பில் கொடுங்க... ஏன் இந்த அட்வைஸ்? - Give me Bill, not advice

உணவக முதலாளிகளே...! உங்கள் உணவகத்திற்கு வருபவர்களிடத்தில் மெனு கார்டு கொடுங்க... அவங்க கேட்ட உணவு கொடுங்க... சாப்பிட்டு முடிச்சா பில் கொடுங்க... ஏன் இலவசமாக உங்கள் கருத்தைத் திணிக்கிறீங்க....?

-----

சில நாட்கள் முன்பு அண்ணா நகர் ஹாட் சிப்ஸ் உணவகத்திற்கு போயிருந்தேன்... அங்கு மேசையில் வைக்கப்பட்ட தாளில் இருந்த ஒரு ஆங்கில வாசகம் என்னைக் கவனத்தை ஈர்த்தது... மேலோட்டமாக பார்த்தால், ஒரு சராசரியான வாசகமாகவும், அது ஒரு சைவ உணவகமாதலால் அப்படி எழுதியிருக்கலாம் என்றே இருந்தாலும், அதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை...

இது தான் அந்த வாசகத்தின் தமிழாக்கம்...

யானையின் வலிமை
ஒட்டகத்தின் உறுதி
குதிரையின் அழகு

- இவை அனைத்தும் சைவம்.

இதைப் படித்ததும் எனக்குள் நினைவுக்கு வந்தது ஒரு திருக்குறள்... வள்ளுவர் அதனை உவமையாகச் சொல்லியிருந்தாலும், இங்கு நேரடியாகவே அதன் பொருள் எடுத்துக்கொள்ளலாம்...

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பரியது - பருத்தது (பருத்த உடலுடையது)
கூர்ங்கோட்டது - கூர்மையான தந்தம் உடையது
ஆயினும் யானை
வெரூஉம் - அஞ்சும்
புலி
தாக்குறின் - தாக்கினால்...

இங்கு புலி உருவத்தில் சிறியது... கூர்மையான தந்தம் இல்லை... ஆனால் வலிமையான யானையை அஞ்சவைக்கக் கூடியது... இதைச் சொல்லி புலி அசைவம் அதனால் வலிமையானது எனச் சொல்லிடலாம்... இங்கு எது பெரியது எது சிறந்தது என்ற போட்டியே ஆபத்தானது... சைவ உணவகத்தில் வந்து சாப்பிடும் அனைவரும் சைவ உணவுப்பழக்கம் உடையவரா? இன்னொருவரின் உணவுப்பழக்கத்தின் மீது ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் விதம் அது எழுதப்பட்டதாக நினைக்க வைத்தது..

இன்னொரு வகையாக சிந்தித்தால், அவர்கள் எழுதியிருந்த அனைத்து மிருகங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு அடிமையாக - அடிமையாக்கவல்ல மிருகங்களே... காண்டாமிருகம் கூட சைவம் தான்... அதை ஏன் எழுதவில்லை...

உணவுப்பழக்கம் என்பது ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்தது. அதை வைத்து உயர்வு / தாழ்வு மனப்பான்மை விளைவிப்பது கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது...

சைவம் மட்டும் உண்ணும் சிலரை உற்சாகப்படுத்த இப்படி எழுதியுள்ள உணவகம், இதையும் எழுதட்டும்...

யானை வலியது தான், புலியும் அவ்வாறே
ஒட்டகம் உறுதி தான், சிங்கமும் அவ்வாறே
குதிரை அழகு தான், சிறுத்தையும் அவ்வாறே

ஒன்றுயர்ந்து மற்றவை தாழ்வதில்லை
உயர்ச்சி தாழ்ச்சி உணவிலே
பார்த்தல் போல் மூடம் ஒன்றுமில்லை

இறுதியாக, ஒன்று மட்டும்... நாங்க சாப்பிட்டதுக்கு காசு கொடுக்குறோம்... நீங்க இலவசமாக அட்வைஸ் தரவேணாம்... 

- கணபதிராமன்

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka