JM21 - குறள் கதை

 JM21

- முடிவிலி 

 (Vince Gilligan உருவாக்கிய Breaking Bad தொடரின் களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)





நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
(குறள் 331, அதிகாரம்: நிலையாமை, இயல்: துறவறவியல்)

தனது வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல்குளத்தின் அருகே நின்றிருந்தார் வால்டர். டமார் என்று பெருவெடியொலி கேட்க, அனிச்சையாய்க் குனிந்து பின் மேலே பார்க்க, உயரே வானில் தீயும், புகையும் உண்டாகி, கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்தப் புகையில்  இருந்து பல பொருட்கள் இங்கும் அங்கும் சிதறி விழ, அதன் நடுவே ஒரு கரடி பொம்மை வால்டரின் நீச்சல்குளத்தில் வந்து விழுந்ததில் வால்டரின் உயரத்திற்கு மேலாகத் தண்ணீர் வெடித்தெழுந்து சிதறியது. என்ன நிகழ்கிறது என்பதை உணராத வால்டர் நீச்சல்குளத்தில் எட்டிப் பார்க்க, விழுந்த கரடிபொம்மை தண்ணீருக்குள் திரும்பி மேலெழ, அதன் முகத்தில் ஒரு கண்ணே இருந்தது. இன்னொரு கண் இருந்த இடம் கருகிப் போயிருந்தது.


***


தலைப்பாகையும், கால் வரை நீண்டிருந்த அங்கியும் அணிந்தவரின் தலை முடி பக்கவாட்டில் தோள் வரையும், பின்னால் முதுகின் பாதி வரையிலும் நீண்டிருந்தது. இடது கையில் Mont Blanc கடிகாரமும், வலது கையில் உருத்திராட்ச மாலையும், கால்களை Dolce & Gabbana shoeம் அலங்கரித்திருக்க, அவர் சுற்றிச் சுழன்றபடி, அவரின் காதுகளில் இருந்து வாய் வரை வளைந்து நின்றிருந்த ஒலிவாங்கியில், “ஜகம் மகாதேவம், ஜகம் மகாதேவம்" என்று கூற, மேடையின் கீழ் குழுமியிருந்த கூட்டமும் பெருங்கரவொலியுடன் "ஜகம் மகாதேவம்" என்று சொல்லியபடி ஆடத் தொடங்கியது. 


அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் இருந்த தனது ஆசிரமத்தில் பெருந்திடலில் நடுவே தான் நடப்பதற்கு மேடை அமைத்து, அதில் சுற்றிச்சுழன்று நடந்து கொண்டிருந்தார் மகாதேவ மகரிஷி. அந்த மேடையின் இருபுறம் குவிந்திருந்ததில் பலர் அமெரிக்கர்களாய் இருந்தாலும், வேட்டி சட்டையோடோ, சேலை அணிந்தோ காணப்பட்டது வேடிக்கையாக இருந்தது. பலரும் கைகளை மேலே தூக்கிக் காட்டியபடி நின்றிருந்தனர். பாஸ்டன், சான்பிரான்ஸிஸ்கோ, நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, பீனிக்ஸ் நகரில் 2005ல் இந்த ஆசிரமத்தைத் தொடங்கி, இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்திருந்தன. நள்ளிரவு தாண்டியும் பலரும் மகாதேவ மகரிஷியின் மகிழ்ச்சிக்கடலில் ஆடியபடி பிடித்துக் கட்டியிருந்தது எப்படி எனப் புதிதாய் அன்று வந்திருந்தவர்களுக்கு வியப்பாய் இருந்ததில் வியப்பில்லை. 


அறுபத்தைந்து ஏக்கர் பரப்பு கொண்ட ஆசிரமத்தின் தெற்கில் இருந்த பெரிய கதவுகள் வழி உள்ளே வரும் சாலை வலது இடதாகப் பிரிந்து, மீண்டும் முதன்மைக் கட்டிடத்தின் முன்பு வந்து இணைந்திருந்தது. நேற்றிரவு மகாதேவ மகரிஷி ஆட்டம் போட்டபடி, அருள்பாலித்தது, இந்தச் சாலைகளுக்கு நடுவே இருந்த பெருந்திடலில் தான். மிகப்பெரும் குவிமாடத்தைக் கூரையாகக் கொண்டிருந்தது ஆசிரமத்தின் நடுவே இருந்த முதன்மைக் கட்டிடம். வெண்மை நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு மாடம் முன்னே நீண்டிருக்க, அதனைத் தரையில் இருந்து உயர்ந்த நான்கு வெண்ணிறத் தூண்கள் தாங்கிப் பிடித்தவாறு நின்றன. சாலையிலிருந்து பிரிந்த கிளைச்சாலை இந்த தூண்களுக்கு இடையே நுழைந்திருந்தது. அங்கிருந்து ஏறிய படிகளின் முடிவில் இருந்த வரவேற்பறையில் மகாதேவ மகரிஷியின் பெரிய புகைப்படம் ஒன்றும் அதன் கீழே 'ஜகம் மகாதேவம்' எனப் பலமொழிகளில் எழுதப்பட்டிருந்தது.  வரவேற்பில் ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். முதன்மைக் கட்டிடத்தைச் சுற்றியும், பின்புறமும் பரந்து கிடந்த புல்வெளியில் தானியங்கி நீர்த் தெளிப்பான்கள், சுழன்றபடி சீரான ஒலியோடு தண்ணீர்த் துளிகளைத் தெளித்துக் கொண்டிருந்தன. புல்வெளியைச் சுற்றி ஆங்காங்கே கூரை வேயப்பட்ட குடில்கள், அவற்றின் வாயில் வரை வளைந்து சென்ற நடைபாதை, நடைபாதையின் இருமருங்கிலும் இருந்த பூஞ்செடிகள் என அனைத்தும் காண்போரை மனம் கவர வைப்பதென இருந்தது.


Walking shoe, T shirt, trainer pant உடன் ஆசிரமத்தின் புல்வெளிக்கு நடுவே இருந்த நடைபாதையில் எதிர்படுபவர்களிடம், புன்முறுவலோடு தலையசைத்தபடி தனது அதிகாலை நடையில் இருந்தார் மகாதேவ மகரிஷி. நேற்று மேடையில் இருந்தவரா இவர் என எண்ணவைக்கும்படி இருந்தது அவரது தோற்றம்.


தனது காலை நடையை முடித்து, முதன்மைக் கட்டிடத்தில் நுழைந்த மகாதேவர், வரவேற்பில் இருந்த ஜெயா என்ற ஜென்னியிடம், “J dear, have you verified the travel arrangements?” என்றார். “Yeah Guruji, your jet is already in the airstrip. Your limousine will pick you up by 10, Is it alright?” என்று ஜென்னி சொல்ல, “Perfect like you” என்ற மகாதேவரின் முகம், அவரின் பின்னிருந்து எழுந்த "ஜெகந்நாதா…” என்ற ஒலியில் கலவரமடைந்தது. ஒலி வந்த திசையில் அவர் திரும்ப, இருக்கையில் இருந்து எழுந்து நின்ற கேகேயைப் பார்த்ததும், கலவரமான முகத்தில் சிறு சிரிப்பு மலர்ந்தது. “டேய், கேகே, நீ எப்படிடா அமெரிக்காவுல?” என்றார் மகாதேவ மகரிஷி என்றறியப்படும் ஜெகந்நாதன். 


கேகேயின் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி அவருடன் இருக்கையில் அமர்ந்த மகாதேவன், கேகே தனது கேள்விக்குப் பதில் சொல்லும் முன், “டேய், ஏன்டா, ஜெகந்நாதன்னு கூப்பிட்ட? அதெல்லாம் அப்ப, இப்ப இங்க நான் மகாதேவ மகரிஷி இல்லன்னா குருஜி" கேகேக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி, பின்னர் இயல்பான குரலில், “வாழ்க்கைல்லாம் எப்படிடா போகுது?” என்றார்.


“Going greatடா, அமெரிக்கா வந்து அஞ்சு ஆண்டு ஆகப் போகுது. நீயும் நானும் சிட்டி பேங்க்ல" என்று கேகே மீண்டும் பேசத்தொடங்க, அவருடைய கையை மீண்டும் பிடித்த மகாதேவன், “let’s go to my suite” என்று சொல்ல, இருவரும் எழுந்தனர். அப்போது "Good morning, Guruji" என்று சொல்லியபடி ஓடிவந்தாள் ஒரு சிறுமி. அவளின் பின்னே சிரித்தபடி வந்து கொண்டிருந்தனர் அந்தச் சிறுமியின் பெற்றோர். “Good morning, little girl, how are you doing this morning?” என்றார் மகாதேவன். 


“I’m doing great, I’ve a gift for you” என்று சொல்லியபடி, பின்னால் தனது கையில் இருந்த இளஞ்சிவப்பு நிறக் கரடி பொம்மையை நீட்டினாள். “Our stay in here is great, thank you for letting us into this spiritual experience” என்றனர் அந்தக் குழந்தையின் பெற்றோர். 


“The Pleasure is all mine” என்ற மகாதேவன், கரடிப்பொம்மையை வாங்கிக் கொண்டு, அந்தச் சிறுமியின் தலையில் கைவைத்து, “ஜகம் மகாதேவம்" என்று சொல்ல, அந்தப் பெற்றோரும் இன்னும் உரத்த குரலில், “ஜகம் மகாதேவம்" என்று சொல்லிவிட்டு, சிறுமியோடு தங்களது குடிலுக்குச் சென்றனர். நிகழ்ந்த அனைத்தையும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் கேகே. கேகே சிரிப்பதைக் கவனித்த ஜெகந்நாதன், தனது கையில் இருந்த பொம்மையை ஜென்னியிடம் கொடுத்து, தனது baggageல் வைக்கச் சொல்லிவிட்டு, மின்தூக்கியை நோக்கி நகர, கேகேயும் பின்தொடர்ந்தார்.


இருவரும் மின்தூக்கியில் இரண்டாம் தளத்தில் இருக்கும் மகாதேவ மகரிஷியின் அறைக்குள் நுழைந்தனர். அறையின் ஒவ்வொரு அங்குலத்திலும் மக்கள் இவர் மீது கொண்ட பற்றும், அந்தப் பற்றில் இருக்கும் முட்டாள்தனமும் அலங்காரமாய் மிளிர்ந்தன. 


“இப்பச் சொல்லுடா, இங்க யாராவது இருக்காங்களான்னு பாத்து பாத்துப் பேச வேண்டியதில்ல, Want some beer?" என்றார் ஜெகந்நாதன், 


“no man, its just 8 in the morning" என்றார் கேகே.


"Suit yourself, நேத்தே வந்துட்டியா?" 


"இல்ல, இப்ப தான். நீ என்னடா இப்படி ஆகிட்ட? நேத்து ரேடியோ கேட்டுக்கிட்டு இருந்த என் மனைவி, அதுல நேத்து நடந்த spiritual meet பத்தி வந்த விளம்பரத்தைக் கேட்டுட்டு, என்கிட்ட சொல்ல, நான் நீ என்கூட வேலை பாத்தவன் தான்னு சொல்றேன், நம்ப மாட்டேன்னுட்டா" என்று சொல்லிச் சிரித்தார் கேகே.


“நம்பலைன்னா அப்படியே இருக்கட்டும்டா. நீ பீனிக்ஸ் எப்ப வந்த?” 


“ஏழு மாசம் ஆகுது, இதுக்கு முன்ன LAல இருந்தேன். டெல்லியில நம்ம வேலை பாத்த அதே சிட்டிபாங்க்ல தான் இப்பவும் இருக்கேன். நல்ல package, ஆனா அமெரிக்காவுக்கு shift ஆகணும்னு சொன்னாங்க. வந்து அஞ்சு வருசம் ஆச்சு, உன்ன பாத்து 12 வருசம் இருக்குமா? ஆமா, ஏன்டா இப்படி ஆகிட்ட?” என்றார் கேகே.


“இதுல தான் செம்ம காசு, பாத்தியா? எந்தக் குழந்தையாவது தன் கையில இருக்குற பொம்மையக் கேட்டா கொடுக்குமா? ஆனா, என்னுடைய பக்தர்கள் எனும் குழந்தைகள் தானாகவே கொடுப்பாங்க. எல்லாம் ஜகம் மகாதேவம் என்ற மந்திரத்தோட பவருடா"


“இவ்ளோ பெரிய இடம், வாங்குறதுக்கே எவ்ளோ செலவாகிருக்கும்? அதுவும் இந்தியாலன்னா கூட பரவால்ல, இங்க அமெரிக்காவுல" என்ற கேகேயை இடைமறித்து, “அமெரிக்காவுல இது என்னோட நாலாவது ஆசிரமம், இந்தியாவுல ஒரு எடத்துல ஆசிரமம் வச்சு, நாளை ஓட்டிடலாம்னு தான் இருந்தேன். எட்டு வருசம் முன்ன சில பேர் என்னை sponsor செஞ்சு இங்க வரவச்சு, spiritual tourனு ஒன்னு நடத்த, அதுல கிடைச்ச வரவேற்பு. காசு வச்சு, இங்க இதுக்கு இவ்ளோ market இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் கேக்கவா வேணும்? அடுத்து நியூ மெக்ஸிகோ, அல்பகுர்க்கியில அடுத்து எடம் பாத்துட்டு இருக்கேன்.” 


"சரிடா, IRS எல்லாம் கண்டுக்க மாட்டாங்களா?"


"அதெல்லாம் religious NGO னு சொல்லி tax exemption வாங்கியாச்சு, மத்த சட்டச் சிக்கலுக்கெல்லாம் legal team இருக்காங்க. அடுத்து europeலாம் போக வேண்டியிருக்கு"


“இன்னும் எவ்ளோ இருந்தா போதும்னு நெனப்ப?” 


“எதுக்குடா போதும்னு நெனக்கணும். டெல்லியில நம்ம இருந்த நேரத்துல வந்த சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிட்டு, மாசக்கடைசியில பட்டினியாக் கூட இருந்திருக்கேன். ஆனா, இப்ப காத்தடிக்குது, தூத்திட்டு இருக்கேன்" என்று இருகைகளை விரித்துச் சிரித்தார் ஜெகந்நாதன். 


“டேய் டேய், நானும் உன்கூட டெல்லியில இருந்திருக்கேன். என்கிட்ட ஏன்டா உன் sales pitchலாம்?" என்று கேகே கூற, இருவரும் சிரித்தனர். 


அவர்கள் பேசத்தொடங்கி அரை மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது. பேசிக் கொண்டிருந்த பொழுதே, கையில் இருந்த கைப்பேசியில் எதையோ எழுதிக் கொண்டிருந்த ஜெகந்நாதனிடம், "சரிடா, நான் கிளம்புறேன். கீழ ரிசப்ஷன்ல இன்னிக்கு travelனு பேசிட்டு இருந்தல்ல, நீ ready ஆகு. நீ எப்படியும் மாசத்துல நாலு நாள் பீனிக்ஸுக்கு வரப் போற. இன்னொரு நாள் வந்து பாக்குறேன்." என்று எழுந்த கேகேயை மீண்டும் அமரச் சொன்னார் ஜெகந்நாதன். 


"இருடா போகலாம், Just stay a few more minutes" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கதவு தட்டப்பட்டது. "Come in, J" என்று ஜெகந்நாதன் குரல் கொடுக்க, கதவைத் திறந்து உள்ளே வந்த ஜென்னி, ஒரு படிவத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.  


அந்தப் படிவத்தை கேகேயிடம் நீட்டினார் ஜெகந்நாதன். "என்னடா இது?" என்று கேட்டவாறே வாங்கிப் பார்த்த கேகே அதிர்ந்தார். 


"Its just a formality டா. நான் சம்பாதிச்சது எல்லாம் நிலையா இருக்கணும்னா, என்னுடைய பழைய வாழ்வு பற்றிய தகவல்களை எல்லாம் மறைக்க வேண்டியிருக்கு. அதையும், இன்னிக்கு நம்ம பேசுனதையெல்லாம் என்னிக்கும் வெளியே சொல்லமாட்டேன்னு NDC, கீழ ஒரே ஒரு கையெழுத்து. அவ்ளோ தான்." என்ற ஜெகந்நாதனைச் சில நொடிகள் உறைந்து போய் அந்தப் படிவத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பேனாவை எடுத்து, அவனிடம் ஜெகந்நாதன் நீட்ட, அதை வாங்கிக் கையெழுத்து போட்டு விட்டு எழுந்த கேகேயிடம், "பிடித்தம் போக 21 ஆயிரம் வாங்கிட்டு இருந்த ஜெகந்நாதன், இன்னிக்கு என் பேருலயே JM21னு ஒரு private jet வாங்கிச் சுத்துறேன், இன்னிக்கு Albuquerque போறது கூட அதுல தான். As I said, its just a formality. You're always welcome here, my friend" என்று ஜெகந்நாதன் சொல்ல, பதிலேதும் சொல்லாமல் கதவை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார் கேகே. 


***


JM21ன் ஓட்டி தற்போது விமானம் Albuquerqueஐ நெருங்கி விட்டதாக PAல் சொல்லிக் கொண்டிருந்தார். மகாதேவ மகரிஷியும், அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்த ஜென்னியும் விமான ஓட்டி கூறியதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு அடுத்தடுத்த இருக்கைகளில் மகாதேவரின் சீடர்கள் இருவர் மற்றும் அவரின் legal teamல் இருந்த நால்வர் இருந்தனர். 


கீழே தெரியும் Albuquerque நகரைப் பார்த்துக் கொண்டிருந்த legal teamஐச் சேர்ந்த James McCallum, சற்று அதிர்ந்து, தனது அருகே இருந்தவனிடம், "What's wrong this picture?" என்று காட்ட, அவன் என்னவென்று சாளரத்தைத் திரும்பிப் பார்க்கும் நொடிப்பொழுதுக்குள், JM21 உடன் 157 பயணிகளோடு வந்து கொண்டிருந்த வானூர்தி Wayfarer 515 மோதிச் சிதறியது. ஜென்னி மறக்காமல் baggageல் எடுத்து வைத்திருந்த இளஞ்சிவப்பு நிறக் கரடி பொம்மை வானூர்திச் சிதறலில் ஆங்காங்கே அடிபட்டு இடது கண் அருகே பற்றிய நெருப்புடன் வந்து வால்டரின் நீச்சல் குளத்தில் விழுந்தது. நடுவானில் இரு வானூர்திகள் மோதி வெடித்ததில் மகாதேவ மகரிஷி எத்தனை துண்டுகளாய் Albuquerque நகரில் எங்கெங்கு விழுந்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்? 


முற்றும்


குறள் விளக்கம்:


நிலையில்லாதவற்றை எல்லாம் நிலையானது என நினைப்பது அறிவற்றவர்களின் செயல்.



Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka