தாய்மொழிப் போற்றுதும் - Celebrate Mother Language
தாய்மொழிப் போற்றுதும் இன்று உலகத் தாய்மொழி நாள்... ஐக்கிய நாடுகள் மன்றம் பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துக் கொண்டாடுகிறது. ஏன் தாய்மொழி? மொழி அறிவு அல்ல... அது கருத்துத்தொடர்புக்கான ஒரு கருவி. ஆனால், ஒரு கருவியைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதை சரிவர பயன்படுத்தலும் கைகூடும். ஒரு மொழி அறிவு அல்ல எனினும் குறைந்த அளவு மொழியறிவு இங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சுமார் 5 மாதங்கள் முதல் குழந்தையின் செவியுணர் திறன் துவங்கி விடும். அவைக் கேட்கும் சொற்களே அக்குழந்தையின் மூளையின் மொழியறிவுக்காக இருக்கும் பகுதியில், கட்டுமானக் கற்களாய் அடுக்கப்படும். வயிற்றில் இருக்கும் போதும், பிறந்த பின்பும் தான் கேட்கும் ஒவ்வொரு புதிய சொற்களையும் மூளை தானாகப் பதிவு செய்கிறது. இவ்வாறாக, ஒரு குழந்தை தான் கேட்டச் சொற்களைக் கொண்டு, எவ்வித இலக்கணமும், ஆசிரியரும் இன்றி தானே பேச எத்தனிக்கும் மொழியே தாய்மொழி. இந்தத் தாய்மொழி மூலம் கற்றிடில், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. யார் தன் தாய்மொழியில் மிகவும் வலிமையுள்...