அடுத்த நொடி - குறள் கதை
அடுத்த நொடி
21.03.2020 காலை 5:42மணி
மேலவளம் பேட்டை சந்திப்பை நோக்கி, நெடுஞ்சாலையின் உள்புறச்சாலையில் வந்து கொண்டிருந்தது வெங்கடேசனின் சீருந்து. சந்திப்பின் மிக அருகே வந்த நேரம், திடீரென தனக்கு முன் தெரிந்த இருசக்கர வண்டியின் முன் சக்கரத்தைக் கவனித்த வெங்கடேசனின் கண்கள் கூர்மையடைந்தன. கைகள் steeringஐ இடது புறமாக விரைந்து திருப்பின. மிக அருகில் வந்து திடீரென திரும்பியதால், சுழன்ற வண்டியின் பின்புறம் இருசக்கர வண்டியின் முன் சக்கரத்தில் தட்ட, அந்த வண்டி கவிழ்ந்து வண்டியின் பின் கட்டப்பட்டிருந்த கேனில் இருந்த பால் சாலையில் கொட்டியது. வெங்கடேசனின் அருகில் இருந்த பூரணி "ஆ…" என்று அலறினாள், அவளது கைகள் அனிச்சையாய் dashboardஐப் பற்றின, வண்டி இன்னும் இடது புறம் நகர்ந்ததில், Service roadக்கும், நெடுஞ்சாலைக்கும் நடுவே இருந்த தடுப்பில் இடிபடாமல் தப்பி, service roadல் சென்று நின்றது. மேலவளம் பேட்டை சந்திப்பில், சாலையைக் கடக்க நினைத்து, திடீரென உள்நுழைந்த பால் ஏற்றி வந்த இரு சக்கர வண்டி, கார் வருவதைக் கண்டு சட்டென சாலையிலே நிறுத்த, கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டியைத் திருப்பியிருந்தார் வெங்கடேசன். வெளிப்புற laneஐக் கடந்து service roadல் நுழைந்த நொடி, ஒரு லாரி ஒன்று அவர் காரினை உரசும் தொலைவில் வலது புறத்தில் கடந்தது. டீக்கடையில், சற்று தள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மக்கள் சட்டெனக் கூடத் தொடங்கினர். கீழே விழுந்திருந்த பால்காரரை சிலர் தூக்கிவிட்டு, 'பாத்து வரமாட்டியாய்யா' என்றனர். சிலர் 'கார் தான்யா தூங்கிட்டே வந்திருப்பான் போல' என்றனர். சுற்றி நிகழ்வது எதுவும் காதில் விழாமல் நடுங்கிய கைகள் steering wheel ஐ அழுத்திப் பிடித்திருக்க, அருகே இருந்த பூரணி, வெங்கடேசனின் இடது கையைப் பற்றினாள்.
***
18.03.2020 மாலை 5:17 மணி
கடந்த வாரம் வரை அங்கொன்றும், இங்கொன்றுமாகச் செய்திகளில் வந்து கொண்டிருந்த கொரோனாத் தொற்று தமிழ்நாட்டில் வெளிநாடு எங்கும் செல்லாத ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாறியிருந்தது. திடுமென்ற ஒலியோடு சொன்ன செய்தியையே மீண்டும் மீண்டும் breaking news என்று சொல்லிக் கொண்டிருந்த செய்தித் தொலைக்காட்சியை பூரணியும், வெங்கடேசனும் பார்த்துக் கொண்டிருந்தனர். “ம்மா, நான் சைக்கிள் ஓட்டப் போறேன்" என்ற நரேனைப் பிடித்து நிறுத்தினாள் பூரணி. “நரேன், no” என்றாள். “ம்மா, ஸ்கூல் இல்ல, சைக்கிள் ஓட்ட வெளியப் போகக் கூடாது, கேம் விளையாடலாம்னு பாத்தா, எப்பப் பாத்தாலும் இந்த news channel வச்சுட்டு இருக்கீங்க, its boringம்மா" என்றான் நரேன்.
“சரி, இந்தாடா" என்று ரிமோட்டை நரேனிடம் தந்து, வெங்கட் இருக்கையிலிருந்து எழுந்து, பூரணியின் அருகே வந்தார். “பூரணி, என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல. நீ உங்க அப்பாவுக்குப் பேசுனியா? நல்லா இருக்காங்கல்லயா? வேணும்னா நம்ம இங்கக் கூட்டிட்டு வந்துடலாம்" என்றார்.
“வேணாம் வெங்கட், அப்பா ஊர்லயே இருக்குறேன்னு சொல்லிட்டாரு. சரி, நீ உங்க செந்திலண்ணன்கிட்ட பேசுனியா?” என்றாள் பூரணி.
“ரெண்டு மூனு வருசமா பேசாமலே இருந்துட்டு, இப்ப எப்படி திடீர்னு பேசுறதுன்னு இருக்கு.”
“இல்ல வெங்கட், என்ன தான் சொந்த அண்ணன் இல்லன்னாலும், உன் வகையில உனக்கு உறவுன்னா அவங்க தான். நீ business, rice millனு இருந்துட்ட, அவர் சென்னையில வேலை பரபரப்புன்னு இருந்துட்டாரு. இந்த மாதிரி நேரத்துல தான் நமக்குல்லாம் பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்குது, பேசு வெங்கட்" என்றாள் பூரணி.
சரியெனத் தலையசைத்த வெங்கடேசன், தனது கைப்பேசியில் செந்திலின் எண்ணைத் தேடி அழைத்தார். பேசியைக் காதில் வைத்தபடி, இங்குமங்கும் நடந்த வெங்கடேசன், “full ring போச்சு, எடுக்கலயே" என்றபடி மீண்டும் அழைத்தார். நான்காவது ரிங்கில், “ஹலோ" என்று மறுமுனை பதில் வர, பால்கனிக் கதவைத் திறந்து வெளியே சென்றார் வெங்கடேசன். தனது அறையிலிருந்து, கண்ணாடிக் கதவின் வழியே பால்கனியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருக்கும் வெங்கடேசனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூரணி. நடந்து கொண்டிருந்த வெங்கட், சட்டென ஒரே இடத்தில் நின்று, சில நிமிடங்கள் பேசிவிட்டு, சற்று பதட்டமான முகத்துடன் பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தார்.
“என்ன ஆச்சு வெங்கட், எல்லாரும் ஓகே தான?” என்றாள் பூரணி.
இன்னும் பதட்டம் மாறாத முகத்தை இல்லை என்பது போல் தலையாட்டிய வெங்கடேசன், பூரணியைப் பார்த்து, “அண்ணன், அண்ணில்லாம் ஓகே, ஆனா, இனியாவுக்குத் தான்" என்று இழுத்தான்.
“இனியாவுக்கு என்ன, அப்பவே ப்ளஸ் 1 படிச்சுட்டு இருந்தா, இப்ப காலேஜ் போயிருப்பாளே, என்ன ஆச்சு, வெங்கட்?”
“ஆறு மாசம் முன்ன வயித்து வலின்னு ஆஸ்பிடல் போயிருக்காங்க, டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பாத்ததுல லிவர்ல கேன்சர். இப்பக் கூட ஆஸ்பிடல்ல தான் இருக்காங்க, அதான் உடனே போன் எடுக்க முடியல. நாமப் போயி ஒரு தடவை பாத்துட்டு வந்துடுவோமா?”
“நரேன்" என்றாள் பூரணி.
“நரேனை உங்கப்பா வீட்டுல விட்டுட்டுப் போவோம். சென்னைக்குப் போகுற வழி தானே?”
“சரி கிளம்புவோம், வெங்கட், நான் அப்பாவுக்குப் போன் செஞ்சு சொல்றேன்.” என்ற பூரணி, playstationல் மூழ்கியிருந்த நரேனிடம், “டேய், போதும் விளையாண்டது, கிளம்பு, நம்ம தாத்தா வீட்டுக்குப் போறோம்" என்றாள்.
***
19.03.2020 மாலை 5:43 மணி
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து வெங்கடேசனின் சீருந்து, சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பூரணி காரை ஓட்டிக் கொண்டிருக்க, வெங்கடேசன் அருகே அமர்ந்திருந்தார். “விடியற்காலைலயே கிளம்பலாம்னு சொன்னேன். இப்பத் தான் சென்னைக்கு மிக அருகில் வந்திருக்கோம் பூரணி" என்றார் வெங்கட்.
“வெங்கட், எந்தக் காலத்துல இருக்கீங்க? மேல்மருவத்தூர், திண்டிவனம் வரைக்கும் இதே டயலாக் சொல்லிட்டிருக்காங்க, அப்பாவும், நம்மளப் பாத்து ஆறு மாசத்துக்கு மேல இருக்கும்ல, அதான் லேட் ஆகிடுச்சு, என்ன இப்ப இன்னும் ஒரு மணி நேரத்துல மேடவாக்கம் போயிடலாம்.” என்று பூரணி சொல்லிக் கொண்டிருக்க, தனது கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கட்.
“வெங்கட், அப்படி என்ன தான் பாத்துட்டு இருக்கீங்க, போன்ல?”
“வர்ற ஞாயித்துக்கிழமை காலையில ஏழு மணிலேந்து பதினாலு மணி நேரத்துக்கு ஊரடங்கு போட்டிருக்காங்களாம். யாரும் வெளியே வரக்கூடாதாம்.”
“எங்க சென்னைலயா?”
“இல்ல, நாடு முழுசும், எனக்கென்னமோ அன்னிக்கு மட்டும் இருக்கும்னு தெரியல, இந்தக் கொரோனா வந்ததும் வந்துச்சு, இந்த வருசம் எப்படி போகப் போகுதோன்னு இருக்கு. நொடிக்கு நொடி பதட்டத்துலயே வச்சிருக்கானுங்க" என்ற வெங்கடேசன், “சரி, வண்டலூர் முன்ன எங்கயாவது நிறுத்து, சென்னை உள்ள ட்ராபிக் நிறைய இருக்கும், நான் ஓட்டுறேன்" என்றார்.
“வெங்கட் சார், இதுவரைக்கும் ஓட்டிட்டேன்ல, தாம்பரத்துல பாலத்துல ஏறி, கேம்ப் ரோடு வழியாப் போகணும், அவ்ளோ தான, சென்னைல தான் படிச்சேன், நானே ஓட்டுறேன்" என்றாள் பூரணி. ஒரு வழியாக ஏழு மணியளவில் செந்தில் வீட்டை வந்தடைந்தனர். செந்தில் வீட்டு வாசலிலே நின்றிருந்தார். அருகிலேயே அவர் மனைவி திலகம் நின்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய வெங்கடேசன் - பூரணியைப் பார்த்து, “வா தம்பி, வாம்மா" என்று வரவேற்றார். முகத்தில் முயன்று வரவழைத்த சிரிப்பினைப் பார்த்த இருவருக்கும் வருத்தம் மனதைப் பிசைந்தது. வீட்டின் உள்ளே நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்தனர். இருவரின் கண்களும் இனியா எங்கே என்று தேடுவதைப் பார்த்த செந்தில், “வெங்கட், தூங்கிட்டு இருக்காப்பா, நேத்து தான் கீமோ குடுத்திருக்காங்க. அதான்" என்றார்.
“அதனால என்னண்ணே, பரவால்ல, முதல்ல சாரிண்ணே, ரெண்டு மூனு வருசமா பேசாமலே இருந்துட்டோம், சும்மா அப்பப்ப விசாரிச்சுட்டாவது இருந்திருக்கணும்.” என்றார் வெங்கட்.
“அப்படின்னு பாத்தா நானும் தானே பேசல, இதுக்கெல்லாம் எதுக்குப்பா சாரில்லாம் கேக்குற? நம்ம வாழ்க்கை இன்னும் நிறைய இருக்குன்னே நெனச்சுட்டு இருந்துடுறோம். பரபரன்னு ஓடிட்டிருந்த வாழ்க்கையில திடீர்னு நம்ம எதிர்பாக்காம ஏதாவது நடக்கும்போது தான் எதை இழந்திருக்கோம்னு புரியுது.” என்றார் செந்தில், சற்று கலங்கிய கண்களோடு. செந்திலுக்கு அருகே நகர்ந்தமர்ந்து ஆதரவாய் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். அருகே இருந்த திலகமும் ஆதரவாய் அவரின் தோளில் கைவைத்தார். அவர் கண்களும் கலங்கி இருந்தன.
கலங்கி நிற்கும் இருவரையும் பார்த்து, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய வெங்கட் - பூரணி இருவரும் அமைதியாக இருந்தனர். அதுவே செந்திலுக்கும் தேவையாய் இருந்தது. சற்று நேரத்தில், திலகம், “ஏற்கனவே டின்னர் செஞ்சு வச்சிட்டேன், இதோ எடுத்து வைக்கிறேன்" என்று எழுந்தார். பூரணி "நானும் வர்றேன்க்கா" என்று சமையலறை நோக்கிச் சென்றாள்.
சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருந்த செந்தில், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார். "போன வருசத்துலயே அடிக்கடி வயித்துவலின்னு சொல்லிட்டு இருந்தா. நாங்க கொஞ்சம் கவனிக்காம இருந்துட்டோம். பசிக்குறது குறைஞ்சுது, அடிக்கடி வாந்தின்னு வரவும், போயி செக் செய்யும் போது தான் தெரிய வந்துச்சு, லிவர்ல கட்டி இருக்குன்னு. அடுத்தடுத்து ஸ்கேன், டெஸ்ட்னு இப்ப கீமோதெரபி வரைக்கும் வந்திருக்கு. எதனால இப்படி ஆச்சுங்குற கேள்வி தான் இப்பவும் எனக்குள்ள இருக்கு, என்ன தப்பு செஞ்… " என்று செந்தில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளறையில் இருந்து, “அப்பா" என்ற குரல் கேட்டது. வெங்கட் அருகே கலங்கி அமர்ந்திருந்த செந்தில், உடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சொல்லுடா, இதோ வந்துட்டேன்" என்று உள்ளே சென்றார். திலகமும் அவரைப் பின் தொடர்ந்தார்.
பூரணி இரவுணவு எடுத்து dining tableல் வைத்துவிட்டு, வெங்கட்டிடம் வந்து நின்றாள். “ரொம்ப வருத்தப்படுறாரா?” என்றாள் மெலிதான குரலில். “அவரும் என்ன செய்வாரு? எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தான் தெரியல. இனியா குரல் கேட்டதும், கண்ணைத் துடைச்சுட்டு ஓடுனதப் பாக்குறப்ப, மனசெல்லாம் என்னமோ செய்யுது பூரணி" என்றார் வெங்கட்.
உள்ளறையில் இருந்து திலகம் வந்து, “வாங்க ரெண்டு பேரும் உட்காருங்க, அவரும் இப்ப வந்திடுவாரு, சாப்பிடலாம்" என்றார்.
“நான் எடுத்து வச்சிட்டேன்க்கா, எல்லாரும் சேந்தே சாப்பிடுவோம்" என்றாள் பூரணி.
“நீங்க உட்காருங்க, அவரும் வந்திடுவாரு" என்று திலகம் சொல்ல, இருவரும் சென்று அமர, திலகம் பரிமாறினாள். செந்தில் கைத் தாங்கலாகப் பிடிக்க, “வேணாம்ப்பா, ஒன்னுமில்ல நானே வர்றேன்" என்று சொல்லிக் கொண்டு, மெதுவாக நடந்து வந்த இனியா, வெங்கட் - பூரணி இருவரையும் பார்த்து, “ஹாய் சித்தப்பா, ஹாய் சித்தி, நல்லாருக்கீங்களா? நரேன் எப்படி இருக்கான்? அவனைக் கூட்டிட்டு வரலயா?” என்றபடி வந்து, இருவருக்கும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். உடலில் களைப்பு தெரிந்தாலும், முகத்தில் சிரிப்பு இருந்தது. முன்பு பார்த்திருந்ததை விட மிகவும் மெலிந்திருந்தாள்,
“நல்லாருக்கோம், இனியா. நரேன் அப்பா வீட்டுல விட்டுட்டு வந்திருக்கோம். அடுத்த முறை கண்டிப்பா கூட்டிட்டு வர்றோம்.” என்றாள் பூரணி.
“அதான் கொரோனா, curfew, lockdownனு சொல்றாங்களே சித்தி, இனிமே எப்ப?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் இனியா. பூரணியால் சிரிக்க முடியவில்லை. திலகமும், செந்திலும் dining tableல் வந்து அமர்ந்தனர்.
“கவலைப்படாதீங்க சித்தி, நீங்க ஊருக்குப் போங்க, நான் வீடியோ கால்ல கூப்பிட்டுப் பாத்துக்குறேன். எப்படி இருக்கான்? நான் பாத்தப்ப ஒன்னாவதோ, ரெண்டாவதோ படிச்சுட்டு இருந்தான்.” என்று பேசிக் கொண்டே சென்ற இனியாவைப் பார்த்து, வெங்கட்டும், பூரணியும் வியந்து போயிருந்தனர்.
“என்ன சித்தப்பா, நான் பேசிட்டே இருக்கேன், ஒன்னுமே பேசாம இருக்கீங்க?” என்றாள் இனியா.
“உன்கிட்ட என்ன சொன்னாலும் ஏதாவது தெரியாம பேசிடுவனோன்னு இருக்குது, ஆனா நீ இவ்ளோ இயல்பா பேசுறது, பாஸ்டிவ்வா இருக்குறது பாத்து..." என்றார் வெங்கடேசன்.
“முதல்ல நானும் நிறைய அழுதேன், ஏன் எனக்கு இப்படின்னு நினைச்சேன். இப்ப அதெல்லாம் கடந்தாச்சு.”
“அதான் ட்ரீட்மென்ட் தான் போயிட்டிருக்குல்ல, எல்லாம் சரியாகிடும் இனியா" என்றார் வெங்கடேசன்.
“எங்க cancer termல எந்த ட்ரீட்மெண்டுக்கும் ஒன்னு சொல்லுவாங்க, சித்தப்பா, 5 year survival rateனு. எனக்குக் கணக்குன்னா ரொம்ப பிடிக்கும், அதனால தான் காலேஜ்ல B.Sc maths எடுத்தேன். இப்ப என்னோட வாழ்க்கையே statastics, probabilityயாத் தான் இருக்கு. இதுவரைக்கும் 5 year survival rate 42% சொல்லிருக்காங்க. Number of tablets, chemo success rate, pain scale இப்படி எல்லாமே numbers தான், எல்லாமே கணக்கு தான். வர்ற ஞாயித்துக்கிழமை அடுத்த ட்ரீட்மென்ட் அப்பாயின்ட்மென்ட், அன்னிக்கு curfewன்னு சொல்லிருக்காங்க.” என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, செந்தில், “நாளைக்கு நான் போயி டாக்டரைப் பாத்துப் பேசிட்டு வர்றேன் இனியா. அடுத்து லாக்டவுன்னு வேற சொல்றாங்க, வீட்டை விட்டே வெளியில போக முடியாத நிலைமை வந்தா என்ன செய்யுறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு.” என்றார்.
“நானும் வர்றேண்ணே, என்னோட கார்லயே போயிட்டு வந்துடலாம்.” என்றார் வெங்கடேசன்.
****
21.03.2020 காலை 4 மணி
“தம்பி, சொல்லச் சொல்லக் கேட்க மாட்டுற? காலையில சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்ல" என்றார் செந்தில், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த வெங்கடேசனைப் பார்த்து.
“இல்லண்ணே, இப்ப கிளம்புனோம்னா, ட்ராபிக் இருக்காது, ஒரு எட்டு ஒன்பது மணிக்குல்லாம் கள்ளக்குறிச்சியில இவங்க அப்பா வீட்டுக்குப் போயிட்டு, அங்கிருந்து நரேனைக் கூட்டிக்கிட்டு, நரசிங்கபுரம் போயிடுவேன். நாளைக்கு ஊரடங்கு வேற, நேத்து டாக்டரும் கண்டிப்பா லாக்டவுன் வரும்னு வேற சொன்னாரு. ரைஸ்மில்லயும் கொஞ்சம் வேலைல்லாம் இருக்கு. அதான், அடிக்கடி போன் பண்ணுங்கண்ணே, போயிட்டு வர்றோம்ணே.” என்று வெங்கடேசன் சொல்ல, பூரணியும் திலகத்திடம், "போயிட்டு வரேன்கா, இனியாகிட்ட சொல்லிடுங்க" என்றாள். கார் மெல்ல நகர்ந்து, முன்னே செல்ல, பூரணியின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தன.
வண்டி GST சாலையில் அதிகாலை போக்குவரத்து குறைவாக இருக்க, நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வீட்டில் துவங்கி, இருவரும் அமைதியாகவே வந்தனர். பாலாறு பாலத்தைக் கடக்கும் போது, “வெங்கட், ஏன் இவ்ளோ விரட்டுறீங்க, 60லயே போங்க.” என்றாள் பூரணி.
“அதான் ரோடு தான் காலியா இருக்குல்ல"
“பரவால்ல வெங்கட், மெதுவாகவே போலாம்" என்று பூரணி மீண்டும் சொல்ல, காரின் வேகம் 60கிமீக்கு வந்தது.
“நேத்து நீங்க ரெண்டு பேரும் ஆஸ்பிடல் போயிருந்தப்ப, கொஞ்ச நேரம் இனியாகிட்ட பேசிட்டிருந்தேன். அவ பேசப் பேச எனக்குள்ள தோனுனது எல்லாம் நம்ம இருக்குற காலத்தை எவ்ளோ granted ஆ எடுத்துட்டிருக்கோம்னு தான். பேசும்போது இனியா சொன்னா, அம்மாகிட்ட சொல்லிட்டுப் போங்க சித்தி, ரொம்ப வருத்தப்படுறாங்க, அதுவும் என்கிட்ட காட்டிக்காம. எல்லாரும் ஒரு நாள் போறவுங்க தானே, எனக்கு எப்பன்னு தெரிஞ்சுடுச்சு அவ்ளோ தான்னு சொன்னா, ஏதோ ரொம்ப casual ஆச் சொன்னா.” என்றாள் பூரணி.
“நல்லது தான், பூரணி. டாக்டரும் அவ ரொம்ப துணிச்சலான பொண்ணுன்னு சொன்னாரு.”
“ஆனா, நான் சொல்றது இனியாவப் பத்தியே இல்ல, நம்மளப் பத்திச் சொல்றேன்.”
“நமக்கு என்ன, பூரணி? நல்லாத் தானே இருக்கோம்.” என்றார் வெங்கடேசன்.
“நல்லாத் தான் இருக்கோம், ஆனா, அடுத்த நொடி என்ன நடக்கும்னு நம்மளால சொல்ல முடியுமா? என்ன நடந்தாலும், ஏத்துக்குற, சமாளிக்குற பக்குவம் நம்மகிட்ட இருக்கா? அந்தச் சின்னப் பொண்ணு அப்படி சொல்லும் போது நம்மால இப்படில்லாம் இருக்க முடியுமான்னு தான் தோனுச்சு” என்ற பூரணியின் கண்கள் கலங்கத் துவங்கியிருந்தது.
“அதெல்லாம் ஒன்னுமில்ல, அப்படி என்ன நடந்துடப்போகுது. நீ மனசப் போட்டுக் குழப்பிக்காத" என்று வெங்கடேசன் சொல்லிக் கொண்டிருக்க, வண்டி மேலவளம் பேட்டை சந்திப்பை நெருங்கிக் கொண்டிருந்தது.
நாளென ஒன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
குறள் : 334, அதிகாரம் - நிலையாமை
நமது வாழ்நாளை ஒவ்வொன்றாக அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாளே, நாள் என்று உணர்வர் அறிஞர்.
Comments
Post a Comment