இடிக்கோடர் - குறள் கதை

இடிக்கோடர்
-முடிவிலி
(இயல்: துறவறவியல் 
அதிகாரம்: தவம்
குறள் எண்: 264)


மலர்கள் மலர்ந்தது மாலைகளாக்கப் பறிப்பதற்கா அல்லது பறித்தது போக காற்றில் வாடி உதிர்ந்து மரிப்பதற்கா எனத் தெரிந்து அறியாத வண்ணம் பூக்கள் உதிர்ந்து தேரநாட்டு மன்னனின் அரண்மனைத் தோட்டத்தின் மண்ணே பூக்களின் வண்ணமாய் மாறியதோ என்னும் தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தத் தோட்டத்தின் நடுவே எட்டு நடனமிடும் பெண்கள் சிலைகளையே தூண்களாகக் கொண்டு, கூரையின் உட்புறம் மனமயக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தேரநாட்டு மன்னன் மூன்றாம் வழுணன் ஓய்வாய் அமர்ந்திருந்தான். தலைமைக்காவலன் வல்லன் மன்னரை நோக்கி வந்து, தன் தலைதாழ்ந்து மதிப்பு வழங்கியவாறு நின்றான்.

“வல்லா, காண வந்த சேதி?”

“பெருங்கோ, தங்களை நமது தலைமை மருத்துவர் காண விழைகிறார்”

“நாளை அரச மன்றத்தில் காணலாமே. இவ்வேளையில் பார்த்தே தீர வேண்டும் என்று என்ன கட்டாயம்?” என்ற மன்னனின் கேள்விக்குப் பதில் இல்லாது அமைதியே பதிலாய் வந்ததைக் கண்ட வழுணன், சில நொடிகளுக்குப் பின், “வல்லா, வரச்சொல்” என்றார்.

“உத்தரவு மன்னா” என்றபடி இரு அடிகள் பின்னால் நடந்த வல்லன், அதன் பின் திரும்பி அரண்மனை நோக்கி நடக்கலானான். சற்று நேரத்தில், வல்லன், அவனுடன் வந்திருந்த தலைமை மருத்துவர் நற்கிழார் இருவரும் மன்னன் முன் பணிந்தபடி நின்றிருந்தனர்.

“கூறுங்கள் மருத்துவரே. தாங்கள் என்னைக் காணவந்த காரணம்?” என்றான் வழுணன்.

“மன்னா, திடீரென எனது மருத்துவச்சாலைக்கு நோயாளிகள் வரத்து அதிகமாகி உள்ளது. என்னுடைய உதவியாளர்கள் கொண்டு என்னால் முடிந்த வரை மருந்துகள் வழங்கி வருகிறேன். ஆனாலும், வரும் அனைவருக்கும் நோயின் அறிகுறிகளில் இருக்கும் ஒற்றுமை என்னைக் கவலை அடையச் செய்கிறது மன்னா. மேலும், நான் தரும் மருந்துகளால் முதலில் குணமடைவது போல் காட்டி, அடுத்த சில மணி நேரத்திலேயே நிலைமை பலருக்கு மிகவும் மோசமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இரண்டொரு நாட்களில் தலைமை மருத்துவச் சாலை நிறைந்து விடும். மற்றவர்களுக்கு மருத்துவம் சென்றடைவதில் தாமதம் ஆகும் ஒவ்வொரு நொடியும் நோய் மற்றவர்க்குப் பரவி பலர் உயிர் பறிபோகும் என்று அச்சம் கொள்கிறேன்.” என்றார் நற்கிழார்.

நற்கிழாரின் சொற்களை உன்னிப்பாகக் கேட்ட வழுணன், “வல்லா, மருத்துவச் சாலைக்கு முன்னே இருக்கும் வெளியில் பெரும் கூடாரங்கள் எழுப்புங்கள். புதிதாக வரும் நோயாளிகளுக்கு அங்கே மருத்துவம் நடக்கட்டும். ஏற்கனவே மருத்துவச் சாலையில் இருப்பவர்க்கு மருத்துவம் முடிந்ததும், அவரவர் வீட்டில் கொண்டு செல்லும் பொறுப்பை நமது அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்வர். மருத்துவரே, தாங்கள் மருத்துவச் சாலைக்குச் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் உம்மை வந்தடையும்.” என்ற மன்னரின் சொற்களுக்கு நன்றி சொல்வதாய் வணங்கி நின்ற நற்கிழாரின் கண்களில் நிறைந்து நின்ற ஐயத்தினைக் குறிப்பால் உணர்ந்த வழுணன், “என்ன நற்கிழாரே, தங்கள் மனத்தில் இருக்கும் கேள்வி என்ன? கூறுங்கள்” என்றான்.

“மன்னா, நான் முன்பு சொன்னது போல, அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுத்தும் குணமடையாமல் பலரின் நிலை மோசமாகி வருகிறது. இன்னும் என்னால் இது என்ன நோய் என்பதையே உணர முடியவில்லை. மருத்துவச் சாலையை விரிவு படுத்துதல் நல்ல முடிவு. வரவேற்கிறேன். ஆனாலும், இந்த நோயை எப்படி கட்டுக்குள் நிறுத்தப் போகிறேன் என்ற கேள்வி என்னைக் கொல்கிறது மன்னா” என்ற நற்கிழார் தன் தலைகுனிந்தவராய் நின்றார்.

வழுணன், “நாட்டின் தலைமை மருத்துவரான தங்களுக்குத் தெரியாத நோயா? மருத்துவமா? உங்களால் முடியாததை வேறு யாரால் தடுத்து நிறுத்திட முடியும்?” என்றான்.

“தங்களால் முடியும் மன்னா” என்றார் நற்கிழார்.

“என்ன? என்னாலா?” என்ற வழுணனின் சொற்களில் வியப்பு மேலோங்கி இருந்தது.

“ஆம், மன்னா, தங்களால் மட்டுமே முடியும். ஏழு ஆண்டுகளுக்கு முன், நீங்களாய் என்னை அழைக்க வருவீர்கள் என்று ஒருவர் கூறிச் சென்றாரே. நினைவிருக்கிறதா?” என்றார் நற்கிழார்.

***
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு,

எங்கிருந்தோ துள்ளித் திரிந்து வந்த மான்கள் இரண்டு, தங்கள் ஓட்டத்தைக் குறைத்து பசுமை விரித்த புல்வெளியில் நின்று முப்புறம் சுற்றிப் பார்த்து விட்டு, மெதுவாய் மேயத் தொடங்கின. சற்று தொலைவில், அந்த மான்களை நோக்கி, நாணில் ஏற்றப்பட்ட அம்பு ஒன்று குறி பார்த்துக் கொண்டிருந்ததை அந்த மான்கள் அறிந்திருக்கவில்லை. வல்லன், “மன்னா...” என்று மென்குரலில் ஏதோ சொல்லவர, தனது விழி அசைவால் அவனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டான் வழுணன்.

சரியாக வில்லில் இருந்து அம்பு புறப்பட இருக்கும் நேரம், காட்டில் எங்கோ, சுள்ளி ஒன்று முறியும் சத்தம் கேட்க, நிமிர்ந்த மான்கள் சட்டென ஓடத் தொடங்கின. அம்பும் தனது குறியைத் தவறவிட்டு மண்ணில் குத்திட்டு நின்றது. வேட்டையில் தனது குறியைத் தவறவிட்ட வழுணன், “ஆ...” என எழுப்பிய பேரொலியின் எதிரொலி நிற்க சில நொடிகள் ஆயின. எதிரொலியின் முடிவில், காட்டின் மறுபுறத்தில் ஒரு சிரிப்பொலி கேட்டது.
“யாரது? யார் அங்கே? வல்லா, யார் அங்கே சிரிப்பது எனப் பார்” என்று வழுணன் சொல்ல, சிரிப்பு வந்த திசை நோக்கிச் சென்றான் வல்லன். பின்னே, வழுணனும் நடக்கத் தொடங்கினான். சற்று தொலைவில், வல்லன் முன் தோன்றினார் இடிக்கோடர்.

“யார் நீங்கள்? மன்னனின் வேட்டையில் இடர் தருவதற்கு என்ன தண்டனை தெரியுமா? ம்ம்ம், என்னுடன் வாருங்கள்” என்றான் வல்லன்.
மீண்டும் சற்று பெரியதாய்ச் சிரித்த இடிக்கோடர், “நாட்டுக்குத் தான் மன்னன், அரசன் எல்லாம். அங்கே நின்றிருந்த மான்களுக்கு இவர் மன்னன் என்பது தெரியுமா? அது தெரியாமல் நான் ஒடித்த சுள்ளியின் ஒலி கேட்டு, மன்னனின் வேட்டைக்கு இடர் தருவது போல, அவை ஓடிவிட்டனவே. அவற்றிற்கு என்ன தண்டனை தரப் போகிறார் உங்கள் மன்னன்.” எனக் கூறி இன்னும் சிரித்தார்.

“மன்னரை இழிவாகப் பேசுவதற்கு என்ன துணிவு உனக்கு” என்று கூறிய வல்லன், தன் கையில் இருந்த வேல்கம்பின் மறு முனையால் இடிக்கோடரைத் தாக்க, அவர் மயக்கமுற்று விழுந்தார். பின்னால் நடந்து வந்த மன்னன், “யார் இவர், ஏன் இவரைத் தாக்கினாய் வல்லா?” என்றான்.
“யாரெனத் தெரியவில்லை. ஏதோ சரியில்லாதவனாய் இருக்கும். இவன் தான் தங்கள் வேட்டைக்கு இடர் ஏற்படுத்தியது.” என்று வல்லன் கூற, “இவன் கைகளைக் கட்டிப் பிடித்து வாருங்கள். வேட்டையை இன்னொரு நாள் தொடர்வோம். நகர் நோக்கிப் புறப்படுவோம்.” என்ற மன்னன் தேரை நோக்கி நடக்கலானான்.

தனது மருத்துவச் சாலையில் இருந்த ஒரே நோயாளியின் தலையில் பற்று போட்டுக் கொண்டிருந்த நற்கிழார் முன் வந்த காவலன் ஒருவன், “மருத்துவரே, தங்கள் மருந்துப் பேழையுடன் உடனே அரண்மனை மன்றத்திற்கு வருமாறு மன்னரின் கட்டளை” என்று ஒப்பிக்க, தனது மருந்துப் பேழையைத் தனது உதவியாளன் ஒருவனை எடுத்து வரும்படி பணித்த நற்கிழார், முன்னே நடக்கத் தொடங்கினார். மன்றத்தின் நடுவே தலையில் காயத்துடன் கைகள் கட்டப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவரைப் பின்னால் இருந்து பார்த்த நற்கிழார், அவருக்குப் பின்னால் வரை சென்று நின்று, தலை பணிந்து மன்னனுக்கு மதிப்பளித்தான்.

“மருத்துவரே, இவன் தலைக்காயத்திற்கு மருந்திடவும். குற்றம் செய்தவனே ஆனாலும், இந்த வழுணனின் பண்பு என்னவென அவனுக்கும் தெரியட்டும்.” என்று கூற, நற்கிழார் “உத்தரவு மன்னா” என்று சொன்ன அதே நொடி, அமர்ந்திருந்த இடிக்கோடர் சிரித்தார்.

வழுணன் அருகே நின்றிருந்த வல்லன், “சிரிக்காதே, மன்னர் முன் நீ செய்ததற்கு மன்னிப்பு கேள், உயிராவது மிஞ்சும்” என்று உறுமினான். சிரிப்பை நிறுத்திய இடிக்கோடர், “நலமா நற்கிழாரே?” என்றார்.

இப்போது இடிக்கோடரின் குரலைக் கேட்ட நற்கிழார், அவரின் பின்னால் இருந்து சற்று முன்பு அவரின் முகத்தைப் பார்க்க, நெற்றியில் துவங்கிய குருதி கோடிட்டு, இமைகள் கடந்து விழியைத் தாண்டி இறங்கி உறைந்திருந்த அந்த முகத்தில் நிறைந்திருந்த புன்னகையின் ஒளியைக் காண முடியாதவராய், “இடிக்கோடரே, நீங்களா? உங்களை எதற்கு இப்படி பிடித்து வைத்துள்ளார்கள்?” என்று கேட்டார். தனது உதவியாளனை அழைத்து, அவரின் காயத்தில் பச்சிலை வைத்து வெண்துணி வைத்து கட்டு கட்டினார் நற்கிழார்.

“மன்னா, இவர் இடிக்கோடர், என் போல் பலருக்கு மருத்துவம் என்றால் என்னவென்று கற்றுத் தந்த ஆசான். பெரும் தவப்பயன் பேறு பெற்றவர், இவர் செய்த பிழை என்ன? எதுவாய் ஆயினும் என் பொருட்டு இவரை விடுவிக்க வேண்டுகிறேன். இவரால் பிழைத்த உயிர்கள் அனைத்தும் உங்களைப் போற்றும்.” என்று கூற, வல்லன், “இவர் மன்னரின் வேட்டைக்கு இடர் தரும் விதமாக மான்களைத் தப்பிக்கச் செய்துள்ளார். அது மட்டுமல்லாது மன்னரை இழிவு செய்யுமாறு பேசியும் உள்ளார்.” என்று சொல்லிக் கொண்டே போக, மீண்டும், இடிக்கோடர் சிரிக்கத் தொடங்கினார்,

அதுவரை அமைதியாக இருந்த வழுணன், “நற்கிழார் கூறுவதைக் கேட்டால், நீவிர் பெரும் தவம் புரிந்தவராகவும், மருத்துவத்தில் நற்றிறமை கொண்டவராகவும் தெரிகிறீர்கள்.” என்றவன், வல்லனைப் பார்த்து, “வல்லா, அவரது கைக்கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்.” எனக் கூறி விட்டு,  மீண்டும் இடிக்கோடரைப் பார்த்து, “ஆயினும், ஏன் இவ்வாறு சிரிக்கிறீர்கள்?” என்றான்.

வல்லன் கண்ணசைக்க, மன்றத்தில் இடிக்கோடரின் பின்னால் நின்றிருந்த காவலன் அவரது கையின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். கைகளை முன்னால் கொண்டு வந்து தலைக்கு மேல் தூக்கி, சோம்பல் முறித்த இடிக்கோடர், வழுனனைப் பார்த்து, “நீர் நாட்டுக்கு மன்னன். நாடு என்பது என்ன? எல்லை மட்டுமா? எல்லையினுள் உள்ள மக்கள் மட்டுமா? அந்த எல்லையினுள் இருக்கும் அனைத்துயிர்க்கும் வாழ உரிமை இருக்கும் அல்லவா? அதனை வாழ வைப்பது உமது கடமையும் அல்லவா? நீர் அம்பெய்து பறிக்கவிருந்த மானுக்கு நீங்கள் மன்னர் என்பது தெரிந்திருக்குமா? உமது வேட்டைக்கிடர் செய்தேன் என்பது என் மீதான குற்றம் எனில், உமது கடமையில் இருந்து வழுவாமல் காப்பாற்றி இருக்கிறேன். இப்போது கூறுங்கள். நான் செய்தது தவறா? சரியா?” என்று இடிக்கோடர் சொல்லி முடித்து, வழுணனைப் பாரத்த பார்வையின் வீச்சினை மன்னனால் நேர்கொண்டு நோக்க இயலவில்லை.

“இடிக்கோடரே, நற்கிழாரின் பொருட்டு உம்மை விடுவிக்கிறேன். இருப்பினும், தாங்கள் கூறியதை முழுதும் ஏற்றுக் கொள்ள என் மனம் இன்னும் பக்குவம் அடையவில்லை. உங்களால் பலர் உயிர் கொண்டு வாழ்வதாக நற்கிழார் சொல்வதற்காக உம்மை விடுவிக்கிறேன்.” என்று வழுணன் கூற, மன்றமே இப்போது இடிக்கோடரைப் பார்த்தது.

இடிக்கோடர் எப்போதும் போல் சிரித்துக் கொண்டு, “இன்னும் நான் செய்தது தவறு இல்லை என்று உம்மால் உணர முடியவில்லையா? அதற்கு நீங்கள் மன்னன் எனும் அகந்தை தடுக்கிறதா? நீர் கூறினாலும் நான் இங்கிருக்கப் போவதில்லை. ஆனால், நீர் என்னைத் தேடி வரும் நாள் ஒன்று வரும். அன்று, என்னை எங்கிருந்து பிடித்து வந்தீரோ அங்கேயே நான் இருப்பேன். வருகிறேன்.” என்று கூறியபடி, ஒரு நொடி நற்கிழாரைப் பார்க்க, நற்கிழார் தலையை அசைத்தார். எவரின் மறுமொழிக்கும் காத்திராமல் மன்றத்தை விட்டு, நடக்கலானார் இடிக்கோடர். மன்றமே மறுபேச்சின்றி சில நொடிகள் உறைந்திருந்தது.

சற்று நேரத்திற்குப் பின், வழுணன் நற்கிழாரைப் பார்த்து, “மருத்துவரே, எங்கே சென்றார் அவர்? அவரைப் பின் தொடருங்கள், வல்லா, நீயும் செல்” என்றான். ஆனால், எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

***

நற்கிழாரின் கேள்வியால் வழுணனின் முகம் மாறியது. “மருத்துவரே, நீங்கள் இடிக்கோடரைப் பற்றி கூறுகிறீர்களா?” என்றான்.

“ஆம் மன்னா, அவரால் மட்டுமே இன்றைய நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். அவரை அழைத்து வர உங்களால் மட்டுமே முடியும்” என்றார் நற்கிழார்.

“என்னாலா? யார் தேடியும் கிடைக்காதவர் நான் சென்றால் வந்து விடுவாரா, நற்கிழாரே?”

“வருவார். அவரே கூறிச் சென்றிருக்கிறாரே. நீங்கள் அவரைப் பிடித்த அதே இடத்தில் சென்று பாருங்கள். அவர் அங்கு இருந்தால், கண்டிப்பாக வருவார்.” என்று நற்கிழார் கூற, அருகே இருந்த வல்லன், “நானும் உடன் வருகிறேன் மன்னா” என்றான்.

“வேண்டாம் வல்லா, நான் மட்டுமே சென்று வருகிறேன். தேரை ஆயத்தமாகச் சொல்லுங்கள்” என்றான் வழுணன்.   

***
எங்கிருந்தோ துள்ளி ஓடிவந்த இரு மான்கள் அந்த பசுமையான புல்வெளியில் நின்று மேயத் துவங்க, அவற்றை நோக்கி நாணில் இருந்து பாய ஆயத்தமான அம்பு நிலைகுத்தி நின்றிருக்க, திடீரென நாணினைப் பிடித்திருந்த விரல்களின் மிக அருகே ஒரு மானின் தலை தெரிய, திடுக்கிட்டு பின் வாங்கினான் வழுணன். ஒரு நொடி கண் சிமிட்டிப் பார்க்க, அவ்விடத்தில் மான்கள் எதுவும் இருக்கவில்லை. முன்பு இடிக்கோடரின் சிரிப்பு கேட்ட இடம் நோக்கி நடக்கத் தொடங்கினான் வழுணன். “இடிக்கோடரே, இடிக்கோடரே” என எழுந்த வழுணனின் குரல் காடு முழுவதும் எதிரொலியாய்க் கேட்டது.

"அரண்மனை மன்றத்தில் உமது பெருமை அறியாமல் தங்களை அவ்வாறு நடத்தியது என் பிழை தான். நான் உங்களைத் தேடி வரும்போது இங்கிருப்பேன் எனக் கூறினீரே. இன்று என்னை விட என் நாட்டு மக்களுக்கு உங்கள் தேவை இருக்கிறது. இடிக்கோடரே. என்னைப் பொறுத்தருளுங்கள். இடிக்கோடரே" 
***
வழுணன் மீண்டும் அரண்மனை வந்து சேர, இரவின் முதல் சாமம் ஆகி இருந்தது. எங்கும் இடிக்கோடரைக் காண முடியாததை எண்ணி வருந்திய வழுணன், மனத்திலும், உடலிலும் சோர்வடைந்தவனாய் தனது அறைக்குச் சென்று, பட்டினால் வேயப்பட்டிருந்த படுக்கையில் வீழ்ந்தான்.

இரவின் மூன்றாம் சாமத்தில் மருத்துவச் சாலைக்கு வந்த காவலன் ஒருவன், “நற்கிழார் அவர்களே, அரசியார் உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார். உடன், மருந்துப் பேழையையும் எடுத்து வரவும்.” எனக் கூற, நற்கிழார் உடன் அரண்மனைக்கு விரைந்தார்.

நற்கிழாரைக் கண்ட அரசியார், “மருத்துவரே, மன்னருக்கு உடல் கொதிக்கிறது. கண்கள் திறக்க மறுக்கின்றன, என்னால் இந்த நாட்டைக் காக்க முடியவில்லை என ஏதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.” என்று கூற, “கவலை கொள்ள வேண்டாம் அரசி, நான் உடனே என்னவெனப் பார்க்கிறேன்.” என்ற நற்கிழார், மன்னன் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவரது கைகளைத் தொட்டு நாடியைப் பார்த்த நற்கிழாரை விழித்துப் பார்த்த வழுணன், “நற்கிழாரே, நான் அங்கு சென்றும் அவரைப் பார்க்க இயலவில்லை. அவரை அழைத்து வர இயலவில்லை. இந்த நாட்டு மக்களைக் காக்க இயலாதவனாக ஆகி விட்டேன்.” என்று புலம்பினான்.

“மன்னா, இடிக்கோடர் வந்து விட்டாரே. தாங்கள் தான் அனுப்பியதாகக் கூறினாரே. அனைத்து மக்களுக்கும் மருத்துவம் துவங்கி பத்து நாழிகைகள் ஆகிறது. உங்களுக்கும் அதே மருந்து தான். என்ன மருந்து, என்ன அளவு என்று சொல்லிக் கொடுத்து, அவரும் சிலருக்கு மருத்துவமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று சொல்லிக் கொண்டே, சில மூலிகைகளை அரைத்துச் சாறாக்கினார்.

“அப்படியா? இடிக்கோடர் வந்து விட்டாரா? உடனே அவரைப் பார்க்க வேண்டுமே, அன்று அவர் காத்த மான்கள் மட்டுமல்ல, இன்று இந்த நாட்டு மக்களையும், அவருக்குத் தண்டனை கொடுக்கவிருந்த என்னையும் காப்பாற்றிய அவரைக் காண வேண்டும். அவரின் பாதங்களில் வீழ்ந்து, மன்னன் எனும் அகந்தையில் திரிந்த என்னைப் பொறுத்தருள்வீரா எனக் கேட்க வேண்டும், எங்கே அவர்? எங்கே அவர்?” என விழி திறக்கக் கூட இயலாமல் சொல்லிக் கொண்டிருந்த வழுணனைப் பார்த்த நற்கிழார், “மன்னா, நீங்கள் அவரை அழைக்கச் சென்ற அந்த நொடியே அவர் அனைத்தையும் மறந்து விட்டார். தங்களைப் பொறுத்தருளியதால் தான் நேரே மருத்துவச் சாலை வந்து தாங்கள் அனுப்பியதாகக் கூறியுள்ளார். தங்களை வெறுப்பவராயின் எனக்கென்ன என்று காட்டுக்குள் கடந்து சென்றிருக்க அவரால் முடியும். ஆனால், இடிக்கோடர் அவ்வாறு செய்பவரில்லை. முதலில் இந்த மருந்தை அருந்துங்கள். சிறிது நேரம் நன்கு ஓய்வெடுங்கள். நாளை காலை நானே அவரை அரண்மனைக்கு அழைத்து வருகிறேன்.” என்ற நற்கிழாரின் கூற்றினை ஏற்று, மருந்தைக் குடித்த மன்னனின் உடல் வெப்பம் சற்று தணிய, அப்படியே உறங்கிப் போனான்.

மருத்துவச் சாலை சென்றடைந்த நற்கிழார், தனது அறையில் இடிக்கோடரைக் காணாது தனது உதவியாளர்களிடம் கேட்க, அவர்களும் சற்று முன்பு வரை அவர் இங்கே தான் இருந்ததாகத் தெரிவித்தனர். சிலரை மருத்துவச் சாலை முழுதும் தேடும் படி பணித்துவிட்டு, தனது மருந்துப் பேழையை எப்போதும் வைக்கும் இடத்தில் ஒரு ஓலை இருப்பதைக் கண்டார்.

‘வந்த கடமை முடிந்தது. இனி என் தேவை ஏற்படின் நானே வருவேன். மன்னனிடமும் கூறி விடவும்’ ஓலையை எடுத்துப் படித்த நற்கிழார் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தவப்பயன் பெற்றவர்கள் எண்ணினால், எதிரிகளை வருந்தச் செய்யவும், நண்பர்களுக்கு உதவவும் முடியும்.



Comments

  1. செமயா இருக்குது 💐💐💐💐

    ReplyDelete
  2. அழகான கதையமைப்பில் தற்போதைய இக்கட்டான சூழலுக்கு ஏற்ற கதை.வழுணன், வல்லன், நற்கிழார், இடிகோடர்..தூய தமிழ் பெயர்கள். மேன்மேலும் இது போல் தொடர வாழ்த்துகள்.
    திருமலை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka