கொதிகலன் - Boiling Vessel சிறுகதை
கொதிகலன் 2006 ஜாம்ஷெட்பூர்... ஊரில் ரயில் நுழையும் போதே நம் நாசிக்குள் இரும்பின் வாடை அடிக்கும் ஊர்... இரும்பு நகரம்... ஒரு தொழிற்சாலையைச் சுற்றியெழுந்த ஊர்... ஜார்க்கண்ட் மாநிலத்தில், அனைத்து மாநிலத்தில் இருந்தும் ஆட்களைப் பார்க்கவல்ல ஊர்... சுந்தர் இந்த ஊருக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. இதற்கு முன், அவன் வளைகுடா நாட்டில் பணிபுரிந்த போது கூட அவனுக்கு ஹிந்தியோ, அந்த ஊர் மொழி அரபியோ பயன்படுத்தத் தேவை மிகக் குறைவாய் இருந்தது... இந்த ஊருக்கு வந்தபோது தன்னைச் செவிடனாகவும், ஊமையாகவும் உணர்ந்தான். ஊரின் நடுவே இருந்த இரும்பாலையின் தன்னக மின்நிலையத்தில் கொதிகலன் நிறுவுதலுக்காக வந்திருந்தான். இதை அவன் என்கிட்ட சொன்னப்ப நானும் கேட்டேன், "என்னமோ சொன்ன? ஆனா என்ன சொன்னன்னு தான் புரியல" என்று. சிரிச்சுக்கிட்டே "Boiler installation in Captive Power Plant"னு சொன்னான். இவ்ளோ தமிழ் தெரிஞ்சவனுக்கு ஹிந்தி தெரியாது போனதால், இந்த ஐந்து மாதங்களின் முதலிரண்டு வாரம் மிகக் கொடுமையாய் உணர்ந்தான். இருப்பினும், அவனது குழுவில் இருந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துள...