குருவிக்கூடு - Sparrow Nest சிறுகதை
சென்னை நகரம்...
இரவுகளில் சோடியம் ஆவி விளக்கின் மஞ்சள் நிறவொளியிலும், பகலில் மஞ்சள் மலர்கள் உதிர்ந்த சாலைகளிலும் மிளிரும் நகரம்... இந்த நகரை இந்த அளவுக்கு உருவாக்கி, அதற்கு எந்தவித பலனும் எதிர்பாராமல் தன்னை இப்போதும் அந்த ஊரின் அங்கமாகவே நினைத்துக் கொண்டிருப்பவர்களில் இந்த திடீர் காலனி மக்களும் அடங்குவர்.
திடீர் காலனி... நீங்கள் கூட கடந்து சென்றிருக்கலாம்... நகரின் முதுகெலும்பாக ஊடாக ஓடும் அண்ணா சாலையின் கிளையாகப் பிரியும் பல சாலைகளில் ஒன்றான கிரீம்ஸ் சாலையின் ஒரு புறத்திலிருந்து கூவம் ஆறு வரை விரிந்து கிடக்கும் இந்த காலனி... வெளியிலிருந்து பார்ப்பவர்களின் பார்வையிலும், ஹிண்டு பத்திரிக்கையில் 'லெட்டர் டு தி எடிட்டர்' பகுதியில் எழுதுபவர்க்கும் இவர்களின் கூடி வாழும் வாழ்வியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்... பெரும்பாலும் காலில் சக்கரமில்லாத குறையாக எதற்காகவென்று தெரியாமல் ஓடும் பலருக்கும் நின்று கவனிக்கக்கூட - ஏன் அவர்கள் பார்வையில் இப்பகுதி சென்னை மாநகரிலேயே இல்லாதது போல் இருக்கும்...
அன்று திடீர் காலனியில் சலசலப்பும் பரபரப்பும் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலும் தகரச் சீட்டு போட்ட வீடுகள், சில வீடுகள் நன்றாக கட்டப்பட்டும் இருந்தன... 603 குடும்பங்கள் இருந்தும், நீங்க உள்ள போயி, யாரைக் கேட்டாலும் "தோ... அந்த வூடு தான்... ஆனா, இப்ப சவாரிக்குப் போயிருப்பானே, எதுக்கும் போயிப் பாருங்க..." என பதில் தரும் அளவுக்கு ஒன்றாய் வாழும் இடம் தான்... ஆனால், அன்று...
"அனிதாம்மா... அனிதாம்மா... சீக்ரம் வாங்க..." என்று பதட்டத்துடன் அழைத்துக் கொண்டே தனது பக்கத்து வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள் காமாட்சி... கையில் அனிதாவை வைத்துக் கொண்டு தவமணி, பக்கத்தில் லலிதா இருவரும் ஃபோட்டாவில் சிரித்துக் கொண்டிருந்தனர்... வெகு சிறிய அறை... அதிலேயே ரெண்டு நாற்காலி... ஒரு மூலையில் ஒரு டிவி... தலை மேல் சுழன்றுக் கொண்டிருந்த விசிறி சூடான காற்றை அறையின் எப்புறமும் தெளித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒரு பீரோ ஒன்றும் இருந்தது... உள் அறையில் இருந்து வெளியே வந்தாள் லலிதா... காமாட்சியின் பதட்டத்தைப் பார்த்ததும்... முகம் மாறி... "என்ன ஆச்சுக்கா...?"
காமாட்சியக்கா சற்றே அழுகுரலோடு... "ஏற்கனவே நம்ம பேசிக்கிட்டது தான்... இன்னும் ரெண்டு நாள் தான் கெடு... எல்லாத்தையும் எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போறாங்க... அன்னோன்ஸ்மெட் கேக்கல... வா..."
இருவரும் வெளியே வர... அவர்கள் நின்ற திசைக்கு எதிராக ஒரு வண்டி ஸ்பீக்கர் வைத்து ஏதோ சொல்லிக் கொண்டு சென்றது... மொத்த காலனி மக்களும் அதன் பின்னே சென்று வண்டியில் இருப்பவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டும் இருந்தனர்... வண்டியில் இருந்தவர் தலையை இருபுறமும் அசைத்து இல்லை என்பது போல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்...
லலிதாவுக்கு அந்த இடமே போர்க்களம் போல் தெரிந்தது... கையிலிருந்த போனை எடுத்து தவமணிக்கு அழைத்தாள்...
க்ரிங்ங்ங்....
'இந்த நேரம் பாத்து இந்த மனுசன் இங்க இல்லயே... நான் என்ன செய்வேன்...'
க்ரிங்ங்ங்....
'காலையில ஆட்டோ சவாரிக்குப் போனவரு மதியம் சாப்புடக் கூட வரலியே...'
தவமணி "சொல்லும்மா... சவாரில இருக்கேன்..."
"அன்னோன்ஸ் பன்னிட்டாங்க... இன்னும் ரெண்டு நாளுல காலி பண்ணனுமா... சீக்கிரம் வாயேன்... எனக்கு என்ன செய்றதுன்னே தெர்ல..."
"தோ... அந்தப் பக்கம் தான் சவாரி... சத்யம் தேட்டராண்ட வுட்டுட்டு பத்து நிமிசத்துல வந்துடறேன்..."
"வரும் போது அப்படியே அனிதாவையும் இட்னு வந்துடு..."
ஃபோனை வைத்துவிட்டு காமாட்சியிடம் "எங்கத் தூக்கிப் போடப் போறாய்ங்களோ...? அனிதா, உன் புள்ள கார்த்தி எல்லாம் இங்கத் தானே படிக்குறாங்க... திடீர்னு போகச் சொன்னா என்ன செய்யுறது...?"
காமாட்சி அழவே ஆரம்பித்து விட்டாள்... லலிதாவும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "யக்கா... அழாதக்கா..." என்று காமாட்சியைத் தாங்கிப் பிடித்து தன் வீட்டு முன் இருந்த ஸ்லாபில் இருவரும் அமர்ந்தனர்...
ஸ்பீக்கர் கட்டிய வண்டி சென்று விட்டிருந்தது... இன்னும் எல்லாரும் கூடி நின்றுப் பேசிக் கொண்டிருந்தனர்... தவமணி ஆட்டோவில் கார்த்தி, அனிதாவுடன் காலனிக்குள் நுழைந்தான்... D.L.Anitha
4th A என்று சிரித்தபடி நின்ற புகைப்படத்துடன் இருந்த சர்ச் பார்க் பள்ளியின் அடையாள அட்டையைக் கையில் பிடித்தபடி "ஏம்ப்பா... எல்லாம் வெளிய நிக்குறாங்க... என்ன ஆச்சு" எனறாள் அனிதா...
****
தவமணியும், லலிதாவும் இருப்பதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். எதை எடுத்து வைப்பது, எதை விடுவது என்று கண்கள் பார்த்தாலும், 20 ஆண்டாய் இருந்த இடம் என்று மனம் வெம்பிக் கொண்டே இருந்தது...
'யார் வம்புக்கும் போனதில்லயே... ஊரே ஒதுக்கி இந்த நாத்தத்துல தள்ளி வச்சிருந்தாலும், சந்தோசமாத் தான இருந்தோம்... எங்களையும் நாத்தமா நெனச்சு ஊர விட்டே தூக்கியெறியுறீங்களே...' கோபமும், சோகமும், ஆற்றாமையும் மாறி மாறி மன அலைகளாக அடித்துக் கொண்டிருந்தது தவமணிக்கு மட்டுமல்ல... மொத்தக் காலனிக்கும் தான்...
காமாட்சி வந்து ஒரு டோக்கன் ஒன்றைக் கொடுத்தாள்... "மணி... பெரும்பாக்கத்துல அலாட் ஆயிருக்காம்... இந்தா டோக்கன்... உங்களோடது... பத்திரம்... நான் போயி மீதியையும் எடுத்து வைக்குறன்..." என்று சொல்லிவிட்டுச் சென்றாள்...
"த்தா... 40 கிலா மீட்டர் தாண்டி... என்ன செய்யப் போறன்... தினம் காலை விடியுறதுக்கு முன்னாடி கிளம்பி, ரெண்டு பஸ் புடிச்சு வந்து ஓனர்கிட்ட ஆட்டோ எடுத்து..."
"யோவ்... அனிதா படிப்பு என்ன செய்யுறது..."
"காலையில என்கூட வரட்டும்... நான் ஸ்கூல்ல வுட்டுட்டு அப்பறம் ஆட்டோ எடுக்கப் போறன்..."
"குருவிக்கூடு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சு... கட்டுனோம் வூட்ட... மொத்தமா இடிக்கப் போறானுங்க... நாம என்ன தான் தப்பு செஞ்சோம்...?"
"இந்த சாதியில பொறந்தது தான்... நாத்தத்துல இருந்தாலும், இந்த ஊருக்குள்ள நம்ம இருக்குறதே இவங்க கண்ண உறுத்துது..."
அனிதாவுக்கும் எல்லாம் புரிந்து விட்டிருந்தது... "இப்ப எங்கம்மா போறோம்?" எனக் கேட்டாள்... லலிதாவின் அழுகையே பதிலாய்க் கிடைத்தது.
****
குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் சில டெம்போக்களை கொண்டு வந்து நிறுத்த, ஒவ்வொரு வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தனர்... சிலர் "குருவி சேக்குற மாதிரி சேத்து கட்டுன வூடுய்யா... உடனே போறதுன்னா எப்படி... ரேஷன் கார்டு, ஈபி கனேக்சன் எல்லாம் இருக்கே... நாங்கல்லாம் இந்த நாட்டுல இல்லயா... இல்ல எங்கள மனுசனாவே பாக்கலயா..." என்று எல்லாரின் குரலாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது...
ஒரு அதிகாரி வந்து "கேளுங்கப்பா.... அரசு உங்க நல்லதுக்கு தான் சொல்லுது... 603 குடும்பம் இருக்கீங்க... எல்லாத்துக்கும் 350 சதுர அடியில மாடி வீடு கொடுத்து இருக்கோம்... போயிடுங்க... யாரும் உங்கள ஏமாத்தல... புது வீடு தர்றோம்..."
கேட்டவர்கள் கூச்சலிட, அந்த அதிகாரி தன் இனோவாவில் ஏறிச் சென்று விட்டார்...
சிலர் போராட்டம் செய்வோம்... ஒன்னா இருப்போம்... என்று சொல்லிக் கொண்டிருக்க... பலரும் தங்கள் உடைமைகளை டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் வீடுகளை இடிக்க, காலனிக்குள் கிரேன்கள் உள்நுழைந்தன...
"யோவ்... இருக்குற பொருளையாவது எடுக்க வுடுங்கடா... "
"த்தா... ஓட்டுக்குப் பிச்சை எடுத்தவங்க ஒருத்தன் வரமாட்டான்...." எனப் பலக்குரல்கள் எழுந்தன...
டெம்போக்களில் பொருட்களோடு பெரும்பாக்கம் நோக்கி எல்லாரும் வெளியேறிக் கொண்டிருந்த நேரம், கிரேன்கள் இடிக்க ஆரம்பித்திருந்தன...
****
பெரும்பாக்கம் வந்து சேர்ந்திருந்தனர் லலிதாவும், தவமணியும் அழுது உறங்கிப் போயிருந்த அனிதாவைக் கையில் தூக்கியபடி... வெளிப்பூச்சு இல்லாத அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில்... கையில் இருந்த டோக்கனில் 12/7 எனப் போட்டிருந்தது... ஒருவர் வந்து பார்த்து "12வது பில்டிங்... ரைட்ல போ... மூணாவது பில்டிங்" என்றார்...
7 வது வீடு... மூன்றாவது மாடியில் இருந்தது... வீட்டில் தண்ணீர், மின்சாரம் எதுவும் இல்லை... கொண்டு வந்த பொருட்களை ஒருவருக்கொருவர் உதவி செய்து ஏற்றிக் கொண்டிருந்தனர்... சிலர் மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டுச் சென்றனர்...
குருவி மாதிரிச் சிறுகச் சிறுகச் சேர்த்தப் பொருட்களை எல்லாம், அந்த 350 சதுர அடி குருவிக்கூட்டில் அடைப்பதென்பது கடினமாக இருந்தது... நான்கைந்து நாட்கள் தவமணி சவாரிக்குப் போகவில்லை... பலரும் கூடி இப்படி நம்மள ஊரவுட்டு தொர்த்திட்டானுங்களே என்று புலம்பிக்கொண்டிருப்பது கண்டு மிகவும் வாடிப் போயிருந்தான்... அந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்பே திறந்தவெளிச் சிறையாகத் தெரிந்தது அவனுக்கு மட்டுமல்ல...
மறுவாரம் காலை 5:30 மணிக்கு, அனிதாவையும் கிளப்பிக் கொண்டு, ரெண்டு பஸ் மாறி சென்று கொண்டிருந்தான்... பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் உறங்கிப் போயிருந்தாள் அனிதா... இறங்கும் இடம் வந்து அவளை எழுப்பி, அடுத்தப் பேருந்து ஏறி அதில் அமர இடம் இல்லாமல், அனிதாவை ஒரு அம்மாவின் மடியில் உட்கார வைத்து நின்று கொண்டு வந்தான் தவமணி... அருகில் ஒரு இளைஞன் கையில் திறன்பேசியின் தொடுதிரையை விரலால் தடவிக்கொண்டே, முகநூலில் ஒரு பதிவை ஆர்வமாக படிக்கத் துவங்கினான்... அவனுக்குப் பின்னால் இருந்து தவமணியும் மெல்லப் படித்தான்...
செல்ஃபோன் சிக்னலினால், குருவியினம் அழிந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் குருவி என்ற இனமே அழிந்து போய் விடுமென்றும் தமிழனாய் இருந்தால் சேர் பண்ணு என்றும் இருந்தது... கீழே இருந்த ஷேர் பட்டனை அழுத்தி விட்டு, அந்த இளைஞன் பேருந்தின் சன்னல் வழி வெளியே நோக்கினான்... பேருந்து சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
நெகிழ வைக்கும் சிறந்த
ReplyDeleteஉண்மைக் கதை. வாழ்த்துக்கள் கணபதி
நனி நன்றி கார்த்தீபன்... 😇
Deleteகுருவிகளுக்கு இரக்க பட்டு கூவுவதெல்லாம் பிறகு பார்க்கலாம்.சகமனிதன் இங்கு மொத்தமாய் சிதைக்கப்பட்டு,நாகரீக போர்வையின் பேரில் சிறையாக்கப்படுவதை கவனிக்கலாம்.நல்வாழ்வு தருகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்வது முற்றிலும் அறமில்லாதது.
ReplyDeleteசிறப்பு ண்ணா