இதுக்காடா...? - குறள் கதை

 இதுக்காடா...?

- முடிவிலி



“எழுந்திருடா, சரவணா, மணி எத்தனை ஆகுது பாரு” என்ற அம்மாவின் சொற்களைக் காதில் வாங்கியும் வாங்காதது போல தூங்கிக் கொண்டிருந்தான் சரவணன். சென்னையில் pix fx எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சரவணன், விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் இப்படித்தான் தூங்குவான்னு அம்மாவுக்கும் தெரிந்து தான் இருந்தது. பத்து நிமிடங்கள் கழித்து, “எழுந்திருடா சரவணா” என்ற அம்மா, அவனது கட்டிலின் அருகில் காபிக் கோப்பையையும் வைத்தார். போர்வையை மட்டும் மெல்ல விலக்கி, காபிக் கோப்பையை எடுக்கப் போன சரவணனின் கையைப் பிடித்து, “எழுந்து போயிப் பல்ல விளக்குடா” என்று அம்மா சொல்ல, “லீவு தானம்மா” என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான் சரவணன்.

சற்று நேரத்தில் சுடச்சுட அம்மாவின் கையால் மொறு மொறு தோசையும், புதினாத் துவையலும் சேர்ந்து அவனது பசியைக் கூட்ட, எத்தனை தோசை என்ற கணக்கில்லாமல் உள்ளே சென்று கொண்டிருந்தது.

“அம்மா, ஊருல வேற என்ன நடக்குது?

“இந்த ஊருல என்னடா நடந்துடப் போகுது. இது என்ன சென்னையா? சொல்றதுக்கு ஒன்னு இருக்கு. ஆனா, அவன் பேரைக் கேட்டாலே உனக்குப் புடிக்காதுன்னு தான் எதுவும் சொல்லாம இருக்கேன்”

“அம்மோவ், சொல்றதுன்னா நேரா சொல்லிடலாம். இப்படி பில்டப் ஏத்திட்டு ஒன்னும் சொல்லாம விட்டா, சொல்லும்மா” என்ற சரவணன், சமையலறைக்கு வந்து சாப்பிட்ட தட்டைக் கழுவப் போனான்.

“டே, டேய், அதுக்குள்ள எழுந்துட்ட? இந்தத் தோசை சுட்டுட்டேன்ல” என்ற அம்மாவைப் பிடித்து, “நீங்க போயி உக்காருங்க, இந்தத் தட்டைக் கழுவிட்டு, அப்படியே நான் உங்களுக்குத் தோசை ஊத்தி எடுத்துட்டு வர்றேன், அப்படியே அந்தக் கதையையும் சொல்லுங்க கேட்போம்” என்றான் சரவணன்.

டைனிங் டேபிள் நாற்காலியில் சென்று அமர்ந்த அம்மா, “உன் கூட படிச்சான்ல, வாசு, அவங்க அப்பா கூட நம்ம ஊரு போஸ்ட் மாஸ்டரா இருந்தாரே” என்று இழுத்தாள்.

“வாசுவா? அவனுக்கென்ன?”

“பாத்தியா, கோவப்படுற?

“கோவம்லாம் இல்லம்மா, அவனுக்குத் தான் என்னப் பாத்தாலே ஆகாது, ஏன்னே தெரியல, பாத்தாலே முறைச்சுக்கிட்டு இருப்பான். இத்தனைக்கும் ஆறாவதுலேந்து ப்ளஸ் டூ வரைக்கும் ஒன்னா தான் பஸ்ல போயிருக்கோம். எங்க என்ன ஆச்சுன்னே தெரியாது. ப்ளஸ் டூ படிக்குறப்ப எல்லாம் பேசுனதே கிடையாது. ஆமா, அவனுக்கென்ன?” என்றான் சரவணன், இந்தமுறை பொறுமையாக.

“அவனும் அவங்க அப்பாவும் பொட்டனேரிகிட்ட பைக்ல வந்தப்ப ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, பின்னாடி உக்காந்திருந்த அவங்க அப்பாவுக்கு நல்ல அடியாம். சேலம் சுகந்திக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் தோசைக் கரண்டியுடன் வந்த சரவணன், “இதைப் பிடிம்மா” என்று அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு, “அம்மா, எப்பவும் போல நீயே இன்னிக்கும் சுட்டுக்கோ, ப்ளீஸ், நான் சேலத்துக்குப் போயிப் பாத்துட்டு வந்துடுறேன்” என்றான்.

“அதான பாத்தேன், என்னடா இவன் எனக்குத் தோசை எல்லாம் சுட்டுத் தர்றானேன்னு பாத்தா, அவ்ளோ தானாடா பாசம்” அம்மா சிரித்துக் கொண்டே கேட்க, “ரெண்டு பேருக்கும் ஆக்சிடென்ட்னு சொல்ற, அங்க துணைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லாருக்கும்ல, நல்ல அம்மால்ல, நான் ஆஸ்பிட்டல் போயிட்டு உனக்கு போன் செய்வனாம், பை” என்று சொல்லிவிட்டு, தனது வண்டியை எடுத்துக் கொண்டு சரவணன் கிளம்பியபோது, அம்மாவின் ‘பாத்து ஓட்டிட்டுப் போடா’ அவனது தலைக்கவசத்தின் வழியே பின்னால் கேட்டது.

சரவணனின் வண்டி அவர்களின் தெருவைக் கடந்து, மேட்டூர் – சேலம் சாலையை அடைந்தது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சரவணனின் நினைவுகள் மேட்டூர் அரசு பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு காலத்துக்குச் சென்றன.

“வாசு, நீ ஹீரோ பேனா வச்சிருக்கல்ல, எனக்கு ஒரு சொட்டு இன்க் கொடுடா” என்று கேட்ட சரவணனை ஏளனமாகப் பார்த்த வாசு, “இன்க் தான வேணும், இந்தா” என்று தனது பேனாவை அவன் மேல் உதற, சரவணனின் சட்டையில் நீலநிறப் புள்ளிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. சிதறிய மையின் ஒரு துளி சரவணனின் இடது விழியின் ஓரத்தில் பட, உடனே இரு கண்களையும் மூடிக் கொண்டான். சரவணனின் அருகில் இருந்த குமரவேல், “ஏன்டா, குடுக்க முடிஞ்சா குடுக்கணும், இல்லன்னா முடியாதுன்னு சொல்லணும், பெரிய இவன் மாதிரி மூஞ்சில இன்க் அடிக்குற?” என்று சொல்ல, வாசு சிரித்துக் கொண்டிருந்தான்.

குழாய் நீரைக் கொண்டு முகம் கழுவி, கண்ணை மெல்ல மெல்ல சிமிட்டிக் கொண்டிருந்த சரவணனிடம், “ரெண்டு பேரும் ஒரு ஊருகாரனுங்க தான்டா, அப்புறம் ஏன்டா, அவன் உன்மேல வெறுப்பா திரியுறான்?” என்றான் குமரவேல்.

“தெரியலயே, போன மாசம் வரைக்கும் நல்லா தான் பேசிட்டு இருந்தான். ஏதோ பேசாம இருக்கான்னு தான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியலடா, கண்ணுல இன்க் இன்னும் இருக்கா?

“இல்லடா, உனக்குக் கண்ணுல இன்னும் உறுத்துதா?”

“இப்ப பரவால்லடா”

“உனக்கு இப்ப இன்க் தான வேணும், வா, வளர்மதிகிட்ட இன்னொரு பேனாவே வாங்கித் தர்றேன்” என்றான் குமரவேல்.

அதன்பிறகு, வாசுவிடம் எப்போது சரவணன் பேசினான் என்பது நினைவிலேயே இல்லை. பத்தாவது வகுப்பில் இருவரும் வெவ்வேறு வகுப்பாகப் பிரிக்கப்பட்டதும், பதினொன்றாவதில் வாசு ஆங்கில வழி வகுப்பில் சேர்ந்ததும் இருவரும் பள்ளியின் இறுதி நாட்கள் வரை பேசுவதற்கான வாய்ப்பை இன்னும் சுருக்கியிருந்தன.

வாசுவுடன் பேசவேண்டிய கட்டாயம் சரவணனுக்கு அவர்கள் பன்னிரெண்டாவது முடித்த பின் நிகழ்ந்தது.

“வாசு... வாசு...” வீட்டின் ஒரு பகுதி அஞ்சல் நிலையமாக இருந்த வாசுவின் வீட்டின் முன் நின்றபடி சரவணன் அழைத்துக் கொண்டிருந்தான். கதவைத் திறந்த வாசு, “என்னடா ஹீரோ, இந்தப் பக்கம்” என்றான் நக்கலாக.

“வாசு, எனக்கு மட்டும் ஹால் டிக்கெட் வரலடா, இன்னும் நாலு நாள் தான்டா இருக்கு entrance examக்கு, உங்க அப்பாக்கிட்ட கேளுடா, ப்ளீஸ்டா” என்றான் சரவணன்.

“ஓஹோ, சரி சொல்றேன், நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டுக் கதவை மூடும் போது, உள்ளிருந்து “யாருப்பா அது?” என்ற வாசுவின் அப்பா குரல் கேட்டது.

“அங்கிள், entrance hall ticket வந்திருச்சான்னு பாக்க வந்தேன் அங்கிள். நானும் வாசு கூடத் தான் படிக்கிறேன் அங்கிள்” என்றான் சரவணன்.

“உள்ளே வாப்பா” என்ற குரலைக் கேட்டு, வாசு கதவை முழுதாய்த் திறக்க, உள்ளே சென்றான் சரவணன். அஞ்சல் நிலையமாக இருந்த அடுத்த அறையில் இருந்த வாசு அப்பா, “இதுவரைக்கும் வந்த எல்லா ஹால் டிக்கெட்டும் அனுப்பியாச்சே, எதாவது தவறிப் போயிருந்தா மேட்டூர் head post officeல தான் இருக்கும். கொஞ்சம் இரு, அங்க போன் செஞ்சு கேட்டுப் பாக்குறேன்” என்றவர் தனக்கு முன்னிருந்த கடிதக் கட்டுக்களில் ஹால் டிக்கெட் இருக்கா என்று பார்த்தவாறே மேட்டூர் அஞ்சல் நிலையத்தைத் தொடர்பு கொண்டார்.

“அங்கயும் எல்லாமே டெலிவரி ஆகிடுச்சாம், எதுவும் இல்லன்னு தான் சொல்றாங்க, இங்கயும் ஒன்னுமில்லையே, டேய் வாசு, உன்னோட ஹால் டிக்கெட்டை நீ தானே தேடி எடுத்த? அதுல சரவணன் ஹால் டிக்கெட் ஒட்டிட்டு வந்திருக்கப் போகுது, போயிப் பாரு” என்றதும் வாசுவின் முகம் மாறத் தொடங்கியது.

“இல்ல, நான் என்னோட ஹால் டிக்கெட் மட்டும் தான் எடுத்தேன். இவனோட ஹால் டிக்கெட்டை நான் ஏன் எடுக்கப் போறேன்?” என்றான் வாசு.

“நீ எடுத்தன்னு சொல்லலடா, தவறிப் போயி வந்திருக்கலாம்ல” என்ற வாசுவின் அப்பா, “வா, பாப்போம்” என்று வாசுவின் அறைக்குச் சென்றார். பின்னாலே வாசுவும், சரவணனும் தொடர்ந்தனர். அவனது மேசையின் இழுப்பறையில் இருந்த வாசுவின் ஹால் டிக்கெட்டை எடுக்க, அதன் கீழே சரவணனின் ஹால் டிக்கெட்டும் இருந்தது.

“இது எப்படி இங்க வந்ததுன்னு எனக்குத் தெரியாதுப்பா” என்றவனை முறைத்த வாசுவின் அப்பா, “சரவணா, இதோ உன்னோட ஹால் டிக்கெட், நல்லபடியா எழுது, all the best” என்று சொல்ல,thank you uncle” என்று சொல்லியவனாய் அங்கிருந்து கிளம்பினான் சரவணன். வீட்டின் வெளியே தனது சைக்கிளை எடுத்துக் கொண்டிருந்த போது, உள்ளே “உண்மையா எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா, எப்படி இங்க வந்ததுன்னு தெரியாதுப்பா” என்று வாசுவின் கதறல் சரவணனுக்குக் கேட்டது.

சரவணன் சுகந்தி மருத்துவமனையை நெருங்கி இருந்தான். மருத்துவமனைக்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு, வரவேற்பில் வாசுவின் பெயரைச் சொல்லி, “மேட்டூர்ல accident ஆகி நேத்து இங்க trauma careல அட்மிட் ஆகியிருக்காங்க” என்று விசாரிக்க, “நீங்க blood donor?” என்று பதில் கேள்வி வந்தது.

“நான் அவனோட friend தான். இப்ப donorம். நான் B positive, என்ன குரூப் தேவைப்படுது?” என்றான் சரவணன்.

“அதே தான், இன்னும் 3 யூனிட்டாவது வேணும்” என்று சொல்லிய சிஸ்டர், ஒரு படிவத்தை எடுத்து அவனிடம் நீட்டி, “இதை fill செய்யுங்க, blood bank முதல் மாடி இடது பக்கம் இருக்கு, அங்க போங்க” என்றார்.

நிரப்பிய படிவத்தை எடுத்துக் கொண்டு, blood bankல் நுழையும்போது, அங்கு நின்று கொண்டிருந்த வாசுவின் அம்மாவைப் பார்த்தான் சரவணன். “அம்மா, நான் சரவணன், வாசுவோட ஸ்கூல்ல படிச்சவன், நான் காலையில தான் ஊருக்கே வந்தேன், அம்மா சொன்னதும் உடனே கிளம்பி இங்க வந்துட்டேன், அப்பாவுக்கு எப்படி இருக்கு, வாசு எப்படி இருக்கான்?” என்று கேட்க, “வாசுவ வார்டுக்கு மாத்திட்டாங்க. அப்பாவுக்குத் தான் blood தேவைப்படுது, இன்னும் சர்ஜரி இருக்குன்னு சொல்லிருக்காங்க” என்ற வாசுவின் அம்மா கலங்கிய குரலில் சொன்னார்.

“ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா, இதோ blood குடுக்கத் தான் போறேன், வாசு, அப்பா ரெண்டு பேரும் நல்லா ஆகுற வரைக்கும் நானும் உங்க கூடவே தான் இருப்பேன். மனசத் தளரவிடாதீங்க” என்று blood bank உள்ளே சென்றான்.

இன்னும் எத்தனை யூனிட் blood தேவைப்படும் என்று கேட்டுக் கொண்டு, facebook, twitter ல் #bloodrequired என்று தனது எண்ணுடன் பதிவிட, இன்னும் சில குருதிக் கொடையாளர் வந்து கொடுக்க, தேவையான அளவுக்கு blood கிடைத்து விட்டிருந்தது.

“சரவணா, வாசு முழிச்சுட்டான்பா, வா, வந்து பாரு” என்றார் வாசுவின் அம்மா.

அதுவரை blood bank, pharmacy எனச் சுறுசுறுப்பாய் இயங்கியவன், இப்போது வாசுவைப் பார்க்க கொஞ்சம் தயங்கித் தயங்கித் தான் உள்ளே சென்றான்.

“வாசு, உன் ஸ்கூல் பிரண்டுடா, காலைலேந்து ரொம்ப உதவியா இருந்தான்பா. ரத்தம் குடுத்தான், இன்னும் சில பேரைக் கூட்டி வந்து ரத்தம் குடுக்க வச்சான், அப்பாவுக்கு, உனக்கு மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தான், சரவணா, பக்கத்துல வாப்பா” என்று அம்மா சொல்ல, அருகே வந்து, “இப்ப பரவால்லையா வாசு?” என்றான் சரவணன்.

thanksடா” என்றான் வாசு.

“ச்ச, இதுல என்னடா இருக்கு, என்னோட friend உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சதும் அப்படியே கண்டுக்காம இருந்துட முடியுமா? ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்” என்று சரவணன் சொல்ல, வாசுவின் அம்மா, “சரவணா, நீங்க பேசிட்டு இருங்க, வாசு அப்பாவப் போயிப் பாத்துட்டு வர்றேன்” என்று கிளம்பினார்.

“சரவணா, இன்னொருத்தனா இருந்தா எனக்கு இப்படி நடந்ததுக்கு நல்லா வேணும் அவனுக்குன்னு போயிருப்பான். அன்னிக்கு உன்னோட ஹால் டிக்கெட்டை நான் தான்டா எடுத்து ஒளிச்சு வச்சேன். எப்பவோ நடந்தத நெனச்சு, உன் மேல ஒரு வன்மம், தெரியாம செஞ்சேன்னுலாம் சொல்ல மாட்டேன். தெரிஞ்சு தான் செஞ்சேன். எப்படியாச்சும் அந்த ஒன்னுலயாவது உன்னை மண்ணு கவ்வ வைக்கணும்னு தான் அப்படி செஞ்சேன். ஆனா, அதெல்லாம் இப்ப நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்குடா” என்று வாசு சொல்ல, “விடுடா, இப்ப கூட இதெல்லாம் நீ எதுக்கு செஞ்சன்னு எனக்குத் தெரியாது. ஆமா என் மேல வன்மம் வர்ற அளவுக்கு நான் என்னடா செஞ்சுட்டேன்?” என்று சரவணன் கேட்டான்.

“ஆறாம் வகுப்புலேந்து நம்ம ரெண்டு பேரும் ஒன்னா தான் ஸ்கூலுக்கு பஸ்ல போவோம், நினைவிருக்கா?” என்றான் வாசு.

“ஆமா”

“ஒன்பதாவது போகும் போது நம்ம போற பஸ்ல வளர்மதியும் வருவால்ல”

“ஆமா”

“ஒரு நாள் நீ பஸ்ல முன்ன ஏறிட்ட, வண்டியும் நகரத் தொடங்கிடுச்சு, நான் ஓடி வந்து ஏறும்போது, நீ பெரிய ஹீரோ இவரு, ரன்னிங்ல தான் ஏறுவியோன்னு கேட்க, பக்கத்துல இருந்த வளர்மதி சிரிக்க, கூடவே நீயும் சேந்து சிரிச்ச” என்ற வாசு சொல்ல, “சரி” என்றான் சரவணன்.

“நான் என்ன கதையா சொல்றேன், அதனால தான் உன் மேல கோபம் வந்துச்சு” என்று வாசு சொல்ல, “அடப்பாவி, இதுக்காடா என்கிட்ட பேசாம இருந்த, சரி அத விடு, இதுக்காடா என் ஹால் டிக்கெட்டை எடுத்து வச்ச?” என்று சரவணன் கேட்டான்.

“நீ கேட்டது ஒன்னுமில்ல தான், ஆனா, அத வளர்மதி முன்ன வச்சு கேட்டது தான்...” என்று வாசு இழுக்க, இருவரும் சிரிக்கத் தொடங்கி இருந்தனர். கண்களில் நீரும், முகத்தில் சிரிப்பும் கொண்டு உள்ளே வந்த வாசுவின் அம்மா, “சர்ஜரி முடிஞ்சுதுப்பா, கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சதும் பாக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்று சொல்ல, சரவணனின் கையை ஆதரவாகப் பிடித்தான் வாசு.


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். 

தமக்கு இன்னல் செய்தவருக்கு அவர் நாணி மனம் உணரும் வகையில் நன்மை செய்வதே சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka