துப்பார்க்குத் துப்பாய - குறள் கதை குறள் 12
அனைவருக்கும் வணக்கம். என்னை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்வையும் தொட்டுச் செல்கிறேன். நானின்றி அமையாது இவ்வுலகு. ஒவ்வொரு மொழியிலும் எனக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. என்னுடைய ஒவ்வொரு வடிவத்திற்கும் கூட வெவ்வேறு பெயர்கள் உண்டு. அத்தனை வடிவங்களிலும் எனக்குப் பிடித்த வடிவம் மழை. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள் - அப்பேர்ப்பட்ட குழந்தைகளுக்கு எனது மழை வடிவத்தில் தான் எவ்வளவு பெருமகிழ்ச்சி! இந்த ஒரு காரணம் போதும், எனக்குப் பிடித்த என் வடிவம் மழை என்பதற்கு. இல்லையா?
உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?
எனக்குத் தெரிந்தவர்களில், என்னை மிகவும் நம்புகிறவர்களுள் ஒருவன், கருப்புசாமி. தனக்குத் தெரிந்த ஒரே வேலையை உயிரைக் கொடுத்து செய்பவன். உலகம் நன்றாக உண்பதற்காக மண்ணில் புரள்பவன். நிறைய நிலம் வைத்து, ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் இலாபம் ஈட்டுபவன் அல்ல, ஐம்பது குழி நிலத்தைப் போக்கியம் எடுத்து உழவு செய்பவன். உழவன்.
அவனுடையது அழகான சிறிய குடும்பம். அவன் மனதையும், நிலையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கையமைக்கும் அவன் மனைவி - தேன்மொழி, கவிதையாய்க் கொஞ்சும் அவனது இரண்டு வயது செல்ல மகள் - கவிதா.
ஒரு நாள், உறங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கருப்பு. ஏதோ மனதிற்குள் உருத்திக் கொண்டிருப்பதை அவன் முகமே காட்டியது. தேன்மொழி ஓர் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவன் அருகே வந்தமர்ந்து "என்ன, ஏதோ யோசனையா இருக்கீங்க போல?" என்றாள். அவர்களின் உரையாடல் சொம்பின் உள்ளிருக்கும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.
"ஒன்னுமில்லம்மா... மழைய காணாம நாத்து வாடுது... நாளைக்காவது பக்கத்து நிலத்துக் காரர்கிட்ட கேட்டு கொஞ்ச நேரம் அவரோட பம்பு செட்டுலேந்து தண்ணீ பாய்ச்சணும்... வயல்லேந்து கெளம்பும்போது நாத்து என்னப்பாத்து ஏங்கி கேட்குற மாதிரி இருந்துச்சும்மா... வருசத்துல போன வாரத்துக்கே வானம் பொத்துக்கிட்டு பெஞ்சிகிட்டு இருக்கணும்... நாத்து முங்கிடாம இருக்க வரப்பு வெட்டிவிட ராத்திரி பாக்காம வயலுக்கு நான் ஓடிகிட்டு இருக்கணும்... ஆனா, இங்க உட்காந்திருக்கேன்... பம்பு செட்டுக்கும், தண்ணிக்கும் யாரு கிட்டே உதவி கேட்கலாம்னு யோசிச்சுகிட்டு..."
தேன்மொழி ஆதரவாக அவனுடைய இடது தோள் மேல் கை வைக்க, வலது கையால் அவளது கையின் மேல் தன் கையை வைத்தான் கருப்பு. சில மணித்துளிகள் அப்படியே அமைதியாய் எந்த ஒலியுமின்றி கழிந்தது. அறையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் விளக்கின் மெல்லொளியில் அசையாது அமர்ந்திருந்த தேன்மொழி-கருப்பின் நிழல் சுவற்றில் ஒளியின் ஆடலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தது.
அந்த அமைதியை ஒரு பேரிடியோசையால் நான் தான் கலைத்தேன். தூங்கிக் கொண்டிருந்த கவிதா திடுக்கிட்டு எழுந்து அழவும், தேன்மொழி விரைவாக அவளை அள்ளியணைத்துக் கொண்டாள் "ஒன்னுமில்லைடா...வானத்துல நம்ம சாமி சிரிக்காரு…" என நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள். கருப்புசாமியோ இடியின் ஓசையின் இன்பத்தில் என் வருகையை நினைத்து சிரித்துக் கொண்டு விரைவாய் வெளியே வந்தான். தேன்மொழியும் கவிதாவைக் கையில் தூக்கிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தாள். எனை வரவேற்க வாசல் வந்த இவர்களின் முகத்தில் தான் எவ்வளவு இன்பம்! இந்த அன்பு என் உள்ளத்தைக் குளிர்விக்கவும் இதோ இன்னும் ஓரிரு இடிகளுடன் நானும் அவர்களின் வாசல் வந்துவிட்டேன். எனைப் பார்த்ததும் உள்ளம் நிறைந்து கருப்பு துள்ளாட்டம் போட்ட படி, நனைய ஆரம்பித்தான். நிறைவாக சிரித்தபடி, தேன்மொழி கவிதாவைக் கையில் பிடித்தபடி நின்றிருக்க, சாரலென வீழ்ந்து கவிதாவையும் எழுப்பியிருந்தேன். இவர்களுக்காக மட்டுமே நான் வந்தது போல் மகிழ்ந்தது இந்தக் குடும்பம். உண்மையும் அதுதானே! ஆண்டில் எப்போது வந்தாலும், இவர்கள் படும் மகிழ்ச்சியைக் காண்பதே எனக்கு மகிழ்ச்சி.
இந்த ஆண்டு கருப்புக்காகவே நான் நன்றாகப் பொழிந்தேன். ஆதலால் கருப்புக்கும் நல்ல விளைச்சல் கிட்டியது. விதை நெல் எடுத்து வைத்தது போக, விளைந்த நெல்லை வீட்டிலே வேக வைத்து, காய வைத்து, ஊரின் தெற்குத் தெரு மூலையில் இருக்கின்ற அரிசி ஆலையில் அடித்து, அரிசியையும், தவிட்டையும் தனித்தனி மூட்டைகளாக கொண்டு வந்து அடுக்குவதில், கருப்பிற்கு தேன்மொழி எல்லா விதத்திலும் உதவியாக இருந்தாள். தன் வீட்டிற்குத் தேவையான அரிசியை எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள மூட்டைகளை எடுத்துக் கொண்டு, பக்கத்து ஊரில் இருந்த கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றான். வெளியே நின்றிருந்த கதிரேசனைப் பார்த்து, "அண்ணே... மூட்டைக்கு எவ்ளோ விலைண்ணே தர்றாங்க...?" என்றான்
"இந்த வருசமும் குறைச்சல் தான் யா... குவிண்டாலுக்கு 1600ரூவா... அதுவும் நெல் ரகத்தைப் பொருத்ததாம்... செஞ்ச செலவே குவிண்டாலுக்கு 1400ரூவாக்கு மேல வருது... நூறு கிலோவுக்கு 200ரூவா லாபத்துக்குக் கொடுத்தா, கிலோவுக்கு 2 ஓவா தான்... இதுக்குத் தான் நீயும் நானும் அல்லாடுறோம்..."
கருப்புசாமி இடிந்து போனான். ஆனால் எப்படியும் விற்றாக வேண்டுமே. போக்கியத்துக்கு காசு தர வேண்டும், குழந்தை கவிதா காதுக்கு ஒரு தங்கத்தோடு வாங்கிட வேண்டும், தேன்மொழிக்கு இந்த ஆண்டாவது ஓர் பட்டுப்புடவை வாங்கித் தர வேண்டும், தினப்படி செலவுக்குக் கொஞ்சமாவது கையில நிற்க வேண்டும், ஏற்கனவே மளிகையிலிருந்து பால்காரர் வரை எல்லாருக்கும் தர வேண்டிய பாக்கியைத் தர வேண்டும் - இப்படி அவன் மனதில் பல எண்ணங்கள் ஓடின.
"என்ன கருப்பு... நான் பேசிட்டே இருக்கேன்... சிலையா நிக்குறியே..." என்றார் கதிரேசன்.
"நம்ம நிலைமை தான் உங்களுக்கே தெரியுமே... எப்படியும் குறைச்சலாத் தான் இருக்கும்னு நினைச்சிருந்தேன்... குவிண்டாலுக்கு 2000 ரூவாயாவது கிடைக்கும்னு நினைச்சேன்... ஆனா, 1600 ரூவான்னா நானெல்லாம் என்ன செய்யுறது... நினைச்சாலே இருண்டு வருதுண்ணே..." அவன் கண்களின் ஓரத்தில் தவறி விழாமல் தொற்றிக் கொண்டு நான் அவன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
"கருப்பு... உனக்கு எவ்வளவுன்னா கட்டுப்படியாகும்...? சொல்லு..."
"ரெண்டாயிரத்து ஐ" என சொல்ல வந்த கருப்பு, கதிரேசனை நிமிர்ந்து பார்த்து, சில நொடி அமைதிக்குப் பிறகு "அதான் சொல்லிட்டாங்களே, இனி நா என்னத்த சொல்ல? மழையா வர்ற தண்ணி வச்சு ஊருலகத்துக்கு பசியாத்துறோம்னு மனசுல ஒரு நிம்மதி... ஆனா, வெறும் நிம்மதி வச்சு என்னண்ணே செய்ய முடியும்? இவனுங்ககிட்ட போராடல்லாம் தெம்பில்லண்ணே..." என்றான் ஏமாற்றத்துடன்.
"நான் உன்னைப் போராட சொல்லல... ஒரு வாய்ப்பு இருக்கு, பயன்படுத்துக்கிறியா? வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுற ஒருத்தரு என்கிட்ட சொல்லி வச்சிருக்காரு... குவிண்டாலுக்கு 2400ரூவா வரைக்கும் தர தயாரா இருக்காரு...உம்மூட்டைகளகொடுக்கிறியா?"
"நெசமாவாண்ணே..."
"அட... உண்மையாத் தான்யா சொல்றேன்..."
கருப்பு அன்று முதன் முறையாக அப்பொழுது தான் சிரித்தான். கதிரேசன், கருப்பை அவரின் கடைக்குக் கூட்டிச் சென்றார்... கடையில் ஒரு எடை போடும் இயந்திரம், ஒரு மேசை, ஒரு மூலையில் தண்ணீர்ப்பானை (உள்ளிருந்து நான் தான் அவர்கள் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தேன்), மேலே மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த மின் விசிறி, அதன் கீழே கரை வேட்டியில், நெற்றி நிறைய திருநீறுடன் நீண்ட முகத்தில் சிறிதாய் சிரித்து கதிரேசனையும், கருப்புசாமியையும் வரவேற்றார் அவர். எடை பார்த்து, விலை பேசி ஒரு வழியாக நெல் மூட்டைகள், பணமாக கருப்பின் கைக்கு மாறியிருந்தது. "கருப்பு, நீ போய்கிட்டு இரு... நான் ஐயாகிட்ட பேசிட்டு இதோ வந்திடுறேன்..." என்றார் கதிரேசன்.
கருப்பு தான் கொண்டு வந்த பையில் பணத்தை எடுத்துக் கொண்டு, கொஞ்ச தூரம் நடந்திருப்பான். முகத்தில் இளவெயில் அறையும் போது தான் அவனுக்கே உரைத்தது, காலை கிளம்பியவன் இப்போது மாலை 4:30 மணி ஆகியிருந்தும் இன்று இன்னமும் அவன் என்னைப் பருகாமல் இருக்கிறான் என்று. தாகம் அவனை வாட்டி எடுக்க, அந்த இடத்திலேயே தண்ணீர்ப்பானையில் இருந்த என் நினைவு வந்தது. மீண்டும் அந்த கடை நோக்கி நடந்து வந்தான்.
"கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கிறேங்க..." என்றபடி நுழைந்த கருப்பைப் பார்த்ததும், கதிரேசன், தனது கையிலிருந்து எதையோ தனது சட்டைப் பையில் வைத்தார். கதிரேசனின் முகத்திலும் ஒரு மாற்றம் தெரிந்தது. அவர் "குடிச்சுக்கோங்க தம்பி..." என்றார். மேலே இருந்த குவளையில் தண்ணீரெடுத்து குடித்து விட்டு, கதிரேசனிடம், "நீங்க பொறுமையா பேசிட்டு வாங்கண்ணே... நான் கிளம்புறேன்..." என்று சொல்ல, கதிரேசனும், "நல்லதுய்யா... பணம் பத்திரம்..." என்று சொல்லி முடிக்கும் முன்பாக கருப்பு கிளம்பியிருந்தான்.
முக்கால் மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் திண்ணையில் அமர்ந்தான். பணத்தை எடுத்து தேன்மொழியிடம் கொடுத்துவிட்டு, தத்தி தத்தி நடந்து வந்து அவன் காலைக் கட்டிக் கொண்ட தேவதையை கையில் அள்ளித் தூக்கிக் கொண்டான். தேன்மொழி, பணத்தை வீட்டின் உள்ளே எடுத்துச் சென்று, கருப்பின் தந்தையார் படத்தின் முன் வைத்து வணங்கி எடுத்து, அலமாரியில் வைத்தாள்.
"தேனு..." கருப்பு அழைத்தான்.
"என்னங்க..."
"கொஞ்சம் தண்ணீ கொண்டு வாயேன்... நாவெல்லாம் வறண்டு போச்சு..."
தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, செம்புத்தண்ணீரையும் குடித்து முடித்தான் கருப்பு. "என்னங்க... இவ்ளோ தண்ணியும் குடிச்சுட்டீங்க... மதியம் சாப்பிட்டீங்களா... இல்லையா...?"
"உழவு செய்யுறவனுக்கு இத விட வேற என்ன பெரிய சாப்பாடு இருந்திடப் போகுது... இது வெறும் தண்ணியில்ல தேனு, நம்ம மழைச்சாமி... இது தான் பயிரை விளைய வைக்குது... உணவை உருவாக்க நமக்கு உதவுது... அப்படி உருவாக்குற நமக்கு பலநாளுல இது தானே சாப்பாடாவும் இருக்கு... என்கூட வந்தவரு, என்னை ஒருத்தர்கிட்ட காட்டுனதுக்கே கமிசன் வாங்கிட்டு இருக்காரு... அதுவும் எனக்கு தெரிஞ்சுடக் கூடாதுன்னு மறைச்சு வாங்குறாரு... ஆனா இந்த மழைச்சாமி எங்கிட்ட எதையும் எதிர் பாக்குறதில்லே… பாழாப்போன மனுசங்க, மழையையும் மதிக்கிறதில்ல... என்ன மாதிரி உழவனையும் மதிக்கிறதில்ல... என்னிக்காவது ஒரு நாள் இதெல்லாம் மாறணும், தேனு..." என்றான் வருத்தமும், ஏக்கமும் இழைந்தோட.
"கொடுத்த காசை எண்ணிப் பாத்தேன்... போக்கியத்துக்குக் குடுக்க வேண்டியது போக நமக்கு இவ்ளோ பணம் போதுங்க... மனுசங்க குணம் நாளுக்கு நாள் மாறிட்டுத் தான் இருக்கும்... மனசப் போட்டு குழப்பிக்க வேணாம்... உள்ளது போதும்னு நினைச்சாப் போதும்... வாழ்க்க அழகாயிடும்..." என தேன்மொழி சொல்ல, கருப்பின் மனம் சற்று எடை குறைந்தது. அவன் முகத்தில் கைகளால் தொட்டு விளையாடிய கவிதாவைத் தூக்கிக் கொண்டு, வீட்டின் உள்ளே சென்றான். அவன் குடித்து கீழே வைத்த செம்பின் விளிம்பில் இருந்து, அவர்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன் - அடுத்த ஆண்டும் சரியான நேரத்தில் வந்து இவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தபடி, சரியான நேரத்தில் வந்து இவர்களின் பசியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தபடி.
- முடிவிலி
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உணவு உண்பவர்க்கு உணவு தருவதற்கு, உழவுக்கு உதவிடும் மழையானது, நீராக தானும் ஒரு உணவாகவே மாறிவிடுகிறது மழை...
Nicely written 🙏
ReplyDeleteநன்றி அன்புச்செல்வன்
ReplyDeleteஅழகு தமிழில் அருமையான கதை தமோ..
ReplyDeleteஅருமை அண்ணா
ReplyDeleteYou are doing such a grateful job for thirukkural. Please continue to do it. Looking forward.
ReplyDeleteநனி நன்றி... உங்கள் ஆதரவும், கவனமும் எங்களுக்குத் தேவை...
Deleteஅருமை தமோ 👌🏾👌🏾
ReplyDelete