கடன் - குறள் கதை
கடன்
"போய் கங்காஸ்நானம் பண்ணிண்டு இதை அப்படியே கரைச்சுடுங்கோ" என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, ஆடி மாதம் மடை திறந்த வெள்ளத்தைக் கொள்ளும் இடமாய் இருந்த கொள்ளிடம் ஆற்றில் கிடந்த முழங்கால் அளவு தண்ணீர் இறங்கிப் பெயருக்குக் குளித்துவிட்டு, நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. வெயிலில் நடந்து வந்ததினால் வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் சில நொடிகள் இருண்டன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், தலையும் சுற்றியது. வீடு இருண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றது. மூன்று மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் என் அப்பா, அம்மா இருவரையும் இழந்த அன்றே இந்த வீடு இருண்டு விட்டது. சில நொடிகள் தலையைப் பிடித்து நின்றேன். இந்த மூன்று மாத காலமாக, மனம் ஆற்றாமையில் பிடித்து வாட்டுகிறது. யாருமில்லாத் தனிமை ஒரு புறம், இருந்தவர்களின் இழப்பு, இழப்பு தந்த துயரம் என மனம் படும் இன்னலில் கடந்த சில மாதங்களாக நடைப்பிணமாகவே இருந்து வருகிறேன். வீட்டில் இருந்த வெறுமை என் கண்ணை மறைக்க, வெயிலில் வந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, சோர்ந்து அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிப் போனேன்.
"டேய், எந்திரிடா, எப்பப் பாத்தாலும் தூங்கிக்கிட்டு?" என்ற குரல் கேட்டது.
மீண்டும். "தம்பி டேய், எந்திரிச்சு உட்காருடா, பேசணும் உன்கிட்ட"
கண்ணைத் திறந்து பார்த்தேன். அப்பா என் கட்டிலின் முனையில், என் கால் மாட்டில் உட்கார்ந்திருக்க, "அப்பா..." என்றேன். கண் கலங்கியது. மனமும், குரலும் அப்பா, அப்பாவென எவ்வளவு முறை கூறியது என்று எனக்கே தெரியவில்லை.
"ச்ச, அதான் முன்னாடியே இருக்கேன்ல, அப்புறம் என்னடா அப்பா அப்பான்னு" அப்பா அப்படித்தான்.
"இல்லப்பா, நீயும் அம்மாவும் போனதுக்கு அப்புறம் தான் உன்கிட்ட பேசாம இருந்த நாள் எல்லாம் நினைவுக்கு வந்துச்சு. அம்மாட்ட தோசை கருகிப்போச்சுன்னு தட்டைத் தூக்கி எறிஞ்சதெல்லாம்... நான் கடைசியா உங்க ரெண்டு பேருக்கிட்டயும் நல்லா பேசுனது எப்பன்னு கூட தெரியலையேப்பா. ஆனா, ரெண்டு பெரும் தனியா வுட்டுட்டுப் போயிட்டீங்கள்ல?"
"சரி, அதெல்லாம் இருக்கட்டும், என்னடா இது பட்டப்பகல்ல தூங்கிக்கிட்டு, கடைக்குப் போகலையா?"
"இன்னிக்குக் கடை தொறக்கவே இல்லை. உங்களுக்காகத் தான்"
"ஓ, நாங்க இறந்து போனது ஆக்சிடென்ட்ல, ஆனா, அதுவரைக்கும் ஒரே வீட்டுல இருந்தாலும், எங்ககிட்டேந்து ஒதுங்கி இருந்த நீ சொல்ற, நாங்க உன்னத் தனியா விட்டுட்டுப் போயிட்டேன்னு. அது கூட ஏதோ சரின்னு சொல்லலாம். இன்னிக்குக் கடையத் தொறக்காததுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?" என்று சொன்ன அப்பாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் அந்தச் சிரிப்பு. ஒரு காலத்தில் இதே சிரிப்பைப் பார்த்து கோவப்பட்டிருக்கிறேன். எதிரில் இருப்பவனை நக்கல் அடிக்கும்படியாக இருக்கும் அந்தச் சிரிப்பு. ஆனால், இன்று அவர் கேட்டதிலோ, அந்தச் சிரிப்பிலோ எனக்கு எந்தக் கோவமும் இல்லை.
"ஆமாம்ப்பா, இன்னிக்கு ஆடி அமாவாசை, உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கையைத் தூக்கிக் காட்டி, "நிறுத்து" என்றார்.
"நீ செஞ்சதெல்லாம் எனக்கும் தெரியும்" என்றார்.
"எனக்கும் தெரியுமே, அதனால தானே நீங்க இப்ப வந்திருக்கீங்க" என்றேன்.
அப்பா இன்னும் அதிகமாகச் சிரித்தார், "நான் யாருடா?" என்றார்.
"அப்பா"
"அப்ப அன்னிக்கு ஆக்சிடென்ட்ல செத்துப் போனது யாரு?"
"நீங்க தான், இப்ப ஆவியா வந்திருக்கீங்க"
இன்னும் அதிகமாகச் சிரிக்கத் தொடங்கினார். முன்னெல்லாம் அப்பாவின் சிரிப்பு கோவத்தைத் தந்தது. சற்று முன் மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது பயப்பட வேண்டுமோ என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது.
"நான் ஆவியும் இல்ல, பேயும் இல்ல, நான் உன் மனசுல இருக்க அப்பாவின் நினைவு. அவ்வளவு தான். இந்த நினைவுகள் தான் உனக்கு நான் திடீர்னு இல்லாது போனப்ப, இழப்பையும், துயரத்தையும் கொடுத்துச்சு. ஆனால், காலம் போகப் போக, அந்த இழப்பு, துயரம் எல்லாம் குறையும். ஆனா, நினைவுகள் எப்பவும் இருக்கும். இப்பப் போயி, கொள்ளிடத்துல கொட்டிட்டு வர்றியே, ஒரு பிடிச்சோறு. அந்த ஒரு பிடிச்சோறுக்காக நான் வந்தேன்னு நெனச்சா, இதைச் செய்யுறதுக்காக காலையிலேந்து சாப்பிடாம இருக்கேன்னு சொன்னா, கடையத் தொறக்காம இருக்கேன்னு நீ சொன்னா, நல்லாக் கேட்டுக்கோ. இது எதையும் நான் கேட்கவே இல்ல." என்று சொல்லி இன்னும் சிரித்தார்.
"ஆனா, இப்படித் தானே எல்லாரும் செய்யுறாங்க, உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போகலாம். ஆனா, என் மனசுக்காக இதைச் செய்யுறேன். இதுல என் நம்பிக்கை இருக்கே?" என்றேன்.
அப்பாவின் சிரிப்பு நின்றது. "டேய், எனக்காகச் செஞ்சேன்னு சொன்ன, இப்ப உனக்காகன்னு மாத்திப் பேசுற? நீ செய்யுறதுல மனநிறைவுக்காக செய்யுறேன்னு சொல்றல்ல அத நான் ஒத்துக்குறேன். ஆனா, என் பேருல செய்யுற பாரு, அதுவும் என்ன செஞ்சன்னு புரியாம செஞ்சுட்டு இருக்க பாரு, இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது."
"வேற என்னதான் செய்யுறதாம். நீங்க எதையும் சொல்லிக் கொடுக்காம திடீர்னு போயிட்டீங்க, இந்த மூனு மாசம் நான் எப்படி இடிஞ்சு போயிருந்தேன்னு கூடத் தெரியாம இருந்துட்டு, நான் செஞ்சதுல குத்தம் சொல்ல மட்டும் வர்றீங்களா, நீங்க இன்னும் மாறவே இல்லப்பா" என்ற போது மீண்டும் கண்கள் கலங்கின.
அப்பாவின் சிரிப்பு இப்போது எவ்வித நக்கலும், எரிச்சலும் தராத புன்னகையாய் மாறியிருந்தது. "அடேய், நான் பெத்த மகனே, நீ எங்களுக்காக செய்யப் போவது எல்லாம் இருக்கும் உன் வாழ்க்கையை நல்லபடியா வாழ்ந்து, இன்னார் பையன் நல்ல பையன்னு நாலு பேரு சொல்ற படி வாழ்றது தான். அப்படியும் ஏதாவது செய்யணும்னா அதை நம்ம கடையிலேயே செய்யலாம்."
"நம்ம கடையிலயா, என்ன செய்யணும்?"
"நான் அந்தக் கடையைத் தொறந்ததே நாலு பேத்துக்கு வயிறார சோறு போடலாம்னு தான். அதையே செய்டா. அதுவும் உனக்கு மனநிறைவு கொடுக்கலன்னா, ஊருல சோறு தண்ணி கிடைக்காதவன் இருப்பான், அவனைத் தேடிப் பார்த்து, அவங்க வயித்துக்கு ஒரு வேளை சோறு போடு. எப்படியும் நம்மக் கடையில மீதமாகுறதை வச்சுக்கிட்டுக் கூட இதைச் செய்யலாம். ஆனா, இதையெல்லாம் விட்டுட்டு, ஆத்துல பிடிச்சோறு போட்டுட்டு வந்தா, நான் பூரிச்சுப் போயிடுவேன்னு நெனக்கிற பாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அதுவும் காலைலேந்து சாப்பிடாம வேறக் கெடக்கான்" என்று ஒரு கை என் தலையைக் கோதிவிட, "அம்மா" என்று கத்தியபடியே, காற்றில் என் கையைப் படரவிட்டதில், எதையும் பிடிக்கமுடியாமல் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தேன்.
சில நொடிகள் எழுந்து அமர்ந்து என்ன நடந்தது என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நான், இப்போது கடை மாஸ்டருக்கு அழைத்து, "கடையைத் திறந்து ஒரு முப்பது சாப்பாடு ரெடி செய்யுங்கண்ணே, நான் வந்துகிட்டே இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, கடையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
-முடிவிலி
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைப் பொறுத்துக் கொண்டு சாப்பிடாமல் இருப்பதே வல்லவர்க்குப் பெரிய செயல். அதைவிடப் பெரிய செயல் என்னவெனில், உணவில்லாமல் தவிப்போரின் பசியைப் போக்க உணவைத் தருதல்.
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைப் பொறுத்துக் கொண்டு சாப்பிடாமல் இருப்பதே வல்லவர்க்குப் பெரிய செயல். அதைவிடப் பெரிய செயல் என்னவெனில், உணவில்லாமல் தவிப்போரின் பசியைப் போக்க உணவைத் தருதல்.
Comments
Post a Comment