ஆண்டு 99 - குறள் கதை
ஆண்டு 99 சாளரங்களே இல்லாத - ஒரு பெரிய இரும்புக் கதவால் மூடப்பட்ட அந்த அறையினுள் இருள் போக்குவதற்காக முயன்று கொண்டிருந்த ஒரு குழல்விளக்கு கண்ணடித்துக் கொண்டிருந்தது. "தாத்தா... தாத்தா..." ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அறையின் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி வந்தான் அந்த சிறுவன். அவன் பக்கம் வந்தும் நான் அவன் பக்கம் திரும்பாததைக் கண்டு, மேலும் உரக்கச் சொன்னான். "தாத்தா...!!!" முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லாமல் திரும்பிப் பார்த்தேன். சிறு வயதில் என்னைப் பார்த்தது போல் இருந்தது. மெலிதாக ஒரு புன்னகை பிறந்தது. என் முகப்புன்னகை அந்த சிறுவனின் முகத்தில் பெரும்புன்னகையாய்ப் பரவியிருந்தது. மெல்ல ஏதோ சொல்ல வாய் திறந்தேன். சொற்கள் வரவில்லை. "ஒன்னும் பேசாத தாத்தா...! வா, நாம வெளியே போலாம். எந்திரி" என்றான் சிறுவன், எனது கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டே. நான் மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன். வெகு நாட்களுக்குப் பிறகு எழுந்து நிற்பது போன்று ஒரு உணர்வு எனது முதுகுத்தண்டில் கீழிருந்து மேலாகப் பரவியது...