இஞ்சினியர் வீடு - குறள் கதை

இஞ்சினியர் வீடு

- முடிவிலி



கோவையில் கிளம்பியிருந்த கோவை - சென்னை எழும்பூர் விரைவு வண்டி திருச்சியைத் தாண்டி தஞ்சாவூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. 2 Tier AC பெட்டியில் தனது மனைவியுடன் பின்னோக்கிச் செல்லும் மரங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார், மின்  வாரியத்தில் மேற்பார்வை பொறியாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்று தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் செல்வநாதன்.  என்ன தான் வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வந்து செல்வதென இருந்திருந்தாலும், இப்போது அங்கேயே தங்கப் போவதை எண்ணி மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். இதுவரை அனல்மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், நடுவே ஓராண்டு மின் பகிர்மானத்திலும் பணிபுரிந்து தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இருந்து வெகு நாட்களுக்குப் பிறகு தான் பிறந்த ஊரிலேயே தங்கப் போவதை எண்ணிய அவரின் நினைவுகள் நாற்பது ஆண்டுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. 

****

ன்று பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை நகராக, டேனிஷ் கோட்டையும், கடற்கரைக் கோவிலும் கடலின் அருகே நின்றிருந்த தரங்கம்பாடி அருகே இருந்தது செல்வநாதனின் ஊர். காரைக்காலையும், பாண்டிச்சேரியையும் இணைக்கும் சாலையில் இருந்து அரை கிலோமீட்டர் உள்ளே பசுமையான இலுப்ப மரத் தோப்புக்குள் ஒளிந்திருக்கும் அழகான ஊர். ஊரின் வடக்குத் தெருவும் கிழக்குத் தெருவும் இணையும் இடத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் முன் இருந்த மேடையில் தான் ஊரின் பலரும் அமர்ந்து ஊர்க்கதை பேசுமிடமாக இருந்தது. பிள்ளையார் கோவிலின் அருகே இருந்த டீக்கடையும் பலர் அங்கு வந்து அமர்வதற்கு இன்னொரு காரணமாக இருந்தது. காலை ஐந்து மணிக்கே வீட்டிலிருந்து சொம்பில் டீ வாங்கிச் செல்ல பலரும் வந்து போகத் துவங்கி இருந்தனர். 

"என்ன வீரய்யா, உன் ரெண்டாவது பையன் நம்மூரு பள்ளிக்கூடத்துல எட்டாப்பு முடிச்சு பொறையாத்துக்குப் படிக்க போறான்னு சொன்னதையே நம்ப முடியாம இருந்துச்சு. இப்ப பதனொன்னாவதும் முடிச்சுடுவான் போல" என்றார் ஆறுமுகம்.

"ஆமா, மொத பையன் தான் படிப்பு ஏறல. அஞ்சாப்பு முடிக்கவே தடுமாறி நின்னுட்டான். செல்வம் தான் இப்ப, ஏதோ சொன்னான் அவன்" என்றவர் சற்று சிந்தித்தவராய், "ஆங், எஸ் எஸ் எல் சியாம், பதனொன்னாவதுக்கு அப்படி பேராம், அத முடிக்கப் போறான், தேறுவானான்னு பாப்போம்" என்றார் வீரய்யன்.

"என்ன தேறி என்ன செய்ய? அப்படியே உன் தொழில்ல போடு, வீரய்யா" என்றார் அருகே இருந்த சண்முகம்.          

"ஏன் அவன் மேல படிக்கக் கூடாதா? ஏன்டா ஒருத்தன் முன்னேறி வந்தா கண்ணுல உறுத்திட்டே இருக்குமோ?" என்ற வீரய்யனால் அந்த இடத்தில் மேலும் அமர்ந்திருக்கப் பிடிக்காமல், எழுந்து கும்மினித் தோப்பில் இருக்கும் தனது வீடு நோக்கி நடந்தார். போகும் வழியெங்கும் 'பய எவ்ளோ நல்லா படிக்கிறான், அவன என் தொழில்ல போடணுமாம், வந்துட்டானுங்க, புத்திமதி சொல்றதுக்கு' என்று பொருமிக் கொண்டே சென்றார். 

சில நாட்களில் செல்வநாதனின் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. எழுபத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் வாங்கி இருந்தான் செல்வநாதன். தான் நினைத்திருந்ததை விட மதிப்பெண் குறைந்திருந்ததை எண்ணி, சற்று வருத்தமாக இருந்த செல்வனைப் பார்த்து, "நம்ம வழியிலயே ஒருத்தனும் இவ்ளோ படிச்சதில்லடா, நீ என்னடா மூஞ்சியத் தூக்கி வச்சிட்டிருக்க" என்று சொல்லி, தான் வளர்த்து வந்த கடா ஒன்றை அடித்து தெருவுக்கே விருந்து வைத்தார் வீரய்யன்.

"என்னடா வீரய்யன் வீட்டுல யாருக்கும் கல்யாணமா? விருந்து எல்லாம் நடக்குது" என்று தனது வீட்டில் வேலை பார்க்கும் சண்முகத்தைப் பார்த்துக் கேட்டார் ஊர் நிலக்கிழார் சிவக்கொழுந்து. 

"இல்லங்க, கடா வெட்டி தெருவுக்கே விருந்து போடுறான், என்னமோ ஊரு ஒலகத்துல இல்லாத புள்ளைய பெத்துட்டது போல" என்றான் சண்முகம்.

"டே சம்முவம், கேட்டதுக்குப் பதில சொல்லுடான்னா, புதிர் போட்டுட்டிருக்க" 

"வீரய்யன் புள்ள செல்வன் பள்ளிக்கூடம் பாஸ் ஆகிட்டானாம், அதுக்குத் தான் இவ்ளோ ஆடிட்டிருக்கான்" என்ற சண்முகம் சற்று குரலைக் குறுக்கி, "உங்க பையனையும் பொறையாத்துக்கு அனுப்பிருந்தா அவனும் படிச்சிருப்பான்ல, இப்ப பாருங்க, என் மவன் படிச்சு முடிச்சுட்டான்னு தலகாலு புரியாம குதிக்கிறான்" என்றான்.

"நானா அனுப்பல, அவன் நம்ம ஊருலயே பள்ளியோடம் போவாம பம்பரம் விட்டுட்டுத் திரிஞ்சான். வீரய்யன் பையனுக்கு நாலு வருசம் மூத்தவன் தான் அவனுக்கு முன்ன படிச்சான், அவன் கூட படிச்சான், நின்னுட்டான்" என்ற சிவக்கொழுந்து, "சரி, ஒரு ரெண்டு மூனு நாள் போவட்டும், வீரய்யனை வந்து என்னைப் பாக்கச் சொல்லு" என்றார்.

"ஏன் ரெண்டு மூனு நாளு, இப்பவே போயி" என்று சண்முகம் வீரய்யன் வீடு இருந்த திசை நோக்கி நகர, "டேய், சொல்றத மட்டும் செய்யி, போ" என்று அடக்கினார் சிவக்கொழுந்து. 

ன்றிரவு செல்வனை அருகில் அமர வைத்து, "நல்லா சாப்பிட்டியாப்பா?" என்ற வீரய்யனிடம், மையமாகச் சிரித்த செல்வன், "அப்பா, அடுத்து பி யூ சி படிக்கணும். பொறையாறு TBML காலேஜ்லயே இருக்கு. ஆனா, சிதம்பரம் போனா அதுக்கு மேல படிக்குறதுக்குல்லாம் வசதியா இருக்கும்" என்றான் தயங்கியபடி.

"நல்லா படிய்யா, செலவு பத்தில்லாம் நீ நெனக்காத, என்ன வேணுமோ படி" என்ற வீரய்யன் செல்வனின் தலையில் கைவைத்து நிறைவாய்ச் சிரித்தார்.

"என்ன ஐயா வந்து பாக்கச் சொல்லிருந்தீங்களாமே, நானே வேற ஒரு வேலையா உங்களைப் பாக்கணும்னு இருந்தேன், நீங்களே சொல்லி அனுப்பிட்டீங்க" என்று வெள்ளந்தியாய்க் கேட்டார் வீரய்யன்.

"உன்னத் தான் கையிலேயே புடிக்க முடியலையேப்பா, கடா வெட்டி தெருவுக்கே விருந்து வைக்குற" என்றார் சிவக்கொழுந்து.

"அதெல்லாம் ஒன்னுமில்லங்க. நம்ம பய தான்" என்று இழுத்தவர், "நீங்க எதுக்கு வரச் சொன்னீங்கன்னு கேட்காமயே நிக்குறேன் பாருங்க" என்றார்.

"உன் மவன், அதான் இப்ப படிப்பு முடிச்சிருக்கானே, கணக்குல்லாம் நல்லா போடுவானாப்பா?"

"அதெல்லாம் கணக்குல புலிங்க" என்றார் பெருமை பொங்க.

"பார்றா, நல்லதாப் போச்சு, நம்ம அரிசி மில்லுக்குக் கணக்கு எழுத ஒரு ஆளு தேவைப்படுதப்பா, அதான் உம்மவன் நெனப்பு வந்துச்சு, நம்ம பய ராசு ஒழுங்கா படிச்சிருந்தான்னா அவனையே பாத்துக்கச் சொல்லிருப்பேன், அவனுக்கு ஊரு வம்பு பேசத் தான் நேரமிருக்கு, ம், அது கெடக்கட்டும், வர்ற பொதங்கிழமைலேந்து வந்து சேரச் சொல்லு, சரியா?" என்று சிவக்கொழுந்து சொல்ல, அருகே சண்முகம் சிரித்துக் கொண்டு நிற்கவும், சில நொடிகள் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது வீரய்யனுக்கு.

"இல்லங்கயா, அவன் மேல படிக்கப் போறேன்னு சொல்றான்" என்றார் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு.

"அவன் ஆயிரம் சொல்லுவானப்பா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும். சொல்லு, கேட்டுக்குவான்" 

"நான் ஏற்கனவே அவனுக்கு எடுத்துச் சொல்லிட்டேன். நல்லா படிக்கணும்டா, என்ன படிக்கணுமோ படின்னு, அவன் மேல படிக்கத் தான் போறாங்க"

"வீரய்யா, ஐயா பேச்சுக்கு மறுப்பு பேசிட்டு ஊருல இருந்துட முடியுமா? எப்படி உம்மவன் மேல படிக்குறான்னு நான் பாத்துடுறேன்" என்றான் சண்முகம்.

"டே சம்முவம், சும்மா இருடா" என்று அதட்டிய சிவக்கொழுந்து, "வீரய்யனுக்குத் தெரியாதா? நான் உன்கிட்ட கேட்டேன், உனக்கு என்ன செய்யணுமோ செய்யப்பா" எனச் சொல்ல, தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் வீரய்யன்.

வீட்டுக்குள் நுழைந்த வீரய்யன், "முருகா, செல்வம், எங்கடா போனீங்க?" என்று கத்த, புழக்கடையில் இருந்து மூத்த மகன் முருகன் ஓடி வந்தான். 

"என்னப்பா ஆச்சு?" என்று முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பின்னாலே செல்வமும் வந்தான்.

"வாங்கடா" என இருவரையும் அழைத்தவர், முருகனைப் பார்த்து, "உடனே தம்பியை புவனகிரில இருக்குற மாமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ. இனி ஊருக்குள்ள வந்தா படிச்சு முடிச்சுட்டு வந்தா போதும்" என்று சொல்லிக் கொண்டே கீழே இருந்த தகரப் பெட்டியைத் திறந்து, அதன் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த பெட்டகத்திலிருந்து பணத்தை எடுத்து முருகனின் சட்டைப் பையில் திணித்தார். 

நடப்பது என்னவெனப் புரியாமல், இருவரும் நின்றிருக்க, "ஊருல நீ படிக்குறது சிலருக்குப் பிடிக்கலடா, என்ன செய்வானுங்கன்னு தெரியல. முருகா, மாமா வீட்டுல தங்குறதுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும். தம்பிய காலேசுல சேக்குறது எல்லாம் நீ தான் பாத்துக்கணும். அங்க போயி எனக்குக் கடுதாசி எழுது, இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்கு நான் குடுத்த பணம் போதும். அப்பப்ப நான் வந்து பாக்குறேன்" என்று அடுக்கிக் கொண்டே போனார் வீரய்யன்.

பேயறைந்தது போல நின்ற இருவரையும் பார்த்து, "கிளம்புங்கடா, எனக்கு என்னமோ பயமாருக்கு. இந்த சண்முகம் தான் ஏதோ சொல்லிவிட்டிருக்கான். அரிசி மில்லுல இவனைக் கணக்குப் புள்ளையா சேரச் சொல்லி சிவக்கொழுந்து ஐயா சொன்னாரு, நான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்" என்றவர், செல்வத்தைப் பார்த்து, "இங்க அடிதடின்னு என்ன கேள்விபட்டாலும் உன் படிப்பை முடிக்காம ஊருக்குள்ள வரக் கூடாது, நான் வந்து உன்னை அங்க பாப்பேன், புரிஞ்சுதா? நல்லா படிக்கணும்டா" என்று வீரய்யன் சொல்லச் சொல்ல, செல்வம் கண்ணில் நீர் நிறைந்தது. 

"அழாதடா" என்று கண்ணீரைத் துடைத்து கட்டியணைத்தவர், "முருகா, தம்பியக் கூட்டிக்கிட்டு, கொல்லைப் புறமா போ, வாய்க்கால் வழியா கிழக்கப் போனீன்னா, தரங்கம்பாடிக்குப் போயிடலாம். ரெண்டரை ரயிலு பிடிச்சு மாயாரம் போங்க, அங்கிருந்து சேம்பரம் போயிடலாம். தம்பிய நல்லா பாத்துக்கடா, கிளம்புங்க" என்று சொல்ல, சில துணிமணிகள், செல்வத்தின் மதிப்பெண் சான்றிதழ், TC எல்லாம் எடுத்துக் கொண்டு முருகனும், செல்வமும் கிளம்பினர்.

செல்வம் சிதம்பரத்தில் PUCயில் சேர்ந்து விட்டிருந்தான். ஊரை விட்டு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்த நிலையில், வீரய்யன் புவனகிரிக்கு வந்து தனது மகன்களைப் பார்க்க வந்திருந்தார். கையில் கட்டோடு வீட்டின் உள்ளே நுழைந்த வீரய்யனைப் பார்த்த முருகனும், செல்வமும் அதிர்ந்து போயினர். 

"எப்படிப்பா ஆச்சு, சண்முகத்தோட வேலை தான? அவனை..." என்று முருகன் சொல்ல, "அப்பா மேல வச்ச கைய..." என்று செல்வமும் உறுமினான்.

"ஆங், இதெல்லாம் வேணாம்னு தான்டா ரெண்டு பேரையும் இங்க கிளப்புனேன். போடா, போயி சண்முகம் கைய வெட்டு, ஆனா அவனை ஏவிவிட்ட சிவக்கொழுந்தை என்ன செய்யப் போற? கூட நின்ன சிவக்கொழுந்து பையன என்ன செய்யப் போற? நீ வெட்டுனா அவனுங்க சும்மா இருப்பானா அவனும் வெட்டுவான்ல, ஏன்டா, அந்தச் சொழல்ல நீ ஏன் சிக்கணும்? படிக்குற பய ஒனக்கு இதெல்லாம் தோனலாமா?" என்ற வீரய்யன் சற்று தணிந்து, "இதனால தான் இத்தனை நாளு நான் வராம அங்கயே கிடந்தேன், பரவால்லடா, நீ படிப்புல சேந்துட்டல்ல, அது போதும்டா செல்வம்" என்று இடது கையால் செல்வத்தின் கன்னத்தைத் தடவினார். 

"இப்ப சேந்துருக்குறது எத்தனை வருசம் படிப்புடா?"

"இது ஒரு வருசம் தான், இதுல எடுக்குற மார்க் வச்சு அடுத்து engineering எடுக்கலாம்னு இருக்கேன்பா, இப்ப இருக்குறத விட செலவு தான் அதிகமாகும்" என்ற செல்வத்தைப் பார்த்து, "உங்க அம்மா நகையெல்லாம் அப்படியே தான் கிடக்கு, நீ படிடா, படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வந்தா அது போதும்டா" என்றவர் வெள்ளந்தியாய்ச் சிரித்தபோது அவர் கையில் இருந்த வலி காணாமல் போயிருந்தது. 

அடுத்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்த செல்வநாதன், கல்வி உதவித்தொகையும் பெற்று, தனது தந்தையின் செலவுப்பளுவை சற்று குறைத்தான். பட்டம் வாங்கிய அந்த ஆண்டு தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்டப்பணிகள் துவங்கிய நிலையில் தமிழக அரசு பொறியாளர்களை எடுக்க, உதவிப் பொறியாளராக மின்சார வாரியத்தில் பணியில் ஏறினான்.   

****

"என்னங்க" என்ற குரல் கேட்டுத் தன்னிலை அடைந்த செல்வநாதன், "ஆங், ம் சொல்லும்மா" என்று சொல்ல, "மயிலாடுதுறை வரப்போகுது, சுந்தர் ஸ்டேசன்ல உள்ள வந்து பெட்டி எல்லாம் எடுத்துக்குறேன்னு சொல்லிட்டான். இந்தப் பை மட்டும் நீங்க எடுத்துக்கோங்க போதும், அப்படியே உறைஞ்சு போயி உக்காந்திருக்கீங்க" என்ற செல்வநாதனின் மனைவி, நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். 

"அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, ரொம்ப நாள் கழிச்சு ஊருலயே வந்து தங்கப் போறேன்ல, அதான், மனசு பழச எல்லாம் அசைபோடுது" என்ற செல்வநாதனின் கைகளை ஆதரவாகப் பற்றியிருந்தன அவர் மனைவியின் விரல்கள்.

ஊருக்குள் கார் நுழைந்து வடக்குத் தெரு பிள்ளையார்க் கோவில் தாண்டும் போதே, தனது வீட்டின் முன் போடப்பட்டிருந்த பந்தலையும், ஒலிப்பெருக்கியில் பாடிக் கொண்டிருந்த பாடல்களையும் பார்த்த செல்வநாதன், "எதுக்குப்பா இதெல்லாம்?" என்றார்.

"அப்பா, ஊருலயே முதல் இன்ஜினியர், தான் படிச்சது இல்லாம, நம்ம உறவுல எல்லாத்தையும் படிக்க வச்சிருக்கீங்க. இதெல்லாம் செய்ய வேண்டியது தான்" என்றான் சுந்தர்.

வண்டியில் இருந்து இறங்கிய செல்வநாதன், நேரே தனது அப்பா படத்தை நோக்கிச் செல்ல, குழுமியிருந்த அனைவரும் அவரின் பின்னே சென்றனர். செல்வநாதனுக்கு அருகில் சுந்தர் வந்து நிற்க, "அத்தனை பேரை நான் படிக்க வச்சேன்னு சொன்னல்லடா, அதெல்லாம் நான் செய்யல, இதோ பள்ளிக் கூடத்துக்கே போகாத இவர் சொன்ன சொல் தான் என்னையே படிக்க வச்சது. மத்தவங்களைப் படிக்க வைக்கணும்னு சொல்லிக் கொடுத்தது" என்று சொல்ல, அங்கிருந்த அனைவரும் வீரய்யனை வணங்கினர்.

தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்த ராசு தனது மகனிடம், "என்னப்பா கும்மினித் தோப்புல யாரு வீட்டுல பாட்டுல்லாம் பாடுது? ஏதும் கல்யாணமா?" எனக் கேட்க, "இன்ஜினியர் வீட்டுல தான், முப்பத்தஞ்சு வருசம் சர்வீஸ் முடிஞ்சு வந்திருக்காரு, இனி இங்க தான் தங்கப் போறாராம்" என்றான் ராசுவின் மகன்.

"இனிமே நான் திண்ணையில உக்காரல, இந்த நாக்காலிய உள்ள கூடத்துல போடுடா" என்று தான் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தார் சிவக்கொழுந்தின் மகன் ராசு.  

குறள் எண்: 313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.


அதிகாரம்: இன்னா செய்யாமை

தான் எந்தத் தீங்கும் செய்யாமல் இருந்தும் தமக்குத் தீங்கு இழைந்தவர்க்குப் பதிலாகத் துன்பம் இழைப்போமாயின், அது மீள இயலாத சுழலாய் மாறி மீண்டும் நமக்குத் துன்பத்தையே தரும். 



 


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka