அழகிளவேனில் - தமிழாக்கம் Autumn
ஜுன் 27 1880 அன்று பிறந்த ஹெலன் கெல்லர் எழுதிய Autumn என்ற கவிதையின் தமிழாக்கம்... ஹெலன் கெல்லர் (ஜூன் 27 1880 - ஜூன் 1 1968) அழகிளவேனில் அடடா, இவ்வுலகில் பெருமை கொண்ட மாசிலா அழகிளவேனிலவள்... அவளெங்கிலும் அழகும் இதமும் நிறைந்திருக்க... மரங்கொண்ட சாலையின் இருமருங்கும் பச்சை நிறமணிந்த இலைகளால் ஒளிர அதோ அந்தக் காடுகளின் பெருமிதம் துளிர்விடும் இலைகளால் ததும்பிட பாறைகளும் வேலிகளும் கூட செடி கொடியோடு ஊதாப்பூ சுமந்து நிற்க ஒளியும் நிழலும் ஒருங்கே இணைந்து நயப்புண்டாக்க பொன்னும் சிவப்பும் ஊதா நிறமும் விழிகளை மயக்கிட ஐயமென்றெனக்கில்லை இது கடவுளின் கைவண்ணமே... மலைகளோ பொன்னிறத்தால் மின்ன அங்கு குமளியும் குழிப்பேரி மரங்களும் தங்கநிறக் கனிகளின் நிறைதாளாது நிலனோக்கி வளைந்திருக்க மஞ்சள் மலர்கள் மலர்ந்தொருபுறம் மலையை பொன்னிறத்தால் தலையாட்டித் தாலாட்ட காட்டு முந்திரிப்பழங்களோ இளங்கதிரொளியில் நிறைந்தாட அங்கு தெற்கு நோக்கிச் செல்லும் பறவைகள் விடுதியில் சன்னமான குரலில் உரையாடும் பயணிகள் ...