பகிர்வு - குறள் கதை


பகிர்வு

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

(இயல்: இல்லறவியல்; அதிகாரம் 23 ஈகை; குறள் எண்: 227)


இருபது ஆண்டுகள், எப்படி ஓடியது என்று தெரியாமல் காலத்தின் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவனாய் இருந்த நான், மீண்டும் எங்கு தொடக்கத்தைத் தேடி வந்து நின்றிருந்தேன். அதே பெரிய கதவு. கதவின் இடது ஓரத்தில், உள்கதவு ஒன்றும் இருந்தது. அதைத் திறந்து உள்ளே சென்றேன். நிகழ்காலத்தில் இருந்து ஏதோ ஒரு கதவைத் திறந்து முற்காலத்திற்குச் சென்றது போல் இருந்தது. பதினோரு மணி மணியடிக்க, வகுப்பில் இருந்து ஓடிவரும் நூற்றுக்கணக்கான மாணவர்களுள் நானும் ஒருவனாக ஓடிவந்து இதே கதவின் கம்பி இடுக்கு வழி கைவிட்டு, பொக்கை வாய்ப்பாட்டியிடம் களாக்காய் வாங்கித் தின்றது கண் முன் வந்து போனது. ஜுன் முதல் வாரம் இன்னும் பள்ளி துவங்கவில்லை. ஏற்கனவே பள்ளியின் முதன்மை கட்டடத்தில் இருந்த தலைமை ஆசிரியர் அறை புதிதாகக் கட்டப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது.

தலைமை ஆசிரியரைச் சந்தித்து, இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் பள்ளியில் படித்த மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். இன்முகத்தோடு வரவேற்றார் தலைமை ஆசிரியர் ஆறுமுகம்.

"நல்லதுப்பா, எங்க வேலை பாக்குறீங்க தம்பி?"

"சார், மிடில் ஈஸ்ட்ல. இப்ப ஆண்டு விடுமுறைக்கு வந்திருக்கேன். ஒவ்வொரு முறை தமிழ்நாடு வரும்போதும் ஸ்கூலுக்கு வரணும்னு நெனப்பேன். எதாவது ஒரு வேலை வந்துடும். இந்த முறை எப்படியோ வந்துட்டேன். செம்ம மகிழ்ச்சியா இருக்கு சார்"

"மகிழ்ச்சி தம்பி, நீங்க படிச்சப்பல்லாம் ஆயிரம் பேருக்கு மேல படிச்ச ஸ்கூல், இப்ப நூறு நூத்தம்பது பேரு கூட இல்ல. ப்ச், சரி நீங்க போயி பாருங்க, தம்பி" என்று கூற, நான் பழைய வகுப்பறைகளை நோக்கி நடக்கலானேன். எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஆறாவது படிக்கும் போது நாங்கள் நட்ட புங்கைமரத்து நிழலில் நான் வந்து நின்ற நேரம், முற்றிலுமாய் படிந்து தலைவாரி, கையில் மஞ்சள் பையில் புத்தகமும், ஒரு எவர்சில்வர் டப்பாவில் மதியச் சாப்பாடும் கொண்டு வரும் சிறுவனாய் மாறிப் போயிருந்தேன்.

****

"என்னடா சுந்தரு, இன்னிக்கு நேரமா வந்துட்ட போல? எப்பவும் கரெக்டா ப்ரேயர் தொடங்குறப்ப தான் வருவ? இன்னிக்கு என்னடா?" என்று கேட்டான் வடிவேலு.
"போன வாரம் சாப்பிட்டுப் போட்ட பாவக்காய் விதை முளைச்சிருக்குடா, நம்ம வச்ச புங்கைமரத்துக்கு சுத்தி வேலி கட்டுனா, பாவக்காய் கொடியும் வளரும். புங்கமரமும் ஆடு தின்னாது. அதுக்குத் தான் நேத்தே முள் செடி வெட்டிக் கொண்டு வந்தேன்" என்றேன் நான்.

வடிவேலுவும் என்னுடன் சேர்ந்து கொண்டு மரத்துக்கு வேலி அமைத்தோம். அன்று ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும், நடந்து கொண்டிருக்கும் போதும், அவ்வப்போது எங்கள் இருவரின் பார்வை மரத்தின் மீதே இருந்தது. மதிய இடைவேளைக்கான மணி அடித்ததும், வகுப்பில் இருந்த பாதிக்கும் மேலானோர் தட்டை எடுத்துக் கொண்டு அருகே இருந்த சத்துணவு கூடத்தின் வாசலில் நின்றனர். வடிவேலுவும். நான் எனது எவர்சில்வர் டப்பாவைத் திறந்தேன். காலை ஆறு மணிக்கே கட்டிய சாப்பாடு, எப்படியோ கெட்டுப் போயிருந்தது. திறந்ததும் அடித்த வாடையில் அதை மூடி வைத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன். வடிவேலு தனது தட்டில் சத்துணவு வாங்கி எங்கள் வகுப்பறையின் வாசலில் வந்து அமர்ந்தான். வெறும் கையோடு வந்த என்னைப் பார்த்து, "சுந்தரு, எங்கடா சாப்பாடு கொண்டு வரலையா?" என்றான் வடிவேலு.

"இல்லடா, கெட்டுப் போச்சு, அதான் மூடி வச்சுட்டேன்."

"என்ன கொண்டு வந்த?"

"பருப்பு சாதம்"

"சரி, அதைக் கொண்டு போயி கொட்டிட்டு டப்பாவைக் கழுவிட்டு வா."

"எதுக்குடா?"

"சொல்றனுல்ல, போயிக் கழுவிட்டு எடுத்துட்டு வாடா, இதோ இருக்குல்ல, ஆளுக்குப் பாதி சாப்பிடலாம்."

"ச்ச, ச்ச, வேணாம்டா, நீ சாப்பிடுடா" என்ற என்னைப் பார்த்து முறைத்தான் வடிவேலு. அவனது பார்வையிலேயே எழுந்து டிபன் பாக்ஸைக் கழுவி வந்தேன்.

முறைத்துக் கொண்டே, தன்னிடம் இருந்த சோற்றையும், கீரைக் குழம்பையும் என் பாத்திரத்தில் வைத்தான் வடிவேலு. 

"அதான் வந்துட்டேன்ல, இன்னும் ஏன்டா முறைச்சுட்டே இருக்க?" என்று சொல்லியபடியே சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டேன். 

"ஏன்டா வேணாம்னு சொன்ன? இது சத்துணவுன்னு தானே?"

"ச்ச, ச்ச, அதெல்லாம் இல்லடா, உனக்கே ஒரு தட்டு சோறு தான் கெடைக்குது. அதனால தான்."

"ஆமா, நீ தெனமும் சட்டிச்சோறு கொண்டு வர்ற, பாரு. இந்த டிப்பன் பாக்ஸ்ல தானே கொண்டு வர்ற? சாப்பிடுடா." என்றான்.

நல்ல பசிக்கு நான் வேக வேகமாய்ச் சாப்பிடுவதைப் பார்த்து, இன்னும் கொஞ்சம் எனக்கு வைத்த முன் வந்த போது தடுத்து, "வடிவேலு, வேணாம்டா. போதும்." என்றேன்.

"ஏன்டா நல்லால்லியா?"

"நல்லாருக்கு, எல்லாத்தையும் சாப்பிட்டுடுவேன்" என்று சொல்ல, இருவரும் சிரித்தோம். இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, தண்ணீர்க்குழாயில் கை கழுவிவிட்டு, கொஞ்சம் தண்ணீர் பிடித்து வந்து புங்கை செடிக்கும், அதன் வேலியில் படரவிட்ட பாகற்கொடிக்கும் ஊற்றினோம்.

****

இப்போது அந்த மரத்தின் நிழலில் தான் நின்று கொண்டிருந்தேன். 'நாங்கள் வைத்த மரத்தின் நிழலில்' என்று எழுதி, ஒரு புகைப்படம் எடுத்து வாட்ஸப் பள்ளிக்குழுவில் பதிவிட்டேன். 'சூப்பர்டா', 'எப்படா வந்த?' என நிறைய பதில்கள் வந்தன. சற்று நேரம் வந்த பதில்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அலைபேசியை எடுத்து உள்ளே வைத்து அப்படியே புங்கை மர நிழலில் அமர்ந்தேன். சரியாக கால் மணிநேரத்தில், "சுந்தரு" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

"நல்லாருக்கியா, மச்சான், ஆத்துக்குப் போயிட்டு இப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். போனை எடுத்துப் பாத்தா, நம்ம மரத்துக்கிட்ட எடுத்த போட்டா போட்டிருந்த, உடனே வண்டிய எடுத்துட்டு வந்துட்டனுல்ல" என்றான் அதே படபடக்கும் குரலில் வடிவேலு.

"நல்லாருக்கியா, வடிவேலு" என்றேன் எழுந்து அவனை அணைத்தபடி.

"எனக்கென்னடா நல்லாருக்கேன், நீ ஏன்டா இப்படி ஊதிப் போயிட்ட? ஆமா, இப்ப எந்தூர்ல இருக்க?"

"கத்தார்லடா. நீ என்ன செய்யுற?"

"நான் அப்பவும், இப்பவும் இதே மேட்டூர் தான்.  எங்கயும் போறதா இல்ல." என்றவன், இன்னும் ஒருமுறை என்னைப் பார்த்து, சிரித்தான். "எவ்ளோ நாளாச்சு மச்சான் உன்னப் பாத்து" என்றான்.

"இதே இடத்துல தானே உட்காந்து சாப்பிடுவோம். நான் கொண்டு வர்றதும், உன்னோட சத்துணவும் சேர்த்து."

"ஆமாண்டா, மறக்க முடியுமா, அதெல்லாம்." என்ற வடிவேலின் பார்வை கேட்பாரற்றுக் கிடந்த சத்துணவுக்கூடத்தின் பக்கம் சென்றது.

"என்ன தம்பி, உங்க வகுப்பறைல்லாம் பாத்துட்டீங்களா?" தலைமை ஆசிரியர் நின்றிருந்தார்.

"வணக்கம், சார், என்ன சத்துணவுக்கூடம் இப்படி கெடக்கு?" என்றான் வடிவேலு.

"அதான் மூடப்போறாங்களே, தம்பி, சாப்பிடுறவங்க எண்ணிக்கை குறைச்சலா இருக்காம்."

"இதெல்லாம் இருந்ததுனால தானே நாங்க எல்லாம் படிக்க முடிஞ்சுது. இப்ப நாங்க பசியில்லாம இருக்கோம்னா, அப்ப பசிங்கிறதே தெரியாம படிக்க வச்சதனால தான்." என்றேன் நான்.

"எல்லாம் நம்ம முடிவுலயா இருக்கு, தம்பி, இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா ஸ்கூலே இருக்குமான்னு தெரியல, என்னென்னமோ கேள்விப்படுறேன், பசங்க குறைச்சலா இருக்க ஸ்கூல் எல்லாம் மூடப்போறாங்களாம்" என்றார் தலைமை ஆசிரியர், வருத்தத்தோடு.

"ஸ்கூல் நடக்குறவரை சத்துணவுக் கூடத்தை நாங்க நடத்த முடியுமா, சார்?" என்றேன் நான்.

"செலவுல்லாம் நெறைய ஆகும்ப்பா, நானும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி வச்சு நடத்தலாம்னு நெனச்சோம், முடியல"

"நான் ஒருத்தன் செய்யுறன்னா சொன்னேன். எப்படி பள்ளியில படிச்ச காலத்துல பகிர்ந்து சாப்பிட்டோமோ, இப்ப பகிர்ந்து தர்றோம், சார், படிக்குற பசங்க பசியில்லாம படிச்சாலே போதும்" என்று நான் சொல்ல, வடிவேலும், "ஊருல இருக்க நம்ம ஸ்கூல் பசங்ககிட்ட எல்லாம் நான் பேசுறேன். மத்த ஊருல இருக்குறவனுக்கும் வாட்சப்ல மெசெஜ் அனுப்பலாம். சின்னதோ, பெருசோ வரட்டும். நீங்களும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமா கலெக்ட் செய்ய முடியுமான்னு பாருங்க. நம்ம எல்லாரும் சேர்ந்தா கண்டிப்பா இத செய்யலாம்" என்று கூற, தலைமை ஆசிரியர் முகம் மலர்ந்தது.

"நல்லது தம்பிங்களா, உங்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு" என்று எங்களின் அலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தார் தலைமை ஆசிரியர்.

"மனசே சரியில்லடா, எப்படி இருந்த ஸ்கூலு? பாதி கட்டிடம் கூரை இடிஞ்சு போயிருக்கு. புது கட்டடத்தில மட்டும் தான் வகுப்பு நடக்குதாம். இப்ப சத்துணவுக்கூடத்தையும் மூடப் போறாங்களாம்" என்றான் வடிவேலு.

அவன் தோளில் கைவைத்து, "ஒரு பள்ளி அப்டிங்குறது நம்ம சமூகத்தோட மினியேச்சர் போல, எல்லா தரப்பு பசங்களும் ஒன்னா படிக்குறப்ப, அவங்களுக்குள்ள ஒருத்தனை ஒருத்தன் மதிக்கிறது, புரிஞ்சுக்கிறது, விட்டுக் கொடுக்கிறது, பகிர்ந்து சாப்பிடுறது இதெல்லாம் தானா நடக்கும். ஆனா, எப்ப அதிக காசு குடுத்தா தரமான கல்வின்னு நெனக்கத் தொடங்குனோமோ, அப்பவே நம்ம எல்லாம் இதெல்லாம் செய்யத் தொடங்கிட்டோம். இவ்ளோ சொல்றேனே, நானே என் பையனை தனியார் பள்ளியில தான் படிக்க வைக்கிறேன். ஏதோ நம்ம பசங்களுக்கு நல்லது பண்றோம்னு, உண்மையான சமூகத்திலிருந்து ஒதுக்கி வச்சுட்டு இருக்கோமான்னு இப்ப நான் அடிக்கடி என்னையே கேட்டுட்டு இருக்கேன்." என்ற என்னைப் பார்த்து, "என்னென்னமோ சொல்றடா, சரி, பையனா? எத்தனையாவது படிக்கிறான்? கூட்டிட்டு வரலயாடா?" என்றான் வடிவேலு.
"அடுத்த முறை வரும்போது குடும்பத்தோட வர்றேன். உனக்கு எத்தனை பசங்க?"

"ஒரே பொண்ணு, சரி கெளம்பு போலாம்."

"எங்கடா?"

"வீட்டுக்கு, வரும்போதே சொல்லிட்டுத்தான் வந்தேன். போகும் போது மீன் குழம்பு ரெடியாருக்கும். நானே பிடிச்ச மீனுடா" என்றான் வடிவேலு. என் நண்பனைப் பார்த்ததிலேயே எனக்குப் பசி போயிருந்தது. இருந்தாலும், மீன் குழம்பு இல்லையா?


- முடிவிலி


குறள்விளக்கம்: பகிர்ந்துண்ணும் மனமுள்ளவர்களைப் பசி என்னும் கொடும்பிணி அணுகுவதில்லை.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka