அன்றும் இன்றும் பெண்கள் - Women Then and Now

வசூல்ராஜா படத்தில், "அந்தப் பொண்ணு என்னை டாக்டர்னு நெனச்சிக்கிட்டு இருக்கு, அத்தப் போயி கெடுக்க சொல்றியா?" எனக் கமல் கேட்க, பிரபு சொல்வார் "அதான் கல்யாணம் ஆயிடுதில்ல, அப்புறம் எப்படி கெடுக்கிறதாகும்?" என்பார். இதை நகைச்சுவை என எண்ணி நானும் ஒரு காலத்தில் சிரித்திருக்கிறேன். ஆனால், பெண்ணின் உணர்வுகள், வலிகள் என்றும் உணரப்படாமல் நகைச்சுவையாகவே கடந்து செல்லப்படுகிறது.

ஒவ்வொரு காலத்திலும், பெண்ணை ஆண் என்பவன் தன் அடிமையாக - தன் உடைமையாகவே பார்த்து வந்துள்ளான். குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம் எனப் பலவிதமாக பெண்கள் தங்கள் உரிமையைச் சொல்லக் கூடத் தெரியாதவளாகவும், மீறிச் சொல்லினால் அவளின் ஒழுக்கம், நெறி ஆகியவற்றை மாற்றிப் பேசப்படுவதை தாங்க முடியாதவளாகவும் இருக்க வைக்கப்பட்டிருக்கிறாள்... இந்த நிலை, கல்வியினால், பட்டறிவினால், வெளியுலகத் தொடர்பினால், படிப்பினால் சிறிது மாறினாலும் கூட, அதை ஏற்க முடியாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவளை அடக்கி வைக்கவே பார்க்கிறது. சுமார் 128 ஆண்டுகள் முன்பு, நிகழ்ந்ததற்கும், இன்று நிகழ்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றால், நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் எனச் சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது...?

128 ஆண்டுகள் முன்னாடி!

முந்தையப் பதிவில், ருக்மாபாய் பற்றி எழுதி இருந்தேன். அவர் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த அதே நேரம் இன்னுமொரு வழக்கும் கல்கத்தா நீதிமன்றம் வந்து மக்களிடையே பேசுபொருளானது. புல்மோனி கொலை வழக்கு...!

புல்மோனி (Phulmonee) என்ற சிறுமி தனது 10வது வயதில், ஹரி மோகன் மைத்தி என்ற 38 வயது ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். திருமணம் ஆன அன்றிரவே கட்டாய வல்லுறவினால், பெரும் ரத்தக்காயங்களினால் அதிக உதிரப்போக்கடைந்து இறந்து போகிறாள் புல்மோனீ. அவளின் தாய், தன் தவறை உணர்ந்தவளாய், நீதி மன்றத்தில் தன் மகளைக் கொலை செய்த ஹரி மோகன் மைத்தியின் மீது வழக்குத் தொடுக்கிறாள். எப்போதும் போல் சிலர், புல்மோனிக்கு நீதி கிடைக்கப் பேசிக் கொண்டிருக்க, பலர் திருமணம் ஆன பிறகே, உடலுறவு நடந்தது. எனவே, ஹரி மோகன் குற்றம் செய்யாதவன் என வாதம் செய்தனர்.
ஆக்ஸ்போர்டு என்சைக்ளோபீடியா ஆஃப் வேர்ல்ட் விமன் ஹிஸ்டரியில் புல்மோனி வழக்கின் குறிப்பு

ஜூலை மாதம் 1890 அன்று வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்தியத் தண்டனைச் சட்டம் 388ஆம் பிரிவின் படி, உயிருக்கு ஆபத்துண்டாக்கும் வகையில் வலி உண்டாக்குதல் / தாக்குதல் ஆகிய குற்றத்தில் ஹரி மோகன் மைத்திக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் கடும்பணி ஆற்றத் தீர்ப்பளித்தார். மேலும், இந்துக்களின் சட்டப்படி, திருமணமானதால் இந்தக் கொடுமையை வன்புணர்வு எனக் கூறமுடியாது எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டது. இந்த வழக்கும், ருக்மாபாய் வழக்கும் இந்தியாவில் பெண்கள் படும் துன்பத்தினை இங்கிலாந்து வரை பறைசாற்றுவதாய் இருந்தன. 9 ஜனவரி 1891 அன்று, அன்றைய இந்திய வைஸ்ராயாக இருந்த லேன்ஸ்டௌன் பிரபு, திருமண வரம்புச் சட்டம் 1891ஐ இயற்றினார். அதில் கூட 12 வயதிற்குக் கீழான பெண்களைத் திருமணம் செய்தோ, செய்யாமலோ உறவு கொண்டால் அது வன்புணர்வு எனக் கொள்ளப்படும் என்றே சொல்லப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கே பல இந்து அமைப்புகள், 'தேசத்' தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைப் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன்.
இன்றும் அதே நிலை:
ஏன், இன்றும் திருமண வல்லுறவு என்பது வன்புணர்வு என்று எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. திருமணம் ஆன பின், பெண்ணின் உணர்வு என்பது பலருக்கு நகைச்சுவையாகவே இருந்து விடுகிறது.

நேற்று வந்த தீர்ப்பையே எடுத்துக் கொள்வோமே... 25 வயதான பெண் தன் கணவனுடன் வாழவே தனக்கு விருப்பம் எனச் சொல்லிய பின்பும், அவளுக்கு கார்டியனாக, அவள் படிக்கும் கல்லூரி முதல்வரை உச்ச நீதிமன்றம் நியமிக்கிறது என்றால் நாம் பெண்களின் உணர்வுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கும் நாட்டில் இருக்கிறோம் என்பதை எண்ணித் தலை குனிகிறேன்.

- கணபதிராமன்

Comments

  1. அடக்குமுறை தனது அளவீடையும் தன்னால் வஞ்சிக்கப்படுகிறவர் எண்ணிக்கையையும் குறைத்திருக்கிறது ஒழியே தன்னை முழுதாய் விலக்கிக்கொண்டு வரவில்லை என்பதினை காட்டும் நிகழ்வாகவே இது தெரிகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka