நோன்பு - திருக்குறள் கதை
நோன்பு தீபாவலி என்றாலே பட்டாசு, புத்தாடை என்றிருந்த அந்த சிறுவயது நினைவு மனதில் ஓடிக் கொண்டிருந்தது. காலையிலேயே புதுத்துணியிலிருந்து பட்டாசு வரை படையலில் வைத்து கும்பிட்டு விட்டு, தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு, புத்தாடை போட்டு, புது முறுக்கு, சுழியத்தை எடுத்துக் கொண்டு, பட்டாசு வெடித்து யார் வீட்டு முன்னால் அதிக குப்பை சேருமென்று போட்டி போட்டு வெடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவயதில் எனக்குத் தெரியாது... ஒவ்வொரு தீபாவலியிலும், அம்மா சாப்பிடுவதே இல்லை என்று... லட்சுமி வெடி, குருவி வெடி, அணு குண்டு என எல்லாம் வெடித்து முடித்த பிறகு, கடைசியில் ஊசிப்பட்டாசுக்கு மாறி இருப்போம். அப்பா புதுவேட்டி வெள்ளைச் சட்டையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பார். தீபாவலி அன்றும் எங்களுக்குச் சமையல், புது பலகாரம், இதெல்லாம் போக நோன்புக்கு அதிரசம் என நாள் முழுதும் அம்மாவுக்குச் சமையலறையிலேயே நேரம் போகும். அம்மா கையில் ஒரு கயிறு கட்டியிருப்பாள். மஞ்சள் நூலில் சிகப்பு முடிச்சு போட்டது போன்ற கயிறு... "என்னம்மா கயிறு இது...?" எனக் கேட்டா