தொடரும் பயணம் - குறள் கதை
தொடரும் பயணம்
- முடிவிலி
முகில்களை இழுத்துச் சூடிக் கொண்டிருந்த மலைகளின் உச்சியில் இருந்து, முகில்களே வழிந்து நிற்பது போல வெண்பனி போர்த்தி இருந்தது. உருகிய பனியின் துளிகள் ஒன்றிணைந்து, மலையில் வழிந்து, தானே உருவாக்கிய பாதையில் பாக் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. அழகிய ஜூலை மாதக் காலைப் பொழுதில், பாக் ஆற்றின் அருகே இருந்த சோலைமரங்களில் இருந்து பறவைகளின் ஒலிகள் இசையாய்க் காற்றில் விரவிச் சென்றது. ஆற்றை ஒட்டி ஓடிய சாலையின் ஓரத்தில் இருந்த அந்தத் தாபாவில் நுழைந்தன அந்த இரண்டு RE Hunter 350. வண்டியில் இருந்து இறங்கிய கவினும், சத்யாவும் தங்களது தலைக்கவசத்தைக் கழற்றி, வண்டியிலேயே வைத்துவிட்டு, தங்களுடைய backpackஐ எடுத்துக் கொண்டனர்.
கல்லூரியில் இருந்தே நண்பர்களான கவினும், சத்யாவும் வளாக நேர்காணலில் தேர்வு பெற்று, ஒரே நிறுவனத்தில் பணி புரிகின்றனர். வேலைக்குச் சேர்ந்தபோதே ஒரு ஆண்டு நிறைவின் போது, சாலைப் பயணம் செல்வதென முடிவெடுத்திருந்தாலும், சில ஆண்டுகள் தள்ளிப் போய், ஐந்தாவது ஆண்டில் சாலைப்பயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. டெல்லி வரை வானூர்தியில் வந்து டெல்லியில் இருந்து, வாடகைக்கு வண்டி எடுத்து, லே வரை சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
தாபாவின் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்து, “பையா, தோ சாய்" என்றான் சத்யா. தேனீர் வந்தது. கூடவே சுடச்சுட, மோமோ இருப்பதாகச் சொல்ல, அதையும் ஆர்டர் செய்தனர்.
“செம்ம tripல, நாலு வருசம் முன்னமே வந்திருக்க வேண்டியது, இப்ப தான் நேரம் சரியா அமைஞ்சிது போல" என்றான் கவின்.
“நேரம்னு சொன்னதும் இதான் கேக்கணும்னு நினைச்சேன், எதுக்குடா நாம போற வழியில மணாலிக்கு முன்ன அந்த ஜோசியக் காரன்கிட்ட போனோம்?” என்றான் சத்யா.
“எதுக்குடா ஜோசியம் பாக்கப் போவோம்? சும்மா தான்.”
“சும்மாவா?” சிரித்தான் சத்யா.
“இத்தன நாளா இந்த ட்ரிப் பத்தி நிறைய video, details லாம் பாத்துட்டிருந்தப்ப தான், இந்த ஜோசியர் பத்தியும் தெரிஞ்சுது. அதான் இவ்ளோ வந்துட்டோம், அப்படியே பாத்துடலாம்னு தான் போனேன்.” என்று கவின் சொல்லவும், இன்னும் சிரிக்கத் தொடங்கியிருந்தான் சத்யா.
“டேய், ஏன்டா இப்படி கெக்கபிக்கன்னு சிரிக்குற?”
“இந்தக் காலத்துலயும் இதெல்லாம் நம்புற பாரு" என்றான் சத்யா. இரு தட்டுக்களில் மூன்று மோமோக்கள் வைத்து, அருகில் சிறிய கிண்ணத்தில் சட்னியும் கொண்டு வந்து கொடுத்த கடைப் பையன், “பையா, பாரிஷ் ஆனே வாலா ஹே" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
“என்னடா சொல்லிட்டுப் போறான்" என்றான் கவின். சத்யா, சாளரம் வழியாக வெளியே பார்த்தபடி, “மழை வரப் போகுதுன்னு சொல்லிட்டுப் போறான்" என்று சொல்லி முடிப்பதற்குள், சடசடவென மழை கொட்டத் தொடங்கி இருந்தது. இருவரும் வெளியே சென்று, வண்டியில் வைத்திருந்த தலைக்கவசத்தை எடுத்துக் கொண்டு வந்தனர்.
“பாத்தியா? சிலர் சொன்னா நடக்கும்டா, அந்தப் பையன் சொன்னான், மழை வந்துடுச்சு பாரு, அப்படித் தான் அந்த ஜோசியரும். உனக்கு நம்பிக்கை இல்லன்னா, விடு, அவ்ளோ தான்" என்றான் கவின்.
மீண்டும் சிரித்த சத்யா, “டேய், மழை வரும்னு சொன்னது சட்டுன்னு இருட்டுன மாதிரி இருந்ததை வச்சுக்கிட்டுச் சொல்லிருக்கலாம். இதுவும் காசு வாங்கிட்டுப் பொய் சொல்றதும் ஒன்னாடா?” என்றான்.
“என்னடா பொய் சொன்னாரு அவரு?”
“நிறைய சொல்லலாம், முதல்ல கங்காதேவி அருள்வாக்குன்னு அந்த ஆள் சொல்றதே பொய் தானே?”
“டேய், ஆத்துக்கரையில தானே அவரோட இடமும் இருந்துச்சு, அதனால தான் அப்படி சொன்னாரு"
“ஆத்துக்கரையில தான் இருந்துச்சு, ஆனா, எந்த ஆத்துக்கரை, கங்கையா அது? அது பியாஸ் ஆறுடா"
“டேய், அதெல்லாம் எதுக்குடா, வட இந்தியாவுல இருக்குற எல்லா ஆறும் கங்கை தான்டா, இமயமலைலேந்து தான வருது?" என்று கவின் சொல்ல, மேலும் சிரிக்கத் தொடங்கினான் சத்யா.
“கவின், இதுக்குப் பேரு confirmation bias, தன்னோட நம்பிட்டு இருக்குற ஒன்னு தப்புன்னு தெரிய வரும்போது, அதுக்கு வேற எதும் லாஜிக் சொல்லித் தன்னோட நம்பிக்கை சரின்னு முடிவுக்கு வர்றது, சரி, உன்னோட ஜாதகத்தை நீ கொடுத்தப்ப, அவரு என்ன செஞ்சாரு?”
“தமிழ்ல எழுதியிருந்தது புரியலன்னு பிறந்த நாள், நேரம், இடம்லாம் கேட்டாரு. கொடுத்ததும், அதைக் கம்ப்யூட்டர்ல அடிச்சு, இந்தியில என்னோட ஜாதகத்த printout எடுத்தாரு.”
“அதுக்குத் தனியா 500 ரூவாயும் வாங்கிட்டாருன்னு சேத்துச் சொல்லு.” என்ற சத்யா, “அதுக்கப்புறம் ஒன்னு சொன்னாரு, எல்லாம் சயின்ஸ்னு, அப்பவே சிரிப்பு வந்துச்சு" என்று சொல்லிச் சிரித்தான்.
“ஆமாடா, ஒன்பது கோள் எல்லாம் உண்மை தானே, சயின்ஸ் தான?”
“ஒன்பது கோள் எல்லாம் சயின்ஸ் தான், ஆனா, சூரியன், நிலா எல்லாம் கோளாடா? இதுலயே ரெண்டு போச்சு, ராகு கேதுங்குறது நிலாவை முழுங்குற பாம்பாம், வானத்துல பாம்பு ஒன்னு இருக்கு, அது கிரகணத்தப்ப, நிலாவை முழுங்கும்னு சொல்றது தான் சயின்ஸாடா? ஒன்பதுல நாலு அறிவியல் படி கோளே இல்ல, இன்னமும் இது சயின்ஸ்னு தான் நம்புறியா?”
“சரிடா, நீ இப்படி சொல்லுறதுனால இதை நம்புற எல்லாத்தையும் மாத்திட முடியுமா? எங்க அம்மால்லாம் நம்புறாங்க. நானும் நம்புறேன். நம்புறதே தப்புன்னு சொல்றியா?”
“ஓகே, நம்ம வந்தது road tripக்கு, அதுவும் அஞ்சு வருசம் ப்ளான் போட்டு, அதுக்கு நடுவுல இவரைப் பாக்குறதுக்கு அப்படி என்னடா தேவை வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.”
“அதான் சொன்னேனேடா, ஒன்னுமில்ல சும்மா தான், வருங்காலம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்னு தான்.”
“நீ கேட்டதுக்கு எல்லாமே பாசிடிவ்வா தான் சொன்னாரு. இனிமே உனக்குத் தடைகளே இல்லன்னாரு, அவரு சொன்னது எல்லாமே உன்னோட வருங்காலத்தை இல்ல, நீ என்ன கேட்கணும்னு நினைச்சியோ, அதைத் தான் சொல்லிருக்காரு.”
“டேய், ஒவ்வொன்னுக்கும் குரு பார்வை, ராகு திசை முடிஞ்சுதுன்னு சொன்னாரே, நீயும் கேட்டல்ல, எனக்கே இந்தி அரைகுறை, நீ தானடா அவரு சொன்னத எனக்குச் சொன்ன, எல்லாம் கூட இருந்து கேட்டுட்டு இருந்த நீயே இப்படி சொல்ற?”
“ஆனா, இதுவே உனக்கு ஏதாவது வருங்காலத்துல நடந்து, அவருகிட்ட போயி கேட்டாலும், அதுக்கு சனி வக்கிரமா பாத்துட்டாரு தம்பின்னு அதுக்கும் விளக்கம் கொடுப்பாரு. ஏன்னா, எது சொன்னாலும் நம்புறதுக்கு நம்ம ரெடியா இருக்கோம்.”
“நீ என்ன வேணும்னாலும் சொல்லு, நம்ம அஞ்சு வருசமா ப்ளான் போட்டது தான் இருந்தாலும், எனக்கு உள்ளுக்குள்ள சின்ன பயம் இருந்துட்டு தான் இருந்துச்சு, அவரு சொன்னதைக் கேட்டதும், பயம்லாம் போயி, நம்பிக்கை வந்துச்சு, லே வரைக்கும் போயி இப்ப திரும்பிப் போயிட்டு இருக்கோம். எல்லாம் நல்லாத் தானே போயிட்டு இருக்கு.”
“நல்லாப் போயிட்டிருப்பதுக்குக் காரணம் நம்ம போட்ட ப்ளான் இல்ல, பல ஆயிரம் மைலுக்கு அப்புறம் இருக்குற வியாழன், வெள்ளின்னு நினைக்குறியா? இப்பவும் நம்ம ட்ரிப் முடியல, நம்ம போகுற வரைக்கும் எதுவும் நடக்காதுன்னு guarantee குடுக்க முடியுமா உன்னால?” சத்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு biker group தாபாவின் முன் வந்து வண்டியை நிறுத்திவிட்டு, இவர்களுக்கு பக்கத்து மேசை இருக்கைகளில் அமர்ந்தனர்.
சுமார் பதினைந்து பேர் கொண்ட குழுவுக்குத் தேனீரும், மோமோக்களும் வந்தன. கவினும், சத்யாவும் லேவுக்குச் செல்லும் போது வழியில் இவர்களைப் பார்த்திருந்ததால், ‘Hi’ சொல்ல, அந்தக் குழுவில் பலரும், ‘Hi bro’ என்றனர்.
திடீரென முடிந்த உரையாடலில் முகம் சுருங்கிப் போயிருந்த கவினைப் பார்த்து, “சரிடா, மூஞ்சத் தூக்கி வச்சுட்டு இருக்காத, உன் நம்பிக்கைய நான் ஒன்னும் சொல்லல" என்ற சத்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குழுவில் ஒருவன் பேசிக் கொண்டிருந்ததில் சத்யாவின் கவனம் திரும்பியது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டவன், சட்டென எழுந்து அவர்களிடத்தில் சென்று ஏதோ பேசத் தொடங்கினான்.
சிறிது கவின் அருகே வந்த சத்யா, “மச்சா, இவங்க கூடவே group ஆப் போவோம்டா, இன்னும் கொஞ்சதூரத்துல இவங்க group, accomodation புக் பண்ணிருக்காங்களாம். நம்ம ரெண்டு பேரும் அவங்க கூடவே தங்கிக்கலாம்னு சொன்னாங்க. மழை பெய்யுறப்ப இவங்க கூட சேந்து போறது தான் நமக்கும் safe. ரெடியாகு, இவங்க கூடவே கிளம்பலாம்.”
“எதுக்குடா, மழை விட்டதும் தனியாவே போகலாம். எதுக்குத் தங்குறது எல்லாம்…” என்று கவின் சொல்வதை இடைமறித்து, “மணாலி பக்கம் ரெண்டு நாளாவே செம்ம மழையாம், நிறைய இடத்துல flash flood, ரோடு எல்லாம் மண் சரிஞ்சு, அங்கங்க block செஞ்சு வச்சிருக்காங்க. நிறைய பாலம்லாம் உடைஞ்சிருக்காம். நல்ல வேளைக்கு இவங்கனால இப்படி இருக்குன்னு தெரிய வந்துச்சு, இல்லன்னா, இந்த மழை வெள்ளத்துல தங்குறதுக்கு இடம் இல்லாம எங்கயாவது மாட்டிக்கிட்டு இருந்திருப்போம்.” என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த போனைத் துவக்கினான்.
“நீயும் உன் போனை எடுத்துப் பாருடா" என்று சத்யா சொல்ல, இருவர் போனிலும் வாட்சப் குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் குவிந்தன. இருவரின் பெற்றோர்கள், நண்பர்கள் எனப் பலரும் இருவரின் நலம் குறித்து அறிய முற்பட்டிருந்தனர். அனைவருக்கும் முடிந்தவரை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பதிலைக் குறுஞ்செய்தியாகவும், அழைப்பாகவும் சொல்லத் துவங்கினர்.
4 நாட்களுக்குப் பிறகு…
மழை விட்டிருந்தாலும், மண் சரிவு, வெள்ளத்தினால் நிறைய சாலைகள் கவினும், சத்யாவும் சென்ற போது இருந்த நிலையில் இருந்து அப்படியே மாறி இருந்தன. பலர் வீடுகளை இழந்திருந்தனர். அந்தக் குழுவுடன் நான்கு நாட்கள் தங்கியிருந்து, இன்று தான் அனைவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் துவங்கினர். பல இடங்களில் மாற்று வழிகளில் மாறி மாறிச் சென்று, எங்கோ ஒரு இடத்தில் பியாஸ் ஆற்றினைக் கடந்து அந்தக் குழுவோடே சென்று கொண்டிருந்தனர் கவினும், சத்யாவும். பயணம் துவங்கும் போது இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து, எப்போது வீடு திரும்புவோம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
தனக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்த கவின், எதையோ பார்த்தவனாக வண்டியை ஓரங்கட்டியதைக் கவனித்த சத்யா, அவனது அருகே வந்து வண்டியை நிறுத்தி, தனது தலைக்கவசத்தை உயர்த்தி, “என்ன ஆச்சு மச்சான்?” என்றான்.
கவின், ஆற்றுக்கு அக்கரையைக் காட்டி, “டேய், அது என்ன இடம்னு உனக்குத் தெரியுதா?” என்றான். அவர்கள் நின்ற இடம் சற்று மேடாகவும், அங்கிருந்து பார்க்கும் தொலைவில் பியாஸ் ஆறு ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது.
“தெரியலயேடா, எந்த இடமும் போகும் போது இருந்த மாதிரியே இல்லடா" என்றான் சத்யா, அந்தக் குழுவில் பின்னால் இருந்தவரை நோக்கி, வந்து விடுவோம் எனக் கைகளால் காட்டியபடி.
“டேய், இது தான்டா, நாம பாத்த அந்த ஜோசியர் இருந்த இடம், ஆத்தங்கரையில அந்த இடம் இருந்துச்சு, இப்ப அந்த இடமே இல்லடா" என்று கவின் சொல்ல, வண்டியில் இருந்து இறங்கிய சில அடிகள் முன்னே சென்று நோக்கினான்.
கவினின் அருகே வந்து அவன் தோளி கைவைத்து, “சரிடா, இந்த இடம் மட்டுமா? வர்ற வழியெல்லாம் பாத்தல்ல, ஊரே புரட்டிப் போட்டது போலத் தான் இருக்கு, அவன் தப்பிச்சிருப்பான்னு நினைச்சுப்போம், வாடா" என்றான் சத்யா.
“எல்லாம் கண்ணை மூடிக் கண்ணைத் திறக்குறதுக்குள்ள மாறிடுதுல்லடா, அடுத்த நிமிசம் என்ன ஆகும்னு தெரியாம தான் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு, நேத்து இருந்த இடம், இன்னிக்கு இல்ல, நேத்து இருந்தவன் இன்னிக்கு இருக்கானான்னு தெரியல" என்று கவின் சொல்ல, அவனை அணைத்தான் சத்யா. இருவரும் சில நொடிகள் அங்கேயே நின்று ஆர்ப்பரிக்கும் ஆற்றினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கவின், சத்யாவைப் பார்த்துத் தலையசைக்க, இருவரும் தலைக்கவசம் அணிந்து கொண்டு வண்டியைத் துவக்கினர். திருப்பம், வீழ்ச்சி எங்கென்று அறியாமல் ஓடும் ஆற்றினைப் போல, வருங்காலம் கொண்டு வரும் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோடு இருவரின் பயணமும் தொடர்ந்தது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு. (336)
நேற்று இருந்த ஒருவன் இன்றில்லை என்னுமளவிற்கு நிலையாமையைப் பெருமையாகக் கொண்டது இந்த உலகம்.
Comments
Post a Comment