அரண் - குறள் கதை
அரண் - முடிவிலி (ஏறைநாடு கதை 4) தன் மீது மணித்துளிக்கொரு முறை ஓயாது வந்து மோதிக் கொண்டிருக்கும் மேற்கடலின் அலைகள் தன் கால்விரல் தொட்டு விளையாடுவதாக நினைத்து நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது ஏறை நாட்டின் மேற்குப் புற அரணாய் நின்று காக்கும் ஏறை மலை. பல நூறு அடிகள் உயரத்திற்கு வெறும் பாறைகளாய் மேற்கடலுக்கு முதுகு காட்டி நிற்கும் ஏறை மலை , அந்த உயரத்தில் இருந்து கிழக்கு நோக்கி சரியும் சரிவுகளில் மரங்களும் , சோலைக்காடுகளும் நிறைந்து வளம் பொருந்தியதாக விளங்கியது. ஏறை மலையில் வீழும் மழை மலையின் உச்சியில் ஏரியாகத் தாங்கி , அதிலிருந்து வழியும் இரு ஆறுகளான செவ்வாறு , வளவாறு என ஓடி , ஏறை நாட்டை மேலும் வளமாக்கின. ஏறை மலையில் சிறுகுன்றூர் துவங்கி ஏலனூர் வரை பரந்திருந்த ஏரியின் இருபுறத்திலிருந்து வழியும் செவ்வாறு , வளவாறு ஆகியன மீண்டும் இணையும் இடத்தில் இருந்தது ஏறைக்கோன் ஆட்சியில் மக்கள் மகிழ்வோடு வாழும் ஏறை நாட்டு தலையூரான செவ்வூர். செவ்வூரின் கிழக்கே மலைப்பகுதியிலிருந்து கிடைக்கும் தினை , மிளகு , ஏலம் , செவ்வூரின் மேற்கே செவ்வாற்றின் வளத்தால் விளையும் வாழை , நெல் , மஞ்சள் ஆகியன...