எனக்குத் தெரியுமே - குறள் கதை
எனக்குத் தெரியுமே
- முடிவிலி
அந்த வெள்ளை நிற battery operated வண்டி, K7 காவல் நிலையத்தின் முன் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. வண்டியில் அமர்ந்தவாறே தலையை மட்டும் சாய்த்தபடி இருந்த செல்வத்தின் கண்கள் இரண்டும் சில நொடிகள் காவல் நிலையத்தை மேய்ந்தன.
காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த காவலர் குமார், "யாருபபா அது?" எனக் கேட்க, செல்வம் வண்டியைச் சற்று முன்னெடுத்து ஓரம்கட்டி நிறுத்தினார். வண்டியில் இருந்து இறஙகிய செல்வம், தனது pant packetஐத் தடவிச் சரிபார்த்தபடி, காவலரை நோக்கி வந்தார்.
"யாருப்பா, என்ன வேணும்?" என்றார் குமார்.
"சார், நான் இந்த ஏரியா கார்பரேசன் ஸ்வீப்பர், இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்."
"என்ன மேட்டரு, என்கிட்டயே சொல்லுப்பா, ஆமா, எப்பவும் ஒரு தள்ளுவண்டியில தான வருவீங்க? இப்ப battery வண்டியா? நல்லா இருக்குய்யா"
"ஆமாங்க, இப்பதான் கொடுத்தாங்க. கொஞ்ச நாள் ஆச்சு, நைட்டு சார்ஜுல போட்டா போதும்" என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார் செல்வம்.
"சரிப்பா, என்ன வேணும்னு சொல்லவே மாட்டுறியே?" எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்தார் துணை ஆய்வர் கண்ணன்.
அவரைக் கண்டதும், செல்வம், "வணக்கம்யா" என்று கூற, பதிலுக்குத் தலையசைத்த கண்ணனைப் பார்த்து, "நம்ம ஏரியா ஸ்வீப்பரு, உங்ககிட்ட ஏதோ சொல்லணுமாம்" என்று சொல்லிய குமார், செல்வத்தைப் பார்த்துக் கண்ணசைக்க, செல்வம் தயக்கத்துடன் தனது pant packetல் கைவிட்டு ஒரு தங்கச்சங்கிலியை எடுத்தார்.
"ஐயா, எப்பவும் போல இன்னிக்கு ஏரியால வீடுகள்ல குப்பை எடுத்துட்டு வந்தப்ப, தெருமுனையில குப்பைத் தொட்டி பக்கத்துல ஒரு கட்டி வச்ச plastic பை இருந்துச்சு. குப்பைத் தொட்டியில குப்பை போட வந்துட்டு, குப்பைத் தொட்டி பக்கத்துல வச்சுட்டுப் போயிட்டாங்க போல. இப்படி இருப்பதையும் எடுத்து என் வண்டியில எடுத்துக்குறது வழக்கம். இந்த பையை எடுத்துக் கொட்டும் போது, அதோட முடிச்சு அவுந்து விழுந்த இடத்துல பளீர்னு மின்னுச்சு. என்னன்னு எடுத்துப் பாத்தா, இந்தத் தங்கச் சங்கிலி சார். கொஞ்ச நேரம் யாராச்சும் தேடி வருவாங்கன்னு wait பண்ணேன். யாரையும் காணோம். எப்படியாது இத உரியவங்க கிட்ட சேக்கணும், அதான் இங்க வந்தேன்யா" என்று படபடவெனப் பேசி முடிக்க, அவரின் கையில் இருந்த தங்கச் சங்கிலியைப் பார்த்த குமாரும், கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கண்ணன், "எப்படியிருந்தாலும் நாலஞ்சு பவுன் இருக்கும் போலயே?" என்றார்.
"ஏம்ப்பா, நீ இத எடுத்தப்ப யாராச்சும் உன்ன பாத்தாங்களா?" என்றார் குமார்.
"இல்ல சார், பொதுவாவே எங்கள யாரும் கவனிக்கவே மாட்டாங்க. அதுவும் குப்பைத் தொட்டி பக்கத்துல இருக்கும்போது" என்ற செல்வம் சற்று நிறுத்தி, "இல்ல சார், யாரும் பாக்கல" என்றார்.
"யாரும் பாக்கலன்னா, இத நீயே எடுத்துக்க வேண்டியது தானே?" என்று குமார் கேட்க, கண்ணன், "ப்ச், குமாரு" என்று அதட்டினார்.
"அதெப்படிங்க சரியாகும்? இது என்னோடது இல்லயே, இது யாரோடதுன்னு விசாரிச்சு, அவங்ககிட்டயே சேக்குறது தான சரி, அதான் இங்க கொண்டாந்தேன்." என்ற செல்வம், "நானே அக்கம்பக்கம் இருக்குற வீடுகள்ல கேட்டிருப்பேன். நாங்க விசிலடிச்சு வண்டிய தள்ளிட்டு வரும் போது வெளிய வந்து குப்பை போடுவாங்க, ஆனா, நாங்க எதுக்காவது வீட்டு பெல்லடிச்சா மதிக்கக் கூட மாட்டாங்க. அதுவுமில்லாம, இந்தச் செயினு உங்களுதான்னு கேட்டு, தங்கத்துக்கு ஆசப்பட்டு, ஆமா எங்களோடது தான்னு பொய் சொன்னாலும் என்னால ஒன்னும் செய்ய முடியாது. அதனால தான் இங்க கொண்டு வந்தேன்" என்றார்.
கண்ணன், "சரிங்க, அந்தக் குப்பையில தங்கச்செயின் இருந்துச்சுஙகிற உண்மை யாருக்கும் தெரியாதுல்ல?" எனக் கேட்க, "அந்த உண்மை எனக்குத் தெரியுமே சார்" என்றார் செல்வம்.
கண்ணன் வியப்போடு நெகிழ்ந்தவராய், "உங்க பேரு என்னங்க?" என்று கேட்க, "செல்வம்" என்றார் செல்வம்.
செல்வத்தின் கையைப் பிடித்துக் கொண்ட கண்ணன், "செல்வம், நீங்க தான் உண்மையான தங்கம். யாருக்கும் தெரியலன்னா, யாருன்னாலும் ஒரு நொடி தவற வாய்ப்பிருக்கு. ஆனா உண்மை எனக்குத் தெரியுமேன்னு சொன்னீங்க பாருங்க, வாங்க உள்ளே வாங்க." என்று அழைத்துச் செல்ல, உடன் வந்த குமாரிடம், "இவரை நம்ம ரைட்டர்ட்ட கூட்டிப் போயி statement வாங்கிக்குங்க" என்றார் கண்ணன்.
செல்வம் ரைட்டரிடம் நடந்தவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கண்ணன் தனக்குத் தெரிந்த ஊடக நண்பர்களிடம் தொலைபேசியில் நடந்தவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், தலைமைக் காவலரோடு குமாரையும் செல்வம் பணிபுரியும் தெருவிற்கு விசாரிக்க அனுப்பினார்.
சற்று நேரத்தில் காவல் நிலையத்தில், ஊடகச் செய்தியாளர்கள் சிலர் புகைப்படக்கருவியோடு நிற்க, தலைமைக்காவலரோடு செயினைத் தவறவிட்ட குடும்பமும் வந்து சேர்ந்தனர். அவர்களிடமும் முறைப்படி complaint எழுதி வாங்கப்பட்டு, பின் தங்கச்செயின் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கண்ணனுக்கு நன்றி தெரிவிக்க, "இப்ப இந்தச் செயின் உங்ககிட்ட கிடைக்க முழு காரணமும் அவரு தான், நன்றியை அவருகிட்ட சொல்லுங்க" என்று செல்வத்தைக் கைகாட்ட, "பரவால்லங்க, இதுல என்ன இருக்கு?" என்றபடி செல்வம் நிற்க, புகைப்படக் கருவிகள் ஒலியெழுப்ப, ஒளிவெள்ளத்தில் அந்த நொடி அடுத்த நாள் நாளிதழ்களில் பதிவானது.
எப்போதும் போல அடுத்த நாள் தனது பணியில் battery வண்டியில் ஒவ்வொரு வீடாகச் சென்று குப்பை எடுத்துக் கொண்டிருந்த போது, "அண்ணா" என்ற குரல் கேட்க, முதலில் கவனிக்காத செல்வம், மீண்டும் கேட்கத் திரும்பினார்.
"சொல்லுங்கம்மா"
"நேத்து ஸ்டேஷன்ல சரியா நன்றி சொல்ல முடியல, இப்பவும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு ஏதாச்சும்" என்றார் அந்த அம்மா.
"அதெல்லாம் வேணாம்மா. ஏழு வருசமா, இங்க தான் இருக்கேன். இனிமே குப்பைத் தொட்டி வரைக்கும் கொண்டு வந்து பக்கத்துல வச்சுட்டுப் போவாம குப்பைத் தொட்டியிலயே போட்டுடுங்க" என்றார் செல்வம்.
"சரிங்கண்ணா" என்று அந்த அம்மணி சொன்னதே செல்வத்திற்குப் பெரும் நன்றியாய் இருந்தது. மீண்டும் விசில் அடித்தபடி அடுத்த வீடு நோக்கி வண்டி நகர்ந்தது. முன்பு இவர் சென்ற போது, விசில் சத்தமும், வண்டியும் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த கண்களுக்கு இன்று அவரும் தெரியத் தொடங்கியிருந்தார்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
குறள் எண்: 294
அதிகாரம்: வாய்மை
இயல்: துறவறவியல்
மனதால் ஒருவர் பொய் பேசாது வாழ்வாராயின், உலகத்தில் உள்ளவர்கள் மனதில் வாழும் பேற்றினைப் பெற்றிடுவார்.
Comments
Post a Comment