பிழைப்பு வேட்டை - குறள் கதை

 பிழைப்பு வேட்டை

-முடிவிலி


மலையின் பாறைகளில் பட்டுத் தெறித்த கதிரொளி, உயர்ந்து வளர்ந்த மரங்களின் கிளைகளிலும், இலைகளிலும் மோதி நுழைய முயன்று தோற்று காட்டின் தளத்தை அடையும் பொழுது தனது வெப்பத்தை இழந்து தணிந்திருந்தது. மரத்தின் நிழலில் பல செடிகள், கொடிகள் மண்டிக் கிடப்பது இயற்கை வரைந்த ஓவியமாய் விரிந்திருந்தது. யாரும் பார்க்கா நேரத்தில் தனை மறந்து ஆடுவது போல இதமான காற்றின் போக்கில் உதிர்ந்து விழுந்த இலைகள் நடம்புரிந்து கொண்டிருந்தன. கிளைகளின் உரசும் ஒலி மெல்லிதாக இரைய, ஊடே சீரான இடைவெளியில் முகம் காட்டா மைனாக்களின் குக்கூ காட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
காற்றில் மெல்ல ஆடும் மரங்களினால் காட்டின் தரையில் ஒளிப்புள்ளி இங்குமங்கும் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. காட்டின் அமைதியைக் குலைக்கும் விதமாக ஒரு காட்டுப்பன்றி ஒன்று இங்குமங்கும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்னே காட்டுப்பன்றியின் விரைவுக்குச் சற்றும் குறையா வேகத்தில் துரத்திய உருவத்தின் கால்கள் காப்பேறி இறுகிக் கறுத்திருந்தன, இலையால் ஆன ஆடை இடையை மட்டும் மறைக்க, மறையாப் பகுதிகளில் மயிர் மண்டியிருந்தது. விரைவில் சற்றும் குறையாமல் ஓடும் திசையை திடுக்கென மாற்றி இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்த காட்டுப்பன்றியின் மீது அவனது கண்கள் நிலைத்தபடி இருந்தது. அதன் வழியை - திசை திருப்பலை அவனது கால்களும் தொடர்ந்தபடி இருந்தன. அவன் கையில் இருந்த அழுக்கேறிய பழுப்பு நிற எலும்பு அவன் ஓடும் வேகத்திற்கேற்ப காற்றில் விர்ர் விர்ரென ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பின்னே ஓடிக் கொண்டிருந்தவன் முன்னே காட்டுப்பன்றி வலது புறமாகத் திரும்ப, கையில் இருந்த எலும்பை "ஓகோய்" என்று பேரோசை எழுப்பியவனாய் எறிய, காட்டுப்பன்றியின் பின்னங்கால் உடலுடன் சேரும் பகுதியின் அடியில் எலும்பின் நுனியடித்ததில் எழுந்த காட்டுப்பன்றியின் கதறல் காட்டில் எதிரொலித்தது. ‘வீ… வீ…' எனக் கதறியபடி எழுந்து ஓடமுயன்ற காட்டுப்பன்றிக்குப் பின்னங்கால்கள் ஒத்துழைக்காது போக, எழுந்த நொடி மீண்டும் விழுந்து கதறியது. பன்றி அடிபட்ட நொடி அவன் ஓட்டம் நின்று வெற்றிநடையாகி இருந்தது. கதறல் இப்போது மெல்ல குறைந்து முனகலாகி இருந்தது.

அருகே நடந்து வந்த அவன், தனது வேட்டைக்கலமான எலும்பினைக் கையில் எடுத்தான். காட்டுப்பன்றியின் கண்கள் அவன் மீது நிலைத்திருந்தது.

***
காலை ஆறு மணி, சென்னை அண்ணா நகர் திருமங்கலம் மேம்பாலத்தின் கீழே சில ஷேர் ஆட்டோக்கள் தவிர, அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் போக்குவரத்து மிக மந்தமாகவே இருக்க, மில்லினியம் பூங்கா சாலையில் காலை நடை, மெல்லோட்டம் என அங்குமிங்குமாக ஓரிருவர் தென்பட்டனர். திருமங்கலத்தில் இடதுபுறம் திரும்பிய ஒரு ஹீரோ பிளாட்டினா, அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் இருந்து மில்லினியம் பூங்கா சாலையில் நுழைந்ததும் குறைந்த வேகத்தில் மெல்ல ஊர்ந்து செல்ல, ஓட்டியவன் இருபுறமும் பார்த்தபடி இருந்தான். அவன் காதில் 'நாளைக்குக் காலையில ஏழு மணிக்கு வருவேன், வட்டி எடுத்து வைக்கல, வண்டி கைய விட்டுப் போயிடும். பாத்துக்க, ட்யூ கட்டமுடியலன்னா எதுக்குய்யா வண்டி வாங்கி எங்க தலைய உருட்டுறீங்க, மாசாமாசம் உன் பின்னால அலையுறது தான் என் பொழப்புன்னு நெனச்சுட்டு இருக்கியா?’ என்ற சொற்களும், அதனைத் தொடர்ந்து வந்த வசவுகளும் கேட்டபடி இருந்தன. நேற்றிரவு வரை தெரிந்தவர்கள் பலரிடமும் கைமாற்றாகக் கேட்டும் பணம் கிடைக்காத்தாலும், ஓலாவுக்கு ஓட்டியதில் பெட்ரோல் செலவு போக மீதமிருந்த பணம் ட்யூ கட்டணத்தில் பாதி கூட கிடைக்காததாலும், தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்தரை மணிக்கே ஓலா லாகின் செய்து ஒரு சவாரியும் முடித்திருந்தான்.

மனது என்ன செய்யலாம் என்ற வெவ்வேறு கோணத்தில் அசை போட்டுக் கொண்டே இருந்தது. வண்டி சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் இறங்கி ஏறிய போது அவன் சாலையையே பார்க்காமல் ஓட்டி வந்திருக்கிறோம் என்று அவனுக்கு உறைத்தது. வண்டியைச் சற்று ஓரமாகத் தள்ளி நிறுத்தியவன், ‘ஏழு மணிக்கு நம்ம வீட்டுல இருந்தா தானே வண்டியத் தூக்குவானுங்க, இப்படியே சவாரி போயிட்டிருப்போம்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

'வீட்டுல ஆயா இருக்காங்களே, எவன்கிட்டயோ ஆயா எதுக்குப் பேச்சு வாங்கணும்?’ என்று மனது கேட்டது.

அவனது கை தலைக்கவசத்தை நீக்கி வண்டியின் டேங் மீது வைத்து, இன்னும் கீழே இறங்கி டேங்கின் இருபுறத்தையும் தொட்டவாறு நின்றது. தனக்கும், தனது ஆயாவுக்கும் இரு வேளையாவது சாப்பாடு தருவது இந்த வண்டி தான். அதுவும் இன்னும் அரைமணி நேரம் வரை தான். ஓலா செயலியில் யாராவது அழைக்கிறார்களா எனத் தனது கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். தலையைக் கவிழ்ந்தபடி சில நொடிகள் சிலையாய் நின்றிருந்தான். யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. சற்றுமுன் சாலையில் நடைபயின்றவர்கள் கூட பூங்காவினுள் சென்று விட்டிருக்க, மொத்த சாலையில் இவன் மட்டும் தனித்து நின்றிருந்தான்.

தன்னைக் கடந்து யாரோ செல்வதை உணர்ந்தான். தலைகுனிந்து அமர்ந்திருந்தவன் முதன் முதலில் கவனித்தது அந்தத் துணிப்பையையும், அந்தக் கைகளில் இருந்த தங்க வளையலையும் தான். சற்று நிமிர்ந்து பார்த்தான், நடந்து சென்ற பெண்மணியின் கழுத்தில் தங்கச்சங்கிலி. என்ன தோன்றியது, தோன்றியது சரியா தவறா எதுவும் சிந்திக்காதவனாய், தலைக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்டு, வண்டியைத் துவக்கினான். வண்டி அந்தப் பெண்மணியை நோக்கி முன்னேற, கைப்பிடியைப் பற்றியிருந்த அவனது இடது கை மெல்ல பிடியில் இருந்து அந்தப் பெண்மணியின் புறம் நகர்ந்தது.

***
காட்டுப்பன்றியின் அவன் மீது நிலைகுத்தியிருக்க, அதன் மூச்சு சீரற்று, இளைப்பது போல துடித்துக் கொண்டிருக்க, அதன் நாசியின் முன்னிருந்த நிலத்தில் மண் துகள்கள் மூச்சினால் நகர்ந்து புழுதி கிளப்பின. முனகல் கூட இப்போது காணாமல் போயிருந்தது. அவனது கண்களை உற்றுப் பார்த்து அதில் கருணையின் துளி இருக்கிறதா எனப் பார்த்தது. அவனுடைய கண்களில் வெற்றிக்களிப்பும், உணவை அடைந்த மகிழ்வு மட்டுமே இருந்தது. அவனது கைகள் ஓங்கின. அடுத்த நொடி அந்தத் தொடை எலும்பு காட்டுப்பன்றியின் நெற்றியில் இறங்க, அதன் இறுதியொலி "வீ…” எனத் தொடங்கி சட்டென அடங்கியது. அவன் காட்டுப்பன்றியை இழுத்துச் செல்லும் ஓசையைத் தவிர வேறு ஓசைகள் அந்தக் காட்டில் சற்று நேரத்திற்கு இல்லை.

***
இன்னும் சில நொடிகள் சென்றால் பெண்மணியின் கழுத்தும் அதில் இருக்கும் தங்கச்சங்கிலியும் இவன் கையில் இருக்கும். மனது ஏனோ ஆயாவை நினைத்தது. ஆயா என்றோ பேச்சுவாக்கில் சொன்னதும் நினைவுக்கு வந்தது. ‘கண்ணா, நாமெல்லாம் மனுசப்பிறவியா பொறந்தது பெருசுல்லஆனா, அடுத்தவனுக்கு நோவு இல்லாம வாழணும்யா, அதெல்லாம் முடியாதுன்னு தோனலாம். முடியுமா முடியாதான்னு முடிவு செய்யுறது உன் கையில தானே இருக்கு, காட்டுமேட்டுல அலஞ்சுட்டிருந்தப்ப கண்டதையும் அடிச்சுப் பொழைக்குறது தான் ஒரே வழி, இப்ப ஆயிரம் வழி இருக்குல்ல' என்று மனதில் இருந்த பாட்டியின் குரல் சிரிக்க, அவனது இடது கை மீண்டும் கைப்பிடிக்கு வந்திருந்தது.

அந்தப் பெண்மணியைத் தாண்டி முன்னே சில தொலைவு சென்று ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தியவன், தனது கைப்பேசியை எடுத்து நேரம் பார்க்க 6:42 என்றது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து, வீட்டுக்குச் செல்ல கைப்பேசியை எடுத்து வண்டியின் டேங்க் கவரில் வைக்கச் செல்ல, கைப்பேசி சிணுங்கியது. ஏழுமணி கெடு கொடுத்தவர் அழைக்க, சற்று தயக்கத்தோடு எடுத்து, “சார்…” என்றான்.
    தம்பி, இன்னிக்கு நான் வரல, இன்னும் ஒரு நாள் கெடு, எப்படியாச்சும் கட்டிடு, சரியா?”
    நன்றி சார், ரொம்ப தாங்க்ஸ் சார்" என்றான் மகிழ்வாக.
    நேத்து பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காதடா, நான் பேசுனத விட இன்னும் நாலு மடங்கு பேச்சு நாங்க மேனேஜர்கிட்ட வாங்குறோம். சில நேரம் ஏன்டா இந்தப் பொழப்புன்னு கூட தோனும். ஆனா, இதான் பொழப்புன்னு ஆகிப்போச்சு, டேய் நாளைக்குள்ள கண்டிப்பா கட்டிடு, சரியா?” என்று சொல்லி அழைப்பைத் துண்டிக்க, கைப்பேசியை டேங்க் கவரில் வைக்க, அவன் நின்ற மரத்தில் இருந்த மஞ்சள் மலர்கள் அவன் மீது உதிர்ந்தன. தலையை உயர்த்தி மேலே பார்த்துச் சிரித்த அவனைக் கடந்து சென்ற அந்தப் பெண்மணியும் புன்னகைத்தபடி சென்று கொண்டிருந்தாள்.


-முற்றும்-

குறள் 317:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணா செய்யாமை தலை.


எப்போதும், சிறிதளவும், யாருக்கேனும் மனத்தால் கூட துன்பம் விளைவிக்காதிருத்தலே தலையாய அறமாகும்.

Comments

  1. இன்னும் சிறிது அழகாக எழுத முயற்சிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி எழுதத் தான் முயற்சி செய்யுறேன். என்றாவது ஒருநாள் எழுதிடுவேன்னு நினைக்கிறேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka