அழகிளவேனில் - தமிழாக்கம் Autumn


ஜுன் 27 1880 அன்று பிறந்த ஹெலன் கெல்லர் எழுதிய Autumn என்ற கவிதையின் தமிழாக்கம்... 
ஹெலன் கெல்லர் (ஜூன் 27 1880 - ஜூன் 1 1968)


அழகிளவேனில் 

அடடா, இவ்வுலகில் பெருமை கொண்ட 

மாசிலா அழகிளவேனிலவள்...
அவளெங்கிலும் அழகும் இதமும் நிறைந்திருக்க...

மரங்கொண்ட சாலையின் இருமருங்கும்
பச்சை நிறமணிந்த இலைகளால் ஒளிர
அதோ அந்தக் காடுகளின் பெருமிதம் 
துளிர்விடும் இலைகளால் ததும்பிட
பாறைகளும் வேலிகளும் கூட 
செடி கொடியோடு ஊதாப்பூ சுமந்து நிற்க
ஒளியும் நிழலும் ஒருங்கே இணைந்து
நயப்புண்டாக்க
பொன்னும் சிவப்பும் ஊதா நிறமும் விழிகளை மயக்கிட
ஐயமென்றெனக்கில்லை
இது கடவுளின் கைவண்ணமே...


மலைகளோ பொன்னிறத்தால் மின்ன

அங்கு குமளியும் குழிப்பேரி மரங்களும்
தங்கநிறக் கனிகளின் நிறைதாளாது
நிலனோக்கி வளைந்திருக்க
மஞ்சள் மலர்கள் மலர்ந்தொருபுறம்
மலையை பொன்னிறத்தால் தலையாட்டித் தாலாட்ட
காட்டு முந்திரிப்பழங்களோ 
இளங்கதிரொளியில் நிறைந்தாட
அங்கு தெற்கு நோக்கிச் செல்லும் பறவைகள்
விடுதியில் சன்னமான குரலில் உரையாடும்
பயணிகள் போல் முணுமுணுத்துக் கொண்டே
மணக்கும் பழரசம் பருகிக் களிக்க
தொலைவிலே ஓங்கி நின்ற நீலவானுக்கு
நானும் இணையென்று
அமைதியும் வியப்பையும் தன்னுருவாய்க் கொண்டு
இறைத்தூதர்கள் போல் வெண்பனி மூடி 
மலையும் ஓங்கி நின்றதே...


ஆனால், ஏனிந்த திடீர் மாற்றம்

இந்த தெளிந்த சிறந்த நாளிலே...
கருங்கொண்டல் அப்படியே உறைந்ததே...
வானமோ பெருமமைதி கொண்டதே...
காலைப்பனியோ நாளின் பொன்முகத்தில் மறைந்ததே...
ஏதோ மாயக்கரங்கள் வந்து மரங்களை உலுக்கியதோ...?
உடையும் சிறு ஒலியுடன் இலைகள் வீழ்ந்தனவே..
அச்சங்கொண்ட சிறுபறவைகளாய் 
அவை நிலத்தில் நடுங்கினவே...
முதுமை காலத்தரசன் தன் கம்பீரமிழந்ததைப் போல்
காட்டினை ஏதோ வெறுமையும்
துயரமும் சூழ்ந்ததே...



அதோ வடக்கின் பனிசூழ் பரப்பினின்று

பனிவேந்தன் வருகின்றான்.
குளிர்ந்திடும் பனித்தோளும்
கன்னத்துறைந்த கண்ணீரோடு...
இறப்பின் உடன்பிறந்தவனாக
துயரின் உடனுறைந்தவனாக...
இளவேனில் அவனைத் தொலைவினில்
இருந்து பார்க்கிறாள்...
தந்தை கண்ட குழந்தையாய் ஓடுகிறாள்...
பனியின் குளிர்க்கரங்களின் இதத்தை நோக்கி...
பாதுகாப்பினைத் தேடி...
மஞ்சு நிறைந்த தோளில் ஒற்றிக் கொண்டு
தேற்றும் அவன் மார்பினில் 
புதைந்து உறங்குகிறாள்...
அமைதியான வெண்ணிற உலகில் 
கொடுங் கூதிர்காற்று தன் 
சீற்றத்தை அவிழ்த்து விட்டது...


அவள் உறங்குகிறாள் 

தன் துயரங்களை நினையாது
அவள் கனவில்
மெல்லிசையில் ஊறிய 
தன் நாட்களின் மேன்மை காண்கிறாள்...
அவள் இறப்பதில்லை...
கவிகள் சொல்வது போல்

"இறப்பென்று இங்கொன்றுமில்லை
அவ்வாறு தோன்றுவது மாற்றம் மட்டுமே"

எது உயர்ந்ததோ மேன்மை கொண்டதோ
சிறந்ததோ அது வாழ்ந்துகொண்டே இருக்கும்
எங்கோ ஒரு நேரிய உலகில்
ஒரு அழகிய வடிவில்...




Comments

  1. Ppaa.. இவ்வளவு அழகான தமிழ் வடிவமா.. வேற லெவல் மொழியாக்கம் இது 😍😘😘 #Love

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka