ஆண்டு 99 - குறள் கதை
ஆண்டு 99
சாளரங்களே இல்லாத - ஒரு பெரிய இரும்புக் கதவால் மூடப்பட்ட அந்த அறையினுள் இருள் போக்குவதற்காக முயன்று கொண்டிருந்த ஒரு குழல்விளக்கு கண்ணடித்துக் கொண்டிருந்தது.
"தாத்தா... தாத்தா..."
ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அறையின் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி வந்தான் அந்த சிறுவன். அவன் பக்கம் வந்தும் நான் அவன் பக்கம் திரும்பாததைக் கண்டு, மேலும் உரக்கச் சொன்னான்.
"தாத்தா...!!!"
முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லாமல் திரும்பிப் பார்த்தேன். சிறு வயதில் என்னைப் பார்த்தது போல் இருந்தது. மெலிதாக ஒரு புன்னகை பிறந்தது. என் முகப்புன்னகை அந்த சிறுவனின் முகத்தில் பெரும்புன்னகையாய்ப் பரவியிருந்தது. மெல்ல ஏதோ சொல்ல வாய் திறந்தேன். சொற்கள் வரவில்லை.
"ஒன்னும் பேசாத தாத்தா...! வா, நாம வெளியே போலாம். எந்திரி" என்றான் சிறுவன், எனது கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டே.
நான் மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன். வெகு நாட்களுக்குப் பிறகு எழுந்து நிற்பது போன்று ஒரு உணர்வு எனது முதுகுத்தண்டில் கீழிருந்து மேலாகப் பரவியது. நாற்காலியின் அருகே இருந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொண்டேன். ஊன்றுகோல் உதவியோடு நின்றாலும், முதன் முதலில் எழுந்து நின்ற குழந்தை போல் முகம் புன்னகைக்க, மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. சற்று திரும்பினேன். அந்த சிறுவனைக் காணவில்லை. 'டே தம்பி' என்று சொல்ல நினைத்தேன். இப்போதும் சொற்கள் வரவில்லை. ஊன்றுகோலை நாற்காலியில் தட்டி ஒலி எழுப்பினேன். பக்கத்து அறையில் இருந்து சத்தம் வந்தது.
"இரு தாத்தா, வெளியில போகணுமில்ல. அங்கேயே இரு, இதோ வந்துட்டேன்"
சத்தம் வந்த அறையின் பக்கமாய் என் பார்வை திரும்பியது. ஆனால், பார்வைக்கு ஏதோ நிழலாடுவது போன்றே தெரிந்தது. வெண்பனி மூட்டம் போல் எனக்குத் தெரிந்த சுவரில் ஏதோ ஒன்று திறக்க, கையில் இரு தலைக்காப்பணி போன்ற ஒன்றை எடுத்து வந்தான் சிறுவன். அவன் அருகில் வர வர எனக்கு அவன் சரியாகத் தெரியத் துவங்கினான். வரும்போதே அதில் ஒரு தலைக்காப்பணியை அவன் மாட்டிக்கொண்டு, மற்றொன்றை என் முன்னே நீட்டினான். என் முகத்தில் ஏராளமான வியப்புக்குறிகளைக் கண்டு, அவனே நாற்காலியில் ஏறி என் முகத்தில் மாட்டினான். அதன் பக்கவாட்டில் இருந்த ஒன்றை அழுத்த, தலைக்காப்பணி கழுத்தோடு இறுக்கிப் பிடித்தது. உள்ளுக்குள் புத்தம் புதிய காற்று நிறைந்தது. முன்பை விட எளிதாக மூச்சுவிட முடிந்தது. இருந்தாலும், கழுத்தை இறுக்கிய அதன் பிடி கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. சிறுவனைப் பார்த்து எனது கைத்தடியால் கவசத்தில் மெலிதாக ஒரு தட்டு தட்டி, இன்னொரு கையால் 'இது எதற்கு?' என்பது போல என்று கேட்டேன்.
சிறுவன், தனது தலைக்காப்பணியின் ஒரு புறம் அழுத்தியபடி பேசினான்.
"தாத்தா, இது இல்லாம வெளியில போக முடியாது, கொஞ்ச நேரத்துலயே மூச்சு முட்டிடும். அதுவுமில்லாம, oxygen booth இங்க பக்கத்துல ரொம்ப கிடையாது. நீயும் ஒவ்வொரு தடவை வரும்போதும் நான் சொல்லிட்டுத் தான் இருக்கேன். ஆனா, நீ தான் மறந்துகிட்டே இருக்க." அவன் பேசியது எனது தலைக்காப்பணியுள் தெளிவாகக் கேட்டது. நான் மீண்டும் பேச முயன்றேன். அதற்குள் அவன், "தாத்தா, நீ என்ன கேட்கப் போறன்னு தெரியும், இந்த helmetல nano technology air purifier இருக்கு. built-in radio இருக்கு. அதுல தான் நான் உன்கிட்ட பேசுறேன். சரி, வாங்க போகலாம்." என்றான்.
எனது கைத்தடியின் பிடியை என்னோடு அவனும் பிடித்துக் கொண்டு அவனும் நடக்க, நான் சிறுவன் போல என்னை உணர்ந்தேன். 'இவனை இதே போல் கைப்பிடித்துக் கூட்டிப் போயிருக்கிறேனா? ஏன் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.' என்று ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் புதிராய் வெடித்தன.
சிறுவன் தன் முழு வலிமை கொண்டு, அந்த இரும்புக் கதவினைத் திறந்தான். திறந்ததும், உள்ளிருந்த காற்று 'த்சு...' என்ற ஒலியோடு வெளியேறத் தொடங்கியது. என்னுள் அச்சம் தொற்றிக் கொள்ள, அறையின் ஒரு மூலையில் ஒரு சிகப்பு சுழல்விளக்கு சுழன்று கொண்டே எரிய, "Close the door within 2 minutes" என்ற தானியங்கி ஒலியுடன் எச்சரிக்கை மணியும் அடித்தது இன்னும் எனது உடலில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. வெளியே சென்று கதவைப் பிடித்தபடி, எனது அச்சத்தைக் கவனித்த சிறுவன், மீண்டும் அதே சிரிப்புடன், இன்னொரு கையால் ரேடியோ மூலமாக, "ஒன்னுமில்ல தாத்தா, கதவை மூடிட்டா அலாரம் நின்னுடும். ஆனா, நடுங்கிட்டு நீங்க உள்ளேயே நின்னா, கதவை மூட முடியாது, வெளியே வாங்க!" என்றான்.
நடுங்கியபடியே, வெளியே வந்தேன். சிறுவன் கதவை விட, தானாகவே மூடிக் கொண்டது. கதவில் இருந்த எண்பலகையில் நான்கு எண்களை அடித்து விட்டு, தொடுதிரையில் 'close & lock' என்ற தெரிவைத் தொட, கதவில் 'க்ளக்' என்ற சத்தம் எழுந்தது. உள்ளேயிருந்து பார்த்த போது சிறு அறைபோல் இருந்த இடம், வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது எவ்வளவு பெரிய கட்டிடம் என்று. எங்களுக்கு முன், பல இரும்பு கண்டெயினர்கள் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் இதுவரை இருந்ததும், அது போன்றவொரு கண்டெயினர் தான். வரிசையாகவும், ஒன்றன் மீது ஒன்றாகவும் வைக்கப்பட்டிருந்த அவற்றிற்கு மேலே செல்ல இருபுறமும் படிக்கட்டுக்கள் இருந்தன. எதிர்புறம் பார்த்தால், பெரிய கண்ணாடிச்சுவர். எங்கேயோ இதைப் பார்த்த நினைவு என்னுள் வந்து போனது. ஆங்காங்கே கண்ணாடி உடைந்து சிதிலம் ஆகி இருந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்த இடமும் புழுதியால் நிறைந்தே காணப்பட்டது.
என்னுடைய தலைக்காப்பணியைக் கழட்ட முயன்றேன். சிறுவன் என் கையைப் பிடித்து இழுத்து, "கையை வச்சுக்கிட்டு சும்மா இரு தாத்தா, helmet கழட்டுனா மூச்சு முட்டும். வாங்க, அப்படியே கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்." என்று சொல்லி எனது கைத்தடியைப் பிடித்தான், நடந்து வெளியே வந்தோம்.
இப்போது இந்த இடம் என்னவென்று தெரிந்து விட்டது. எங்கள் தலைக்கு மேலே ஆங்காங்கே பராமரிப்பு இல்லாமல் இடிந்த பாலம் ஒன்று. அதற்கு சற்று தள்ளி, இன்னொரு மின்னிருப்புப்பாதை வேயப்பட்ட பாலம். அதில் என்றோ ஓடிய தொடர்வண்டி நின்று கொண்டிருந்தது. நான் இந்த இடத்தை இப்படி பார்த்ததே இல்லை. எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த இடத்தை இப்படி பார்க்க, என் மனம் ஏற்க மறுத்தது. சில நொடிகள் நின்ற இடத்தில் சிலையாகிப் போன என்னைப் பார்த்து, சிறுவன் சொன்னான்.
"ஆமா தாத்தா, நீ நினைக்குறது சரி தான். இது சென்னை airport தான். இப்ப உயிர் பிழைச்சு இருக்குறதே பெருசா இருக்கும் போது, யாருக்கும் airport தேவைப்படல."
நான் என்னுடைய கைத்தடியை வெறுப்பாகத் தரையில் தட்டினேன்.
"தாத்தா, நீ என்கிட்ட என்னவோ கேட்கணுமா? என்கிட்ட பேசணுமா?" என்றான் சிறுவன்.
'ஆமா' என்று தலையை மேலும் கீழும் ஆட்டினேன். "சரி, பேசுங்க" என்றான்.
"ஆ..." என்றேன். என் குரல் எனக்கு மட்டும் கேட்டது.
"ஹெல்மெட் இடதுபுறம் அழுத்திட்டே பேசுங்க, அப்ப தான் எனக்கு கேட்கும்." என்றான்.
அவன் சொல்லியபடி அழுத்திக் கொண்டே பேசினேன். "கே... கேட்குதா... ஹஹா... என்னால பேச முடியுது." என்று சில நொடி மகிழ்ந்த நான், "ஏன் இந்த இடம் இப்படி ஆகிடுச்சு?" என்றேன் மகிழ்வு வடிந்து வருத்தம் தோய்ந்த குரலில்.
"வாங்க, சொல்றேன்." என்றான் சிறுவன் முன்னோக்கி நடந்தபடி. பின்னாலே நானும் தொடர்ந்தேன். வானூர்தி நிலைய வளாகத்தின் வெளியே வந்திருந்தோம். சாலை இருந்ததன் அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
"இடதுபுறம் போவோம்." என்றேன்.
"வேணாம் தாத்தா, ஒரே தண்ணியா இருக்கும்."
"என்னது தண்ணியா?"
"ஆமா, கடல். உங்களோட டைரி படிச்சிருக்கேன். இதே ஊர்ல ரெண்டு பெரிய கடற்கரை, அது முழுசும் மணல், அதுல நெறைய மக்கள் இப்படி இருந்ததா, இப்ப எதுவுமே இல்லை."
"அய்யோ... நான் ஒரு தடவையாவது பாத்துக்குறேனே."
"சரி வாங்க, அவ்ளோ தொலைவு போக வேணாம். இந்த மெட்ரோ பாலம் மேல ஏறினாலே தெரியும். இந்த பக்கம் வாங்க, படியில மேல ஏறிப் போகலாம்."
தொடர்வண்டி நிலைய கட்டடத்துக்குள் நுழைந்து மேல் தளத்துக்குச் சென்றோம். நடைமேடையில் இருந்து இருப்புப்பாதை வேய்ந்த பாலத்தில் இறங்கினோம். காண்கின்ற இடமெல்லாம் தண்ணீர் நிறைந்திருந்தது. என் கண்களில் இருந்தும் சில துளிகள். இந்த பக்கம் இப்படி என்றால், அதன் மறுபுறம் பெரும் புழுதிமேடாகவும், ஆள் அரவமற்றதாகவும் இருந்தது.
"எப்படிப்பா இதெல்லாம் நடத்துச்சு?"
"நான் பொறந்ததிலேந்தே இப்படி தான் இருக்கு, தாத்தா, ஆனா, அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். புவி வெப்பமடைஞ்சு பனிப்பாறை உருகி இப்படி எதுவோ. எங்க உலகமே இந்த கட்டடத்தில் சுருங்கிட்ட பிறகு, எங்கயோ இருக்குற பனிப்பாறைய எனக்கு எப்படி தெரியும்? அப்பா சொல்லும்போது கேட்டுக்குவேன், அவ்ளோ தான்."
"ஆமா, நானும் கேட்கணும்னு இருந்தேன். அப்பா, அம்மா எங்கே?"
"அவங்க தூங்கிட்டு இருப்பாங்க"
"உன்னைக் காணோம்னு தேட மாட்டங்களா? அவ்ளோ அலாரம் அடிச்சது அப்பயும் அவங்க எழுந்திருக்கலையா?"
"தாத்தா, தூங்குறதுன்னா இயல்பான தூக்கம் இல்ல. cryogenic sleep. ஒரு தடவை தூங்குனா ஆறு மாசம் கழிச்சு தான் எழுந்திருப்பாங்க. நம்ம இருந்த அறைக்குப் பின்னால தான் cryogenic hall இருக்கு. அங்க தான் இருப்பாங்க. இதைப்போல நாடுல 25 எடத்துல cryogenic shelters இருக்கு. அதுவும் எல்லாம் இன்னும் இருக்கான்னு தெரியாது. இங்கிருந்து நடக்குற தொலைவு தாண்டி யாரும் போக முடியாது. இந்த ஹெல்மெட் வச்சுகிட்டு ஒரு 8 மணி நேரம் தாங்க முடியும். அங்கங்க automated oxygen booth இருக்கு. இருந்தாலும், எவ்ளோ தொலைவுல இருக்கு, அதெல்லாம் வேலை செய்யுதான்னு யாருக்கும் தெரியாது." என்று பேசிக்கொண்டே போனான் சிறுவன்.
"தம்பி, போதும்பா, கண்ணுக்கு முன்னாடி பார்த்தாலும் என்னால கற்பனை கூட செஞ்சு பாக்க முடியல. ஆமா, இன்னிக்கு என்ன தேதி, இது என்ன ஆண்டு?"
"இது 99 வது ஆண்டு."
"என்னது 2099 ஆ?"
"இல்ல, தாத்தா. நீங்க சொல்றது பழைய ஆண்டு முறை. இப்ப மாத்தியாச்சு. எப்போ உலகத்துல பல இடங்களில் பேரழிவு நடந்துச்சோ, அதுலேந்து புது ஆண்டு கணக்கிடப்படுது. 99 ஆண்டுகள் ஆகுது."
"பழைய ஆண்டு முறையில் இது எத்தனை ஆண்டு இருக்கும்?"
"தெரியாதே."
"ச்ச, எங்க காலத்துலேயே நெறைய பேரு சொன்னாங்க, சுற்றுசூழல் மேல அக்கறை கொள்ளுங்க, தன்னலமா இருக்காதீங்க. இயற்கை நமக்கு என்ன கொடுத்துச்சோ அதை திருப்பி எடுத்துக்கும். அப்ப வாழ்க்கை ரொம்ப கொடூரமா இருக்கும்னு"
"ஆமா, உங்களுடைய டைரி படிக்கும்போது அவ்ளோ வியப்பா இருக்கும். பக்கத்து தெருவுக்குக் கூட தானா ஓடுற வண்டியில போவீங்க போல?"
"ஆமாப்பா, ஆனா, இதெல்லாம் எங்களுக்கா நடக்கப் போகுதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துட்டோம். தண்ணீரைச் சேமிச்சதில்ல, plastic பொருள் பயன்படுத்துனதை நிறுத்துனதில்ல, பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கூட உண்மையா இருந்தது இல்ல. அப்புறம் எங்க இந்த சுற்றுப்புறத்துக்கும், உலகத்துக்கும் உண்மையா இருக்குறது? அந்த காலத்துல எங்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க சில ஆயிரம் பேர் இருந்தாங்க. ஆனா, அதை எதையும் காதுல வாங்காதவங்க அதிகமா இருந்தோம். எவனுக்கோ நடக்கப் போகுது, அதுக்கு நான் ஏன் என்னோட வசதியைக் குறைச்சுக்கணும்னு" என்று நான் புலம்புவதைப் பார்த்து, அந்த சிறுவன் இன்னும் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
"என்னை - எங்களை மன்னிச்சிடுப்பா, உன்னோட இந்த சிரிப்பு இன்னும் என்னைக் கொல்லுது" என்று சொல்லிவிட்டு, ஏதோ நினைவுக்கு வந்தவனாய், "ஆமா, நான் எப்படி உயிரோட இருக்கேன்? ஆண்டு 99ன்னு சொன்ன, இல்லையா? அப்ப எனக்கு வயசு என்ன?" என நான் மேலும் நான் புலம்பத் துவங்க, சிறுவன் மேலும் சிரிக்கத் துவங்கினான்.
"சிரிக்காதய்யா, சொல்லுப்பா, தயவு செஞ்சு சொல்லேன்" என்று கெஞ்ச, சிறுவன் சிரிப்பை நிறுத்திவிட்டு, "தாத்தா, நீங்க என்னோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தா, நீங்க எப்பவோ இறந்துட்டீங்க."
"....!!!"
"ஆமா, நீங்க இப்ப இருக்குறதே என்னோட கனவுல தான். அப்பா, அம்மா மட்டுமில்ல, நானும் தூக்கத்துல தான் இருக்கேன்." என்றான்.
எனது உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கியது. உறைநிலை உறக்கத்தில் அந்த சிறுவன் இன்னும் புன்னகைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கிறான்.
- முடிவிலி
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்பவற்றைக் கொண்டே நிர்ணயிக்கப்படும்.
#குறள்மொழி
Cryogenic Sleep - கடுங்குளிர் உறக்கம்
கதைக்கான கரு உதிக்கக் காரணமாய் இருந்த நண்பர் @vpvoldemort க்கு நன்றி.
#குறள்மொழி
Cryogenic Sleep - கடுங்குளிர் உறக்கம்
கதைக்கான கரு உதிக்கக் காரணமாய் இருந்த நண்பர் @vpvoldemort க்கு நன்றி.
செம தமோ 👌🏾 அழகான, சிந்திக்க வைக்கும் கதை!
ReplyDeleteஅருமையான களம் ..அழகான நடை😍உமது எண்ணங்களும் என்றைக்கும் முடிவிலியாகவே இருக்க வேண்டுகிறேன்
ReplyDelete