கனவைத் துரத்தியவள் ருக்மாபாய் - Rukhmabhai

கல்வி ஒரு பெண்ணுக்கு எவ்விதம் மனஉறுதியைத் தருகிறது, போராடும் குணத்தைத் தருகிறது என்பதற்குத் தகுந்த தரவாகத் திகழ்ந்த ருக்மாபாயின் பிறந்தநாள் இன்று...

யாரிந்த ருக்மாபாய்?
நமது பள்ளிப்பாடங்களில் அலங்கரித்து எழுதப்பட்டுள்ள - 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முரசிட்டுக் கூறிய பால கங்காதர திலகர், இந்தப் பெண்ணின் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றார் என்றால் நம்புவீர்களா? நமது பள்ளிப்பாடங்கள் ஒருதலைப்பட்சமானவை என்பதை உணர வைத்த தருணம், ருக்மாபாயைப் பற்றி படித்த நேரங்கள்...

ருக்மாபாய், ஜனார்த்தன் பாண்டுரங்கர் - ஜெயந்திபாய் ஆகியோருக்குப் புதல்வியாய் 22 நவம்பர் 1864 அன்று பிறக்கிறார். இவரது எட்டாவது வயதில் பாண்டுரங்கர் இறக்க - அவர் பெயரில் இருந்த சொத்து அனைத்தையும் ருக்மாபாய் பெயரில் மாற்றி எழுதுகிறார் ஜெயந்திபாய். வீட்டில் இருந்த படியே, இலவச சர்ச் மிஷன் நூலகத்தின் புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்கிறார் ருக்மா. தனது 11வது வயதில், தாதாஜி பிகாஜி என்ற 19 வயது இளைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தாதாஜியின் அன்னை சிறிது காலத்தில் இறந்துவிட, தாதாஜி அவரது தாய்மாமனான நாராயண் வீட்டுக்குச் செல்லவேண்டிய சூழல் வருகிறது. நாராயண் தன் மனைவியை அடித்து துன்புறுத்தும் - பெண்களை அடிமைப் பொருளாக எண்ணும் பெரும்பான்மை ஆண். இப்படிப்பட்ட ஆணிருக்கும் வீட்டிற்குச் செல்வதில் ருக்மாவுக்குத் தயக்கம் இருந்தது.
ருக்மாபாய் (நவம்பர் 22 1864 - செப்டம்பர் 25 1955)

ருக்மாவின் அன்னையான ஜெயந்திபாய் மருத்துவரான - மனைவியை இழந்தவருமான டாக்டர் சாகாராம் அர்ஜுனை மறுமணம் செய்துகொள்கிறார். ருக்மா, தனது 12 வது வயதில், தாதாஜியுடன் நாராயணனின் வீட்டுக்குச் செல்ல மறுத்து, தன் அன்னை வீட்டுக்கு வந்து விட, அந்த முடிவை சாகாராம் அர்ஜுன் ஆதரிக்கிறார். தாதாஜி பலமுறை சமாதானம் பேசமுயன்றும் தன் முடிவில் உறுதியாய் இருந்தார் ருக்மாபாய். அந்த உறுதியைக் கல்வி அவருக்குக் கொடுத்திருந்தது. சாகாராமின் உறுதுணையுடன் மேலும் கல்வியைத் தொடர்ந்தார் ருக்மாபாய்.

பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும், தனது வீட்டிற்கு வராத காரணத்தால், நாராயண் தாதாஜியை நீதிமன்றத்தில் வழக்குப் பதிய பணிக்கிறார். 1884 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சாகாராமிற்கு தாதாஜியின் வழக்கறிஞர்கள் வாயிலாக ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் தனது மனைவியான ருக்மாபாயைத் தன்னுடன் சேர்வதைத் திட்டமிட்டு சாகாராம் தடுப்பதாகவும், ருக்மா பெயரில் உள்ள சொத்துக்களை அடையவே இப்படிச் செய்வதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது. அதற்கான பதிலில், இது ருக்மாவின் சொந்த முடிவென்றும், அந்த முடிவில் தனது தலையீடு இல்லை என்றும் கூறியும் ஏற்க மறுத்ததால், அவரும் வழக்கறிஞர்களை நாட வேண்டியிருந்தது. ருக்மாபாய் வழக்கு நாடு முழுதும் பேசுபொருள் ஆகி இருந்தது. 'மேலும் கல்வி பெற வேண்டும், அது கணவன் வீடு சென்றால் நடவாது என்பதால் அன்னை வீட்டிலேயே இருக்க எடுத்த தனது முடிவில் உறுதியாய் இருந்தார் ருக்மாபாய்.

1885 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பின்ஹே, திருமணம் என என்னவென்று தெரியாத வயதில் மணம் புரிந்திருந்தாலும், இப்போது முடிவெடுக்கும் வயது வந்துவிட்ட ஒரு பெண்ணைக் கணவனுடம் சென்று வாழ நிர்பந்திக்க முடியாது என தாதாஜி தொடுத்த வழக்கைத் தள்ளுபடி என்னும் தீர்ப்பை வழங்க, நாடு முழுதும் செய்தித்தாள்கள் தீர்ப்பை எதிர்த்து எழுதினர். அதில் முக்கியமானவர், பாலகங்காதர திலகர். தனது மராட்டா பத்திரிக்கையில், இந்து கலாச்சாரத்தை இந்தத் தீர்ப்பு மீறுவதாக உள்ளது. வலுக்கட்டாயமாக - இந்துக்களின் வழக்கங்கள் மீது சீர்திருத்தம் என்ற பெயரில் கலாச்சார அழிப்பு நடப்பதாக எழுதினார். ஆனால், அதே நேரத்தில், இந்துப் பெண் (Hindu Lady) என்றப் புனைப்பெயருடன் இந்த வழக்கில் ருக்மாபாய்க்கு ஆதரவாக - அவர்தரப்பில் உள்ள நியாயங்களை - கல்வி கற்று மேன்மை அடைய நினைக்கும் அவர் வேட்கையினை - வழக்கின் போதும் அதற்கு முன்னரும் அவர் அடைந்த துன்பங்களை விரிவாக எழுதத் தொடங்கி இருந்தது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்துக் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை அடிமை செய்யும் பலரின் முகத்திரையையும் கிழிக்கத் தவறவில்லை இந்துப் பெண்.

மீண்டும் மேல்முறையீடு:
தாதாஜி வழக்கை மீண்டும் மேல்முறையீடு செய்ய, இம்முறை வழக்கை நீதிபதி பாரன் விசாரித்தார். அவர் இந்துமதச் சட்டங்களின்படி, கணவன் தாதாஜியுடன் ருக்மா சென்று வாழ வேண்டும். மறுத்தால், ஆறு மாதம் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பளித்தார். ஆறு மாதமென்ன அதிகபட்சத் தண்டனை தந்தாலும் அந்த வீட்டுக்கு நான் செல்லமாட்டேன் எனக் கூறினார். இதேக் கருத்தை 'இந்துப் பெண்' புனைப்பெயரும் செய்தித்தாளில் எழுதியது. பின்னர், இந்துப்பெண் என்ற பெயரில் எழுதிவருவது ருக்மாபாய் தான் என்று தெரியவந்தது.
"இது தான் ஆங்கிலக் கல்வியால் வந்த விளைவு. நமது கலாச்சாரத்திற்கு எதிராக யோசிக்கும் அளவுக்குப் பெண்களை இந்தக் கல்வி கெடுக்கிறது." என எழுதினார் திலகர்.
பல வழக்குகள், வாதாடல்களுக்குப் பிறகு தன்னிலைக் குறித்து விரிவாக இங்கிலாந்து ராணிக்கு ருக்மாபாய் எழுதிய கடிதத்தின் பதிலாய், ருக்மாபாய்க்கு சாதகமான தீர்ப்பளிக்கப்பட்டது. 1888 ஆம் ஆண்டு தாதாஜி - ருக்மாபாய் திருமண உறவு முறிந்தது என ராணி அறிவிக்க, தாதாஜி தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும் எனக் கூற, பணத்தை விட்டெறிந்து தன் கல்விக்கனவைத் துரத்தக் கிளம்பினாள் ருக்மா.

மேலும், மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என ஆசை கொண்டிருப்பதாக அவர் சொல்ல, பலர் அவர் கல்விக்கான செலவினை அளிக்க முன்வந்தனர். இவர் வழக்கும், வழக்கு குறித்த செய்திகளும் இங்கிலாந்து வரை பரவலானது. இங்கிலாந்தில் இருந்த சில பெண்ணிய அமைப்புகள், சமூக ஆர்வலர்களும் இங்கிலாந்தில் அவர் மருத்துவம் படிக்க உதவி புரிந்தனர்.
1889ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் மகளிர் மருத்துவப்பள்ளியில் சேர்ந்து 5 ஆண்டுகள் மருத்துவம் படித்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவருள் ஒருவராய் இந்தியா வந்தார் ருக்மாபாய்.

குஜராத்தின் ராஜ்கோட் மாநில பெண்கள் மருத்துவமனையில் பொது மருத்துவராக 1895ல் இணைந்து 35 ஆண்டுகள்  பணிபுரிந்தார். படிப்படியாக முன்னேறி மருத்துவமனை தலைமை மருத்துவராக தன் பணியிலும் வாழ்விலும் சிறந்து விளங்கினார். தன் வாழ்நாள் முழுதும் பெண் முன்னேற்றம் - கல்வியின் அவசியம் குறித்து பேசியும் எழுதியும் வந்தார் ருக்மாபாய்.

புகழ்பெற்ற இவர் வழக்கின் மூலம், திருமண வயது வரம்புச் சட்டம் (Age of consent act) 1891 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 10இலிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கும் பல இந்துத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திலகரும் "அரசுக்கு மக்களின் வாழ்வு முறையிலும், சமூக வழக்கங்களிலும் தலையிடும் அதிகாரம் கிடையாது. அது எவ்வளவு நல்ல காரியமே ஆனாலும்" எனக் கொக்கரித்தார். இவ்வளவு எதிர்ப்புகளையும் மதியாது தன் மதிதன்னை வளர்த்துக் கொண்டு, கனவைத் துரத்தி - கல்வி கொண்டு - சாதனை செய்த ருக்மாபாய்க்கு வீரவணக்கமும் 153வது பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

இன்று கூகுள் டூடிளாக அவர் படத்தை இட்டுப் பெருமை சேர்த்த கூகுளுக்கும் நன்றி.

- கணபதிராமன்

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka