செல்வநாதன் ஆறாம் வகுப்பில் படிக்கும் தனது மகள் கயலினியுடன் வகுப்பறையின் வெளியே காத்திருந்தார். ஆசிரியர் அடுத்ததாக, கயலினியின் பெயரைக் கூற இருவரும் உள்ளே நுழைந்தனர். “கயலினி ரொம்ப brilliant, எல்லா பாடங்களிலும் நல்ல மார்க், வேற எந்த complaintம் இல்ல, கயல், Aim for centum next time” என்றார் வகுப்பாசிரியர். மற்ற பாடங்களின் ஆசிரியர்களையும் பார்த்துப் பேசிவிட்டு வெளியே வந்த செல்வநாதனுக்குக் கயலினியை நினைத்துப் பெருமையாக இருந்தது.
“நான் படிக்குறப்ப எல்லாம் வாத்தியார்கிட்ட அடிவாங்காம தப்பிக்குறதே பெருசா இருக்கும். ஆனா, என் பொண்ணு இவ்ளோ பேரு வாங்குற, செம்ம கயல்" என்று சொல்ல, “thanks ப்பா" என்றாள் கயல்.
“நீ இப்படியே படிடா, யாரு தடுத்தாலும் உன் மனசுக்குப் பிடிச்சதைச் செஞ்சு குடுக்க அப்பா இருக்கேன்டா" என்ற அப்பாவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் கயலினி.
இன்று
மடிக்கணினியின் முன் அமர்ந்திருந்தாள் கயலினி. Zoom செயலியில் அவளுடைய குழுவில் இருக்கும் அனைவரும் இணைந்திருந்தனர். கயலினி அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தாள். அவளிருந்த அறை உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. கதவின் வெளியே செல்வநாதன், “ஏய், என்னடி நினச்சுட்டு இருக்கா உன் பொண்ணு, நாலு எழுத்து படிச்சுட்டு, வேலைக்குப் போயிட்டா, பழக்க வழக்கமெல்லாம் மாறிடுமா?” என்று கத்திக் கொண்டிருந்தார்.
“ஏங்க, அவ உள்ள வேல பாத்துட்டு இருக்கா, ஏன் இப்படி கத்துறீங்க?” என்றார் கயலினியின் அம்மா மீனாட்சி.
“ஏன் கேக்கட்டுமே, இது இன்னும் என் வீடு தானே? என் பேச்சுக்கு மதிப்பு உண்டா இல்லையா? என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, என்கிட்ட நேருக்கு நேர் நின்னு இப்படி பேசுவா உன் பொண்ணு, வெளிய தலைகாட்ட முடியாதபடி செஞ்சுட்டா, ச்ச" என்று பொருமிக் கொண்டிருந்தார் செல்வநாதன்.
அன்று
கயலினி காலையிலிருந்தே மகிழ்ச்சியா, பதற்றமா என்று தெரியாத நிலையில் தொலைக்காட்சியையும், தனது வீட்டில் இருந்த கணிப்பொறியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'இன்று காலை பத்து மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்' என்று செய்தியாளர் வாசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியாகும் வலைத்தளத்தை எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தாள் கயலினி.
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த செல்வநாதன், “அடடே, வாங்க மாமா, மீனாட்சி யாரு வந்திருக்காங்கன்னு பாரு" என்று எழுந்திருக்க, சிரித்தபடி உள்ளே நுழைந்தார் மீனாட்சியின் பெரியப்பா பழனியப்பன்.
“என்னப்பா செல்வம், எப்படியிருக்க, கடையெல்லாம் எப்படி போகுது?” என்று கேட்ட பழனியப்பன், வரவேற்ற மீனாட்சியிடம் கையில் இருந்த பழங்களைக் கொடுத்து, “என்னம்மா நல்லாருக்கியா கண்ணு?” என்றார்,
“எனக்கென்ன பெரியப்பா, உக்காருங்க, பெரியம்மா வரலயா?” என்றாள் மீனாட்சி,
“அவ வர்றம்னு தான் சொன்னா, வூட்டுல வேல கெடக்குல்ல, அதுவுமில்லாம டவுன்ல இன்னும் ரெண்டு மூனு இடத்துக்குப் போவ வேண்டிக் கெடக்கு, அதான்"
“வேல எப்ப இல்லாம போவும் பெரியப்பா, கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா, நீங்க எத்தனை எடத்துக்குப் போனாலும், பெரியம்மா இங்க இருந்துட்டுப் போறாங்க, பேச்சுத்துணையா" என்று சொன்னதுக்குச் சிரித்து மட்டும் வைத்தார் பழனியப்பன்.
“உக்காருங்க பெரியப்பா, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று உள்ளே செல்ல இருந்த மீனாட்சியிடம், “பாப்பா எங்கம்மா?” என்றார் பழனியப்பன்.
“உள்ள தான் இருக்குறா, இன்னிக்கு ரிசல்ட் வேறல்ல, அதான் காலைலேந்து டிவி முன்னாடியே உக்காந்துட்டு இருக்குறா, எப்படியும் நல்ல மார்க் எடுத்துடுவா மாமா" என்றார் செல்வநாதன்,
“பொம்பளப் புள்ள என்ன மார்க் எடுத்தா என்ன மாப்ள, படிக்குற வரைக்கும் படிக்கட்டும், இல்லன்னா நம்ம ஆளாப் பாத்து கட்டி வச்சுடுவம், என்ன நான் சொல்றது?" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பழனியப்பன்.
செல்வநாதனிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதற்கு முன்னமே, “அப்பா, 1147 மார்க்குப்பா, கணக்குலயும், கம்ப்யூட்டர்லயும் centum” என்று குதித்துக் கொண்டே வந்தாள் கயலினி.
இன்று
கயலினியின் அறைக்கதவு திறந்திருந்தது, சற்று நேரம் முன்பு வரை கத்திக் கொண்டிருந்த செல்வநாதன் வெளியே சென்றிருந்தார். நாற்காலியில் அமர்ந்திருந்த கயலினி, முன்பிருந்த மடிக்கணினியை மூடி வைத்தாள். அருகே நின்று கொண்டிருந்த மீனாட்சி, “ஏன்டி இதுக்குத் தான் உன்ன படிக்க வச்சோமா? இதுக்குத் தான் ஆம்பளப் பையன் போல வேலைக்கு அனுப்புனமா?” என்றாள். சொற்கள் வீச்சுடன் இருந்தாலும், சொல்லியது கெஞ்சுவது போல இருந்தது.
“அம்மா, என்னம்மா பேசுற? எந்தக் காலத்துல இருக்குற? ஆம்பள தான் வேலைக்குப் போகணும். பொம்பள வீட்டப் பாத்துக்கணும்னுக்கிட்டு.” என்றாள் கயல்.
“சரிம்மா, நான் அந்தக் காலம் தான். இதுவரை சமையக் கட்டுலயே தான் இருந்துட்டேன். ஆனா, இப்ப நீ செஞ்சிருக்க வேலையில இதுவரைக்கும் உன்னப் படிக்க வச்சு அழகு பாத்த மனுசனை வெளியே தலகாட்டமுடியாதபடி செஞ்சுட்டியேடி" என்றார் மீனாட்சி.
“இப்ப என்ன செய்யச் சொல்றம்மா, போன லாக்டவுன் போல சென்னையிலயே இருந்திருப்பேன். இப்ப இங்க வான்னு சொல்லி வரவச்சுட்டு, வந்ததுலேந்து கல்யாணம் கல்யாணம்னு கேட்டுட்டு இருந்தீங்க, இப்ப வேணாம்னு தானே சொன்னேன். அப்புறம் நீங்களாத் தானே நீ யாரையாச்சும்னு கேட்டீங்க. ஆமான்னு சொன்னதுக்குக் கொலை குத்தம் செஞ்சது போல புலம்பிட்டு இருக்கீங்க.” என்ற கயலினி, அம்மாவின் கைகளைப் பிடித்து, “அம்மா, நான் இன்னும் ஸ்கூல் குழந்தை இல்லம்மா, இருபத்தஞ்சு வயசாகுது. என் வாழ்க்கையில சில முடிவுகள் நான் எடுக்கணும்னு நெனச்சுட்டு இருக்கேன். இதுவரை என்னோட முடிவுகளுக்கு, என்னோட மகிழ்ச்சிக்கு நீங்க தடையா இருக்கமாட்டீங்கன்னு தான் நெனச்சுட்டிருக்கேன்.” என்று சொல்ல, மீனாட்சி அழத் தொடங்கியிருந்தாள்.
அன்று
கோவையிலிருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார் செல்வநாதன். தனது கல்லூரித் தோழியோடு பேருந்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த கயலினியைப் பார்த்து, “கயலு, ஆஸ்டலுக்குப் பத்திரமாப் போயிடுவல்ல, போயிட்டு உடனே போன் பண்ணும்மா" என்றார்.
“டவுன் பஸ் ஸ்டாண்டுலேந்து 20A பிடிச்சா அரை மணி நேரத்துல போயிடுவோம்ப்பா, நீங்க பாத்துப் போயிட்டு வாங்க.” என்றாள் கயலினி, CITயில் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பப் பொறியியல் படிக்கிறாள்.
பேருந்தின் நடத்துனர் தனது அருகே வர, “ஒட்டன்சத்திரம் ஒன்னு குடுங்க" என்று சொன்ன செல்வநாதன், டிக்கெட்டை வாங்கி வைத்து, “கயல், நீ இல்லாம வீடு வீடாவே இல்லம்மா, இருந்தாலும், நம்ம குடும்பத்துலயே இவ்ளோ படிக்குறதப் பாக்கப் பெருமையா இருக்கு. சரிடா, வண்டிய எடுக்கப் போறாங்க போல, போயிட்டு வர்றேன், பாத்துப் போங்க, போன் பண்ணும்மா" என்று செல்வநாதன் சொல்லிக் கொண்டிருக்க, பேருந்து மெல்ல பின்னோக்கி நகரத் தொடங்கியது.
பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. தனது அருகே அமர்ந்திருந்தவர் இறங்க, தனக்கு அருகே வந்து அமர்ந்தவர், “என்னப்பா செல்வம், நல்லாருக்கியா?" என்றார்.
“அட, நமச்சிவாயம் அண்ணே, எப்படி இருக்கீங்க?” என்றார் செல்வநாதன்.
“தாராபுரத்துல நம்ம ஒறமுற வீட்டுக்கு வந்தனப்பா, மூனு நாளாச்சு, ஊருல ஊருபட்ட வேல கெடக்கு, அதான் கிளம்புறேன். நீ என்னப்பா இந்தப் பக்கம்" என்றார் நமச்சிவாயம்.
“என் பொண்ணு கோயமுத்தூர்ல இஞ்சினியர் படிச்சுட்டு இருக்கிறா, அதான் போயி ஒரு எட்டு பாத்துட்டு வர்றலாம்னு போயிருந்தேன்.”
“நல்லதுப்பா, எத்தனாவது வருசம்?”
“இப்ப மூனாவது வருசம், அடுத்த வருசம் படிப்பு முடிஞ்சுடும்"
“அப்ப இப்பவே மாப்ள பாக்கத் தொடங்கிடுங்க, ஏன் சொல்றன்னா, இவ்ளோ படிச்ச புள்ளைக்கே மாப்ள கிடைக்குறதில்ல, அதுவும் படிச்சு முடிச்சு வேலைக்குன்னு போயிடிச்சுன்னு வச்சுக்கோங்க, ரெம்ப செரமப்பா" என்ற நமச்சிவாயத்திடம் செல்வநாதன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
இன்று
கொரோனா இரண்டாவது லாக்டவுன் முடிந்து பேருந்து போக்குவரத்து மெல்லத் துவங்கியிருந்தது. இரண்டு நாட்கள் தன்னுடன் பேசாமல் இருந்த அப்பாவிடம், இன்றிரவு பேருந்தில் சென்னை செல்ல இருப்பதாகக் கயலினி சொல்ல, சரியெனத் தலையசைத்து இருந்தார் செல்வநாதன்.
தனியார் பேருந்து அலுவலகத்தின் முன் செல்வநாதன், மீனாட்சி, கயலினி மூவரும் நின்றிருக்க, தன் கையில் இருந்த கைப்பேசியில் மணியைப் பார்த்தாள் கயலினி. பேருந்து வர இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது. “கயல்" என்று அழைத்தார் செல்வநாதன்.
“அப்பா, சொல்லுங்கப்பா" என்ற கயலினி, செல்வம், மீனாட்சி இருவரின் எதிரில் வந்து நின்றாள்.
“சரிம்மா, உன் முடிவுக்கு ஒத்துக்குறோம், அந்தப் பையனை…” என்று ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து, “நானே கூட்டிட்டு வர்றேன்பா" என்றாள் கயலினி, மகிழ்ச்சியாய்.
“இல்லம்மா, நானும் அம்மாவும் ஒரு நாள் சென்னைக்கு வர்றோம், அங்க வந்து பாக்குறோம்" என்றார் செல்வநாதன்.
“ம்ம்ம்" என்று இழுத்த கயலினி, “சரிப்பா, thanksப்பா" என்று இருவரையும் கட்டிக் கொண்டாள். மீனாட்சியின் கைகள் அன்போடு கயலினியின் தலையை வருடியது. பேருந்து வர, கயலினி மகிழ்ச்சியோடு ஏறி அமர்ந்து, கண்ணாடியில் படிந்திருந்த நீரைக் கையால் துடைத்துவிட்டு, அப்பா அம்மாவைப் பார்த்துக் கையசைத்தாள். பேருந்து நகரத் துவங்கியது.
“என்னங்க, இத அவ சொன்னப்பவே சொல்லிருக்கலாம்ல, மூனு நாளு அப்பாவும் பொண்ணும் பேசிக்காம, என்கிட்டயும் ஒன்னியும் சொல்லாம, எப்படியோ நல்லது நடந்தா சரி, ஆமா, பையனை ஏன் இங்க வர வேணாம்னு சொன்னீங்க" என்று கேட்டார் மீனாட்சி.
“சின்ன வயசுலேந்து நல்லாப் படிக்கணும், உனக்கு என்ன வேணும்னாலும் கேளுன்னு சொல்லிச் சொல்லி வளத்திருக்கோம். அவ மனசுக்கு ஒருத்தனப் பிடிச்சிருக்குன்னு சொன்னதும், அவன் என்ன ஆளுன்னு கேளுன்னு தான் மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு. ஆனா, சாடைமாடையா என்ன கேட்டாலும் அவகிட்டேந்து சரியா பதில் வரலன்னதும், புலம்பத் தொடங்கிட்டேன், அவ பள்ளிக்கூடம் முடிச்சு காலேஜ், வேலைன்னு ஒவ்வொரு நிலைலயும் பொட்டப்புள்ளக்கு எதுக்கு இவ்ளோ படிப்பு, ஏன் வேலன்னு சொன்னவனுங்க தான் அதிகம், உன் பெரியப்பாலேந்து, கடைக்கு நாலு நாளுக்கு ஒரு முறை வந்து பாக்குற நமச்சிவாயம் வரைக்கும் எல்லாம் இப்படித்தான். ஏதோ நம்ம மேல அக்கறை இருக்குறது போலவே பேசுவானுங்க. ஆனா, அவனுங்க கூடவே இருக்குறதாலயே அந்தப் பையன் நம்ம ஆளுங்களா இருந்துடணும்னு நானும் நெனச்சேன் போல. ஆனா, சாதி பாத்துப் பழகாதன்னு சொல்லி வளத்த நானே எம்பொண்ணுக்கிட்ட எப்படி கேக்குறது? அதான் அன்னிக்குக் கத்துனதும், அப்புறம் பேசாம இருந்ததும். அந்தப் பையன் இங்க வந்தா, இவனுங்க எல்லாம் உறவுன்னு சொல்லி வந்து பிரிச்சு வுடத்தான் பாப்பானுங்க. நாம அங்க போயிப் பார்ப்போம் மீனாட்சி, அதான் சரின்னு தோனுது" என்று படபடவெனச் சொல்லி முடித்தார் செல்வநாதன்.
இரண்டு நாட்களுக்கு முன்
"ச்ச, இந்த முகமூடியக் கழட்டுப்பா, செல்வம், நீ தான்னு பக்கத்துல வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது. இந்தக் கொரோனா வந்ததுலேந்து இதவேற போடவச்சு, கடைகண்ணியத் தொறக்கவிடாம, என்ன பொழப்புப்பா" என்ற நமச்சிவாயம் செல்வத்தின் முகத்தைப் பார்த்து, "என்ன செல்வம், ஏதோ டென்சனா இருக்குறது போல இருக்கே" என்றார்.
"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா" என்றார் செல்வம்.
"சரி, சரி, உன் பொண்ணு படிச்சு முடிச்சு நாலு வருசத்துக்கு மேல இருக்கும்ல, நம்ம சங்கத்துல சொல்லி, பாக்கச் சொல்லிடுவமா? நானும் உன்னப் பாக்குறப்ப எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஆனா புடி குடுக்கவே மாட்ற, நம்ம பொண்ணுங்கள நாம தான் பாத்துக்கணும், செல்வம், தாராபுரத்துல நம்ம சொந்தம் இருக்குன்னு சொல்லிருக்கனுல்ல, அவன் பொண்ணு எப்ப பாத்தாலும் போனும் கையுமாத் திரிஞ்சுது. விசாரிச்சப்ப தான் தெரிஞ்சுது, எவனோ ஒருத்தன் நம்ம பொண்ணுக்கு ரூட்டு போட்டிருக்கான். அவ போன்லேந்து அவளுக்குத் தெரியாம மெசேஜ் போட்டு, ஒரு எடத்துக்கு வரவச்சு, தட்டி விட்டோம். நடந்து ரெண்டு வருசம் ஆவது, நீ கூட அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு வந்தியே…" என்று தொடர்ந்து நமச்சிவாயம் பேசிக் கொண்டிருந்ததை செல்வநாதனின் செவிகள் கேட்க மறுத்தன. 'நாலு பேரு நாலு விதமாப் பேசுவானுங்கன்னு சொல்ற இந்தக் கொலைகாரனுங்ககிட்ட நல்ல பேரு எடுக்குறதுக்குப் பதிலா நம்ம பொண்ணோட மனசுக்குப் பிடிச்சவனையே மகிழ்ச்சியா கட்டிவச்சிடலாம்' என்றது அவரின் மனக்குரல்.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
குறள் எண்: 324
அதிகாரம்: கொல்லாமை
கொலை என்பது இல்லாத அன்பு வழி தான் வாழ்வில் நல்ல வழி எனப்படும், இதாம்ப்பா இங்க வழிவழியா நடக்குதுன்னு நாலு பேரு நாலு விதமாச் சொல்லுவாங்க, அதெல்லாம் சிறந்த வாழ்வு வழிமுறை ஆவதில்லை.
Comments
Post a Comment