Posts

Showing posts from August, 2019

பகிர்வு - குறள் கதை

பகிர்வு பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. (இயல்: இல்லறவியல்; அதிகாரம் 23 ஈகை; குறள் எண்: 227) இருபது ஆண்டுகள், எப்படி ஓடியது என்று தெரியாமல் காலத்தின் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவனாய் இருந்த நான், மீண்டும் எங்கு தொடக்கத்தைத் தேடி வந்து நின்றிருந்தேன். அதே பெரிய கதவு. கதவின் இடது ஓரத்தில், உள்கதவு ஒன்றும் இருந்தது. அதைத் திறந்து உள்ளே சென்றேன். நிகழ்காலத்தில் இருந்து ஏதோ ஒரு கதவைத் திறந்து முற்காலத்திற்குச் சென்றது போல் இருந்தது. பதினோரு மணி மணியடிக்க, வகுப்பில் இருந்து ஓடிவரும் நூற்றுக்கணக்கான மாணவர்களுள் நானும் ஒருவனாக ஓடிவந்து இதே கதவின் கம்பி இடுக்கு வழி கைவிட்டு, பொக்கை வாய்ப்பாட்டியிடம் களாக்காய் வாங்கித் தின்றது கண் முன் வந்து போனது. ஜுன் முதல் வாரம் இன்னும் பள்ளி துவங்கவில்லை. ஏற்கனவே பள்ளியின் முதன்மை கட்டடத்தில் இருந்த தலைமை ஆசிரியர் அறை புதிதாகக் கட்டப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரைச் சந்தித்து, இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் பள்ளியில் படித்த மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். இன்முகத்த

கடன் - குறள் கதை

கடன் "போய் கங்காஸ்நானம் பண்ணிண்டு இதை அப்படியே கரைச்சுடுங்கோ" என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, ஆடி மாதம் மடை திறந்த வெள்ளத்தைக் கொள்ளும் இடமாய் இருந்த கொள்ளிடம் ஆற்றில் கிடந்த முழங்கால் அளவு தண்ணீர் இறங்கிப் பெயருக்குக் குளித்துவிட்டு, நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. வெயிலில் நடந்து வந்ததினால் வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் சில நொடிகள் இருண்டன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், தலையும் சுற்றியது. வீடு இருண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றது. மூன்று மாதம் முன்பு, ஒரு சாலை விபத்தில் என் அப்பா, அம்மா இருவரையும் இழந்த அன்றே இந்த வீடு இருண்டு விட்டது. சில நொடிகள் தலையைப் பிடித்து நின்றேன். இந்த மூன்று மாத காலமாக, மனம் ஆற்றாமையில் பிடித்து வாட்டுகிறது. யாருமில்லாத் தனிமை ஒரு புறம், இருந்தவர்களின் இழப்பு, இழப்பு தந்த துயரம் என மனம் படும் இன்னலில் கடந்த சில மாதங்களாக நடைப்பிணமாகவே இருந்து வருகிறேன். வீட்டில் இருந்த வெறுமை என் கண்ணை மறைக்க, வெயிலில் வந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, சோர்ந்து அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிப் போனேன்.