முகிலும் அலையும் - கவிதை தமிழாக்கம் (Clouds and Waves)

முகிலும் அலையும்

(ரவீந்திரநாத் தாகூரின் கவிதை - எனது தமிழாக்கம்)

அன்னையே, 
கார்முகிலில் வாழ்வோர் எனையழைத்தே
"காலையெழுந்து அந்நாள் முடியும்வரை
விளையாடிக் களித்திருப்போம்.
தங்கவிடியலோடும் விளையாடுவோம்...
வெள்ளிநிலவொடும் விளையாடுவோம்..."
என்றனர்...

"ஆனால், எவ்விதம் நான் உங்களிடம் வரமுடியும்?" என்றே வினவினேன்...

"புவியின் முனைக்கு வந்து இருகரமுயர்த்தி வானோக்கு... 
நீயும் முகில்களால் எடுத்துக் கொள்ளப்படுவாய்" என்றனர்.

"என் அன்னை எனக்காக வீட்டில் காத்திருப்பாளே, அவளை விடுத்து எங்ஙனம் வருவேன்?" எனக் கேட்க
சிரித்து மிதந்து நகர்ந்தது முகில்கூட்டம்...

ஆனால், எனக்கு அதைவிட இனிய விளையாட்டுத் தெரியும் அன்னையே...
அதில் நான் முகில்... நீ நிலவு...
என் இருகரம் கொண்டு உனையணைப்பேன்...
நம் வீட்டுக்கூரையாக 
நீலவானிருக்கும்...



கடலலையில் வாழ்வோர்
எனையழைத்தே...
"காலை முதல் இரவு வரை 
நாங்கள் பாடிடுவோம்
எங்கு கரையேறுவோம் 
என்றறியாது பயணப்படுவோம்..." என்றனர்.

"ஆனால், எவ்விதம் நான் உங்களிடம் வரமுடியும்" என்றே வினவினேன் 

"கரையின் நுனிக்கு வந்தே
இருவிழி இறுக மூடிநில்...
அலையால் நீயும் ஆட்கொள்ளப்படுவாய்" என்றனர்.

"என் அன்னை எனக்காக வீட்டில் காத்திருப்பாளே, அவளை விடுத்து எங்ஙனம் வருவேன்?" எனக் கேட்க
சிரித்து நடந்து நகர்ந்தது அலையோட்டம்...

ஆனால், எனக்கு அதைவிட இனிய விளையாட்டுத் தெரியும் அன்னையே...
அதில் நான் அலை... நீ கரை...
நான் உன்னில் உருண்டு
உன் மடியில் சிரித்தே வீழ்ந்திருப்பேன்...
இவ்வுலகில் யாரும் நாமெங்கிருக்கிறோமென்று 
அறிந்திருக்கமாட்டார்...

-முடிவிலி

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka