உன்னைப் போல - குறள் கதை
உன்னைப் போல
-முடிவிலி
-முடிவிலி
இதுவரை மழை பெய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம், மேற்கில் கொஞ்சம் முகில்கள் விலக, மாலை நேரத்து இளவெயில் சாளரத்தின் வழி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்து சாளரத்தின் கம்பியைப் பற்றிய புறா ஒன்று 'க்குருகும்... க்குருகும்...' என்று நின்ற இடத்திலேயே சுற்றி வந்தது.
"டேய், தம்பி மாறா, அந்தப் புறாவ வெரட்டுடா" என்று வரவேற்பறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.
"அம்மா, அது என்னம்மா செஞ்சது? அது பாட்டு பாடிக்கிட்டு இருக்கு. அதை ஏன்மா வெரட்டணும்?"
"Window, Balcony எல்லாம் கழிஞ்சு வச்சுட்டுப் போயிடுது, நீயா துடைக்கப் போற? கேள்வி கேட்காம வெரட்டுடா" என்று அம்மா சொல்லிக் கொண்டே அறைக்குள் வர, புறா தானாகவே பறந்து போயிருந்தது.
"உங்களைப் பாத்தததும் அதுவே போயிடுச்சும்மா" என்றேன் மெதுவான குரலில்.
"ஆமான்டா, நான் அரக்கி, என்னைப் பாத்து பயந்து ஓடிடுச்சு. உன் வயசுல எல்லாரும் கல்யாணம் செஞ்சுட்டு, செட்டில் ஆகிட்டான். நீ என்னடான்னா என்கூட உரண்டை இழுத்துட்டு இருக்க?"
"என்னடா, காலையிலேந்து இதுவரைக்கும் தொடங்கலையேன்னு பாத்தேன். அடுத்த மாசம் UK conference போறேன். வரும்போது கூடவே யாரையாச்சும் கூட்டிட்டு வந்துடுறேன் பாருங்க."
"நீ செஞ்சாலும் செய்வடா" என்று சிரித்துக் கொண்டே அம்மா அறையை விட்டு வெளியேறிய நேரம், அலைபேசி 'டிங்' என்றது. தொடுதிரை 1 new message என்றது.
அலைபேசியை எடுத்துத் தொட்டதும், நண்பன் திருவின் செய்தியைக் காட்டியது.
'hi da'
நானும் 'hi thiru, எப்படி இருக்க?' என்று பதிலளித்தேன். சில நொடிகளில் tick நீலநிறமாக மாறியது.
நானும் 'hi thiru, எப்படி இருக்க?' என்று பதிலளித்தேன். சில நொடிகளில் tick நீலநிறமாக மாறியது.
'நான் நல்லாருக்கேன்டா, ஒரு உதவி வேணும்டா. நம்ம நாதன் நம்பர் இருக்கா, உன்கிட்ட? ரொம்ப நாள் முன்னாடி அவன் நம்பர் குடுத்தான். போன் தொலஞ்சு போனதுல அவன் contact போயிடுச்சு.'
'இருக்குடா, என்ன திடீர்னு நாதன் நம்பர் கேட்குற?'
'சும்மா தான்டா, அவன் தான் யோகா, மூச்சுப்பயிற்சி பத்தில்லாம் பேசிட்டு இருப்பான். எனக்கு மூச்சுப் பயிற்சி பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.'
'ஓ, நம்பர் தர்றேன். ஆனா, நானே அவன் muteல தான் போட்டு வச்சிருக்கேன்.'
'ஏன்டா?'
'ஒரு ரெண்டு மூனு நாளுக்கு குட் மார்னிங் தான் அனுப்பிட்டு இருந்தான். அப்புறம் பாத்தா, எங்கக் கூட்டத்துக்கு வா, எங்க ஜி என்ன சொல்றாரு தெரியுமான்னு ஒரே சாமியார் புராணம்* தான். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். எனக்கு இதுல interest இல்லடா. என்ன விட்டுடுன்னு. கேட்கல. நான் mute செஞ்சுட்டேன்.'
'😂😂😂'
'இப்ப சிரிக்குற, ஒரு நாள் உனக்கே புரியும்.'
'எவ்வளவோ forward message. அதுல இதுவும் ஒன்னு. அப்படி எடுத்துக்கணும்டா.'
'என்னமோ இந்த சாமியார்ங்க, இல்ல கடவுளை வச்சு காசு பாக்குறவனைக் கண்டாலே பத்திட்டு வருது. இவ்ளோ செய்யுறானுங்களே, இவனுங்க ஆசிரமம் எல்லாம் பாத்தன்னா, NGO ன்னு பதிவு செஞ்சிருப்பானுங்க. அப்படி செஞ்சா தான், கிடைக்குற காசு எல்லாம் அவனுங்க செய்யுற தொண்டுக்கு நன்கொடையாக வந்துச்சுன்னு கணக்கு காட்ட முடியும்.'
'சில ஆசிரமம்லாம் உண்மையாவே நல்லது செய்யுற மாதிரி தான் தெரியுது மாறா. எல்லாத்தையும் அப்படி பொத்தாம்பொதுவாச் சொல்லிட முடியாதுல்ல'
'முடியாது தான். ஆனா, இங்க அவனுங்க செய்யுற ஒவ்வொரு நல்லதையும் video எடுத்து, அதை வச்சு, வெளிநாடுகள்ல டாலர்ல அள்ளிடுவாங்க. இங்க நுனி நாக்கு இங்கிலீஷ் பேசுற சாமியார் எல்லாம் new york, california ன்னு பல இடத்துல பெருஞ்சொத்து சேத்து வச்சுட்டானுங்க. நாதன் போல ஆளுங்க தான் உண்மையிலேயே ஏமாந்தவங்க. இருந்த வேலைய விட்டுட்டு, இப்ப யோகா சொல்லித் தந்துட்டு இருக்கான். அவனுக்குச் சொன்னாலும் புரிய மாட்டுது.'
'என்னடா சொல்ற? வேலைய விட்டுட்டானா?'
'அது தெரியாதா? வேலையை விட்டுட்டான். முழுநேரமா இப்ப யோகா தான்.'
'ஒரு நாள் என்கிட்ட மனசு அலைபாயுறது தான் துன்பத்துக்குக் காரணம். எங்க கூட்டத்துக்கு ஞாயித்துக்கிழமை வா, மனசு அமைதியாகும். வாழ்க்கை இன்பமாகும்னு சொன்னான். நான் அவன்கிட்ட கேட்டேன். நான் துன்பப்படுறேன்னு யாருடா உன்கிட்ட சொன்னதுன்னு'
'ம்ம்ம்'
'அதுக்கு அவன் சொன்னது என்னன்னா, எங்க ஜி சென்னை வரும்போது நான் சொல்றேன். அன்னிக்கு வந்து அவர் பேசுறதைக் கேளு. அப்பத் தான் இன்பம்னா என்னன்னு உனக்குப் புரியும். நீங்கள்லாம் போலி வாழ்வு வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு அடுக்கிட்டே போனான். இதுக்கு மேல முடியாதுன்னு mute போட்டுட்டேன். இப்பச் சொல்லு, அவன் நம்பர் வேணுமா?'
'நான் தான் முன்னாடியே சொன்னேனேடா, எவ்வளவோ forward message அதுல இதுவும் ஒன்னுன்னு போயிடுவேன். அதுவும் இல்லாம நான் துபாய்ல இருக்கேன். என்னை எப்படியும் கூட்டத்துக்குக் கூப்பிட முடியாது இல்லையா? நீ அனுப்புடா. நான் பாத்துக்குறேன்'
நாதனுடைய அலைபேசி எண்ணை திருவுக்கு அனுப்பிய சில நொடிகளில் '👍' என்று பதில் வந்தது.
****
ஒரு மாதத்திற்குப் பின்
நான் பணிபுரியும் நிறுவனம் சார்பாக லண்டனில் நடைபெறும் ஒரு கருத்தரங்குக்குச் செல்வதற்காக சென்னை வானூர்தி நிலையத்தில் emigration, security check முடித்து அமர்ந்திருந்த நேரத்தில், 'டிங்' என்றது அலைபேசி. இப்போதும் திரு தான்.
'வருமான வரி சோதனையில் கணக்கில் வராத நூறு கோடி. தலைமறைவான சாமியார்' என்ற செய்தியை forward செய்திருந்தான்.
'என்னடா நீயும் forward அனுப்பத் தொடங்கிட்டியா?' என்று பதிலளிக்க,
'இல்லடா, போன மாசம் தானே பேசிக்கிட்டோம். இப்பப் பாரு. நூறு கோடி மாட்டிருக்காம். சரியான fraudங்க' என்றான் திரு.
'சரிடா, ஏதோ மூச்சுப்பயிற்சி பத்தி கேட்கணும்னு சொன்னியே. கேட்டியா? பதில் கிடைச்சுதா?'
'நீ வேற. நான் சும்மா doubt கேட்கலாம்னு பாத்தா, அவன் கூட்டத்துக்கு ஆளு சேக்குறதுல தான் இருக்கானே ஒழிய கடைசி வரைக்கும் பதில் சொல்லவே இல்ல. அதுவும் இல்லாம, அவங்க ஆசிரமத்தோட துபாய் கிளைக்கு என் நம்பரை அனுப்பி, அவனுங்க வேற வெள்ளிக்கிழமை கூட்டத்து வந்துருங்க ஜின்னு ஒரே தொல்லை.'
'😲😂 நான் தான் சொன்னேனேடா. இவனுங்க நம்ம நம்பிக்கைய அறுவடை செஞ்சு காசு பாக்குறாங்க. அதுக்காக நல்லது செய்வது போல வெளிக்காட்டுறது எல்லாம். சிவராத்திரிக்கு 5000 லேந்து 50000ரூவா வரைக்கும் காசு வாங்கி ஆட்டம் போடுறது, மரம் நடுறேன்னு ஆட்டைய போடுறது எல்லாம் மக்களோட நம்பிக்கையைப் பணமாக அறுவடை செய்யுறது தானே. நமக்கு நடக்கும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் நம்ம செயல் தான் காரணம்னு தெரிஞ்சுகிட்டா போதும் இவனுங்க கிட்டேந்து தப்பிச்சுடலாம். சரி, நாதன் message கிட்டேந்து எப்படி சமாளிக்குற?'
'எல்லாம் உன்னைப் போல தான். அவனை muteல போட்டுட்டேன் 😂😉'
'😂😂😂👍🙌' என்று பதிலளித்த போது, எனக்கான Departure Gate announcement கேட்க, எழுந்து முன்னே நடக்கத் தொடங்கினேன்.
- முடிவிலி
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அருளாதான் செய்யும் அறம்.
கருணையில்லாதவன் செய்யும் அறச்செயலை உற்று நோக்கினால், அறிவுத்தெளிவில்லாதவன் நூல்களின் மெய்ப்பொருளைக் கண்டது போல ஒன்றுக்கும் உதவாததாகவே இருக்கும்.
Comments
Post a Comment