எதுவும் மாறல - குறள் கதை
எதுவும் மாறல -முடிவிலி அழகான உள்வடிவமைப்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நெகிழிச்செடிகள் அந்தக் குளம்பியகத்தைப் பசுமையாகக் காட்டின. மூலையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த மூவரின் முன் ஒரு மடிக்கணினி திறந்திருந்தது. மடிக்கணினிக்கு அருகே இருந்த மூன்று கோப்பைகளில் இருந்த குளம்பியில் ஆவி மெதுவாய் மேலெழும்பிக் கொண்டிருக்க, அவர்கள் அப்படி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற ஆர்வம் அருளுக்கு வந்தது. நான்கு மணிக்குத் தன்னைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்த கார்த்திகேயனுக்காகக் காத்திருக்கும் அருளின் முன் cafe latteயின் மேல் happy face smiley சிரித்துக் கொண்டிருந்தது. அருள் வந்து காத்திருக்கும் இந்த அரை மணி நேரத்தில் தனக்குக் கூட கேட்காத ஒலியளவில் பேசிக் கண்களால் சிரித்துக் கொண்டிருந்த காதலிணையின் குளிர்க்குளம்பியின் அளவு குறையவே இல்லை. மணி நாலே காலைத் தாண்டியிருந்தது. குளம்பியகத்தின் கதவின் மேல் பொருத்தியிருந்த சிறுமணி குலுங்கி ஒலிக்க, கார்த்திகேயன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். கார்த்திகேயனின் முகம் இறுக்கமாக இருந்தாலும், பெருமுயற்சி எடுத்து மையமாகச் சிரித்து, “thanks for meeting me, அருள்" என்...