கருகிய சிறகுகள் - லிய்போவ் சிரோட்டா (Liubov sirota) தமிழாக்கம்



கருகிய சிறகுகள்
- லிய்போவ் சிரோட்டா


ஈடுசெய்யவோ, நிலையைச்
சரி செய்யவோ இயலாது,
அந்த ஏப்ரலின் தவறையும், துயரையும்.
எங்கள் விழித்துக்கொண்ட உள்ளுணர்வின்
கூன்முதுகுகள் வாழ்நாள் முழுதும்
இந்த வேதனைச்சுமையைத்
தாங்கியே ஆக வேண்டும்.
நம்புங்கள்,
முடியவே முடியாது,
எங்கள் இழந்த வீடுகளின்
துயர்தரும் வலியிலிருந்து
மீண்டெழ, சரிகட்ட. 

வலி எங்கள் துடித்திடும் இதயத்தில்
என்றும் இருந்திடும்,
அச்சத்தின் நினைவுகளாய்.

அதோ,
முள்ளாய்க் குத்தும் கசப்பினால்
சூழப்பட்ட எங்கள் விந்தை நகரம் கேட்கிறது:
அனைத்தையும் மன்னித்தும், உளமார நேசித்தும், ஏன் எக்காலத்தும் கைவிடப்பட்டுள்ளேன்?

இரவு நேரங்களில்,
வெறுமை மூழ்கிய எங்கள் நகரம்
விழித்துக் கொள்கிறது.
அதோ, அங்கே எங்கள் கனவுகள்
மேகம் போல அலைகின்றன.
நிலவொளியால் சாளரங்களை
ஒளிரச் செய்கின்றன.
அங்கு மாறாத நினைவொடு
மரங்கள் நிற்கின்றன.
எங்கள் கைகளின் தொடுதலை
நினைத்துக் கொண்டு.
இனியும் தன்னிழல் தனில் நிற்க,
சுடும் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள,
யாரும் இல்லையெனத் தெரிந்த
அம்மரங்களின் வலி எப்படி இருக்கும்?

இரவில் மரங்களின் கிளைகள்
சத்தமின்றி எங்கள் எரியும்
கனவுகளைத் தீண்ட,
நடைபாதையில் விண்மீன்கள்
வீழ்ந்து விடியும்வரை
காவல் காக்கின்றன.
நேரம் போகப் போக,
கனவுகளும் நீங்கிப் போக,
கேட்பாரற்றுக் கிடக்கும்
வீடுகளின் சாளரங்கள்
பித்துப்பிடித்து ஆட,
விண்மீன்கள் உறைந்து,
விடைபெற்றுச் செல்கின்றன.

நாங்கள் எங்கள் சாம்பலில்
நின்று கொண்டிருக்கிறோம்.
இப்போது எங்கள் நீண்ட பயணத்திற்கு
எதை எடுத்துச் செல்வது?
எங்கு சென்றாலும்
எங்களுள் ஒளிந்துறையும் அச்சத்தையா?
நாங்கள் என்ன மிஞ்சிய எச்சமா?
இழப்பின் உணர்வு
புதிரான திடீரென்று உறவற்ற நிலையை
உள்ளுக்குள் ஊற்ற,
உள்ளம் தெளிகிறது,
இந்தப் பேரிடரில் நம்மோடிருந்திருக்க
வேண்டியோர் இத்துயரைப் பங்கிடவில்லையென்று.
ஒரு நாள், அவர்களாகவே அழிவரோ?

கடுமையான குளிரினில்
தனித்து விடப்பட்ட குஞ்சுகளாய் நிற்கிறோம்.
நீங்கள் பறந்து செல்லுங்கள்...!
ஆனால், நீங்கள் செல்லும்போது,
தரையில் வீழ்ந்து கிடக்கும்
எங்களை மறவாதீர்.
எந்தத் தொலைவின் மகிழ்நிலத்தில்
உங்கள் இன்பத்துச்சிறகுகள்
உங்களைக் கொண்டு சென்றாலும்,
எங்களின் கருகிய சிறகுகள் உங்களைக்
கவனக்குறையிலிருந்து காக்கட்டும்.

- தமிழாக்கம்: முடிவிலி

யாருமில்லாத செர்னோபில் நகரம்

செர்னோபில் அணுமின் நிலையம்
(1986 Chernobyl செர்னோபில் அணுமின் நிலைய வெடிப்பின் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பலருள் ஒருவரான லிய்போவ் சிரோட்டாவினால் எழுதப்பட்டது)




Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher