப்பாடல் முடிந்ததும், அப்பா கேதார கௌரி விரதத்தின் வரலாற்றைப் படிக்கத் துவங்கினார். கைலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்க, மற்றவர் இருவரையும் சுற்றி வந்து ஆசி பெற, பிருகு முனிவர் வண்டாக மாறி, சிவனை மட்டும் சுற்றி வர, சினமுற்ற பார்வதி, உடலின் தன் கூறான தசைகளைத் திரும்ப பெற்றுக் கொள்வது எனச் சென்றது கதை. உடலின் ஆற்றல் போன நிலையில் நிற்க முடியாதிருந்த பிருகு முனிவர்க்கு, சிவன் ஊன்றுகோல் கொடுக்க, சிவன் மேல் சினமுற்று பார்வதி பூமிக்கு வந்து விடுகிறாள். கீழே வந்த பார்வதி, மீண்டும் சிவனுடன் இணைவதற்கு செய்த பூசையே இந்த கேதார கௌரி விரதம் எனவும் கூறிய அப்பா, மேலும் தொடர்ந்தார். 

"ஒரு நாள் கங்கைக்கரைக்கு நீராட வந்த புண்ணியவதி, பாக்கியவதி என்ற நாடிழந்த அரசிளங்குமரிகள் இருவர்க்கும், ஆற்றில் கேதார கௌரி விரதம் செய்து கொண்டிருந்த தேவகன்னியர், நோன்புக்கயிற்றினைக் கற்றிவிட்டு, இந்த விரதத்தின் மகிமையைப் பற்றிச் சொல்லித் தந்தனர்." 

அக்காவும், தம்பியும் அப்பாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அப்பா, சொல்வதை நிறுத்தி, சில நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார். 

"கங்கைக்கரையில் இருந்து வீடு திரும்பிய புண்ணியவதி, பாக்கியவதி இருவரும் தங்கள் வீடு பெரும் மாளிகையாக மாறியிருந்ததைக் கண்டு வியந்தனர்." என் முகத்தில் ஒரு வியப்புக்குறி தோன்றி மறைந்தது. 

"இருவருக்கும் திருமணமாகி, பெருஞ்செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த காலம், பாக்கியவதி தவறுதலாக தன் நோன்புக்கயிற்றினைத் தோட்டத்தின் பந்தலில் தவற விடுகிறாள். சில நாட்களில், அவர்களுடைய நாட்டை அயல்நாட்டு மன்னன் முற்றுகையிட, நாடு, செல்வம் பறிபோகிறது. தோட்டத்தில் பந்தலில் காய் மட்டும் நன்கு காய்க்க, அதை உண்டு வாழ்கிறது பாக்கியவதியின் குடும்பம்." இப்போது நானும் அப்பாவின் கதையில் ஒன்றி இருந்தேன். 

"ஒருநாள் பாக்கியவதி, தன் மகனை அழைத்து, உன் பெரியம்மா புண்ணியவதி வீட்டிற்குச் சென்று, நம் வறுமை நிலையைச் சொல்லி, ஏதேனும் உதவி பெற்றுவா எனச் சோற்று மூட்டை கட்டி அனுப்புகிறாள். வழியில் இளைப்பாற அமர்ந்தவனின் சோற்றுமூட்டையை கருடன் தூக்கிச்செல்கிறது. எப்படியோ புண்ணியவதி வீட்டை அடைந்தவன், நிலையை எடுத்துச் சொல்ல, புண்ணியவதியும் பணமும் நகையும் ஒரு மூட்டையில் கட்டித் தருகிறாள். இதை எடுத்துச் செல்லும் வழியில் திருடன் பறித்துக் கொள்ள, மீண்டும் புண்ணியவதியிடம் திரும்புகிறான் சிறுவன். அப்போது, புண்ணியவதி சிறுவனிடம் "நீங்கள் கேதார கௌரி நோன்பு கடைபிடித்து வருகிறீர்களா?" எனக் கேட்க, சிறுவனோ, "இல்லையே..." எனக் கூற, அவனிடம் மேலும் பொருட்கள் அடங்கிய மூட்டையைத் தந்து, அதில் ஒரு நோன்புக்கயிறையும் வைக்கிறாள். "உன் அன்னையிடம் சொல், தவறாது ஒவ்வொரு ஆண்டும் நோன்பைத் தவறாது செய்ய வேண்டும்." என அறிவுரையும் தந்து வழியனுப்புகிறாள்." எனச் சொல்லிய அப்பா, என்னைப் பார்க்க... நான் "அப்..." எனச் சொல்லத் தொடங்குவதற்குள், கண்களைச் சுருக்கிக் கூர்ந்து, என்னைப் பார்த்ததில் மீண்டும் அமைதியானேன். அப்பா மேலும் தொடர்ந்தார். 

"பாக்கியவதியின் மகன் புண்ணியவதியிடம் பெற்று வந்த பொருளுடன் சென்ற போது, அந்த திருடன் வந்து, தான் ஏற்கனவே திருடிய பொருளைத் திருப்பிக் கொடுக்க, கருடனும் சோற்றுமூட்டையைத் திருப்பித் தந்து விட்டுச் சென்றது." வியப்பில் என் கண்கள் விரிந்தே விட்டது. 

சிரித்துக் கொண்டே அப்பா மேலும் தொடர்ந்தார், "பொருளுடன் வீட்டுக்கு வந்த மகன், அன்னையிடம் கேதார கௌரி நோன்பைப் பற்றி பெரியம்மா சொல்லியதாகக் கூற, அதிலிருந்த நோன்புக்கயிறை எடுத்துக் கட்டிக் கொண்டாள். உடன், நாட்டைக் கவரந்த அண்டை நாட்டு மன்னன் திருப்பித்தந்து விட்டுச் சென்றான். இத்தகைய சக்தி வாய்ந்த கேதார கௌரி விரதத்தை ஆண்டுதோறும் செய்து வந்தால், குடும்பத்தின் சகல துன்பங்களும் நீங்கி, செல்வ செழிப்போடு வாழ்வு மேம்படும்." என்று தன் குரலை உயர்த்தி, "ஓம் கேதார கௌரீஸ்வராய" எனச் சொல்ல "நமஹ" என அம்மா, அக்கா, தம்பி ஒரே குரலில் சொன்னார்கள். நானும் ஒப்புக்கு. ஆனால், என் மனதில் பல கேள்விகள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அப்பாவிடம் கேட்கலாம் என்று பார்த்தால், அப்பாவோ, புத்தகத்தில் இருந்த மந்திரங்களைப் படித்தபடி இருந்தார். அம்மாவும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் கையில் இருந்த பூக்களைத் தூவி அர்ச்சித்துக் கொண்டிருந்தாள். முழுதாய் முடித்ததும், அம்மா முன்னால் இருந்த அதிரசத்தை எடுத்து ஒவ்வொன்றாக எல்லோரிடமும் கொடுக்க, கடைசியாக ஒன்றை எடுத்து தான் சாப்பிட்டாள். அன்றைய நாளின் முதல் உணவு. கையில் அதிரசம் கிடைத்ததும் அக்கா, தம்பி எல்லாம் மீண்டும் தொலைக்காட்சியில் படம் பார்க்கத்துவங்க, நான் அப்போது தான் கவனித்தேன், அம்மா அப்போது தான் சாப்பிடுகிறாள் என்று. மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அம்மாவிடம் கேட்டாலும் விடை கிடைக்காத, அப்பாவிடம் கேட்காத கேள்விகள் சில...

'ஏன்ப்பா... கையில கயிறு கட்டி நோன்பு வைக்கலன்னா, இப்படி தண்டிக்குதே... இப்படி பயமுறுத்துதே இது எப்படி தெய்வமா இருக்க முடியும்...?'

'ஏன்ப்பா... அந்த கருடனும், திருடனும் எடுத்துட்டுப் போன சாப்பாட்டையும், பொருளையும் வந்து கொடுத்துட்டுப் போனாங்களே... சாப்பாடு அது வரைக்கும் கெட்டுப் போகாமலா இருந்துச்சு...? அந்த திருடன் அந்த பொருளைச் செலவழிக்கலையா...? இல்ல... நம்மளை நம்ப வைக்க இப்படி பொய் சொல்றாங்களா...???'

'எல்லாத்துக்கும் மேல அதென்ன பெண்கள் மட்டும் உணவில்லாம விரதம் இருக்கணும்...? ஏன்ப்பா...???'

இந்த கதையோடு இந்த கேள்விகளும் வாழ்வின் போக்கை மாற்றித்தான் விட்டிருந்தன...

இன்று இந்த நொடி, நான் நன்றாகவே இருக்கிறேன். சென்னையில் ஒரு கொதிகலன் நிறுவனத்தில் வேலை. குறையற்ற வாழ்க்கை, மனதிற்கினிய யாழினி, இருவர்க்குயிரான மகன் ஜீவா... 

தீபாவலியன்று இரவு தெருவையே வீடாகக் கொண்டிருக்கும் சிலருக்கு, புதுத்துணியும் வீட்டில் யாழினி கையால் செய்த இனிப்பும் தந்துவிட்டு, இப்போது தான் நானும் ஜீவாவும் வீட்டுக்குள் நுழைந்திருந்தோம். யாழினியை நோக்கி ஓடிய ஜீவா, "அம்மா, இன்னிக்கு நாலு பேரு என்னைப் பாத்து நல்லாயிருன்னு சொன்னாங்க..." என்று சொல்ல, அவன் தலையைத் தடவி விட்டு, "சுந்தர், என்ன ஆச்சு உன் போனுக்கு?" என்றாள் யாழினி.

"ஆமா... பேட்டரி தீர்ந்து போச்சு..." என்று செல்போனை எடுத்து சார்ஜ் போட்டு, துவக்கிவிட்டேன்.

"மாமா போன் பண்ணிருந்தாங்க... இப்ப தான் ஒரு கால் மணி நேரம் இருக்கும்... வந்ததும் போன் பண்ணச் சொன்னாங்க... அது சார்ஜ் ஏறட்டும், என் போன்லேந்து பேசு..." என்று தன் தொலைபேசியைத் தந்தாள்.

வாங்கி, அப்பாவை அழைத்தேன். இரு முறை க்ரிங் க்ரிங் அடித்து மூன்றாவது க்ரிங்கில் அழைப்பு இணைய, 

"சொல்லுப்பா..." என்றார் அப்பா...

"சொல்லுங்கப்பா... நானும் ஜீவாவும் வெளியில போயிருந்தோம்... போன் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு... போன் பண்ணிருந்தீங்களா...?" 

"சும்மா தான்டா..."

"சொல்லுங்கப்பா... என்னது?" 

"இல்லடா... இன்னிக்கு தீபாவலி நோன்பு... போன வாரமே உன்கிட்ட சொல்லிருந்தேன்... நோன்பு வச்சீங்களான்னு கேட்கத் தான் கூப்பிட்டேன்..." 

"இது தானா...? இப்பத்தான் நோன்பு எல்லாம் முடிஞ்சுது... நோன்பு செஞ்சதுக்கு அப்புறம் தான் மனசும் நிறைஞ்சு கெடக்கு... ஜீவாவும் இப்படியே ஒவ்வொரு ஆண்டும் செய்யலாம்னு சொன்னான்..." என்று சொல்ல...

"மகிழ்ச்சிய்யா..." என்று சொல்ல, நான் போனை ஸ்பீக்கரில் போட்டு, ஜீவாவிடம் 'குட் நைட் சொல்லுடா' என மெலிதாய்ச் சொல்ல, ஜீவா "குட் நைட் தாத்தா" என்றான். 

"குட் நைட்டுடா" என்று போனை வைத்தார் அப்பா, மன நிறைவோடு சிரித்தபடி. 

"சுந்தர், என்ன இப்படி பொய் சொல்லுற...?" என்று கேட்டாள், யாழினி. 

"நான் எங்க பொய் சொன்னேன்...?"

"ஏய்... நாம எங்க நோன்பு வச்சோம்...?"

"யாரையும் மனசால கூட கெடுதல் நினைக்காம வாழுறதே ஒரு நோன்பு தான்... இப்பக் கூட பாரு... புதுத்துணி, இனிப்பு கொடுத்ததும், 'நல்லா இருப்பா'ன்னு சொன்னுச்சே அந்த பாட்டி... அந்த வாழ்த்தைவிட கையில கயிறு கட்டி, ஒரு நாள் முழுசும் சாப்பிடாம பூப்போட்டு புரியாத மந்திரம் சொல்லுற நோன்பு ஒன்னும் பெருசில்லடா..." என்றேன் யாழினியிடம். யாழினி மனதில் இருந்த சிறு ஐயம் விலக, நிறைந்த பார்வை பார்த்தாள். 

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 

தானும் அறவழிநின்று மற்றவரையும் அறஞ்செய்திடச் செய்வோரின் இல்வாழ்க்கை, நோன்புகளை விடச் சிறந்ததாகும்.

Comments

  1. அருமை தமோ 👌🏾.. "அம்மா, இன்னிக்கு நாலு பேரு என்னைப் பாத்து நல்லாயிருன்னு சொன்னாங்க..." இந்த வரி நல்லா இருக்கு 👍🏽

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka