யாரோ - குறள் கதை

யாரோ?

- முடிவிலி

'யாத்ரிகன், க்ருப்யா த்யான் தீஜியே...' என்று தொடங்கி கால் மணி நேரம் முன்பு சொன்னதையே இம்மி பிசகாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தது தொடர்வண்டி நிலைய ஒலிப்பெருக்கி. ஏற்கனவே கையிலிருந்த அலைபேசியில் நேரத்தையும், வண்டி வராத தண்டவாளத்தையும் பார்த்துப் பார்த்து நான்கு மணிநேரம் கழிந்திருந்தது. இரவு ஓட்டல் அறையில் அலைபேசியில் charger cable செருகி, switch on செய்யாமல் உறங்கியதின் பலனாக, 10% என்று சிவப்பு மின்னிக் கொண்டிருந்தது அலைபேசியின் வலது மூலையில். நான் இருந்த நடைமேடையின் இரு மருங்கிற்கும் சென்று தேடியும் ஒரு charging point இல்லாதததை எல்லாம் பார்த்துவிட்டுத் தான் இப்போது இந்த இருப்பதிலேயே சுற்றி பான் பராக் கரை குறைவாக இருந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். 

'Passengers attention please, train from Gorakhpur to thiruvananthapuram Train no 21551 raptisagar express is running late by 2 hours. the inconvenience caused is being deeply regretted.' இதுவரை இரண்டரை மணி நேரம் என்று சொல்லிக் கொண்டிருந்ததை இப்போது இரண்டு மணி நேரம் என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது தானியங்கிக் குரல். 'உனக்கென்னடா பீலிங்கு, எனக்குத் தான்டா பீலிங்கு' என உள்மனதில் வடிவேலு மீம் ஓடிக்கொண்டிருந்தது. சென்னையைச் சேர்ந்த கொதிகலன் நிறுவனத்தில் பணி. பெரும்பாலும் வட இந்தியாவில் தான் எங்களது கொதிகலன்கள் அதிகம். ஐந்து மெகாவாட் தொடங்கி, 150 மெகாவாட் வரை மின்னுற்பத்தி செய்யும் மின்நிலையங்களுக்கு கொதிகலன்கள் நிறுவியிருக்கிறோம். இப்போது நான் அமர்ந்திருக்கும் பாராபங்கி எனும் ஊரில் உள்ள ஒரு தன்னக மின் நிலையத்தில் (captive power plant) நாங்கள் ஏற்கனவே நிறுவிய ஒரு கொதிகலனில் சிறு கோளாறு என வருவிக்கப்பட்டு, வந்த வேலை முடித்து, இப்போது வராத, ச்ச நேரத்துக்கு வராத டிரெயினுக்காகக் காத்துகிட்டிருக்கேன். எனது நிறுவனத்திற்கு இன்னும் தகவல் சொல்லவில்லை. வண்டி லேட்டு எனத் தெரிந்தால், அப்படியே பக்கத்துல ஹரியானா சைட் வரை அதையும் பாத்துட்டு வந்துடு ராஜேஷ்னு சொன்னாலும் சொல்வாங்க. இப்போதைக்கு, இந்த ட்ரைன் நாளைக்கு வந்தாலும், சென்னை போயி, வீட்டுக்கு என் முகத்தைக் காட்டுவது மட்டும் தான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 

நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த மரத்தடியில் இருந்த மேடையில் கந்தல் துணியும், வளர்ந்த தாடியுமாக ஒரு பெரியவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் தற்செயலாக எல்லாப் புறமும் சுற்றிப் பார்ப்பது போல அவர் புறம் திரும்பிய நேரம், ஒரு குடும்பம் அவர்முன் நின்று அவரை வணங்கி, அவர் காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அப்போதும், அவர் பார்வை என் மீதே இருந்தது. 

அந்தக் குடும்பத்தின் தந்தை தனது மகனிடம் பெரியவரின் காலில் விழுவதற்கு வற்புறுத்த, பெரியவர் தடுத்து அந்தக் குழந்தையின் தலையில் கையை வைத்து, கண்ணை மூடித் திறந்து, பின்னர் செல்லமாகக் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார். அந்தத் தந்தையும், தாயும் முகம் மலர்ந்து, தன் கையில் இருந்த உணவுப் பொட்டலத்தைப் பெரியவரிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் வணங்கிச் சென்றனர். அவர்களைச் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவர், மெல்ல மீண்டும் என்னைப் பார்த்தபோது நான் சிரித்துக் கொண்டிருந்தேன். 

என்னைப் பார்த்த அவரும் சிரித்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். 10% மட்டுமே உயிர் இருக்கும் அலைபேசியின் திரையைத் தேவையில்லாமல் உயிர்ப்பித்து, மீண்டும் அணைத்தேன். தலையைத் திருப்பாமல் கண்ணால் அவர்புறம் பார்க்க, அந்த மரத்து மேடையில் இப்போது யாரும் இல்லை. ஆனால், எனக்கு மிக அருகிலிருந்து, "என்ன தம்பி தமிழா?" என்ற குரல் கேட்கவும், திடுக்கிட்டுப் பார்த்தேன். அவரே தான். எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தவர், சிரித்தபடி இருந்தார். 

சில நொடிகள் என்ன நிகழ்கிறது எனப் புரியாமல் இருந்த போதும், எனது பைகள் இரண்டும் இருக்கிறதா எனச் சோதிக்க மறக்கவில்லை. எல்லாம் இருப்பதை உறுதி செய்தபின் தான் அவர் கேட்டது, நினைவுக்கு வர, "ஆமா, சொந்த ஊரு திருச்சி பக்கம், நீங்க தமிழா?" என்றேன்.

"ஆமா, ஆனா, அங்கிருந்து கிளம்பி ரொம்ப நாள் ஆகுது. வாழ்க்கை போற நீரோட்டத்துல அடிச்சுட்டுப் போற மரம் போல தானே நாமெல்லாம். எங்கிருந்து வந்தோமோ, அங்கயே திரும்பப் போவாமான்னு தெரியாதே" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார். 

'நல்ல ஆளுகிட்ட மாட்டுனோம்டா, எதுக்கு சிரிக்குறாருன்னே தெரியல, ஆனா, டிரெயின் வரும் வரைக்கும் பேச்சுத் துணைக்காவது ஒரு தமிழ்க்குரல் இருக்கும்' என மனதில் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும், அவர் சொன்னதற்கு, 'ம்ம்ம், இதுக்கு என்ன சொல்லலாம்?' என்று மீண்டும் மனதிற்குள் வடிவேலு மீம். 

"தம்பி, நீங்க இந்த ஊருல என்ன செய்யுறீங்க?"

"நான் கமிஷனிங் இஞ்சினியரா இருக்கேன். இங்க பக்கத்துல ஒரு பவர் பிளான்ட்ல ஒரு வேலையா வந்திருந்தேன். நேத்து தான் வேலை முடிஞ்சுது. நீங்க என்ன செய்யுறீங்க?"

"அதான் சொன்னேனே, தம்பி. கால் போன போக்குல போய்க்கிட்டு இருக்கேன்."

'நல்ல வேலை தான்' என்று மனம் சொல்லியது. என் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டார். "என்ன நெனைக்கிறீங்கன்னு புரியுது தம்பி. இப்படி எதுவும் செய்யாமல் ஊரு சுத்துறதெல்லாம் ஒரு வேலையான்னு தானே?" என்றதும், என் முகத்தில் வியப்புக் குறி பரவியது. 

"அதெப்படி கரெக்டா சொன்னீங்க சாமி" என்றேன். சாமி என்னை அறியாமலேயே வந்ததை நினைத்து எனக்குள்ளே என்னைத் திட்டிக் கொண்டேன். அவர் இன்னும் சத்தமாய்ச் சிரிக்கத் தொடங்கினார். 

"அகத்துல இருந்தது முகத்தில தெரிஞ்சதாலே சொன்னேன். அப்புறம் என்ன சொன்னீங்க, சாமியா? நானா? நான் யாருக்கும் அடிமை இல்ல, எனக்கு யாரும் அடிமை இல்லன்னு புரிஞ்சுகிட்டதால தான் இப்படி ஒரு எடத்துல தங்காம ஊரு ஊரா சுத்திட்டு இருக்கேன். என்ன பாத்து சாமின்னு சொல்லுறியே" என்று சொல்லிவிட்டு இன்னும் சிரித்தார்.

எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது கால் அருகே சுற்றிக் கொண்டு நின்றது. தன் கையில் இருந்த உணவுப்பொட்டலத்தில் இருந்த ரொட்டியை எடுத்து, அந்த நாயிடம் நீட்ட, அது கவ்விக் கொண்டு வாலையாட்டிக் கொண்டே சென்று, சற்று தொலைவு சென்று ரொட்டியை உண்ணத் தொடங்கியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அவரிடம் திரும்பிக் கேட்டேன். 

"உங்களை எப்படி கூப்பிடணும்னு தெரியல. அதனால தான் சாமின்னு கூப்பிட்டேன். உங்க பேரு என்னங்க?"

"எதுக்குப்பா, என்ன பேரு சொல்றேனோ அதுக்குப் பின்னாடி ஆனந்தா, அடிகளார்னு போட்டு, எனக்குச் சுமை ஏற்படுத்தவா? அதோ அந்த நாயும், நானும் ஒன்னு தான். அதுக்குச் சோறு போட்டதுக்கு வாலாட்டுச்சுல்லயா? அதைப் போல எனக்குச் சோறு கொடுத்தவங்க நல்லாருக்கணும்னு நான் நெனக்கிறேன். நீங்க முதல்ல என்னப் பாத்து சிரிச்சுட்டு இருந்ததுக்கு இது தான் என் பதில்"

"அது சரிங்க, ஆனா, எந்த வேலையும் செய்யாம இப்படியே காலம் தள்ளுறது நல்லதுங்களா?"

"நம்முடைய தேவைகள் தான் வேலையை முடிவு செய்கிறது அல்லவா? அதுவுமில்லாம, சிலரைப் போல மரத்துக்குக் காசு கேட்குறதும், ஆத்துக்கு நடுவே உலக அமைதி நிலை நாட்டுறேன்னு ஏமாத்துறதும் இல்ல. என் தேவைகளைக் குறைச்சுக்குறேன். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காம இருக்கேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இதோ உங்களைப் போல சந்திக்கிறவங்க கிட்ட சொல்றேன்."

"ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க. ஆனா, இதெல்லாம் கடைபிடிக்குறதுக்கு எவ்வளவு கடினம் தெரியுமா?"

"அதெல்லாம் இல்ல, தம்பி, நான் சந்திக்குற எல்லா உயிர்கள் மேலயும் கருணையோட இருப்பதற்கு முயற்சி செய்யுறேன். என் உயிரைக் காத்துக் கொள்ள எதையும் நான் செஞ்சுக்க வேண்டிய தேவையில்லாம போயிடுது. ஆனா, இதுதான் இல்லறத்துக்கும், துறவறத்துக்கும் உள்ள வேறுபாடு. இங்க எல்லாரும் துறவு என்பதை ஆன்மீகத்தோடயும், கடவுள் வழிபாட்டோடயும் தொடர்பு செஞ்சு பாக்குறாங்க. ஆனா, வள்ளுவர் வழியில் தான் நான் துறவி. அவரோட துறவறவியல்ல பாத்தீங்கன்னா, கருணையோட இருப்பது, மத்த உயிரை உண்ணாம இருப்பது, மனத்தை அடக்குதல், தீயோரோடு சேராம இருப்பது, கள் உண்ணாதிருத்தல், உண்மை பேசுதல், சினம் கொள்ளாதிருத்தல், உயிர்க்கொலை செய்யாதிருத்தல், ஒரு இடத்தில் நிலை கொள்ளாதிருத்தல், அன்பான மெய் உணர்தல், பற்று இல்லாமல் இருத்தல் இதெல்லாம் தான் துறவுன்னு சொல்லிருக்காரு. இல்லறத்தில் இதை எல்லாம் பின்பற்ற முடியாது. ஆனால், துறவுன்னு வந்துட்டா, கண்டிப்பா இப்படித் தான் இருக்கணும்னு வள்ளுவர் சொல்றாரு. நானும் அதையே தான் சொல்றேன்." என்று அவர் சொல்லி முடிக்கும் போது அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்துற்கு முன்பு, இவரையா கந்தல் துணி, அழுக்காய் இருக்கிறார்னு நினைத்தோம்னு என்னையே நொந்து கொள்ளும்படி, அவர் முகத்தில் அப்படி ஒரு மென்புன்னகை. 
மேலும், என்னிடம் நிறைய பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. மீண்டும் 'Passengers attention please, train from Gorakhpur...' எனக் கூறிய தானியங்கிக்குரல், நான் செல்ல வேண்டிய வண்டி நடைமேடைக்குள் வந்துக் கொண்டிருப்பதாகக் கூறியது. 
நான் அவரிடம், "நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு, நீங்க எங்க போகப் போறீங்க? என்னுடனே வாங்களேன்" என்றேன்.

"உங்கள் பயணம் உங்களை அழைக்குது. ஆனால், என் பயணம் எந்தப் பக்கம் செல்லுமோ தெரியலை. போயிட்டு வாங்க, தம்பி. வாழ்வைப் பட்டறிந்து வாழுங்க"

"ரொம்ப மகிழ்ச்சிங்க, உங்களைப் போல ஒருத்தரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி"

"இன்னொன்னும் மனசுல வச்சுக்கோங்க. 'பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' நாம எல்லாரும் ஒன்னு தான். இங்க பெரிய ஆளுன்னு என்னப் பாத்து வியக்கவும் வேணாம். இன்னொருத்தரை இகழவும் வேணாம். புறநானூறு சொன்னது. நல்லபடியா போயிட்டு வாங்க" என்றார். 

ரப்திசாகர் விரைவுவண்டி வந்து நின்றிருந்தது. எனது பெட்டியைத் தேடி ஏறி, கதவின் அருகில் நின்று திரும்பிப் பார்த்தேன். நான் அமர்ந்த இருக்கை அருகே அவர் உணவளித்த நாய் மட்டும் வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.


எல்லா உயிர்களிடத்திலும் கருணையைக் காட்டிடும் சான்றோர்க்குத் தன் உயிர் பற்றிய கவலை இருப்பதில்லை. 

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka