தமிழாய்வர் சீனி வேங்கடசாமி - Mayilai Seeni Venkatasami - A Tamil Researcher

மயிலை சீனி வேங்கடசாமி

தமிழாலே ஒன்னாணோம்னு சொல்லிக் கொள்ளும் நாம் முன்னால் நம் வரலாற்றினைச் சரியாகத் தரவுகளுடன் புரிந்து கொண்டுள்ளோமா? தரவுகள் இல்லாமல், சாதீயம், பரம்பரை, மதம் எனப் பலப்பிரிவுகளால் பிரிந்து - ஒருதலைப்பட்சமாக வரலாற்றைத் திரித்து வைத்திருந்த வேளையில், தரவுத்தேடி - நாடு முழுதும் சென்று - களப்பணியாற்றி - ஆய்ந்து - பல ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மூலம், தமிழின் தொன்மையை உலகுக்கு - ஏன் தமிழருக்கே காட்டிய மயிலை சீனி வேங்கடசாமியின் 117 வது பிறந்தநாள் இன்று...
மயிலை சீனி வேங்கடசாமி (16.12.1900 - 8.5.1980)

டிசம்பர் 16, 1900 அன்று மயிலை சீனிவாசன் எனும் சித்த வைத்தியர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார், வேங்கடசாமி. முதல் அண்ணன் தந்தையைப் போல் சித்த மருத்துவத்தில் நாட்டம் கொள்ள, இரண்டாம் அண்ணன் கோவிந்தராசனோ, தமிழ்ப்பற்று கொண்டு கவியெழுதலானார். திருக்குறளின் காமத்துப்பாலின் 250 குறள்தனை நாடகவடிவாய் எழுதினார். மேலும், மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் எழுதியுள்ளார். அண்ணனின் தமிழ் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய வேங்கடசாமிக்கும் தமிழின் தொன்மையான அனைத்தையும் தேடிப்படிக்க எண்ணம் உருவாகிற்று.

தன் அண்ணனிடமும், அவர் மறைவுக்குப் பின், சற்குணம் என்பவரிடம் தமிழ் பயின்ற இவருக்கு, கலை மேலும் மாறாக் காதல் இருந்தது. எழும்பூர் கலைப் பள்ளியில் ஓவியம் பயின்றார் வேங்கடசாமி. குடும்பச்சூழல் காரணமாக, வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, ஆசிரியர் பயிற்சி பெற்று, சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராய் சேர்ந்தார், வேங்கடசாமி.

ஆசிரியர்த் தொழிலைத் தேர்ந்தெடுக்க காரணம், அதில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் - விடுமுறை நாட்களில் தன் கலை மற்றும் தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதே. ஆனாலும், ஆசிரியர்ப் பணியிலும் சிறந்தே விளங்கினார் வேங்கடசாமி.
தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள், நாடகக்கலை, கூத்து என பல ஆய்வுகள் மேற்கொண்டு கட்டுரைகள் எழுதலானார்.

இவர் எழுதிய சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்ற நூல்கள் தமிழில் புல்லுருவி வடமொழியால் அழிக்கப்பட்ட வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். சேர நாட்டைப் பற்றிய தனது ஆய்வில், வஞ்சி என்ற சேரநாட்டுத் தலைநகர் பெரியாறு ஆற்றுக் கரையிலிருந்த துறைமுக நகரென்றும், திருச்சி அருகே உள்ள கருவூர் அல்லவென்றும் தரவுடன் தெரிவிக்கிறார்.



இவர் எழுதிய பல ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் இதோ...

கிறித்துவமும் தமிழும்
பௌத்தமும் தமிழும்
சமணமும் தமிழும்
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
இறையனார் களவியல் (ஆராய்ச்சி)
பௌத்தக் கதைகள்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்
மகேந்திரவர்மன்
நரசிம்மவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
புத்த ஜாதகக் கதைகள்
அஞ்சிறைத்தும்பி
கௌதம புத்தர்
மறைந்து போன தமிழ் நூல்கள்
சாசனச் செய்யும் மஞ்சரி
மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்
பழங்காலத் தமிழ் வாணிகம்
கொங்கு நாட்டு வரலாறு
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
இசைவாணர் கதைகள்
உணவு நூல்
துளுவ நாட்டு வரலாறு
சமயங்கள் வளர்த்த தமிழ்
சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
சேரன் செங்குட்டுவன்
19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
சங்க காலச் சேர சோழ பாண்டியர்
சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
நுண் கலைகள்
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
சிறுபாணன் சென்ற பெருவழி
மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)
பழந்தமிழும் பல்வகைசசமயமும்

இது மட்டுமல்லாமல், தமிழி, வட்டெழுத்துக்கள் குறித்து ஆய்வு செய்து, அதில் கற்றுத் தேர்ந்தும் இருந்தார். தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், துலு, மலையாளம் ஆகிய மொழிகளையும் கற்றறிந்திருந்தார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மற்றும் கலை ஆய்விலேயே செலவிட்ட இவரை கவிஞர் சுப்புரத்தினம் போற்றிக் கூறுகையில்,
"தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்” என்கிறார்.

தனது 80 ஆண்டு கால வாழ்வினைத் தமிழ்ப்பணி என்பது வெறும் மொழிக்கற்றல் - கவியியற்றல் அல்ல, உண்மை வரலாற்றை தன் சுயக்கருத்தேற்றாமல், தரவுகொண்டு நிறுவி உலகினுக்குரைத்தல் என வாழ்ந்து காட்டிய ஐயா சீனி வேங்கடசாமிக்குத் தலைவணங்கித் தமிழ்வணக்கம் செய்கிறேன்.

- கணபதிராமன்.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka