யாருங்க சொந்தம் - சிறுகதை short story 5

"என்னங்க... டீ..."

குரல் கேட்டதில் செய்தித்தாளில் இருந்து முகம் தூக்கிப் பார்த்தார் சுந்தரின் அப்பா. நின்றபடி கையில் இருந்த செய்தித்தாளில் இருந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்தாள் அம்மா. 

'போன வருட 7/11 தாக்குதலினால் வேலைவாய்ப்புகள் சரிவு'

உள்ளுக்குள்ளே, தனது மகன் சுந்தரைப் பற்றி சிறுகவலை எழ, மனைவியின் முகக்குறி கவலை கண்டு, தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவாறு " சுந்தர் எங்கே?" என்றார் அப்பா.
"அவனோட ஃபிரண்ட் வீட்டுக்கு... ம்... விஜய் வீட்டுக்குப் போயிருக்கான். ஏதோ இண்டர்வியூ இருக்காம். சென்னையில. அது பத்தி விசாரிக்கப் போயிருக்கான். வரும்போது அப்படியே ட்ரெயின் டிக்கெட் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னான். நான் கொஞ்சம் காசு கொடுத்தேன்."

"ஆமா. கேட்டாக் கொடு. என்கிட்ட கேட்க கூச்சப்படுறான். நாட்டுல ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல... இவன் என்ன செய்வான்...? இந்த வேலையாச்சும் கிடைச்சா நல்லா இருக்கும். ஒருநாள் அவன் நல்லா வருவான் பாரு..."

" இத அவன்கிட்ட சொல்லலாம்ல... ரெண்டு பேருக்கு நடுவுல என்கிட்ட சொல்றீங்க...?" என கிச்சனுக்குள் நுழைந்தாள் அம்மா.

***

"அம்மா, போயிட்டு வர்றேன். போயிட்டு வர்றேன்பா..." என்றபடி கிளம்பினான் சுந்தர். உடன் விஜய்யும். 
"நல்லபடியா போயிட்டு வாப்பா... ஆல் தி பெஸ்ட்... திருநின்றவூர்ல சித்தப்பா வீட்டுக்குப் போயிடு. அட்ரஸ் தெரியும்ல. அங்க போய் ஃப்ரெஷ் அப் ஆயிட்டு இண்டர்வியூ போயிடலாம். 10 மணிக்கு தான இண்டர்வியூ...?"
"அப்பா... சென்னையில ஏதாவது ஃபிரெண்ட் வீட்டுலயே தங்கிக்கிறேன்பா."
"டேய்... சொல்றதக் கேளுடா. என்ன இருந்தாலும் சொந்தம்டா. நீ சென்னை போயிட்டு பாக்காம வந்தா நல்லா இருக்காதுடா..."
"சரிப்பா..." என அரைமனதுடன் சொன்னான் சுந்தர்.

விஜய்யும், சுந்தரும் ஒன்றாக சிரித்துப் பேசி இருந்தாலும் - ரயில் பயணத்தை ரசித்துக் கொண்டு இருந்தாலும், ஏதோவொரு புள்ளியில் பின்னே நகரும் மரங்களாய், வேலை இல்லாத வாழ்வின் வலி அவர்களை மௌனிக்க வைத்தது. பின்செல்லும் மரங்களைக் கண்டுகொள்ளாமல் முன்னோடும் ரயிலைப் போல காலம் மட்டும் முன்னோடிக் கொண்டிருந்தது, மிக வேகமாக...

சென்னை, பெரம்பூரில் இறங்கி, மின் தொடர் பிடித்து திருநின்றவூர் வந்தபோது 6:30 ஆகி இருந்தது. ரயிலடி வெளியே ஒரு ரூபாய் காயின் போட்டு சித்தப்பாவுக்குத் தொடர்பு கொண்டான் சுந்தர். 
"சித்தப்பா. சுந்தர் பேசுறேன்."
"நல்லா இருக்கியா தம்பி... எங்க இருக்க?"
"ஸ்டேஷன்ல இருக்கேன் சித்தப்பா... நீங்க வீடு மாறுனதுக்கு அப்புறம் நான் வந்ததில்ல."
"அட்ரஸ் ஆட்டோக்காரன்கிட்ட காட்டு... கொண்டு வந்துடுவான்... 50 ரூவா கொடு.. தம்பி"
"சரிங்க சித்தப்பா..."

போனை வைத்துவிட்டு விஜய்யிடம் "வாடா, ஆட்டோல போயிடலாம்" என்றான் சுந்தர்.
விஜய் சுந்தரிடம் "நம்ம கிளாஸ்மேட் ராஜ் வீடு கூட இங்கதான்டா. நான் அங்கப் போறேன். நீ உங்க சித்தப்பா வீட்டுக்குப் போயி கிளம்பிட்டு ஒரு 9 மணிக்கு ஸ்டேஷன் வந்துடு. சேந்து இண்டர்வியூ போயிடலாம்" என்றான்.
"டேய், வாடா...இண்டர்வியூ முடிச்சுட்டு அவன் வீட்டுக்குப் போலாம். நானும் வர்றேன். இப்ப எங்க சித்தப்பா வீட்டுக்குப் போகலாம்." 

இருவரும் ஆட்டோ பிடித்து, அட்ரஸ் தந்தனர். 100ரூவாயிலிருந்து 75க்கு இறங்கி ஆட்டோ பயணம் துவங்கியது. கோமதி நகர் 3வது தெருவில் திரும்பிய ஆட்டோ மழைக்கால மேடு பள்ள மண் ரோட்டில் ஓரமாய் நின்றது. 

"தம்பீ... இந்த வூடான்னு பாரு..." 
திருவாசகன் ஆசிரியர் என்ற போர்ட் பார்த்து "ஆமாண்ணா, இந்த வீடுதான். இந்தாங்க" என்று 75ரூபாய் கொடுத்தான் சுந்தர். சுந்தரும் விஜய்யும் கேட் திறந்து உள் நுழைந்து காலிங் பெல் அடிக்க, சித்தப்பா கதவைத் திறந்தார். வீட்டில் சாம்பிராணி வாசம் நிறைந்திருக்க, சித்தப்பா நெற்றியில் இருந்த திருநீறு அவர் இப்போது காலை பூஜை முடித்ததைக் காட்டியது. 
"வா சுந்தர்... அப்பா எப்படி இருக்காங்க...?"
'நல்லா இருக்காங்க சித்தப்பா... இது என் ஃபிரெண்ட் விஜய், ஒரு இண்டர்வியூ இன்னிக்கு, ரெண்டு பேரும் அட்டண்ட் பண்றோம்."
"வா, நீங்களும் வாங்க தம்பி"

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர் சுந்தரும், விஜய்யும். சித்தப்பா "இண்டர்வியூ எத்தனை மணிக்கு? எங்க சுந்தர்?"
"11 மணிக்கு சித்தப்பா, நுங்கம்பாக்கத்துல... ஏபிஜே சென்டர்ல..."
"8:45 மணிக்கு ஒரு ட்ரெயின் இருக்கு. விட்டா, 9:05க்கு, கரெக்டா இருக்கும். சரி. எனக்கு டைம் ஆச்சு. நீங்க ரெடி ஆகுங்க..."
சித்தி "வாப்பா சுந்தர், நல்லா இருக்கியா?"
"நல்லா இருக்கேன் சித்தி, திவ்யா எங்க?"
"இன்னும் எழுந்திருக்கல... நீங்க ரெடி ஆகுங்க... நான் டிபன் ரெடி பண்றேன்.."

சித்தப்பா "நான் கிளம்புறேன்... ஆல் தி பெஸ்ட்..." சொல்லிவிட்டு கிளம்பினார். 

***

ஒருவர் பின் ஒருவராகக் குளித்து கிளம்பி மீண்டும் ஹாலுக்கு வந்தபோது அறையில் இருந்து திவ்யாவும் காஃபியுடன் ஹாலில் இருந்தாள். எட்டாவது படிக்கும் திவ்யாவின் தலையில் செல்லமாகக் கொட்டி "எப்படி இருக்க, திவ்யா?" என்றான் சுந்தர். 
"அண்ணா..." என செல்லமாகச் சிணுங்கியவள் "நல்லா இருக்கேண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க..." என்றாள்.
சுந்தர் முகம் இந்தக் கேள்வியில் களை இழந்தாலும் பெயருக்கு "நல்லா இருக்கேன் திவ்யா' என்றான். விஜய்யிடம் திரும்பி " இவ தான் திவ்யா, எங்க செல்லம்" என்றான் சுந்தர். விஜய் மையமாக சிரித்தான். 

சித்தி "சுந்தர், வா சாப்பிடலாம்... நீங்களும் வாங்க தம்பி" என்று இருவரிடமும் சொல்ல, டைனிங் டேபிளில் அமர்ந்தனர். முருகலாய் தோசையும் தக்காளிச் சட்னியும் தட்டில் இருக்க, இருவரும் சாப்பிட்டனர். சித்தி, கிச்சனில் இருந்தபடி "இன்னும் தோசை வேணுமா? எடுத்துட்டு வர்றேன்" எனக் குரல் கொடுக்க... 
விஜய் "எனக்குப் போதும்டா" என்றான், சுந்தர் "நீங்க இருங்க சித்தி, நான் வந்து வாங்கிக்கிறேன்" என எழுந்து கிச்சனுள் நுழைந்தான்.

தட்டில் தோசை வைத்து விட்டு, மெல்லிய ஓசையில் சித்தி "சுந்தர், அந்தப் பையன் நம்ம ஆளுங்களாடா?" 
கேள்வியின் தீவிரம் புரியாமல் "புரியல சித்தி" என்றான்
"உன் ஃபிரெண்டு நம்ம ஆளாடா?" 
"தெரியாது சித்தி... நான் கேக்கல... கேக்கவும் மாட்டேன்" என்றான் சற்று கோபமாகவே.
"கோச்சுக்காதடா... இதெல்லாம் அந்தக்காலத்துல சொல்லி வச்சுருக்காங்க..."
"சரி... போன வருசம் நீங்க ஹாஸ்பிடல்லல இருந்தப்ப உங்களுக்கு ரத்தம் கொடுத்தானே அவன்கிட்ட சாதி கேட்டீங்களா?"
"கேக்கல... ஆனா, அதுக்கப்புறம் ஸ்கின் ப்ராப்ளம் வந்துடுச்சு தெரியுமா உனக்கு?" எனக் கையைக் காட்டினாள்.
"இதுக்கு மேல என்ன சொல்றது... சித்தி, எனக்கு சாதி இல்ல... சாதி பாத்து பழகுறவன் நான் இல்ல... எல்லாத்துக்கும் மேல இப்ப இதப் பத்தி பேச நேரமில்ல... நான் கிளம்புறேன்..." என்றான் சுந்தர்.

"டேய், சாப்பிட்டுட்டு போடா..." என்றாள் சித்தி.
"இல்ல சித்தி, நாங்க கிளம்புறோம்." என்ற சுந்தர், உள்ளே சென்று தான் கொண்டு வந்த பைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப, விஜய் புரியாதவனாய் " என்னடா, பேக் எல்லாம் எடுக்குற... வெறும் ஃபைல் மட்டும் எடுத்துட்டுப் போலாம்" என்றான். 

"இல்லடா, வரும்போது ஸ்ட்ரெயிட்டா ராஜ் வீட்டுக்குத் தான் போகப் போறோம். அதனால இப்பவே பேக் எல்லாம் அங்க வச்சுடலாம்..." என்றான் சுந்தர்.

"திவ்யா, போயிட்டு வர்றேன்டா" எனக் கூற "சரிண்ணா" என்றாள் திவ்யா.

"போயிட்டு வர்றேன் அம்மா" என்றான் விஜய் சித்தியிடம். முகத்தில் சிறு புன்னகையுடன், சித்தியைப் பார்த்து விட்டு, திரும்பி மழையால் நிறைந்த பள்ளங்கள் நிறைந்த சாலையில் தன் நண்பன் தோளில் கைபோட்டுக் கொண்டு நடந்தான் சுந்தர். 

அப்போதும் வருங்காலம் எப்படி இருக்கும் - வேலை கிடைக்குமா - என்ற ஆயிரம் கேள்விகள் அவன் முன் நின்றிருக்க, தான் மனத்தால் எப்படி இருப்போம் என்பது மட்டும் தெளிவாக இருந்தது சுந்தருக்கு. மின்தொடர் வண்டியில் இருந்து பின்னே செல்லும் மரங்களைப் பார்த்தபடி நின்றிருந்தான் சுந்தர். சாதியும், பிரிவினைகளும் பின்னால் செல்ல, அவன் மனம் முன்னே சென்று கொண்டிருந்தது, சென்னை நோக்கிச் செல்லும் தொடர்வண்டி போல்...

- கணபதிராமன்

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka