என்ன விட்டா யாருமில்ல - குறள் கதை
என்னை விட்டா யாருமில்ல
-முடிவிலி
"அப்பா..."
தூங்கிக் கொண்டிருந்த வேலு, தன் மகனின் குரலால் தூக்கத்தில் இருந்து விழித்தாலும், திரும்பாமல் "என்னடா?" என்றார்.
"திரும்புங்கப்பா, என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க" என்றான் சிவா.
"ப்ச்" என்று அலுத்துக் கொண்டபடி திரும்பியவர், இரவு 12½ மணிக்கு கண்ணயராது விழித்துக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்து, "ஏன் டா தூக்கம் வரலையாடா ஒனக்கு? அரைச்சாமத்துல கேள்விக்குப் பதில்னுட்டு. என்னடா வேணும்?" என்றார்.
"நாம செத்தா எங்கப்பா போவோம்?" என்றான் சிவா.
"ஏன்டா தூக்கத்துல எழுப்பிக் கேட்குற கேள்வியாடா இது? பேசாமத் தூங்குடா" என்ற வேலு, கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சிவாவைப் பார்க்க, இப்போது கொஞ்சம் பொறுமையாக, "அம்மாகிட்ட போவோம்டா, சரி தூங்குப்பா, அப்பாக்கு நாளைக்கு வேலைக்குப் போகணும்டா, தூங்குடா செல்லம்ல" என்றார்.
"அப்பா, இன்னும் ஒரே ஒரு கேள்விப்பா" என்றான் சிவா.
"ம்" என்ற தந்தையிடம், "எல்லாரும் கண்டிப்பாகச் சாகத்தான் போகணும்னா, எதுக்குப் பொறக்கணும்? ஏம்ப்பா இந்தப் பிறவி?" என்றான் சிவா.
அவன் கேட்ட கேள்விக்கு அப்பாவிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை.
***
"வேலு, உங்கள எதுக்கு வந்து பாக்கச் சொன்னோம்னா, சிவாவோட நடவடிக்கை எதுவும் சரியில்ல" என்றதும் வேலுவின் முகம் சிறுத்தது. அனந்தகுரு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறையில் அமர்ந்திருந்த அவரின் மனதில் 'சிவா, தவறா எதுவும் செய்ய மாட்டானே' என்றும், 'அம்மா இல்லாத பையன்னு ரொம்ப செல்லம் குடுத்துட்டமோ?' என எண்ணங்கள் பல கோணங்களில் ஓடின.
தலைமை ஆசிரியர் தொடர்ந்தார். "படிப்புல கவனம் முழுசும் குறைஞ்சுடுச்சு. எப்போ பாத்தாலும் பேயறைஞ்சது போலவே சுத்தி வர்றான். சில நேரம்லாம் பாத்தா, அவன் சின்ன பையனா, இல்ல சாமியாரான்னு தெரியாத அளவுக்கு..." என்று நிறுத்தியவர், சற்று இடைவெளி விட்டு, "கையில அடிச்சா, பசங்க அம்மான்னு கத்துறதப் பாத்திருக்கேன். ஒரு நாள் அறிவியல் பாடமெடுக்க அவன் வகுப்புக்குப் போயிருந்தேன். அவன்கிட்ட நான் கேள்வி கேட்டா, இந்த அறிவியல் எல்லாம் பொய்யின்னான். கைய நீட்டுடான்னு சொல்லி, கையில அடிக்கிறேன், நமச்சிவாயன்னு சொல்றான்" என்றவர் உடல் சிலிர்த்துப் போனவராய் உதறிக் கொண்டார்.
வேலுவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "உங்களுக்கே தெரியும்ல, அம்மா இழந்து நிக்குற பையன். நான் தான் சரியாக் கவனிக்கலயான்னு தெரியல. நான் பாத்துக்கிறேன்." என்று சொல்லி, சற்று கண் கலங்கியவரைத் தலைமை ஆசிரியர் அமைதிப்படுத்தி அனுப்பினார். அறையை விட்டு வெளியே வந்த போது, அங்கே பெஞ்சில் அமர்ந்திருந்த சிவாவின் முகத்தில் விரவிக் கிடந்திருந்த புன்னகையைக் கண்டு வேலு சற்று பயந்து தான் போனார்.
***
'தட்... தட்... தட்...'
கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு, எழுந்து வந்து கதவைத் திறந்த வேலுவின் முகம் களையிழந்து இருந்தது. வேலு வீட்டின் கதவின் முன் ரெண்டு வீடு தள்ளியிருக்கும் போஸ்ட் மாஸ்டர் நின்றிருந்தார்.
"வாங்கண்ணே" என்று கூறிய வேலுவின் குரலில் உயிர்ப்பே இல்லை.
"எய்யா வேலு, ரெண்டு நாளுக்கு முன்னாடி திருண்ணாமலக்கி, கிரிவலத்துக்குப் போயிருந்தனப்பா. அங்க கூட்டத்துல ஒரு பையன் அசப்புல நம்ம சிவா போலவே. நானும் சிவா சிவான்னு கத்திட்டுப் பின்னாடியே போனேன். கூட்டத்துல இருந்தவனுங்க ஓம் நமச்சிவாய தான் சொல்றேன்னு கையத் தூக்கிட்டுக் கத்த, ஆளை விட்டுட்டேன்யா. போற தொலவு முழுசும் பாத்துட்டே தான் வந்தேன். கண்ணுலயே படல" என்றவர், மீண்டும் அழத் தொடங்கிய வேலுவைப் பார்த்து, "கவலப்படாத வேலு. நீயும் ஒரு எட்டு திருண்ணாமலக்கிப் போயி பாத்துட்டு வா" என்றார்.
"இல்லண்ணே, அம்மா இல்லாத பயன்னு அதிர்ந்து கூட பேசுனதில்ல. நல்லாத் தானே பாத்துக்கிட்டேன் அவனை. இப்படி வீட்ட விட்டு சாமியாராப் போவுறதுக்கா பெத்தேன் அவனை. எங்க இருக்க சாமியைப் பாக்க ஊர் ஊரா சுத்துறான். பன்னெண்டு வருசம் காப்பாத்துன என்ன மறந்துட்டுப் போயிட்டானே" என்று உடல் குலுங்கி அழும் வேலுவை போஸ்ட் மாஸ்டர் ஆற்றுப்படுத்த முயன்று தோற்றார்.
"ரெண்டு வருசம் ஆவப் போவுதுண்ணே, நான் இருக்கனா, செத்தனான்னு கூட பாக்காம... நானும் எதுக்கு உயிரோட இருக்கேன்னு தெரியாம..." வேலுவின் வாய்ச்சொற்கள் அவனது தற்போதைய நிலை போலவே முழுமையற்று விழுந்தன.
***
"ச்ச, ஒரு மனுசனுக்கு நேரம் இப்படி புடிச்சு ஆட்டிப் படைக்கக் கூடாதய்யா, முதல்ல கொண்டவ போனா, அப்புறம் புள்ள சாமியாராப் போனான், அவனத் தேடி ஊர் ஊரா அலைஞ்சே இவனும் நொடிஞ்சு போயி யாரும் இல்லாம செத்தே போயிட்டானய்யா" என்று அடுத்த வீட்டு கந்தசாமி சொல்ல, போஸ்ட் மாஸ்டர், "கடைசியா ரெண்டு வருசம் முன்ன, நான் தான் சிவாவப் பாத்தேன். ஒரே ஒரு காவி வேட்டி, கழுத்துல துளசிமாலைன்னு... ஆனா, பக்கத்துல போறதுக்குள்ள எங்க போனான்னு தெரியல. நானாச்சும் சும்மா இருந்திருக்கலாம். இங்க வந்து வேலுகிட்ட சொல்ல, அதுலேந்து கோயில் கோயிலா அலையாத இடமில்ல. போன வாரம் வந்து என்கிட்ட பேசுனப்ப, இனிமே நான் அவனைக் கண்டுபுடிச்சா கூட அவன் என்ன என்கூட வந்திடப் போறானா? அவன் மனசுக்குப் புடிச்சது போலவே இருக்கட்டுண்ணே. இனிமே தேடத் தெம்பு இல்லன்னு சொன்னான். அலைச்சல் முடிஞ்சுதுன்னு நெனச்சேன். அவனே முடிஞ்சுட்டான்" என்று சொல்லிக் கொண்டே இடுகாட்டிலிருந்து ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர் போஸ்ட் மாஸ்டரும், கந்தசாமியும். தெருமுனை பெட்டிக்கடையின் வெளியே வார இதழின் விளம்பரத்தில் பாறை ஒன்றில் தலைக்கு மேல் கையைத் தூக்கி வணங்கியபடி பதினாறு வயது இளைஞன் அமர்ந்திருக்க, கீழே 'மனமே மந்திரம்' என்று எழுதியிருந்தது.
***
'சிவபூரணா... சிவபூரணா...' என்ற ஒலி அந்த ஆசிரமம் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தோனேசியாவின் கரிமுன்ஜாவா தீவினில் இருக்கும் அந்த ஆசிரமத்தின் நடுவே சிவபூரணேஷ்வரர் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி காவிச்சேலையணிந்த மாதர்களும், சற்று தள்ளிக் கூடியிருந்த மாந்தர்களும் குழுமியிருந்தனர். மத்தளம் கொட்டிக் கொண்டிருக்க, சிவபூரணர் தன் கையைத் தூக்கிச் சிரிக்க, மத்தளம் நின்றது. சிரித்த சிரிப்பு மேலும் அரை நிமிடம் நீடித்தது.
"என் childhood பத்திச் சொல்லப் போறேன். ஒரு நாள் வகுப்புல நான் உட்காந்திருக்கேன். அறிவியல் ஆசிரியர் சூரிய மையக் கொள்கைன்னு நடத்திட்டு இருந்தாரு. சூரியனைப் புவி சுத்தி வருது, சரியா? தவறான்னு கேட்டாரு. யாருகிட்ட...? என்கிட்ட..." சிவபூரணர் சிரிக்க, குழுமியிருந்த கூட்டமும் சிரித்தது.
"தவறுன்னு சொன்னேன். ஆசிரியருக்குக் கோவம் வந்துச்சு. டேய் அறிவியல் இதத்தான்டா சொல்லுதுன்னு சொன்னாரு. நான் அறிவியலே பொய் சார், சிவன் தான் மெய். இந்த மெய்லே சிவன் இருக்கான். சிவனைத் தான் எல்லாம் சுத்துதுன்னு சொன்னேன்." என்று சொல்லி மீண்டும் சிரிக்க, மத்தளம் கொட்டத் துவங்கியது. மீண்டும் கையைத் தூக்க, மத்தளம் அமைதியானது.
"ஆசிரியர் என்னைப் பாத்து, கைய நீட்டுடான்னு சொல்ல, நீட்டுனேன். பெரம்ப எடுத்து அடிக்க, மத்தவன் அம்மான்னு சொல்லிருப்பான். நான் நமச்சிவாயன்னு சொல்றேன். வாத்தியார் ஆடிப்போயிட்டாரு. அதுலேந்து நான் அங்க படிக்குற வரைக்கும் என்ன அவர் தொட்டதே இல்ல. அந்தப் பிரம்பு வழியாவே அவருக்கு நான் சிவன்னு சொல்லிருந்தேன்." என்று சொல்ல, கூடியிருந்த கூட்டம், சிவபூரணா என்று கூவத் தொடங்கியிருந்தது.
மீண்டும் சிவபூரணர் தொடர்ந்தார், "என்ன என் வழியில விட்டிருந்தா, எங்கயோ ஒரு மலையில நமச்சிவாயன்னு சுத்திட்டு இருந்திருப்பேன். ஆனா, நான் போன இடத்துக்கெல்லாம் கேமராவ வச்சு, துறையூருல தொடங்குனவன ஜாவா தீவுல கொண்டு வந்து உட்கார வச்சிருக்காய்ங்க. ஆனா, என்ன பின் தொடர்றதத் தவிர இந்த உலகத்துக்கு வேற choiceஏ கிடையாது" என்று கையைத் தூக்க மீண்டும் கூட்டம் சிவபூரணா போட்டது.
அடுத்த சிலமணி நேரங்களில், YouTube வழி காணொளி பகிரப்பட, 'இவனுக்கு வேற வேலை இல்லடா, ஊர ஏமாத்திட்டுத் திரியுறவனச் சுத்தி ஒரு கூட்டம்' என்று பின்னூட்டங்கள் குவிந்தன. 'அடுத்த ரெண்டு நாளுக்கு content கெடச்சுடுச்சுடா' என மீம் கிரியேட்டர்கள் உற்சாகமாயினர். 'போற எடமெல்லாம் கேமரா வச்சு எனக்கு வச்சாண்டா ஆப்பு' என்று எழுதப்பட்ட memeல் கிறுக்குத்தனமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான் சிவபூரணர் எனும் சிவா.
யஃதிலார் மேற்கொள் வது.
குறள் எண் - 262
இயல் - துறவறவியல்
அதிகாரம் - தவம்
பொருள்: தவம் மனதை அடக்க வல்லவர்களுக்கானது. அவ்வாறு இல்லாதவர்கள் தவம் செய்வேன் என முயற்சிப்பது வீணே.
👌👌👏👏👏💐💐🙏
ReplyDelete