பாரதியும் நானும்
பாரதியும் நானும்
எனது பள்ளிப்படிப்பின் போது, நான் முதன் முதலில் பங்கு பெற்ற ஆங்கில கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். நல்ல வேளை. இரண்டாம் பரிசு... அந்த பரிசு என் பார்வையை நேராக்கியது... என்னை சிறிதேனும் மாற்றியது... என்னுள் நேர்மறை பாதிப்பு தந்த அந்த பரிசு பாரதியார் கவிதைகள் - கையடக்க பதிப்பு... நான் மகிழ்ந்தது மட்டுமல்லாமல் முதல் பரிசு என்ன கிடைத்தது என வினவ கூட மறந்தேன்...
இங்கு நான் தமிழ் கொண்டு எழுத பாரதியும் ஓர் நற்காரணம்... அந்த பாரதியின் கவிகளில் எனக்கு பிடித்த கவி இதோ...
அறிவே தெய்வம் - மகாகவி பாரதி
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! -பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே
Comments
Post a Comment