திறந்திடு - Open it - சிறுகதை தமிழாக்கம்
திறந்திடு... (Open It)
(கதைக்காலம்: 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்)
மதியம் 2 மணிக்கு அம்ரித்ஸரை விட்டுக் கிளம்பிய அந்த சிறப்பு ரயில், முகல்பூராவை அடைய எட்டு மணிநேரம் ஆனது. பல பயணிகள் வழியிலேயே கொல்லப்பட்டிருந்தனர்... பலர் படுகாயமுற்றிருந்தனர்... சிலர் காணாமல் போயிருந்தார்கள்...
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிராஜுதீன் கண் விழித்தபோது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன்னைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உளக்கொதிப்பில் இருக்கும் ஒரு பெருந்திரளை அவன் கண்டான். தான் எங்கு இருக்கிறோம் என்று அறியாத அவன், இப்போது புழுதி நிறைந்த வானை வெறித்துப் பார்க்கலானான். அந்த முகாம் முழுதும் பல குரல்கள், கூச்சல்கள் நிறைந்திருந்தன. ஆனால், நம் சிராஜுதீனுக்கு அவை யாவும் காதிலே விழவில்லை. யாராவது அவனைப் பார்த்தால், ஏதோ ஆழமாக, உன்னிப்பாக யோசிப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். இருந்தாலும், அவனுடைய மனது எதையும் நினைக்காதிருந்தது, ஒரு காலி பாத்திரம் போல...
புழுதி நிறைந்த வானை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த அவனது விழிகள், எப்படியோ தன்னிச்சையாக சூரியனைக் கண்டன. சூட்டினை உமிழும் கதிரின் கதிர்கள், அவனுடைய ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவின. விழித்தெழுந்தான் சிராஜுதீன். அவன் கண்முன் கொடுங்கனவு போல தொடர்ச்சியற்ற காட்சிகள் ஓடின...
நெருப்பின் தழல்... அதன் சூடான வெளிச்சம்... கொள்ளை... கலவரம்... ஓடும் மனிதர்கள்... ஒரு ரயில் நிலையம்... துப்பாக்கிச்சூடு... இருட்டு மற்றும்...
சகினா.
"சகினா... சகினா...." அந்த காட்சிகளின் அச்சம், பதட்டத்திலிருந்து விடுபட்ட சிராஜுதீன், நினைவாற்றல் இழந்தவன் போல் கூட்டத்தில் சகினாவைத் தேடத் துவங்கினான். மூன்று மணிநேரம், "சகினா... சகினா" என அறைகூவல் விட்டு, அலைந்திருந்தான். அந்த முகாமின் எல்லா மூலைகளிலும் அவனுடைய இளம் வயது கொண்ட ஒரே மகளைத் தேடி அலைந்திருந்தான். அந்த முகாம் முழுதும் யாரோ யாரையோ தேடிக் கொண்டு தான் இருந்தார்கள் - சிலர் தங்கள் குழந்தைகளை, சிலர் தங்கள் அம்மாக்களை, சிலர் தன் மனைவியரை, மேலும் சிலர் தங்கள் மகள்களை...
முயற்சியிழந்தவனாய் - களைப்புற்றவனாய் உணர்ந்த சிராஜுதீன், தரையில் சரிந்து உட்கார்ந்தான். எங்கே, எப்படி சகினாவைப் பிரிந்தோம் என நினைவுகூர முயன்றான். மீண்டும் மின்னல்போல் சில காட்சிகள் அவன் கண் முன்னால் ஓடின.
அவனுடைய மனைவியின் இறந்த உடல், தரையில் கிடத்தப் பட்டிருக்கும் அவள் உடலிலிருந்து வெட்டப்பட்ட காயங்களிலிருந்து தொங்கும் அவளது உடல் பாகங்கள்...
இக்காட்சிக்குப் பிறகு, அவனுடைய நினைவுகள் மீண்டும் இருண்டு போனது.
அவனுடைய மனைவியின் இறந்த உடல், தரையில் கிடத்தப் பட்டிருக்கும் அவள் உடலிலிருந்து வெட்டப்பட்ட காயங்களிலிருந்து தொங்கும் அவளது உடல் பாகங்கள்...
இக்காட்சிக்குப் பிறகு, அவனுடைய நினைவுகள் மீண்டும் இருண்டு போனது.
சகினாவின் அம்மா இறந்து விட்டாள். இவனுடைய கண் முன்னாலேயே அவள் கொல்லப்பட்டாள். ஆனால், சகினா எங்கு போனாள்? கண்ணை மூடும் முன்னால், சகினாவின் அம்மா அவனிடம் கூறினாள், "என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க... ஓடுங்க... சகினாவைக் கூட்டிட்டு ஓடுங்க... சகினாவை எப்படியாச்சும் காப்பாத்திடுங்க..."
சகினா, சிராஜுதீனுடன் தான் இருந்தாள். இருவரும் வெறும் காலுடன் ஓடிக் கொண்டிருந்தனர். சகினாவின் துப்பட்டா நழுவிக் கீழே விழுந்தது. அதைக்கண்ட சிராஜுதீன், அதைக் குனிந்து எடுக்க முயல, "அதை விடுங்க அப்பா... பரவால்ல... வாங்க போலாம்..." என்றாள் சகினா. ஆனால், அவன் குனிந்து அந்த துப்பட்டாவை எடுத்தான். இது நினைவுக்கு வந்த போது, தானாக அவனது கை, தன்னுடைய மேலங்கியின் பையில் நுழைந்து, அதிலிருந்து ஒரு துப்பட்டாவை எடுத்தது. இப்போதும் அந்த துப்பட்டா அவன் கையிலேயே இருந்தது. ஆனால், சகினா எங்கே?
சிராஜுதீன் யோசிக்க முயன்றான். ஆனால், அவனால் முடியவில்லை. சகினா அவனுடன் ரயில் நிலையம் வரை வந்து சேர்ந்தாளா? அவள் சிராஜுதீனோடு இரயிலில் ஏறினாளா? கலவரக்காரர்கள் இரயில் நிலையத்தைத் தாக்கிய போது, சிராஜுதீன் மயக்கமடைந்தானா? அவர்கள் சகினாவைத் தூக்கிச் சென்றார்களா?
அவனால் எந்த கேள்விக்கும் விடையறிய முடியவில்லை.
சிராஜுதீனுக்கு உதவியும் ஆதரவும் தேவைப்பட்டன. ஆனால், அவனைச் சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் அதே உதவியும், ஆதரவும் தான் தேவையாய் இருந்தன. ஓவென்று அழ வேண்டும் என்றிருந்தது அவனுக்கு. ஆனால், கண்ணீர் கூட வற்றியிருந்தது. அவன் புலம்புவதற்குக் கூட முடியாமல் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான்.
சில நாட்களுக்குப் பின், சிராஜுதீன் தன்னை ஒருவிதமாய்த் தேற்றிக் கொண்டு, தனக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருந்த ஒரு சிலருடன் பேசத் துவங்கியிருந்தான். அவர்கள் எட்டு இளைஞர்கள்... சொந்தமாக ஒரு ட்ரக் வைத்திருந்தனர்... கையில் ஆளுக்கொரு கைத்துப்பாக்கியும்.
அவன் அவர்களை வாழ்த்தினான். ஆசி வழங்கினான். தன்னுடைய மகள் சகினா எப்படி இருப்பாள் என விவரித்தான். "அவள் சிவப்பா, அழகா இருப்பா... அவளோட அம்மா மாதிரி, என்னப் போல இல்ல... நல்ல பெரிய கண்ணு, கருப்பான முடி, வலது கன்னத்துக் கீழே பெரிய மச்சம் ஒன்னு. என் ஒரே பொண்ணுப்பா. எப்படியாவது அவளைக் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தீங்கன்னா, கடவுளோட ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்பா..."
தன்விருப்ப சமூக சேவகர்களான அந்த இளைஞர்கள் சிராஜுதீனிடம் உண்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் உறுதியிட்டுக் கூறிச்சென்றனர். "ஒன்னும் கவலைப்படாதீங்க... உங்க பொண்ணு எங்கே இருந்தாலும், அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு இன்னும் சில நாட்களில் இங்க உங்ககிட்ட கொண்டுவந்து சேர்க்குறது எங்க பொறுப்பு, பெரியவரே..."
அந்த இளைஞர்கள் அவளைக் கண்டுபிடிக்க அவர்களால் இயன்றவரை முயன்றனர். உயிரைப் பணயம் வைத்து, அம்ரித்ஸர் வரைச் சென்றனர். அவர்கள் பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றி, அவர்கள் குடும்பத்தின் இருப்பிடத்தை அடைவதற்கு - குடும்பத்துடன் இணைவதற்கு உதவினர். ஆயினும், பத்து நாட்களாகியும், சகினாவை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
ஒரு நாள், அவர்கள் சில அகதிகளுக்கு உதவி செய்வதற்காக அவர்களை ஏற்றிக் கொண்டு அம்ரித்ஸருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரம், அவர்கள் ஒரு பெண் சாலையின் ஓரம் நின்றிருப்பதைக் கண்டனர். அந்த ட்ரக்கின் சத்தத்தைக் கேட்டதும், அந்தப் பெண் ஓடத் துவங்கியிருந்தாள்.
அந்த இளைஞர்கள் வண்டியிலிருந்து இறங்கி, அவள் பின்னால் ஓடினர்.
துரத்திச் சென்றவர்கள், கொளுத்தப்பட்டிருந்த ஒரு கோதுமை வயலின் நடுவே அவளைப் பிடித்தனர். அவள் அழகாய் இருந்தாள், சிவப்பாய் இருந்தாள், பெரிய கண்கள் கொண்டிருந்தாள், அதோ வலது கன்னத்தின் கீழே பெரிய மச்சம் கூட இருந்தது.
அந்த இளைஞர்களுள் ஒருவன், "பயப்படாதே... உன் பேரு சகினா தானே...?"
அவள் முகம் இன்னும் வெளிறிப் போனது. அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. இன்னொரு இளைஞனும் தாங்கள் உதவவே வந்துள்ளோம் என்று உறுதியாக சொன்ன பின்னரே, அவள் தான் உண்மையிலேயே சிராஜுதீனின் மகள் தான் என்று ஒத்துக்கொண்டாள்.
அந்த எட்டு இளைஞர்களும், சகினாவுடன் வெகு இயல்பாக, கனிவாக நடந்து கொண்டனர். அவளுக்கு உண்ண உணவு, குடிப்பதற்கு பால் ஆகியவை தந்தனர். ட்ரக்கில் ஏறுவதற்கு உதவினர். அவள் துப்பட்டா அணிந்திருக்கவில்லை. ஆண்கள் மத்தியில் அவ்வாறு அமர்ந்திருக்க அவளுக்குக் கூச்சமாக இருந்தது. தன் கைகளால் அடிக்கடி மார்பு பகுதியை மறைக்க முயன்று கொண்டே இருந்தாள்.
சில நாட்கள் ஓடி இருந்தன. சிராஜுதீனுக்கு சகினாவைப் பற்றிய எந்த செய்தியும் எட்டவில்லை. ஒவ்வொரு காலையும், சிராஜுதீன் வெவ்வேறு முகாம்களுக்குச் சென்று, சகினாவைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால், எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு இரவும் தனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன அந்த இளைஞர்களின் முயற்சி வெற்றி பெற்றிட கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான். அவர்கள் கண்டிப்பாக, அவருடைய மகளைக் கொண்டு வந்து தந்து விடுவார்கள் என்பதில் உறுதியாயிருந்தான்.
ஒரு நாள், அந்த இளைஞர்களை முகாமில் பார்த்த சிராஜுதீன், அவர்களிடம் விரைந்து சென்றான். அவர்கள் அந்த ட்ரக்கில் அமர்ந்திருந்தனர். ட்ரக் கிளம்ப ஆயத்தமாய் இருந்தது. சிராஜுதீன் "தம்பி, என்னோட சகினாவை எங்கேயாச்சும் பாத்தீங்களா...?" எனக் கேட்க,
"ஆங்... கண்டுபிடிச்சுடுவோம்... கண்டுபிடிச்சுடுவோம்..." என்று ஒரே குரலில் சொல்ல, ட்ரக் புழுதி மேகத்தைக் கிளப்பிச் சென்றது.
புழுதியில் நின்ற சிராஜுதீன் அந்த இளைஞர்களுக்குத் துணை நிற்குமாறு கடவுளிடம் இறைஞ்சினான். இளைஞர்களின் உறுதிமொழியில் நம்பிக்கை தன்னைத் தேற்றிக் கொண்டான்.
அன்று மாலை, சிராஜுதீன் அமர்ந்திருந்த இடத்தினருகே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. நான்கு பேர், அவனைக் கடந்து சென்றனர், யாரையோ தூக்கிக்கொண்டு.
அவன் விசாரித்தபோது, ரயில் பாதை அருகே ஒரு பெண் மூச்சு பேச்சின்றிக் கிடந்ததாகவும், அவளை முகாமுக்குக் கொண்டு வந்ததாகவும் அறிந்தான்.
அவன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் அந்த பெண்ணை முகாமில் இருந்த மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சிராஜுதீன் மருத்துவமனைக்கு வெளியே நின்ற விளக்குமரத்தில் சாய்ந்து கொண்டு நின்றான். பின், மெல்ல மருத்துவமனைக்கு உள்ளே சென்றான்.
இருள் சூழ்ந்த அந்த அறையில் யாரும் இல்லை. ஒரு மூடிய சன்னல்... அருகே ஒரு படுக்கை... அதில் ஒரு பெண்ணின் உடல்... அவன் மெல்ல அந்த பெண்ணின் அருகே சென்றான். அறை திடீரென வெளிச்சம் ஆனது. களையிழந்த முகத்தின் வலது கன்னத்தின் கீழிருந்த மச்சத்தினை சிராஜுதீன் கண்கள் உற்று நோக்கிய படி இருந்தன. அவன் அனிச்சையாய்க் கத்தினான் "சகினா....!"
அறையின் விளக்கினைப் போட்ட மருத்துவர், "என்ன ஆச்சு...? என்ன வேணும் உங்களுக்கு...?" என்றார்.
உடைந்த குரலில், "நான்... நான் இவளோட அப்பா..." என்றார் சிராஜுதீன்.
மருத்துவர் பெண்ணின் அருகே வந்து, அவளுடைய நாடியைப் பிடித்துப் பார்த்தார்.
அவர் சொன்னார் "அந்த சன்னலைத் திறந்திடு".
படுக்கையில் படுத்திருந்த பெண் மெல்ல அசைவுற்றாள். அவளுடைய கைகள் - சக்தியே இல்லாத அவளுடைய கைகள், அவளுடைய சல்வாரின் முடிச்சுகளை மெதுவாக அவிழ்த்தன. மெதுவாக, அவள் தனது சல்வாரைக் கீழே இறக்கினாள்.
அவளுடைய கிழட்டுத் தந்தை கத்தினான் "உயிரோடு இருக்கிறாள்... என்னுடைய மகள் உயிரோடு இருக்கிறாள்..."
- தமிழாக்கம்: முடிவிலி
Comments
Post a Comment