எதுவும் மாறல - குறள் கதை

எதுவும் மாறல
-முடிவிலி




அழகான உள்வடிவமைப்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நெகிழிச்செடிகள் அந்தக் குளம்பியகத்தைப் பசுமையாகக் காட்டின. மூலையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த மூவரின் முன் ஒரு மடிக்கணினி திறந்திருந்தது. மடிக்கணினிக்கு அருகே இருந்த மூன்று கோப்பைகளில் இருந்த குளம்பியில் ஆவி மெதுவாய் மேலெழும்பிக் கொண்டிருக்க, அவர்கள் அப்படி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற ஆர்வம் அருளுக்கு வந்தது. நான்கு மணிக்குத் தன்னைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்த கார்த்திகேயனுக்காகக் காத்திருக்கும் அருளின் முன் cafe latteயின் மேல் happy face smiley சிரித்துக் கொண்டிருந்தது. அருள் வந்து காத்திருக்கும் இந்த அரை மணி நேரத்தில் தனக்குக் கூட கேட்காத ஒலியளவில் பேசிக் கண்களால் சிரித்துக் கொண்டிருந்த காதலிணையின் குளிர்க்குளம்பியின் அளவு குறையவே இல்லை. மணி நாலே காலைத் தாண்டியிருந்தது. குளம்பியகத்தின் கதவின் மேல் பொருத்தியிருந்த சிறுமணி குலுங்கி ஒலிக்க, கார்த்திகேயன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். 


கார்த்திகேயனின் முகம் இறுக்கமாக இருந்தாலும், பெருமுயற்சி எடுத்து மையமாகச் சிரித்து, “thanks for meeting me, அருள்" என்றான் கார்த்திகேயன். Sub Inspector கார்த்திகேயன். 


“my pleasure, கார்த்திக், உட்காருங்க" என்ற அருள், குளம்பியகத்தில் பணி புரிபவரைப் பார்த்து, தனது ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டினான். அவரும் சரியெனத் தலையசைக்க, அடுத்த பத்து நிமிடத்தில் கார்த்திகேயனின் முன் இன்னொரு cafe latte வைக்கப்பட்டது. அருளின் துப்பறியும் கண்கள் கார்த்திக்கை உன்னிப்பாய்க் கவனித்தன. அதுவரை சிந்தனையில் மூழ்கி இருந்தவன், நிமிர்ந்து பார்த்து, “thanks” என்றான். எதிரே இருக்கும் அருள் தன்னை உற்று நோக்குவதை அவனால் உணரமுடிந்தது. குளிரூட்டப்பட்ட அறையிலும் கார்த்திகேயனின் நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன.

 

“are you okay, கார்த்திக்?" என்றான் அருள்.


'ம்ம்ம்' எனத் தலையை ஆட்டிய கார்த்திகேயன், சில நொடிகள் கழித்து, “not really” என்றான். 


“என்ன ஆச்சு, கார்த்திக், எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க, என்ன நீங்க நம்பலாம்" 


“என் மேலயே எனக்கு நம்பிக்கை இல்ல, அருள். வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு, இல்ல சினிமால காட்டுறது போலவோ இல்ல, இந்தப் போலீஸ் வாழ்க்கை, நானே வேலையில சேந்தப்ப, என்னவோ நான் இந்த சமூகத்தையே காப்பாத்த வந்தவன்னு தான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க நிலைமை அப்படி இல்லன்னு புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப நாள் ஆகல. சில நேரத்துல குருடனா, பல நேரங்களில் செவிடனா, yes sir மட்டுமே சொல்லத் தெரிஞ்சவனா நானே மாறிப் போயிருந்தேன். மனசை எவ்வளவு நாள் ஏமாத்திட முடியும்? குற்றம் நடந்தா, பிடிக்க வேண்டிய crime branchக்கு முன்னமே advanceல சொல்லிச் செய்யுறானுங்க. எல்லாத்துக்கும் விலை. கண்டும் காணாம இருந்தாலும், மனசு கேக்க மாட்டேங்குது, அருள்.”


“கார்த்திக், நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்கன்னு நெனக்கிறேன், relax” என்ற அருள், கார்த்திக்கின் கைகளைப் பற்றி, “இப்பவும் சொல்றேன், என்னை நீங்க நம்பலாம். எதுவா இருந்தாலும் சொல்லுங்க" என்றான்.


எங்கேயோ வெறித்துப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்தான். “பெருமாள் கேங் பிடிச்சதுல நீங்க தானே டிப்பார்ட்மென்ட்க்கு உதவுனீங்க?” என்றான் கார்த்திக்.


“ஆமா, அது நடந்து ரெண்டு மூனு வருசம் ஆகுதே, பெருமாள் இன்னும் பெயில்ல வர முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கான். கீழ வேலை பாத்தவனுங்க நாலஞ்சு பேரு பரோல்ல வந்திருக்கானுங்க, சேத்துப்பட்டு stationல கையெழுத்து போட்டிட்டு இருக்கானுங்க. இதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே" 


“ம், தெரியும். ஆனா, பெருமாள் கேங் போனதுக்கு அப்புறம் அந்த ஏரியா யாருக்குன்னு இன்னும் மூனு கேங் அடிச்சுக்கிட்டாங்க. அங்கங்க பிணங்கள் கிடைச்சுது. வெளியில தெரியாதது என்னன்னா, எங்க யாரைப் போடப் போறாங்கன்னு டிப்பார்ட்மென்ட்ல சிலருக்குத் தெரிஞ்சிருந்தது.”


“பொறுங்க கார்த்திக், இங்கயே இதையெல்லாம் பேசணுமா? வேற எங்கயாவது, இல்லன்னா என் வீட்டுக்குப் போகலாம்" என்றான் அருள்.


“இருக்கட்டும். அருள், எனக்கு எந்த இடமும் safe இல்ல. பொது இடமா இருக்குறதுனால எனக்கு என்ன ஆனாலும், வெளியிலயாவது தெரியும்" என்ற கார்த்திக் தொடர்ந்தான். 


“நான் டிபார்ட்மென்ட்ல சேந்து இதோட நாலு வருசம் ஆகுது, இந்த stationக்கு வந்தப்ப, எனக்கு ரொம்ப உதவியா இருந்தவரு எங்க இன்ஸ்பெக்டர் செல்வம் தான். நாள் போகப் போக, அவரும் மத்தவங்களைப் போல தான்னு என்னால நம்ப முடியல. அதுவும், பெருமாள் கேங் பிடிபட்டப்ப, எங்க ஸ்டேசன் மேல பெரிய black mark விழுந்திருந்துச்சு. அதுல செல்வம் சாரை திருப்போரூருக்கு transfer செஞ்சிருந்தாங்க. அப்பப்ப, என்கிட்ட போன்ல பேசுவார். இங்க கெட்டவங்க எல்லாரும் கெட்டவங்க இல்ல, அருள். அவங்க நல்லது செய்யலாம்னு நெனச்சு வந்து, அப்புறமா வழி தவறிப் போனவங்க தான். அப்படி தவறிப் போகுறப்ப எல்லாம் நம்ம உள்ளுணர்வு கேள்வி கேக்கும். ஆனா, அதெல்லாம் நம்ம காதுல விழுமா? ஆனா, ஒரு நாள் மனசு கேட்ட கேள்விகள் எல்லாம் நம்மைப் போட்டுத் துளைச்சு எடுக்கும் போது, காலம் கடந்திருக்கும். செல்வம் சாருக்கும் அது தான் நடந்தது. என்ன தான் அவரு வேற எடத்துக்குப் போனாலும், அவருக்குப் பெருமாள் கேங் பத்தி மட்டும் இல்ல, பெருமாளுக்கு மேல யார் இருக்காங்க எல்லாம் தெரிஞ்சிருந்தது. அதுவே அவருக்குச் சிக்கலாகவும் ஆகிடுச்சு" என்ற கார்த்திக் தனது கைப்பேசியில் இருந்து, அருளுக்கு whatsappல் ஒரு இணைப்பை அனுப்பினான். 


‘க்ளிங்' என்ற ஒலியுடன் வந்தது இணைப்பு. “ஒரு cloud storage உடைய லின்க் அனுப்பிருக்கேன், அதுல முதலில் ஒரு audio file இருக்கும், பாருங்க அருள்" என்றான் கார்த்திக்.


அதைத் திறந்த அருள், “encryptedனு வருது கார்த்திக்" என்று சொல்ல, “password தான் password” என்றான் கார்த்திக். திறந்தது இணைப்பு, அதில் முதலில் இருந்த ஒலிக்கோப்பினை, தனது earphone எடுத்துச் செருகி, ஒலிக்க விட்டான் அருள். 


“கார்த்தி, ஏன் இந்த வேலையில சேந்தோம்னு இருக்குய்யா, சிலதையெல்லாம் கண்டும் காணாம இருந்தா, காசு கிடைக்கும்னு என்னை இப்படி ஆக்கி விட்டதே பெருசுங்க தான். அந்த கேங் பிடிபட்டதும், எல்லாத்தையும் என் மேல தள்ளி விட்டு, transferனு சிட்டிய விட்டுத் தூக்கியடிச்சாங்க. சரி போகட்டும்னு எல்லாத்தையும் தலமுழுகிட்டு இங்க உள்ள வேலையப் பாத்துட்டு இருந்திடலாம்னு இருந்தேன். ஆனா, இனிமே அப்படி இருக்குறதுல எந்தப் பலனும் இருக்கப் போறதில்ல. ஏற்கனவே ஒரு முறை தப்பிச்சுட்டேன். இனி முடியாது. கண்டிப்பா, என்னைப் போட்டுடுவானுங்க. எனக்குத் தெரிஞ்சு டிப்பார்ட்மென்ட்ல உன்ன மட்டும் தான்யா நம்புறேன். இதுவரை நான் செஞ்ச எல்லாமும் இதுல இருக்கு. யாரு யாரெல்லாம் கேங்குக்காக டிபார்ட்மென்ட்ல வேல செய்யுறாங்க. எப்ப எவ்ளோ கைமாறுச்சு, யாருக்கு எவ்ளோ share போச்சுன்னு எல்லாம் இருக்கு. சில கேங் டீட்டெய்லும் இருக்கு. கார்த்தி, உன்ன தான் நம்புறேன்.” என்று முடிந்திருந்தது.


அதன் கீழ் சில folderகளில் பல கோப்புகள் இருந்தன. மேலோட்டமாக சிலவற்றைத் திறந்து பார்த்த அருளின் விழிகள் விரிந்தன. 


“கார்த்திக், great கார்த்திக், சரி வாங்க, திருப்போரூர் போயி, செல்வத்தைப் பார்ப்போம்" என்றான் அருள். 


“முடியாது அருள்" என்றான் கார்த்திகேயன்.


“ஏன்?” 


“நாளைக்குக் காலையில செய்தியில அவர் அடையாளம் தெரியாதவர்களால வெட்டிக் கொலை செய்யப்பட்டார்னு வரும். செல்வம் சாரை முடிச்சுட்டாங்க, அருள், அவர்கிட்ட இருந்த physical evidence, hard disk எல்லாம் எடுத்திருப்பாங்க, இப்ப நீங்க பாத்த இந்த cloudல இருக்குறது தான் செல்வம் சாரோட மிச்சம், அவரு அவ்ளோ நல்லவர் இல்ல தான், ஆனா அவரைப் போலவே மாறிக்கிட்டு இருந்த என்ன முழிச்சுக்க வச்சிருக்காரு, அவரைப் போடப் போறாங்கன்னு தகவல் தெரிஞ்சதும், அவருக்குச் சொன்னேன், ரொம்ப ஓடிட்டேன்டா, முடியல, தகவல் சொன்னதுக்கு thanksனு வச்சுட்டாரு அருள்" என்ற கார்த்திக்கின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. 


Tissue ஒன்றை எடுத்து, கார்த்திக்கிடம் நீட்டி, “control yourself கார்த்திக்" என்ற அருள், தனது நாற்காலியை அவனுக்கு அருகில் நகர்த்தி அமர்ந்து, அவனது தோள்களில் தட்டி அமைதிப்படுத்தினான்.


“really, we’re living in messed up world அருள். எது நமக்கு நல்லதுன்னு நினைக்குறோமோ, எது எளிதாக இருக்குதோ அதைச் செஞ்சுக்கிட்டு, நாட்களை நகத்திட்டு ஓடுறோம். ஆனா, உண்மை துரத்திட்டு வந்து பின்னாடி கடிக்குற நாய் போல கடிச்சுடுது. செல்வம் சார் போனதுக்கு அப்புறம் ஏரியால டிபார்ட்மென்ட்க்கும், சர்மா கேங்குக்கும் நான் தேவைப்பட்டேன். செல்வம் சார் என்ன செஞ்சாரோ அதை நான் செஞ்சா, அதாவது கண்டும் காணாமப் போனா, பணம். பணம் பெருசு இல்லன்னு சொல்றவங்க பணக்காரனா இருப்பான் அருள். மேல இருந்து order வரும்போது முடியாதுன்னு சொல்லவும் முடியமாட்டேங்குதே. செஞ்சேன், எல்லாம் நல்லாப் போகுதுன்னு தான் இருந்தேன். இப்ப செல்வம் சாருக்கு ஆன முடிவு பாக்கும்போது பணம் பெருசு இல்லன்னு தோனுது. உண்மை நாய் விடாம கடிக்குது. அருள், உங்களுக்கு இந்த evidence எல்லாம் யாருக்கு அனுப்பணும்னு தோனுதோ, அப்படியே செய்யலாம். தெரிஞ்சோ, தெரியாமலோ செல்வம் சாரோட ரத்தம் என் கையில இருக்கு. இதுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும். உண்மையப் பேசித் தான் ஆகணும்.”


“இப்ப உண்மையச் சொன்னீங்கன்னா நீங்களும் மாட்டுவீங்கன்னு புரிஞ்சிருக்கீங்களா கார்த்திக்" 


“தப்பு செஞ்சேன்ல அருள், yeah, I got that. செல்வம் சார் போல ஏவல்நாயா வேலை செஞ்சு ஓஞ்சு போன நேரத்துல இவன் இனி தேவையில்லன்னு வரும்போது, பொட்டுன்னு போட்டுத் தள்ளிப் போயிச் சேருறதுல விருப்பம் இல்ல, அருள். I am ready” என்றான் கார்த்திக்.


“சரி, கந்தசாமி சார்கிட்ட நான் பேசுறேன். அதுவரை நீங்க என் கூட இருங்க. your coffee is getting cold, குடிங்க, போகலாம்" என்று அருள் கூற, கார்த்திக் எடுத்த கோப்பையிலும் happy face smiley இருந்தது. சற்று நேரத்தில் இருவரும் அங்கிருந்து கிளம்ப, அந்தக் குளிர்க்குளம்பியின் அளவு இப்போது தான் பாதியாகக் குறைந்திருந்தது.


***


வடபழனி சுப்பராயன் நகரின் ஒரு அடுக்ககத்தில் நுழைந்தது அருளின் கார். மின் தூக்கியில் மூன்றாவது மாடி சென்று, தனது இடது புறம் சென்ற அருளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் கார்த்திக். T3 என்று எழுதியிருந்த கதவினைத் திறந்த அருள், கார்த்திகேயனுக்கு வழிவிட்டு நிற்க, உள்ளே நுழைந்த கார்த்திகேயன் அதிர்ச்சியில் உறைந்தான். “சார், உங்களுக்கு ஒன்னும் ஆகலயா? நேத்து உங்களுக்குத் தகவல் சொல்லும்போது கூட எதுவும் சொல்லாம கட் பண்ணிட்டீங்களே சார்" என்றான் கார்த்திக். பின்னால் வந்த அருள், செல்வத்தைப் பார்த்துத் தலையசைக்க, “என்னையும் அருள் தான் safe செஞ்சார். அவரை நீ பாக்கணும்னு காலையில கூப்பிட்டப்ப, நான் அருள் கூடத் தான் இருந்தேன்” என்றார் செல்வம். 


“உண்மையச் சொல்லணும்னா, உன்மேல எனக்கு நம்பிக்கையே இல்ல, கார்த்திக். சரி இப்ப சொல்லு, செல்வம் சாரோட ரத்தம் உன்கையில இருக்குன்னு தானே உண்மையச் சொல்ல முடிவு செஞ்ச, இப்ப அவரு உயிரோட இருக்காரு. இப்ப என்ன சொல்ற?”


“எதுவும் மாறல, அருள். இவர் தப்பிச்சுட்டாரு, ஆனா இன்னும் நான் மாறலன்னா, என்னை வச்சு எத்தனை பேரைக் கொலை செய்வாங்க, உண்மையச் சொல்ல இனி தயங்கப் போறதில்ல" என்று கார்த்திக் சொல்லி, செல்வத்தின் அருகே சென்று அமர்ந்தான். 


"ஆமா, இன்னும் எதுவும் மாறல, நாம முயற்சிப்போம், நல்லதா மாறும்னு நம்புவோம்" என்றான் அருள். 

-முற்றும்-


ஒன்றாக நல்லது கொல்லாமை கோறல்

பின்சாரப் பொய்யாமை நன்று.


(குறள் எண்: 323)


அறங்களின் வரிசையில் கொல்லாமை முதன்மை, அதனை அடுத்து பொய்யாமை இருக்கிறது. 


(முன் கதைகள்: bit.ly/kural0150 | bit.ly/kural0131 )


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka