நீர்க்குமிழி
நீர்க்குமிழி
- முடிவிலி
ஒலக்கூர் ஏரியிலிருந்து சிறுதாமூர் நோக்கி அடித்துக் கொண்டிருந்த காற்று, வெயிலின் தாக்கத்தில் ஈரப்பதத்தை ஏற்றிக் கொண்டிருந்தது. விக்னேஷ் தன்னுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் தோழி வளர்மதியைப் பார்க்க அவளுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அவளுடைய வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே குளத்தங்கரையின் அருகே களிமண்ணில் நீரைச் சிறிது சேர்த்துக் கொண்டிருந்த வளரைப் பார்த்து, "ஏ வளரு, ஏன் இங்க களிமண்ணைப் பிசைஞ்சுட்டு இருக்கெ?" என்றான் விக்கி.
கையில் ஒட்டியிருந்த களிமண்ணை உருண்டையாக்கி, அதில் மேலும் மண்ணை அப்பிவிட்டு, புறங்கையால் தன் முகத்தில் விழுந்த முடியை விலக்கியபடி நிமிர்ந்து தன் நண்பன் விக்கியைப் பார்த்தாள் வளர்மதி. வளர்மதியும், விக்கியும் ஒலக்கூரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படிப்பவர்கள். ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு முதலில் தனித்தனியே சென்றவர்கள் பேச்சுத்துணைக்குச் சேர்ந்து செல்லத் தொடங்கினர். இப்போது, இலவசப் பாசில் பேருந்தில் சென்றாலும், இருவரும் இணைந்தே செல்வார்கள்.
"வா விக்கி, நானும் புள்ளையார் சிலை செய்யப் போறேன். நாளைக்கு அவருக்குப் பொறந்தநாளுல்ல” குழந்தைச்சிரிப்புடன் வந்தது பதில்.
"வளரு, இப்பத்தான் எங்கப்பா சொன்னாங்க, எங்கப்பா காலத்துல அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்தது, இப்ப எல்லாரும் புள்ளையார் சிலையத் தூக்கிட்டு திரியுறாங்கன்னு. வடநாட்டுல தான் இது பேமஸாம். நம்ம ஊரு பண்டிகையே இல்லயாம் தெரியுமா?" கூறியபடி கொஞ்சம் களிமண்ணை எடுத்து, உருண்டையாக்கினான்.
"அது என்னமோ, புள்ளையாரைப் பாத்தா மனசுக்குள்ள நம்ம சாமி இது தான்னு தோனுது. நம்ம பள்ளியோடம் போற வழியில அரசமரத்தடியில, அவரைப் பாக்காத நாளே இல்ல. இதுவரைக்கும் இதெல்லாம் செஞ்சேனா? இந்த வருசம் ஏதோ செய்யணும்னு தோனிருக்கு, எந்த ஊரு பண்டிகையலா இருந்தா என்ன? இந்த வருசம் நானும் செய்யப் போறேன். என் புள்ளையாரும் இந்த ஊரச் சுத்துவாரு. ஏரியில கரைவாரு." என்று வளர் சொல்ல, "சரி வளரு, உனக்குப் பிடிக்குதுன்னா சரி" என்று கூறிய விக்கி, தன் கையில் இருந்த உருண்டையை நீளமாக்கி, தும்பிக்கையாக்கிச் சிலையில் ஒட்டினான். வளர்மதியின் கன்னத்தின் ஓரம் புன்னகை வளர்ந்தது.
"புள்ளையாரை அவ்ளோ புடிக்குமா, வளரு?"
"ஆமா" கண்ணை மூடித் திறந்தாள் வளர்.
"பின்னே ஏன் மூனு நாள் கழிச்சு கொண்டு போயி ஏரியில போடுறியாம், வூட்டுலயே வச்சுக்க வேண்டியது தானே?" விக்கி சிரித்தான்.
சிரித்தவனை முறைத்த வளர், ஓரளவு பிள்ளையார் போல் இருந்த உருவத்தில் ஆங்காங்கு மண் உருண்டைகளை அப்பினாள்.
"சரி, சரி கோச்சுக்காத" என்றவனாய் விக்கியும் சேர்ந்து கொள்ள, சற்று நேரத்தில் வளர்மதியின் கண்ணுக்கு மட்டும் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் ஆனைமுகனாய் மண்சிலை உருப்பெற்றிருந்தது.
“எங்கூட்ல இதக் காய வக்கக் கூட எடமில்ல விக்கி, உங்க வீட்ல மச்சுல காய வச்சு தர்றியாடா?” என்றாள் வளர்.
“சரி புள்ள, ஆனா, இப்பவே இதத் தூக்க முடியாதுல்ல, கொஞ்ச நேரம், இப்படியே குளத்து மேடையில காய வைப்போம். கொஞ்சம் காஞ்சதும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போவோம்.”
“ஆங், அது வரைக்கும் என்ன செய்யுறதாம்?”
“நீ உன் புள்ளையாரைப் பாத்துக்க, நான் அப்படியே குளத்துல குளிக்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே தன் மேல் சட்டையைக் கழற்றிக் குளத்து மேடையில் போட்டபடி, ஓடிச் சென்று குளத்தில் குதித்தான். தரையைத் தொட்டுவிட்டு நீருக்கு மேல் வந்து பார்த்தான். வளரும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் தன் வீட்டில் காய வைத்த பிள்ளையாரைக் கையில் எடுத்துக் கொண்டு வளரின் வீட்டுக்கு வந்தான் விக்கி. அவன் கிரிக்கெட் விளையாடப் போகும் போது அணியும் தொப்பி முகத்தில் விழுந்த வெயிலைத் தடுத்து கண்ணில் நிழல் காட்டியது. வீட்டு வாசலில் அமர்ந்து வழியையே பார்த்துக் கொண்டிருந்த வளர்மதி, விக்னேஷைப் பார்த்ததும் ஓடி வந்தாள். அவளின் கையில் இரு மண் குவளைகள் இருந்தன. ஒன்றில், செம்மண் கலந்து சிவப்பு நிறமும், மற்றதில் சுண்ணாம்பு கலந்து வெள்ளை நிறமும்.
“என்னது இது வளரு?”
“புள்ளையாருக்கு அலங்காரம் செய்ய வேணாவா? கொண்டா என் புள்ளையார” என்றாள் வளர்.
“என்னது உன் புள்ளையாரா? அப்பாக்குத் தெரியாம வூட்டு மொட்டைமாடியில காய வச்சு, காஞ்சு வெடிச்சுடாம இருக்க நெவுலுக்கு மாத்தி பத்திரமா கொண்டாந்தா, உன் புள்ளையாரா? நல்லாருக்கு” என்று பொய்க்கோவத்தில் சொன்னவன் மெல்ல சிரிக்க, “குடுடா” என வாங்கிக் கொண்டாள் வளர்.
பிள்ளையாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, தேங்காய் நாரைத் தூரிகையாக்கி, பிள்ளையாரின் உடலில் ஆடை, துதிக்கையின் கோடுகள், கண்கள் என ஒவ்வொன்றாய் வளரின் கைவண்ணத்தில் வண்ணம் பெற்றன. வீட்டுக்குள் சென்று ஒரு மண் தட்டினை எடுத்து வந்தாள் வளர். தட்டினை வைத்து அதில் சில வெற்றிலைகளை வைத்தாள். அதன் மீது பிள்ளையார் சிலையை வைத்து, அதன்மேல் சில பூக்களை எடுத்து வைத்தாள். விக்கி தெருவோரத்தில் முளைத்திருந்த அருகம்புர்களைப் பறித்து வந்து அவற்றையும் கொத்தாக ஒரு கையில் செருகினான். இருவரும் சிரித்தனர்.
தங்களுக்குக் கிடைத்த சிறு சிறு பொருட்களைக் கொண்டு பிள்ளையாரை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் அந்த இருவரும். விக்கி, எங்கிருந்தோ சில மரக்கட்டைகளை எடுத்து வந்தான். அவள் வீட்டின் முன்னே ஒரு இடத்தில் குழி தோண்டி அதில் நான்கு மரக்கட்டைகளை நட்டான். பின்பு அவற்றை இணைக்கும் விதமாக மற்ற இன்னும் சில கழிகளைக் குறுக்காகக் கட்டினான். குறுக்குக் கழிகளின் மேலே மேலும் சில கழிகளை வைத்துக் கட்டினான்.
“ஏன்டா இத இங்க கட்டிக்கிட்டு இருக்க?” என்றாள் வளர்.
“புள்ளையார வைக்க, பாரு. இங்க ஒரு முக்காலி போட்டு வச்சோம்னா, உள்ள வந்து பாக்குறதுக்கு, கும்புடுரதுக்கு எல்லாம் வசதியா இருக்கும்.”
“அதெல்லாம் முடியாது. என் புள்ளையாரை ஊருல உள்ள எல்லாரும் பாக்கணும். அதுக்கு மேட்டுத் தெருவுல புள்ளையார் மேடை போட்டிருக்காங்கள்ல, அங்க தான் நம்ம புள்ளையாரையும் வைக்கணும்.”
வளரும், விக்கியும் செய்வனவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வளரின் அம்மா, “என்னப்பா, இதென்ன வூட்டுக்கு முன்னாடி பந்தல் நட்டு வச்சிருக்கீங்க?” என்றாள். கேணியிலிருந்து தண்ணீர்க் குடத்தை எடுத்து வந்த வளரின் அம்மாவைப் பார்த்து, “புள்ளையாரை இங்க வைக்கலாம்னு நெனச்சேன்மா, ஆனா, வளரு புள்ளையார் மேடையில வைக்கலாம்னு சொல்றா” என்றான் விக்கி.
“ஏ புள்ள, இவ்ளோ செய்யுறியே, அங்க மேடையில எவ்ளோ எவ்ளோ பெரிய சிலையெல்லாம் வச்சிருக்காங்க, அங்க இந்தச் சின்ன சிலைய வைக்க விடுவாங்களா? என்னமோ, சொல்றத சொல்லிட்டன், அப்புறம் அழுதுட்டு வந்து நிக்காத” என்றாள். “அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றாள் வளர்.
விக்கி, “நானும் கூடப் போறன்ல, நான் பாத்துக்குறேன். வளரோட புள்ளையாரும் இந்தாருசம் மேடையில இருக்கும். ஊரைச் சுத்தும்” என்று சொல்ல, வளரும் கூட சேர்ந்து, “ஏரியில கரையும்” என்று சொல்லிச் சிரித்தனர். இருவரும் ஒரே குரலில் சொல்லியதைப் பார்த்த வளர் அம்மா சிரித்துக் கொண்டே குனிந்து வீட்டுக்குள் சென்றாள்.
“இப்பவே கொண்டு போய் நம்ம புள்ளையாரை மேடையில வைச்சுடுவோம். அங்க எங்கூட கிரிக்கெட் ஆடுற அண்ணனுங்க சில பேர் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லிட்டு நம்ம புள்ளையாரையும் வைச்சுடலாம்.” என்று சொல்லி மண் தட்டில் அழகாய்ப் பூச்சூடி, ஒரு கையில் அருகம்புல் கொண்டு, வலதுபுறம் சுழன்ற தும்பிக்கையோடு இருந்த பிள்ளையாரைக் கையில் எடுத்துக் கொண்டான். இருவரும் மேட்டுத் தெரு நோக்கி நடக்கத் தொடங்கிய சில நொடிகளில் தன் அருகே வளர்மதி இல்லாததைக் கண்டு விக்கி திரும்பினான்.
தனக்கு பத்தடி பின்னே கீழே எதையோ பார்ப்பது போல் குந்தியிருந்தாள் வளர். அவளின் அருகே வரவர அவனுக்கு அவள் அழுவது தெரிந்தது. அவளின் அருகில் வந்து, “ஏ வளரு, புள்ள, என்ன ஆச்சு? வா போகலாம், எந்திரி, ஏன் இப்படி உக்காந்திருக்க?” என்றான் விக்கி.
“என்னன்னு தெரியலடா, திடீர்னு ரொம்ப வலிக்குதுடா” என்று சொல்லி வயிற்றை இன்னும் பிடித்துக் கொண்டாள் வளர்.
“இரு, நான் போயி அம்மாவக் கூட்டியாறேன்” என்ற விக்கி, கையில் பிள்ளையாரைக் கையில் வைத்துக் கொண்டே வீட்டுக்கு ஓடி, வளரின் அம்மாவிடம் சொல்ல, சற்று நேரத்தில் தெருவே கூடிவிட்டது. அனைவரும் நேற்று வரை தனக்குத் தெரிந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் தன்னை ஏதோ புதிதாகப் பார்ப்பது போலவும், தான் ஒரு காட்சிப்பொருள் போலாகி விட்டதாகவும் உணர்ந்தாள் வளர்.
‘தள்ளுப்பா, நவுருப்பா’ என்று சொல்லிச் சொல்லி கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் விக்கியும், அவன் கையில் இருந்த பிள்ளையாரும். கூட்டத்தில் இருந்த ஒரு குரல், “சுகந்தி, வளரு பெரிய மனுசி ஆகிட்டா, இப்ப முதத் தண்ணி ஊத்திடுவோம். தாய் மாமாவுக்குத் தகவல் சொல்லி விடு. அப்புறமா, மத்ததைப் பாத்துக்கலாம்.” என்று கூற, வளரின் அம்மா, “சரிக்கா, வளரு வாம்மா” என்று வளர்மதியைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல, கூட வர முயன்ற விக்கியைத் தெருப் பெண்கள் தடுத்து, “எங்கப்பா வர்ற?” என்றனர்.
“புள்ளையாரு” என்றான் கையில் இருந்த பிள்ளையாரைக் காட்டி.
“அதுக்கு, இங்க வரக்கூடாது” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சென்றவர்களைத் தாண்டி விக்கியின் பார்வை வளரின் மேலே இருந்தது. வீட்டுக்குப் பக்கத்து வழியில் திரும்பும்போது, வளரும் விக்கியைப் பார்த்தாள். விக்கியைப் பார்த்தாளா அல்லது பிள்ளையாரைப் பார்த்தாளா?
சற்று நேரம் நின்று கொண்டிருந்த விக்கி, பிள்ளையாரை எடுத்துக் கொண்டு பிள்ளையார் மேடை நோக்கி நடந்தான்.
மாலை அவன் திரும்பி அவள் வீட்டுக்கு வந்தபோது, தான் கட்டி வைத்திருந்த குச்சியில் பச்சை ஓலை வேயப்பட்டிருந்தது. முன்பு இருந்தது போல கூட்டம் இப்போது இல்லை. அவள் வீட்டின் கூரையின் இடுக்குகளில் இருந்து வெளிவந்த புகை, அவள் அம்மா சமையல் வேலையாய் இருப்பதைக் காட்டியது. மெல்ல ஓலைக்குச்சுக்குள் நுழைந்தான் விக்கி.
பெண்குரலில், "வளரு, என்னடி இது? சேலையெல்லாம்... செம்ம" என்றான் விக்கி. தன் குரலைப் போன்ற குரலைக் கேட்டதும், ஈரம் நீங்காத தலையை ஒருக்களித்துப் படுத்திருந்த வளர்மதி எழுந்து விக்கியைப் பார்த்தாள்.
"விக்கி..." என்றவளின் கண்கள் கலங்கி இருந்தன.
"என்னடி ஆச்சு, ஏன் அழுவுற?" என்றான் தனது குரலில்.
"இன்னும் ஒரு வாரத்துக்கு இது உள்ள தான் இருக்கணுமாண்டா. விளையாடக் கூடாதாம். நிமிந்து பாக்கக் கூடாதாம். என்னென்னமோ சொன்னாங்க. எனக்கு உடம்பெல்லாம் கூசுதுடா" என்று கண்ணைத் துடைத்தவள், "சரி, புள்ளையார் எங்கடா?" என்று கேட்டாள்.
"மேடையில" என்றான் எப்போதும் போல உரத்த குரலில்.
"டேய், ஏன்டா கத்துற? அம்மா வந்துருவாங்க. மெதுவா சொல்லு" என்று குரலைக் குறுக்கிச் சொன்னாள்.
"மேடையில, நம்ம புள்ளையாரையும் வச்சுட்டேன். எத்தனை புள்ளையாரு தெரியுமா? ஒரு புள்ளையாரு செல்போன்லாம் பேசிட்டிருக்காரு." என்று சொல்லிச் சிரித்தான். வளரின் முகத்தில் சிரிப்பு தெரியாததால், அமைதியானான்.
"டே, நானும் பாக்கணும்டா. பூவ அள்ளிப் போடணும், மேடையில நம்ம புள்ளையாரைச் சுத்திச் சுத்தி ஆடணும்னு எவ்ளோ நெனச்சு வச்சிருந்தேன் தெரியுமா?"
"சரி வளரு, வா போலாம்"
"வா போலாம்னா, நான் சொன்னது காதுல வுழலயா? இன்னும் ஒரு வாரத்துக்கு இத வுட்டு வெளிய வரக்கூடாது. அம்மா இங்கயே சாப்பாடு குடுத்துடுவாங்க. நான் வெளிய தலையக் காட்டுனாலே சுத்தி எல்லாம் பாக்குறது போல இருக்கு. கேவலமா இருக்குடா. பயமா இருக்குடா. ஏன்டா பொண்ணா பொறந்தோம்னு இருக்குடா" என்றாள் வலியாய்.
"ஏ அழாத வளரு" என்றவன் சற்று அமைதியாய் அமர்ந்திருந்தான். ஏதோ முடிவெடுத்தவன் போல தலையசைத்துக் கொண்டு, "வளரு, சொல்றத கேளு, நாளைக்குக் காலையில விடியுறதுக்கு முன்னமே நான் வந்துடுறேன். வந்து இந்த சேலையக் கட்டிக்கிட்டு இங்க படுத்துக்கிடுறேன். நீ என் ட்ரெஸ் போட்டுக்கிட்டு, இந்தத் தொப்பிய போட்டுக்கிட்டு அங்க போயி புள்ளையாரைப் பாத்துட்டு வா, பாத்துட்டு வர்றதென்ன, அங்கேயே இரு. எவ்ளோ ஆசையா இருந்த, உனக்குப் பதிலா நான் இங்க இருக்கன்"
மனதுக்குள் மெல்ல சிரிப்பு நுழைந்திருந்தது வளருக்கு. "மூஞ்சி, என் அம்மா வந்து பேச்சு குடுத்தா என்ன செய்வ? வந்துட்டான் ஐடியா சொல்ல"
"மூஞ்சி, என் அம்மா வந்து பேச்சு குடுத்தா என்ன செய்வ?" அவள் குரலில் பேசினான் விக்கி. எப்போதோ விளையாட்டுக்காக, அவளைப் போல குரல் மாற்றிப் பேசியது இன்று இப்படி உதவும் என வளருக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்போது இருவரும் சிரிக்கத் தொடங்கியிருந்தனர். அவர்களின் கண்களில் தெரிந்த சிரிப்பின் சத்தம் அந்த ஓலைக் குச்சியின் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. மனத்தால் இருவரும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“டே என்னடா இது?” என்றாள் கையிலிருந்த நாப்கினைப் பார்த்து.
“டிவியில பாத்ததில்ல, இந்த வெளம்பரம் போடுறப்ப என்னம்மா இதுன்னு அம்மாக்கிட்ட கேட்டிருக்கேன். இப்ப தான் எனக்கே புரிஞ்சுது. சரி, சரி, இந்தா இந்தப் பேக்ல என்னோட சட்டை பேன்ட் இருக்கு. மாத்திக்கோ. இதான் முக்கியம், தொப்பி. எப்பவும் இதக் கழட்டாத. சரியா? நீ ட்ரெஸ் மாத்திட்டன்னா, பையை வெளிய காட்டு, நான் வந்துடுறேன் சரியா” என்று பையினை வளரிடம் கொடுத்து விட்டு, வீட்டுக்குப் பக்கத்து சந்தில் நுழைந்து நின்றான், சுற்றும் முற்றும் பார்த்தவனாய். இன்னும் விடிவதற்கு முக்கால் மணி நேரம் இருந்தது. தெருமுனையில் இருந்த டீக்கடையும் பிள்ளையார் மேடைக்குச் சென்றிருந்ததால், தெருவே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. குளிருக்குக் கையினைத் தேய்த்து ஊதிக் கொண்டு, உடலைக் கொஞ்சம் குலுக்கிக் கொண்டான். ஓலைக்குச்சில் இருந்து பையினை வெளியே காட்டினாள் வளர்.
குச்சுக்குள் வந்த விக்கி, வளரைப் பார்த்து, “உன்ன பொண்ணுன்னு யாரும் சொல் முடியாது. தொப்பியில யாரும் கைய வைக்க விடாத, நீயும் தொப்பிய கழட்டாத, கூட்டத்துல சேந்து கத்துறது சரி. மத்தபடி தனியா பேசாத, முடிஞ்சா ஆம்பள குரல்ல பேசு.” என்று அவன் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டினாள் வளர்.
“ஏ வளரு புள்ள, மாட்டிக்க மாட்டல்ல” என்றான் விக்கி.
“நீ மாட்டிக்காம இருடா” என்றாள் வளர் வலுவான கரகரத்த குரலில்.
“இது போதும். சரி போ. இந்தப் பையையும் எடுத்துட்டுப் போ”
விக்கி தன் மேல் சட்டையை மட்டும் கழட்டி, ரவிக்கையைப் போட்டுக் கொள்ள, அவன் பேண்ட்க்கு மேலேயே சேலையைக் கட்டிவிட்டு விட்டாள் வளர். ஏற்கனவே தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த நீளமான சவுரிமுடியை எடுத்து போட்டுக் கொண்டான் விக்கி.
“அழகா இருக்கடா விக்கி” என்றாள் வளர்.
“ஓட்டுறியா, டேய் இப்ப நீ தான் விக்கி” என்றான் வளரின் குரலில்.
சிரித்துக் கொண்டே குச்சில் இருந்து வளர், விக்கியாக வெளியேறி பிள்ளையார் மேடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். மெல்ல அடிவானம் சிவந்து விடியத் தொடங்கி இருந்தது.
“ஏ வளரு, இன்னுமா தூங்கிட்டு இருக்க, எழுந்திரு. போயிக் குளிச்சுட்டு வா, மாத்து சேலை புறக்கடையில வச்சிருக்கேன். இந்தத் துணிய அங்கயே போட்டுரு. நான் துவைச்சுக்கிறேன். இவ்ளோ சொல்லறேன், எதாச்சும் சொல்றியா?”
“இதோ வர்றேன்மா” என்ற குரல் வந்தது.
“சரி, வீட்டுப் பக்கத்து சந்து வழியா புறக்கடைக்குப் போயிடு. சரியா?”
“சரிம்மா” என்றான் விக்கி.
சேலையைத் தலையில் முக்காடு போல போட்டுக் கொண்டு புறக்கடை நோக்கிச் சென்றான். உள்ளே நுழைந்து தட்டியை எடுத்து மூடினான். உள்ளே ஒரு தொட்டியில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு வாளியும், கப்பும் இருந்தன. தலைக்குச் சற்று மேல் வரை மறைந்திருந்த தட்டிக்கு மேல் வானம் வெளுத்திருந்தது. சேலையைக் கழற்றி விட்டு, கீழே இருந்த செங்கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு, குளிர்ந்த நீரை எடுத்துத் தலையில் ஊற்றினான். எங்கோ காற்றில் நான்கு தெரு தள்ளி கட்டியிருந்த ஒலிப்பெருக்கியில் பாடிக் கொண்டிருந்த ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண’ பாடல் தலைக்கு மேலே கேட்டது விக்கிக்கு.
‘பிள்ளையார் பட்டி வர வேண்டும்’ என்று பாடும் பாட்டோடு சேர்த்துப் பாடி ஆடியபடி பூக்களை எடுத்து தனது பிள்ளையாரின் மீது போட்டுக் கொண்டிருந்தாள் வளர். வண்ணப்பொடிகளை எடுத்து அங்கும் இங்கும் எடுத்துத் தூவியபடி ஆடிக் கொண்டிருந்த வளர் எனும் விக்கியின் மேல் ஊரின் அத்தனை பேரின் கண்ணும் பட்டது. முகம் முழுதும் வண்ணப்பொடிகளால் தூவிக் கொண்டு, சுற்றிச் சுற்றிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள் வளர் விக்கியாக.
விக்கி ஏற்கனவே தன் அப்பாவிடம்,வளர் செய்திருந்த சிலையைப் பற்றியும் சொல்லியிருந்தான். வளர் பெரியவளாக ஆனதையும், அதனால் அவளுடைய சிலையை பிள்ளையார் மேடையில தான் அவளுக்காக வைக்கப் போவதாகவும் சொல்லியிருந்தான். அவரும் சரியெனச் சொல்லியிருந்ததை வளருக்கும் சொல்லியிருந்தான். அதனால் அன்று முழுவதும் தன் வசம் இருந்ததை எண்ணி எதைப் பற்றியும் கவலையில்லாதவளாகத் துள்ளித் துள்ளி ஆடிக் கொண்டிருந்தாள். வைத்திருந்த ஒவ்வொரு பிள்ளையார் சிலையின் அருகிலே சென்று தொட்டுக் கும்பிட்டாள். சுண்டல், கொழுக்கட்டைகளை எல்லாருக்கும் கொடுத்தாள். தானும் சாப்பிட்டாள்.
இருபது அடி பிள்ளையாருக்கு அருகில் இரண்டடியில் நின்று அமர்ந்திருந்தது வளரின் பிள்ளையார். மேடையிலேயே பெரிதும் சிறிதுமாக பன்னிரண்டு பிள்ளையார் சிலைகள் இருந்தன. வளர் எனும் விக்கியின் சிலை தான் சிறியது. மற்றவை எல்லாம் பல வண்ண பெயிண்டுகளால் மின்னிக் கொண்டிருந்தன. செல்போன் பேசிக் கொண்டிருந்த பிள்ளையார் சிலை குழந்தைகளைக் கவர்வதாய் இருந்தது. பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் கூட்டமும் ஆட்டமும் கொஞ்சம் குறைந்திருந்தாலும், அவ்வளவு ஆடியும் ஆற்றல் வற்றாதவளாக உற்சாகத்தோடு இருந்தாள் வளர்.
காலையிலிருந்து குச்சுக்குள் யாரோடும் பேசாமல் படுத்திருந்த விக்கிக்கு, குச்சுக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு காதில் விழுந்தது.
“எப்பக்கா விசேசம் வைக்குறதா இருக்க?” என்றாள் வளரின் பக்கத்து வீட்டு வள்ளி.
“ம்ம்ம், வைக்கணும். அந்த மனுஷன் போனதுலேந்து கிடைக்குறதே வயித்துக்கும் வாய்க்கும் இருக்குது. எங்க அண்ணனுக்குச் சொல்லி விட்டுருக்கேன். விக்கிரவாண்டியில தான் இருக்காரு. விநாயகர் சதுர்த்தி முடிஞ்சு வரேன்னு சொல்லிருக்காரு. நம்ம காலத்துல இதெல்லாம் எங்க இருந்துச்சு. இப்ப என்னடான்னா தெருவுக்கு தெரு சிலைய வச்சு... ம்ம்ம்... வளரு கூட ஒரு சிலை செஞ்சு வச்சிருந்தா. கடசில கூட படிக்குற விக்னேசு தான் வச்சிருந்தான். என்ன ஆச்சோ?”
“ஓ, அது வளரோட சிலை தானா? இருபதாயிரம் செலவு செஞ்சு சிலை செஞ்சவனே செவனேன்னு இருக்கான். மண்ணுல ரெண்டடி சிலைய வச்சு இந்த விக்கினேசு ஆடுற ஆட்டம் இருக்கே, ஏன் கேக்குறீங்கக்கா?”
“ரொம்ப ஆச வச்சு செஞ்சா, ஆனா, பெரிய மனுசி ஆனதுல இப்படி குச்சுல உக்காறதா போச்சுது” என்ற வளர் அம்மா, “கேட்டுதா வளரு, உன்னோட புள்ளையாரு மேடையில தான் இருக்குதாம். விக்கி அதுக்கு பூ போட்டு ஆடிக்கிட்டிருக்கானாம்.” என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள்.
“சரிம்மா, நான் தான் பாக்க முடியல, நாளைக்காச்சும் நான் போயி பாத்துட்டு வரவா?” என்றான் விக்கி, பெண் குரலில்.
“கத கெட்டுது போ, இன்னும் ஒரு வாரத்துக்கு உள்ள தான் இருக்கணும். வளரும்மா, அம்மா சொல்றதக் கேளும்மா”
“ம்ம்ம்” என்றது மட்டும் கேட்டது.
“வள்ளி, நீ போயிப் பாத்துட்டு வந்தியா?” என்றாள் சுகந்தி.
“இல்லக்கா, எங்கூட்டுக்காரரு தான் போயிட்டு வந்து சொன்னாரு. நான் அஞ்சு மணிக்கு மேல தான் போலாம்னு இருக்கேன். தெருவுல எல்லாரும் சேந்து போறோம்” என்றால் வள்ளி. உள்ளே கேட்டுக் கொண்டிருந்த விக்கிக்குப் பிள்ளையாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றியிருந்தது. விக்கியாக இருக்கும் வளரையும் பார்க்க வேண்டும் போலிருந்தது.
மெல்ல இருட்டத் தொடங்கியது. பிள்ளையார் மேடையைச் சுற்றியும் சோடியம் மின் விளக்கின் ஒளியில் சிலைகள் மின்னிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே ராட்டினங்கள், சொப்பு சாமான் கடைகள், ஐஸ் வண்டியென ஊரில் இருக்கும் அனைவரையும் அங்கிழுக்கும் பலவும் இருந்தன. மேடைக்குக் கீழ் தாரை தப்பட்டைகள் இடித்து முழங்க, மேடையில் வளர் ஆடிக் கொண்டிருந்தாள், வண்ணப் பொடிகளைத் தூவியபடி.
கூட்டத்துக்கு நடுவே சேலையைக் கட்டிய சிறு பெண்ணுருவம் மெல்ல நகர்ந்து மேடையை நோக்கி வந்தது. மேடைக்குப் பக்கம் வர வர மேடையில் ஆடிக் கொண்டிருந்த வளர் தெரியத் தொடங்கினாள். “எப்படி ஆடுறான்யா இந்தப் பையன்” எனச் சில குரல்கள் கேட்டன.
திடீரென தாரை தப்பட்டைகள் நின்றன. முழக்கங்கள் ஓய்ந்தன. ஆடிக் கொண்டிருந்த வளர் ஆட்டத்தை நிறுத்திவிட்டு, என்ன ஆனது எனப் புரியாமல் மேடையில் இருக்கும் சிலைகளோடு சிலையாய் நின்றாள். வானத்தில் மேகங்கள் கூடி சில நொடி பகலானது போன்ற வெளிச்சத்தைக் கொடுத்த மின்னலொன்று வந்து போக, சில நொடிகள் கழித்து இடியோசை முழங்கியது. தனது சிலைக்குப் பக்கத்தில் பக்கத்து வீட்டு வள்ளியக்கா, யாரோ ஒரு சேலை கட்டிய பெண்ணிடம், ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள். கூட்டம் மொத்தமும் அந்தச் சிறுமியிடம் “ஏன் தொட்ட? தீட்டுன்னு தெரியாதா? ஏன் இங்க வந்த?” எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வளர்மதிக்கு நிகழ்ந்தது என்ன என்று புரிந்தது. தலையைக் குனிந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் விக்கி.
“வளரு, நீ தான் இந்தச் சிலைய செஞ்சே, அதுக்காக, தீட்டுக்காலத்துல வந்து சிலைய தொடலாமா?” என்றாள் வள்ளி.
மேடையின் கீழிருந்த பலரும், கண்டபடி பேசத் தொடங்கினர். வளருடைய பிள்ளையார் சிலை தீட்டுப் பட்டது எனச் சொல்லித் தூக்கி எறியப்பட்டது. மேடையில் இருந்த வளரும், பெண் வேடத்தில் இருந்த விக்கியும் ஓடிச் சிலையின் அருகே சென்றனர்.
“டே விக்கி, அந்தச் சிலைய தொடாதடா” என்று பலரும் சொல்ல, வளரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் முகத்தில் இருந்த வண்ணங்கள் ஊடே கோடிட்டு நிலத்தில் விழுந்த நேரத்தில் வானமும் மழைத்துளிகளைக் கொட்டத் தொடங்கியது. மழை நிலத்தில் மேடையிட்டு ஆடத் தொடங்கியது. சற்று நேரத்தில் தெருவில் ஆங்காங்கே குளம் கட்டியது போல நீர் தேங்கத் தொடங்கியது. தலையைக் கீழே குனிந்து தனது பிள்ளையார் சிலையைப் பார்த்த வளரின் தலையில் இருந்த தொப்பி கீழே விழ, மழை அவள் முகத்தைக் கழுவியது. விக்கியின் தலையிலிருந்த சவுரிமுடியும் அவிழ்ந்தது. இருவரின் கண்ணீரிலும், விழுந்த மழையிலும் பிள்ளையார் சிலை கரையத் தொடங்கியது. கரைந்து நீர்க்குமிழ்களாகிக் கொண்டிருந்த பிள்ளையார் சிலையை வளரும், விக்கியும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுவரை மேடையில் ஆடி எல்லா பிள்ளையார்களையும் தொட்டுக் கொண்டிருந்தது விக்கி அல்ல வளர் என்று உணர்ந்த ஊர் மக்கள் உறைந்து நிற்க, மழைத்துளிகள் நீர்க்குமிழிகளை உருவாக்கியும், உடைத்தும் கொண்டிருந்தது.
Super 🥰
ReplyDelete