அரண் - குறள் கதை

    அரண் 

- முடிவிலி

(ஏறைநாடு கதை 4)



தன் மீது மணித்துளிக்கொரு முறை ஓயாது வந்து மோதிக் கொண்டிருக்கும் மேற்கடலின் அலைகள் தன் கால்விரல் தொட்டு விளையாடுவதாக நினைத்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது ஏறை நாட்டின் மேற்குப் புற அரணாய் நின்று காக்கும் ஏறை மலை. பல நூறு அடிகள் உயரத்திற்கு வெறும் பாறைகளாய் மேற்கடலுக்கு முதுகு காட்டி நிற்கும் ஏறை மலை, அந்த உயரத்தில் இருந்து கிழக்கு நோக்கி சரியும் சரிவுகளில் மரங்களும், சோலைக்காடுகளும் நிறைந்து வளம் பொருந்தியதாக விளங்கியது. ஏறை மலையில் வீழும் மழை மலையின் உச்சியில் ஏரியாகத் தாங்கி, அதிலிருந்து வழியும் இரு ஆறுகளான செவ்வாறு, வளவாறு என ஓடி, ஏறை நாட்டை மேலும் வளமாக்கின. ஏறை மலையில் சிறுகுன்றூர் துவங்கி ஏலனூர் வரை பரந்திருந்த ஏரியின் இருபுறத்திலிருந்து வழியும் செவ்வாறு, வளவாறு ஆகியன மீண்டும் இணையும் இடத்தில் இருந்தது ஏறைக்கோன் ஆட்சியில் மக்கள் மகிழ்வோடு வாழும் ஏறை நாட்டு தலையூரான செவ்வூர். செவ்வூரின் கிழக்கே மலைப்பகுதியிலிருந்து கிடைக்கும் தினை, மிளகு, ஏலம், செவ்வூரின் மேற்கே செவ்வாற்றின் வளத்தால் விளையும் வாழை, நெல், மஞ்சள் ஆகியன ஏறை நாட்டை வளமிக்கதாகவும், தன்னைச் சுற்றி இருக்கும் பேரரசுகளான வடநாடு, மருதநாடு, வேழநாடுகளின் இடத்தே கையேந்தா நிலையையும் ஏறை நாட்டிற்கு வழங்கி இருந்தன. 

தன் தந்தை ஆதன் வளவனின் நற்பெயர், புகழுக்கு ஏதொரு களங்கம் விளைந்து விடாவண்ணம் நல்லாட்சி வழங்கி வந்தான் ஏறை நாட்டின் மன்னன் ஏறைக்கோன். தன்னைச் சுற்றித் தன்னைப் புகழும் கூட்டத்தால் நாட்டில் நிகழ்வுகள் என்னவென்று அறியாமல் கொடுங்கோலோச்சும் மன்னர்களுக்கு இடையே, மக்கள் நிலையையும், அவர்களின் தேவையையும் அறிந்தவனாகவும், அவர்களின் மகிழ்வுக்கும், நல்வாழ்வுக்கும் செய்வான அறிந்து காக்கும் காவலனாக விளங்கினான் ஏறைக்கோன்.

                என்றும் போல அரசவை மன்றத்து நடுவே ஏறைக்கோன் அமர்ந்திருக்க, பணியாள் ஒருவன் உள்ளே மன்னனுக்கு மதிப்பளித்து நின்றான். ஏறைக்கோன் கூற வந்த செய்தி என்னவென்று வினவ, “வடநாட்டுத் தூதுவர் பிரகாசன் தங்களை நேரில் கண்டு பேச விழைகிறார், மன்னாஎன்றான் பணியாள். ஏற்கனவே தமது ஒற்றர்கள், எல்லைக்காவற்படை வழியே தமக்கு இவர் வரும் செய்தி ஏற்கனவே தெரிந்திருந்தபடியால், அவரை எதிர்பார்த்தவனாக, “வரச் சொல்லுங்கள்என இசைவு தர, சற்று நேரத்தில் பிரகாசன் தனது பணியாட்களுடன் சில தட்டுக்களில் பரிசுப் பொருட்களுடன் அரசவை மன்றத்திற்குள் வந்தான். பரிசுப் பொருட்கள் முன்னே வரிசையாக வைக்கப்பட, புன்னகையோடு வரவேற்ற மன்னனுக்கு மதிப்பளித்து நின்றான் பிரகாசன். அவருக்கு அமர இருக்கை அளிக்கப்பட, பிரகாசன் அமர்ந்தான். சில நொடிகள் அவையில் இருந்தோர் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள எழுந்த மெல்லிய ஓசை, மன்னன் பேசத் தொடங்கியதும் அடங்கியது.   

"கூறுங்கள் தூதுவரே, தாங்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி என்ன?" 

பிரகாசன், "ஏறை மலையின் காடுகளும், செவ்வாற்று நீரும் வளம் வாரிக் கொடுக்கும் ஏறை நாட்டு மன்னர் ஏறைக்கோன் அவர்களே, உங்களுக்கு எங்கள் வட தேசத்து மன்னர் வாரி வழங்கும் வள்ளல், தவவலிமை கொண்டு நாட்டை நல்வழி நடத்தும் பேரரசர் திமோரதரின் சிறு அன்பளிப்பு இவை" எனக் கூறி, தம் பணியாட்களுக்குக் கண்ணால் இசைவு தர, உடன் பணியாட்கள் பரிசுப் பொருட்கள் இருந்த தட்டுக்களின் மூடியிருந்த பட்டுத்துணியை நீக்கினர். 

ஒவ்வொரு தட்டிலும், ஒவ்வொன்றை மிஞ்சும் விலையுயர் அணிகலன்கள், நகைகள், கற்கள் மின்னின. அவையோரின் பார்வை பரிசின் மீது குவிந்ததைக் கவனித்த பிரகாசன் புன்முறுவலுற்றான். ஏறைக்கோன் முகத்தில் ஏதும் மாற்றம் காண்பிக்காதவனாய், சிறு புன்னகை தவழ, "கூற வந்த சேதியை நேரடியாய்க் கூறலாமே, தூதுவரே" என்றான். 

"மன்னா, எங்கள் மன்னர் உங்கள் நாட்டோடும், நாட்டின் மன்னரான உங்களோடும் நட்பு பாராட்ட விழைகிறார், அதன் அடையாளமாகவே என்னை இங்கே அனுப்பியுள்ளார். வேழ நாடும், மருத நாடும் ஏறை நாட்டுக்கு ஏதும் தீங்கிழைக்க நினைத்தால் உங்களுக்கு உதவி இழைக்கும் கைகளாக எமது திமோரதரின் கைகள் என்றுமிருக்கும் என்பதைக் கூறும்படி தூது அனுப்பி வைத்தார்

"என் தந்தை காலத்திற்கு முன்னர், ஏறை நாட்டுக்கும், மருத நாட்டுக்கும் வடக்கே இருந்த பல சிற்றரசுகளை ஒன்றிணைத்து வளர்ந்த வடநாட்டு மன்னர் திமோரதரின் நட்பு கிடைப்பதில் மகிழ்வே. ஆனால், மருத நாட்டிலிருந்தும், வேழ நாட்டிலிருந்தும் தற்போது ஏறை நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லையே

"மன்னா, தாங்கள் அறியாதது ஒன்றும் அல்ல, அரசியலில் நிலையான எதிரி என்று எவரும் இல்லை. எனவே இன்று அச்சுறுத்தல் இல்லாதது போல் இருப்பினும், திமோரதரின் ஆசியும் நட்பும் என்றும் தங்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே வந்தோம்" என்றான் பிரகாசன். 

"பிரகாசரே, தாங்கள் கூறுவதைப் பார்த்தால், திமோதரர் ஏறை நாடு நட்புடன் இருக்கிறதா இல்லையா என்று ஆய்ந்தறியக் கூறியது போல் உள்ளதே" என்று ஏறைக்கோன் கூற, பிரகாசனின் முகத்தில் இருந்த செருக்கு நிறைந்த சிரிப்பு அகன்றது.

"இல்லை மன்னா, இரு நாட்டு நட்பினை வலுப்படுத்துவதற்கென ஒரு சந்திப்பு, அவ்வளவே. மேலும், தங்களை நேரில் சந்திக்கவும் பேரரசர் திமோரதர் ஆர்வமாய் உள்ளார். அதனையும் தெரிவித்துச் செல்லவே என்னைத் தூது அனுப்பியிருக்கிறார்." என்றான் பிரகாசன். 

"அடடா, அப்படியா?" என்று கூறியபடி இடியிடியெனச் சிரித்த ஏறைக்கோன்,  "பிரகாசரே, நட்பு என்பதனைப் பரிசளித்து வாங்கிவிட முடியும் என்று நினைத்து விட்டீரோ?" என்றார். 

"மன்னா!"

"தாங்கள் வந்த உண்மையான நோக்கத்தையும் யாம் அறிவோம். வடக்கே இருந்த பற்பல குறுநாடுகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி, வட நாடு என்று பேரரசாய் ஆக்கிய பின்னும், ஆவல் தீராது, தெற்கும் பிடிக்க முயலும் திமோரதர்க்கு தெற்கில் நுழைய இரு வாயில்கள், ஒன்று பரப்பில் அகண்ட மருத நாடு, இரண்டு மேற்கில் மலையை ஒட்டிய சிறுநாடான ஏறைநாடு. ஏறைநாட்டுடன் நட்பென்ற பெயரில் உள்நுழைந்து வேழ நாட்டின் மீது படையெடுத்து வீழ்த்துவதே உங்கள் எண்ணம்" என்று ஏறைக்கோன் கூறக் கூற, பிரகாசனின் கண்களில் அச்சமும் சூழ்ச்சியும் மாறி மாறி வந்து போயின.

பிரகாசன், "மன்னா, அரசின் எல்லையை விரிவு செய்தல் எல்லா அரசுகளும் செய்வன தானே, வேழ நாட்டை திமோரதர் கைப்பற்றினால் அதற்கும் தாங்களே அரசராய் இருப்பீர்" என்றான்.

"எப்படி ஏற்கனவே நாட்டினைத் தங்களிடம் இழந்து, வெறும் இறை பெற்று தங்கள் மன்னருக்கு அளிக்கும் குறுநில மன்னர்கள் போலவா?" என்று ஏறைக்கோன் கேட்க, "மன்னா..." என்று குரல் உயர்த்திய பிரகாசனைக் கண்டு, "நிறுத்துங்கள் உங்கள் பொய்களின் அணிவகுப்பை" என்ற ஏறைக்கோன் தொடர்ந்தார்.

"வாரி வழங்கும் வள்ளல், ஆனால், இறை என்ற பெயரில் மக்களைக் கொள்ளை அடிப்பவர், தவவலிமை கொண்டவர், ஆனால் தமக்கு அடிபணியாதவரை அடித்து ஒடுக்குபவர். உம் நாட்டிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க ஓடிவரும் எளிய மக்கள் சொல்வர் தவமும் தானமும் செய்து நல்வழி நடத்துவதாகத் தாங்கள் கூறும்  தங்கள் அரசர் கூறும் பொய்களையும், புரட்டுகளையும். நாட்டில் பாதிக்கு மேற்பட்டோர் பட்டினியால் வாட, அடுத்த நாட்டின் மீது போர் தொடுக்க முயல்பவர் தானே. எம் நாடு சிறிதென நினைத்துத் தானே இங்கே வந்தீர். அளவில் சிறிதெனினும், மறத்திலும், மானத்திலும் உயர்ந்தது எங்கள் ஏறைநாடு. சென்று சொல்லுங்கள் தங்கள் பேரரசரிடம். சிறுநாட்டு மன்னன் ஏறைக்கோன் தாங்கள் கட்டவிழ்த்த பொய்களில் வீழாதவர் என்றும், உண்மையிலேயே வீரன் என்றும்" என்று முழங்கிய ஏறைக்கோனின் சொற்களில் அவையே ஆர்ப்பரித்தது. 

"தலைமைக்காவலரே, வடநாட்டுத் தூதுவரிடம் அவர் கொண்டு வந்த பொருட்களைத் திருப்பிக் கொடுத்து, அவரை வடநாட்டு எல்லை வரைக் கொண்டு விட்டு விட்டு வாருங்கள்" என்று கட்டளை பிறப்பித்த ஏறைக்கோன், சற்று இடைவெளிவிட்டு, "காவலரே, பிரகாசர் தங்களுடன் வரும் வழியில் மேற்கொண்டு பொய்யுரைத்தால், அவர் கொண்டு வந்த பட்டுத்துணி வைத்து அவர் வாயைக் கட்டிக் கொண்டு விடுங்கள்" என்று கூற அரசவை மீண்டும் ஒரு முறை சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கொடுங்கோலன் திமோரதனின் பகை போராக ஏறை நாட்டு எல்லையில் வந்து நிற்கும் என்று உணர்ந்திருந்தான் ஏறைக்கோன். இயற்கை அரணான ஏறை மலை ஒருபுறம் காக்க, அவனிடம் இருக்கும் உண்மையும், மக்களும், படை வீரர்களும் ஏறைக்கோன் மீது வைத்திருக்கும் மெய்யன்பும் ஏறைநாட்டை அரணாய்க் காக்குமென்று உளமார நம்பினான் ஏறைக்கோன்.


மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை. 

குறள் எண் : 295

அதிகாரம் : வாய்மை

இயல் : துறவறவியல்

ஏறைநாடு கதைகள் :1: முன்னொரு காலத்தில்... | 2: ஆ...! | 3: யாருக்கு நீதி? | 5 : வஞ்சகன் | 6 : திகழொளி

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka