திறந்திடு - Open it - சிறுகதை தமிழாக்கம்
திறந்திடு... (Open It) - ஸாதத் ஹஸன் மண்ட்டோ (Saadat Hassan Manto) (கதைக்காலம்: 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்) மதியம் 2 மணிக்கு அம்ரித்ஸரை விட்டுக் கிளம்பிய அந்த சிறப்பு ரயில், முகல்பூராவை அடைய எட்டு மணிநேரம் ஆனது. பல பயணிகள் வழியிலேயே கொல்லப்பட்டிருந்தனர்... பலர் படுகாயமுற்றிருந்தனர்... சிலர் காணாமல் போயிருந்தார்கள்... அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிராஜுதீன் கண் விழித்தபோது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தான். தன்னைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உளக்கொதிப்பில் இருக்கும் ஒரு பெருந்திரளை அவன் கண்டான். தான் எங்கு இருக்கிறோம் என்று அறியாத அவன், இப்போது புழுதி நிறைந்த வானை வெறித்துப் பார்க்கலானான். அந்த முகாம் முழுதும் பல குரல்கள், கூச்சல்கள் நிறைந்திருந்தன. ஆனால், நம் சிராஜுதீனுக்கு அவை யாவும் காதிலே விழவில்லை. யாராவது அவனைப் பார்த்தால், ஏதோ ஆழமாக, உன்னிப்பாக யோசிப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும். இருந்தாலும், அவனுடைய மனது எதையும் நினைக்காதிருந்தது, ஒரு காலி பாத்திரம் போல... புழுதி நிறைந்த வான...